உலகம்
இயற்கையெனும் இனிய அன்னை
இளம்பொன் சூரியக்கதிர் கொண்டு
இருள்நிறைக் கருப்பைக் கிழித்து
இன்னொரு நாளை ஈன்றெடுத்தாள்!
முகத்திரை மெல்ல விலக்கியே
முகிலும் சோம்பல் முறித்தது
வெப்பம் உடலில் தழுவிட
வெண்பனி உருகி நெகிழ்ந்தது.
மண்ணில் வெளிச்சம் படர்ந்தது
மலர்கள் இதழ்கள் விரித்தன!
விண்ணில் புள்ளினம் பறந்தன
விடியலின் ராகம் இசைத்தன!
தென்றலும் இதமாய் வீசியது
தென்னையும் தலையை அசைத்தது
சிறுபுல்லில் பனித்துளி உருண்டது
சிறகடித்துக் குருவியும் குளித்தது!
வண்ணமலரின் சுகந்தம் பெருகியது
வண்டினம் அமிழ்தும் பருகியது!
மென்னடை பயின்ற நீரோடை
மெருகேறி மஞ்சளாய் ஜொலித்தது!
உப்பரிகை நின்று நோக்கின்
உண்டு உறங்க உழிகொடுத்து
உருண்டு உழன்றுச் சுழன்றாடும்
உலகம் எத்தனை சுகமானது!
சிணுங்கிய செல்பேசி படமொன்று
சிதறச் செய்தது சொப்பனங்களை!
அகதியாய்ப் புகலிடந் தேடியலைந்து – கடலில்
அனாதைப் பிணமாய்ச் சி(ரி)றியகுழந்தை.
– ரவிக்குமார்