\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-15

Filed in இலக்கியம், கட்டுரை by on September 28, 2015 0 Comments

eelathu-15_620x554

பிரயாண அவலம் (ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-14)

புலம்பெயர்ந்து உலகின் திசையனைத்தும் சென்று வாழ்வதென்பது சுலபமான விடயமல்ல. உரிய ‘வீசா’, ‘பாஸ்போர்ட்’ இல்லாமல் திருட்டு வழியில் கடல் கடந்தும் காடு, மலை கடந்தும் நாடு விட்டு நாடு கடந்தும் கண்டம் விட்டுக் கண்டம் ஓடியும் தமது பயணங்களை மேற்கொண்டு, பல மாதங்கள் தொடக்கம் சில வருடங்கள் வரை நீண்ட பயணத்தைச் செய்து கடினமான வழிகளில் உலகின் திசையனைத்தும் பரவினர்.

பேற்றோல் பவுசர்கள், பாரவூர்திகள், கொள்கலன்களில் சென்று இடைநடுவில் மூச்சுத் திணறியும் விபத்துக்குள்ளாகியும் பலர் மடிந்து போயினர். இத்தாலிக்குச் சென்ற 290 தமிழர்கள் கடல் நடுவில் படகு விபத்துக்குள்ளாகி 24.12.1996 அன்று மடிந்த சம்பவம் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

“சொர்க்க வாசலைத்

தொடக்கூட முடியாமற்போன

எல்லோருக்கும்

இத்தாலிக்கருகே நடுக்கடலில்

சமாதி கிடந்தது.”1

எண்ணற்ற கனவுகளைச் சுமந்தபடி உழைப்பை நாடிச் சென்ற மேலைத்தேச நாடுகளான சொர்க்கத்தை அடைய முடியாது நடுக்கடலில் சங்கமமான இளைஞர்கள் நினைவாக எழுதப்பட்ட இந்த வரிகள் ஆழமான ஆராய்ச்சிக்குரியவை. இதே போல் ‘வரும் வழியில்’ என்ற இன்னொரு கவிதையும் இவ்விடத்தில் சுட்டுதற்குரியது.

“கிரேக்கக் கடலில் மூழ்கியும்

ஹங்கேரி நெடுஞ்சாலையில்

பார வண்டியுள் மூச்சு முட்டியும்

பாதிவழியில் வழிந்தது

அவர் கனவின் மீதி…

……………………………

கிரேக்கக் கடல் மடியில்

குளிரில் நீ விறைக்கையில்

என்னை நீ நினைத்தாயோ?

உன்பெயரை நான்

பத்திரிக்கைகளில் கண்ணுற்றேன்

கொப்பளித்துப் பொருமியது

வெடிக்காமல் போயிற்று நெஞ்சு!”2

தன் நண்பனின் இறப்புச் செய்தியைப் பத்திரிக்கையில் பார்த்த ஒருவனின் உள்ளக் குமுறலாக வெடித்துச் சிதறும் இந்தக் கவிதையில் புலம்பெயர்ந்தவர்களின் பயணம் எத்தகைய ஆபத்துக்கள், வேதனைகள் நிறைந்தது என்பதை எடுத்துக் காட்டியது.

“இருத்தலுக்காய்” என்ற தலைப்பிலான சுகனின் கவிதை வரிகள் மிகவும் துயரமான அனுபவத்தை விவரிப்பனவாக உள்ளன.

“அத்திலாந்திக் பசுபிக் கரீபியன் கடல்

கட்டுச் சோறுமின்றிக் காற்றின் துணையுமின்றி

கடப்பதறிவார்கள் கடலுள்

அமிழ்ந்தது மறிவார்கள்.

இந்தப் பனிமலையின் இடுக்குகளுடு

இடுப்பிலிரண்டு குழந்தைகள் ஏந்தி

இவ்விருள் பொழுதைக் கடந்து விட்டாலோ

இத்தாலி வந்துவிடும் என்ற மொழி கேட்டு

எட்டி வைத்த கால்கள் தளர

இறந்த குழந்தைகள் கதையறிவார்கள்”3

குடும்பத்துடன் நாடு கடந்து கடல் வழியாக இத்தாலி சென்ற ஒருவனின் குழந்தைகள் நடுக்கடலில் பசியினால் துடித்து இறந்த செய்தியை மிகவும் தத்ரூபமான கவிதை வரிகள் சொல்லிச் சென்றன.

“காட்டில்

கடல் வெளியில்

கரிசல்பூமி அகதி முகாம்களில்

முகமிழந்த கடவுச் சீட்டில்

சரக்குக் கப்பலின் அணியக் கிடங்கில்

பனியில்

பன்மொழிக் கலப்பில்

துருவக் கொடுங்குளிரில்

இவையெல்லாம்

தரிப்புக்களல்ல

தடயங்கள்”4

எண்ணக் கனவுகளைச் சுமந்தபடி தன் இருத்தலுக்கான வேட்கையுடன் புலம்பெயர்ந்தவர்கள் தமது பிரயாணங்களின் நடுவில் பட்ட அவலங்கள், வேதனைகள், சுமைகள், சோகங்கள் என்பவற்றைத் தமது வாழ்வின் ‘தடயங்களாக’ சித்திரித்துள்ளமை தெளிவாகின்றது. தமது உயிருக்குப் பாதுகாப்புத் தேடவும், உழைத்துக் குடும்பத்தை உயர்த்தவும் எண்ணி உலகின் திசையனைத்தும் பரவிய தமிழர்களின் தொலைந்து போன இளமை வாழ்வுக்கான அடையாளங்களாக இன்று எஞ்சிக் கிடப்பவை அவர்கள் பட்ட வலிகளும் வேதனைகளும் மரண அச்சுறுத்தல் நிறைந்த பிரயாண அவலங்களும் மட்டுமே என்பதைப் புலம்பெயர்ந்தவர்களின் கவிதைகள் கொண்டுணர முடிகின்றது.

அடிக்குறிப்புகள்

திருநாவுக்கரசு.ப, (தொ.ஆ), புலம்பெயர்ந்தோர் கவிதைகள்,, பக்.161

மேலது, பக்.96-97

மேலது, பக்.122

மேலது, பக்.131

-தியா-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad