\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 12

Filed in இலக்கியம், கதை by on September 28, 2015 0 Comments

24_Sep_Jail_420x746முன்கதைச் சுருக்கம்: (இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 11)

கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணாமூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் கேட்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வர, கணேஷ் அதனைப் போலீஸ் அதிகாரி ராஜேந்திரனிடம் விளக்கி கார்டையும் ஒப்படைக்கிறான்.

ஆனால், ராஜேந்திரன் தனது பர்ஸ்ஸுடன் சேர்த்து அந்தக் கார்டைத் தவற விட்டுப் பின் அதனைப் பணத்திற்கு ஆசைப்பட்டு எடுத்த துப்புறவுத் தொழிலாளி மாசானின் வீட்டிற்கருகில் கண்டுபிடிக்கிறார். அதனைத் தோண்டி எடுக்கையில், அந்த எஸ்.டி. கார்டிற்கு அருகில், புதைக்கப்பட்ட ஒரு பெண் பிணமாகக் கிடைக்கிறாள். டாக்டர் தேசிகனின் மகளைக் கடத்தி வைத்து, தட்சிணா மூர்த்தியைக் கொலை செய்தால் புஷ்பாவை விட்டு விடுவதாக  மிரட்டி மருத்துவமனைக்குக் கடத்திவருகிறார் தனவந்தர் ராமச்சந்திரனும் அவரின் ஆட்களும். தட்சிணா மூர்த்தி படுத்திருந்த ரெகவரி அறையில் அவனைக் கொலை செய்ய முயலுகையில், கையும் களவுமாக சிறைப்படுத்தப்படுகிறார்கள். இதற்கு முன்னதாகவே செல்வந்தர் வேலாயுதமும் சிறைப்படுத்தப்பட்டிருகிறார்.  

இதற்கிடையில், கல்லூரிக்கு வந்த பாரதி கடத்தப்பட்டதை அறிந்த கணேஷ், நண்பனுடன் அவளைத் தேடிப் புறப்படுகின்றான். அதற்குள்ளாக பாரதி மீட்கப்பட்டு வீடு சேர்க்கப்படுகிறாள். வேலாயுதத்தின் நண்பரும், இந்தக் கடத்தலுக்குத் தலைமை தாங்கியவருமான ஆடிட்டர் விஸ்வனாத்தும் கைது செய்யப்படுகிறார். கொலை செய்யப்பட்ட சபாரத்தினம் ஆசாரியின் மகன் வேலாயுதம் கைது செய்யப்பட்டவுடன் தன் தந்தை வேலாயுதம் கொடுக்கவிருந்த நகை ஆர்டரை வேண்டாமென்று மறுத்த விஷயத்தைப் போலீஸுக்குச் சொல்வது என்று முடிவெடுத்து, ஒரு முறை ஃபோன் செய்த லக்‌ஷ்மணன் கமிஷனரின் குரல் கேட்டதும் பயத்தில் ஃபோனைக் கட் செய்து விட்டான்.

கைதுசெய்யப்பட்ட மூவரையும் கமிஷனர் ராஜேந்திரன் விசாரிக்கிறார். டாக்டர் புஷ்பா இறந்த விஷயம் டாக்டர் தேசிகனுக்குச் சொல்லப்படுகிறது, அவரும் சடலத்தை மார்ச்சுவரியில் பார்த்துக் கொண்டிருக்கையில், சடலத்தின் கையில் மாட்டியுள்ள நரைத்த தலைமுடி எடுக்கப்படுகிறது. இதற்கிடையில், தனது மகள் பாரதியின் உள்ளத்தை உணர்ந்த சுந்தரம், அவள் கணேஷைக் காதலிப்பது தனக்குச் சம்மதம் என்று தெரிவிக்கிறார்.

அதன் பிறகு என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

செவ்வாய்க் கிழமை காலை ஆறு மணி:

