விநாயகர்ச் சதுர்த்தி
கல்லிற் செய்த கருஞ் சிலையாம்
கணக்காய் அமைத்த கற் கோயிலாம்
கருணைக் கடவுளாய்க் காண்பவர் பலராம்
கண்மூடித் தனமாய்க் கடிந்துரைப்பர் சிலராம்
கணபதி என்ற கனிவான நாமமாம்
கணங்களுக்கு எல்லாம் அதிபதி அவராம்
கலைநயம் மிக்கக் களையான வடிவமாம்
கல்லையும் கரைக்கும் கனிவவர் குணமாம்
கம்பீரம் நிறைந்த வேழ முகமாம்
கனத்துச் செரித்த பெருத்த சரீரமாம்
களிமண் கொண்டு வடித்திட வேண்டுமாம்
கடலினில் கொண்டுபின் கரைப்பதே சரியாம் !!
கதைகள் பலவும் கணக்கின்றிச் சொன்னதேன்?
களிமண் கொண்டால் சக்திகள் புகுந்திடுமோ?
கடலின் கரைப்பதால் சாதித்தல் ஏதேனுமுண்டோ?
கருத்தது தெளிதல் கடையர்க்கும் தேவையன்றோ?
கடவுள் என்பவன் கடந்து உள்செல்பவன்
கண்களில் புலப்படாத காருண்ய சக்தியவன்
கமண்டல ஞானிக்கு விளங்கிய தத்துவம்
கடைக்கோடி மானுடர்க்கும் விளக்குவது எங்கனம்?
கடவுளென்று ஒன்றதைக் களிமண்ணில் வடித்தெடுத்து
கருணையின் எல்லையாய்க் கசிந்துருக விளக்கமிட்டு
கற்பித்த போதனைகள் கனமான தத்துவங்கள்
கவனமாய் மனமேற கவின்மனம் குளிர்ந்ததால்
கண்களில் வெளிக்காணும் காட்சி நிலையல்ல
கருதிட வேண்டியது கருத்ததன் ஆழமொன்றே!
கண்களுக்குக் குறிப்பாய்க் காட்டிய சிலையதை
கடலினில் எறிந்து கரைத்து முடிப்பதால்
கடவுள் என்பது உருவ வழிபாடல்ல
கருத்துப் பேதத்திற்குச் சற்றும் இடமின்றி
கட்டாய உணர்வாய்க் காட்டிடும் வகைப்பாடு
கலக்கம், தயக்கம் குழப்பமின்றித் தெளிவோம் !!!
வெ. மதுசூதனன்.