எசப்பாட்டு – கேள்வி/பதில்
முத்தான தமிழ்கொண்டு
முழுமூச்சாய்ப் பாட்டமைக்கும்
முடிவில்லா கவிக்கூட்டமதை
முனைப்புடனே வினவுகின்றேன்…….
முக்காலம் உணர்ந்திட்ட
முனிவர்களும் சீடர்களும்
முன்வாழ்ந்த கோடிகளும்
முன்னோர்கள் அனைவருமே
முகமழிந்து, உயிரிழந்து
முடிவதனை எய்துவதை
முழுவதுமாய் உணர்ந்திட்ட
முன்வாழும் மனிதனவன்
முனைப்புடனே செயல்பட்டு
முயன்றுபல கலகம்செய்து
முடிவில்லா வாழ்க்கையைப்போல்
முகம்சுழிக்க வாழ்வதெதனால்?
- வெ. மதுசூதனன்.
முத்தமிழ் ரசத்தின்
முதற்றமிழ் இயலோடு
முடிவிலி மெய்யியலை
முற்றிலும் அருந்தியவன்
முறுவலுடன் கேட்கிறாய்
முயல்கிறேன் இயன்றதை!
முப்பா குறட்பிரிவில்
முடித்துவைக்கும் காமத்தில்
முதல்வனவன் மூழ்குகையில்
முனையளவு உயிர்த்துளியில்
முடிந்துவைத்து அனுப்பினான்
முன்னோரின் கடன்களை!!
முதுகிலிருக்கும் சுமையறியாது
முழுவுலகை ஆண்டிடவும்
முன்னிருக்கும் வம்சத்தின்பால்
முறிந்திடாப் பற்றுதலுக்கும்
முண்டியடிக்கும் பரிதவிப்பே
முகஞ்சுழிக்கும் வாழ்க்கையது!
- ரவிக்குமார்.