கிழக்கே பிளம்பென சூரியன் உதிக்க ஆரம்பித்திருந்தான். அந்த வெளிச்சம் மெதுவாக அந்தக் கிராமத்துப் போலீஸ் ஸ்டேஷன் சாளரங்களை ஊடுருவி உள்ளே வரத் தொடங்கியிருந்தது. கிட்டத்தட்ட அரை மணிநேரத்திற்கு முன், பக்கத்து பாய் கடையிலிருந்து கொண்டுவரப்பட்ட டீ குடிப்பாரில்லாமல் ஆறிப்போய் அனாதையாய் மேசையின் மீது அமர்ந்திருந்தது. மேசைக்கு முன்னர் அமர்ந்திருந்த விஸ்வநாதனின் வக்கீல் சப்த நாடியும் ஒடுங்கிப் போயிருந்தார். கடந்த ஓரிரு மணி நேரங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கையில், தனது சாதுர்யமான வழக்காடும் திறமையோ, இந்த மூன்று செல்வந்தர்களின் செல்வாக்கோ இவர்களைக் காப்பாற்றுமென்று தோன்றவில்லை. அசைக்க முடியாத ஆதாரங்களை இந்தச் சில மணி நேரத்திற்குள் எப்படி இவர்களால் கண்டு பிடிக்க முடிந்தது. அறிஞர் அண்ணா கூறியது போல, தமிழ்நாடு போலீஸ் ஸ்காட்லண்ட் யார்ட் போலீஸ் போன்ற திறமைபெற்றதுதானோ? ஆடிப்போயிருந்தார் அவர்.

உள்ளே ஒரே செல்லுக்குள்ளே விஸ்வநாதன், வேலாயும் மற்றும் ராமச்சந்திரன் தரையில் ஒரு மூலையில் அமர்ந்திருந்தனர். வெளிப்படையாகச் சொன்னால் அண்டர்வேருடன் அமர்ந்திருந்தனர். கடந்த சில மணிநேரங்களில் நடந்த சம்பவங்களை அவர்களால் சற்றும் நம்ப இயலவில்லை. அத்தனை ஆதாரங்களும் தங்களுக்கு எதிராக, பலமாக இருப்பதை நன்குணர்ந்தனர். இனிமேல் அந்தக் கடவுளே நினைத்தாலும் நம்மைக் காப்பாற்ற இயலாது என்பது தெளிவாக விளங்கிற்று. தங்களின் பணபலத்தால் ஆடிய ஆட்டம் அனைத்தும் கண்களுக்கு முன்னே கூத்தாட, இந்த நேர்மைமிகு போலீஸ் கூட்டம் தங்களைக் கையும் களவுமாகப் பிடித்தது குறித்து ஆத்திரத்திலும், அடிவாங்கிய அவமானமும், அடுத்து என்ன நடக்குமோ என்பது குறித்த அச்சமுமாக மூலையில் அமர்ந்து விழித்துக் கொண்டிருந்தனர் மூவரும்.

செல்லுக்கு வெளியே, சப்-இன்ஸ்பெக்டர் அறையில் லக்‌ஷ்மணன் அமர்த்தி வைக்கப்பட்டிருந்தான். அருகே விஸ்வேஸ்வரய்யா மருத்துவமனை சிப்பந்தி வெள்ளையுடையில் நின்று கொண்டிருந்தான். லக்‌ஷ்மணன், அவனின் அப்பா தான் சாகும் தருவாயில் அவசர அவசரமாய்க் கிறுக்கலாக எழுதிய கடிதம் ஒன்றைப் போலீஸ் வசம் ஒப்படைத்திருந்தான். அந்தக் கடிதம் இரண்டு மணி நேரத்திற்கு முன்னர்தான், அதாவது போலீஸிடம் ஃபோன் செய்து அப்பா வேலாயுதத்தின் தொழில் சம்பந்தமான தொடர்புகள் வேண்டாம் என்று கூறிய செய்தியைச் சொன்ன பின்னர்தான் அவனுக்குக் கிடைத்தது. சபாரத்தினம் அவசரத்தில் கடிதம் எழுதிக் கவரில் போட்டு, மகனின் விலாசத்தையும் எழுதி போகிற வழியில் தூக்கி எறிந்துவிட்டுப் போயிருக்க வேண்டும். அந்த வழியில் சென்ற ஆட்டோக்காரரின் கையில் அது கிடைக்க, அவன் சவாரி முடித்து ஸ்டேண்டுக்கு வந்து சேர்ந்த அதிகாலையில் லக்‌ஷ்மணனிடம் கொண்டுதர, பிரித்துப் படித்ததில் அடைந்த அதிர்ச்சியில் போலிஸ் ஸ்டேஷனுக்கே நேரடியாய் வந்து சேர்ந்தான் லக்‌ஷ்மணன்.

