எச்சம் (ஒரு சிறு விளக்கம்)
தமிழில் சொல்லோ, சொல்லின் பொருளோ முழுமை பெறாமல் குறைந்து நிற்பதை “எச்சம்” என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. எச்சத்துக்குத் தொல்காப்பியம் தரும் குறியீடு ‘’எஞ்சுபொருட்கிளவி ‘’ என்பதாகும். பொருள்எஞ்சிநிற்கும் சொல் என்பது இதன் விளக்கம்.
பிரிநிலை எச்சம்
வினை எச்சம்
பெயர் எச்சம்
ஒழியிசை எச்சம்
எதிர்மறை எச்சம்
உம்மை எச்சம்
என எச்சம்
சொல் எச்சம்
குறிப்பு எச்சம்
இசை எச்சம்
எனப் பத்து வகையான எச்சங்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.
“பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை
எதிர்பறை உம்மை எனவே சொல்லே
குறிப்பே இசையே ஆயீரைந்தும்
நெறிப்படது தோன்றும் எஞ்சுபொருட் கிளவி “
(தொல்காப்பியம் எச்சவியல் 34)
இங்கு நாம் பெயரெச்சம் மற்றும் வினையெச்சம் ஆகிய இரண்டைப் பற்றியும் பார்ப்போம். பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். வினையெச்சம் என்பது ஒருவினைமுற்றினை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும்.
“கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத்-தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி”
கானமயில் – என்பதில் கான என்ற எச்சத்தைத் தொடர்ந்து மயில் என்ற பெயர்ச் சொல் வந்ததைக் காண்க எனவே இது பெயரெச்சம்.
ஆடக்கண்டு – என்பதில் ஆட என்ற எச்சத்தைத் தொடர்ந்து கண்டு என்ற வினைச் சொல் வந்ததால் இது வினையெச்சம்.
இருந்த வான்கோழி – என்பதில் இருந்த என்ற எச்சத்தைத் தொடர்ந்து வான்கோழி என்ற பெயர்ச் சொல் வந்தமையால் இது பெயரெச்சம் ஆயிற்று.
பொல்லாச்சிறகு – என்பதில் பொல்லா என்ற எச்ச வினையைத் தொடர்ந்து சிறகு என்ற பெயர் வந்தமையால் இதுவும் பெயரெச்சம் ஆகியது.
கற்ற கவி – என்பதில் கற்ற என்ற குறை வினையின் பின்னால் கவி என்ற பெயர் வந்தமையால் பெயரெச்சமானது. இவ்வாறு பெயரெச்சம் மற்றும் வினையெச்சம் பற்றி மிகவும் சுருக்கமாக இங்குப் பார்த்தோம். பிறிதொருசந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு இலக்கணக் கட்டுரையில் சந்திப்போம்.
-தியா-