அந்தக் கடிதத்தில் வேலாயுதத்தின் அத்தனை திரைமறைவு வேலைகளையும், சுருக்கமாக ஆனால் தெளிவாக எழுதியிருந்தார் சபாரத்தினம். தான் மனமகிழ் மன்றம் சென்று அவரைப் பார்த்து அவரின் தங்க நகைகள் ஆர்டர் வேண்டாம் என்று மரியாதையுடன் மறுத்துவிட்டுத் திரும்பலாமென்று செல்கையில், வேலாயுதம் தனது நண்பர்களான ராமச்சந்திரன் மற்றும் விஸ்வநாதனிடம் கோயிற்சிலைகள் கடத்தும் தொழில் குறித்துத் தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தார். அதனை முழுவதும் கேட்ட அவர், யாரேனும் பார்ப்பதற்குள் அங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்ற பதற்றத்தில் ஓட ஆரம்பித்து, அந்தச் சத்தம் கேட்டதில் அவரைப் பின் தொடர்ந்து அடியாட்கள் வந்து.. பின்னர் நடந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த அடியாட்கள் அவரைக் கொலை செய்யுமுன் இப்படி ஒரு விரிவான கடிதத்தை அவர் எழுதியிருந்தார் என்பது எவரும் அறியாதது. இறந்தவர், கொலை செய்யப்படுவதற்குச் சற்று முன்னர் எழுதியது என்பதால் இதற்கு இன்னும் அதிக அளவு நம்பிக்கையும், முக்கியத்துவமும் கோர்ட்டில் வழங்கப்படும் என்பதில் ராஜேந்திரனுக்குப் பல மடங்கு மகிழ்ச்சி.

இரண்டாவதாக, விஸ்வேஸ்வரய்யா மருத்துவமனைச் சிப்பந்தி கொண்டுவந்த டி.என்.ஏ ரிப்போர்ட் இறந்து போன புஷ்பாவின் கையில் அடங்கியிருந்த மயிர்க் கொத்து ராமச்சந்திரனுடையது என்று தெள்ளத் தெளிவாக விளக்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து, ராமச்சந்திரனின் புஷ்பாவின் அப்பா வீட்டிற்குச் சென்று மிரட்டியதற்கும், மருத்துவமனையில் சென்று அவரைக் கொலை செய்ய எத்தனிக்கும் தருவாயில் கையும் களவுமாக மாட்டியதும், மேலும் அசைக்க முடியாத ஆதாரங்கள்.

இவற்றை வைத்துக் கொண்டு இந்த மூவரையும் தூக்குக் கயிறு வரைக் கொண்டு செல்ல முடியுமென்பதில் ராஜேந்திரனுக்கு எந்தவிதமான சந்தேகமுமில்லை. இன்னும் இரண்டு, மூன்று மணிநேரங்களில், கோர்ட் திறந்து விடும் என்பதற்காகத் தூங்காமல் ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கினர் ராஜேந்திரனும், அவரது போலீஸ் படையும்.

செவ்வாய்க் கிழமை காலை ஆறு மணி முப்பது நிமிடம்:

அந்த விடிந்தும் விடியாத காலைப் பொழுதில், அந்த மனமகிழ் மன்றம் இருந்த தெருவே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. வழக்கமாக அந்த நேரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில பெருசுகள் மட்டும் டீக்கடை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் ஆளரவம் மிகவும் குறைவான அந்தத் தெருவில், மூன்று நான்கு போலீஸ் ஜீப்கள், ஒரு பெரிய போலீஸ் பஸ், சில கார்கள், இரண்டு மூன்று மோட்டார் சைக்கிள்கள் எனத் தெருவே களைகட்டியிருந்தது. எங்கு பார்த்தாலும் காக்கிச் சட்டைகள்.

சுற்றியிருந்த வீட்டிலிருப்பவர்கள் என்ன நடக்கிறதென்று ஆர்வமிருந்தாலும், போலீஸைப் பார்த்த பயத்தில் வெளியில் வராமல் வீட்டிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த மன்றத்தின் காவலாள், கைகளில் விலங்கிடப்பட்டு ஒரு ஜீப்பில் உட்கார்ந்திருந்தான். அவனது மனைவி தூரத்தில் புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு யாருக்கும் கேட்காவண்ணம் புலம்பிக் கொண்டிருந்தாள். அவள் புலம்பியதன் சாராம்சம் தான் எத்தனை முறை அறிவுரை கூறியும் கணவன் கேட்கவில்லையென்பதும், அவர்களின் சட்ட விரோத நடவடிக்கையில் எந்த சம்பந்தம் இல்லாவிடினும் அதனைத் தெரிந்தும் தெரியாதது போல் காவல் காத்துக் கொண்டிருந்ததற்கு அவர்களுக்கு வந்த தொகை மிகவும் குறைவு என்பதும் மட்டுமே. தன் கணவன் எந்தவிதப் பிரச்சனைகளும் இல்லாமல், போலீஸிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்று தனக்குத் தெரிந்த தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டிருந்தாள்.

மன்றத்துக்குள்ளே போலீஸ் படை நுழைந்து எல்லாவற்றையும் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தன. பழைய காலத்து, செட்டியார் வீட்டுக் கட்டிடம். பல அறைகள், முற்றம், வராண்டா என மிகப் பெரிய இடம். ஒன்று விடாமல் தேடுவதற்குப் பல மணி நேரங்களாகும். சப் இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் அனைவரும் மிகத் துரிதமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு அறையில் சீல் செய்து வைக்கப்பட்டிருந்த கள்ளியம்பெட்டி அவர்கள் கண்களில்பட, சுப்பையா, “எலே, அந்தக் கடப்பாரையைக் கொணாந்து இதைத் தொறந்து பாரு” என ஆணையிட்டுக் கொண்டிருந்தார். சிறிது நேர முயற்சிக்குப் பின்னர் திறக்கப்பட்ட அந்த கள்ளியம்பெட்டியைப் பார்த்த அனைவரின் விழிகளும் அதிர்ச்சியில் பிதுங்கி வெளியில் விழுந்துவிடும் போலிருந்தது. அந்த ஊரிலேயே மிகவும் பணக்காரச்சாமி என அழைக்கப்படும் சிவன் கோயிலிலிருந்த மீனாட்சியின் வெண்கலத்தாலான சிலை, அந்தச் சிலையில் அத்தனை வகையான வைர வைடூரிய நகைகளும் ஜொலித்துக் கொண்டிருந்தன. கோயிலிலிருந்த சிலையை வேறொரு டியூப்ளிகேட் நகையணிந்த சிலையினால் அலங்கரித்து வைத்து விட்டு, ஒரிஜினல் சிலைகளை அயல் நாட்டுக்கு அனுப்புவதற்கு பேக் செய்து வைத்திருந்தார்கள். நகைகளுடன் கூட சிலைகளுக்கும் அந்த நாடுகளில் மதிப்பு அதிகமாம்.

பல ஆவணங்களும் போலீஸால் கைப்பற்றப்பட்டது. மொத்தத்தில் வேலாயுதம், விஸ்வனாதன் மற்றும் ராமச்சந்திரன் சட்டத்தின் பிடியிலிருந்த தப்பித்துக்கொள்ள எந்த வழியுமில்லை என்பது உறுதியானது.

செவ்வாய்க் கிழமை காலை ஏழு மணி:

கிட்டத்தட்ட இருபது மணிநேரத்திற்கும் மேலாக அழுது அழுது அயர்ச்சியில் தூங்கிப் போயிருந்த சபாரத்தினத்தின் குடும்பம் அந்தக் காலை வேளையிலேயே முழுவதுமாக எழுந்திருந்தது. வந்திருந்த சொந்தக்காரர்கள், பக்கத்து வீட்டு ஜனங்கள் என அனைவரும் அவர்களின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரின் முகத்திலும் ஓரளவு நிம்மதி, மகிழ்ச்சி. அதற்கான காரணம் சபாரத்தினத்தைக் கொன்றவர்கள் பிடிபட்டனர் என்பதே. எதற்காகக் கொன்றார்கள் என்பதும் தெரியவந்ததில் அவர்களுக்கு நிம்மதி.

லக்‌ஷ்மணன் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விஷயங்களை அனைவருக்கும் விளக்கிக் கொண்டிருந்தான். அந்த மூவரைப் பற்றியும் அவர்கள் எப்படி உட்கார்ந்திருந்தனர் என்பது குறித்தும் ஒரு விவரத்தையும் விட்டுவிடாது விளக்கிக் கொண்டிருந்தான். ”அப்டியே பாஞ்சு கொரவளய நெறிச்சுக் கொண்டுவுடலாமுன்னு தோணிச்சு.. பாவி கரப்பானுவ… தூக்குப் போட்டுச் சாவடிக்கன்ணும், அப்பச்சியப் போயி…….” பேசி முடிப்பதற்கு முன்னர் லக்‌ஷ்மணனின் கண்களில் ஈரம் கோர்க்கத் துவங்கியிருந்தது.

அவற்றுடன் கூட, போலீஸ் கொடுத்த இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் குறித்தும் விளக்கிக் கொண்டிருந்தான். ஆயுதமேந்திய இரண்டு போலீஸ்காரர்கள் காவலுக்காக  வெளியில் நின்று கொண்டிருந்தனர். .

24_Sep_Bus-lover_620x349

செவ்வாய்க் கிழமை காலை ஏழு மணி முப்பது நிமிடம்:

எப்பொழுதும்போல காலையிலெழுந்து தயாராகிவிட்டான் கணேஷ். கடந்த இருபத்தி நான்கு மணி நேரங்களாக நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்க்க, ஒரே அயர்ச்சி மற்றும் பல விதமான உணர்வுகள். தான் பார்த்தது சபாரத்தினத்தின் கொலை என்பதும் அவரைக் கொலை செய்தவர்கள் பிடிபட்டனர் என்பதும் தொலைக்காட்சிச் செய்திகளின் மூலம் அறிந்து கொண்டான். இந்தக் களேபரத்தில் நடந்து கொண்டிருக்கும் செமஸ்டர் தேர்வைப்பற்றி முழுவதுமாய் மறந்து போய்விட்டான். இன்றைக்கு சர்க்யூட் தியரி எக்சாம், எதுவும் படிக்கவில்லை, அந்த விஜயா மிஸ் எவ்வளவு கேவலமாகப் பார்ப்பாள் என நினைக்க அவனுக்குச் சற்று வெறுப்பாக இருந்தது. சீக்கிரமே ரெடியாகி விட்டதால், இன்னும் பஸ் வருவதற்கு நேரம் இருக்கிறது என்று தெரிந்தாலும், வீட்டைவிட்டு பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடக்கத் துவங்கினான்.

போகிற வழியில் பார்ப்பவர்களையெல்லாம், அண்ணே, தம்பி என அவரவர்களின் வயதிற்கேற்ப அழைத்துப் பேசிக்கொண்டே சென்றான். அனைவருக்கும் கடந்த இருபத்தி நான்கு மணிநேரத்தில் நடந்தது என்ன என்பதை விளக்கிச் சொல்லிக்கொண்டே போனான்.

பஸ் ஸ்டாண்ட் வந்தாகி விட்டது, இன்னும் சற்று நேரத்தில் 1A பஸ் வந்து நிற்கும், அந்த பஸ்ஸிற்குள்…. தன்னுடைய தேவதை அமர்ந்திருப்பாள், கணேஷின் மனதில் ஒரு வீணை வாசிக்கத் துவங்கியிருந்தது. நேற்றுக் காலையிலிருந்து இவ்வளவு துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறாளே, ’ரொம்ப டயர்டா இருக்கு’ன்னு வராமல் இருந்து விடுவாளோ… அதெப்படி, பரிட்சைக்கெல்லாம் லீவு போடமாட்டாள். தனக்குத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான் கணேஷ்.

அந்தத் தெருமுனையில் மெதுவாகத் திரும்பி வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் கலந்த டவுன் பஸ் தெரிய ஆரம்பித்தது. அவசர அவசரமாய் ஓடிவந்த பிரகாஷையும், வைரவனையும் கணேஷ் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. பஸ்ஸையே கண்மூடாமால் பார்த்துக் கொண்டிருந்தான்.

பஸ்ஸும் வந்து நின்றது. சிலர் இறங்கினர், பலர் ஏறினர், வழக்கமாகக் கடைசி சீட்டில் அவள் அமருமிடத்தில் வேறு யாரோ…. அவளைக் காணோமென்றவுடன் பதைபதைத்தது நெஞ்சம்.. ஒவ்வொரு சீட்டாக கண்கள் துளாவ, இவன் படும் அவஸ்தையை ரசிப்பதற்காகவே வேண்டுமென்று வேறொரு சீட்டில் அமர்ந்து, இப்பொழுது ரொமான்ஸ் கூடிய ரசனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள் பாரதி. ஒரு ஐந்து நிமிடத் தேடலுக்குப் பின் அவளைக் கண்டுபிடித்த கணேஷ், தன்னை அலைக்கழித்து அதனை வேடிக்கை பார்க்கத்தான் இவ்வாறு செய்தாள் என்று புரிந்து கொண்டாலும், ஒன்றும் தெரியாதது போல “ஏன், வழக்கமான சீட்டுல ஒக்காரல?” என்று கேட்க, பதிலெதுவும் சொல்லாமல் அவனையே விழுங்குவதுபோல் பார்த்துக் கொண்டு, புன்னகை செய்தாள். “என்ன, எதுக்குச் சிரிக்கிற?” என்று கேட்ட கணேஷிடம், “உன் மேல நான் என் பிராணனயே வச்சுருக்கேன் கணேஷ், நம்ம கல்யாணத்துக்கு அப்பா சம்மதிச்சுட்டார்” என்றாள்.

(முற்றும்)

– வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad