எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 1
Fusion எனும் ஆங்கில வார்த்தைக்கு இணையத்தில் பொருள் தேடிய போது இணைவு, கலவை எனப் பல தமிழ்ச் சொற்கள் கிடைத்தன. ஒரு இணையப் பக்கத்தில் இந்த ஆங்கிலச் சொல்லுக்கு உருகுதல் என்று பொருள் தந்திருந்தார்கள். மறைந்த இசை மேதை M.S.V. யின் பாடல்களைப் பற்றிய தொடரின் ஒரு பகுதியாக Fusion இசைப் பாடல்கள் பற்றிய இக்கட்டுரைக்கு இது மிகப் பொருத்தமான சொல்லாகப் பட்டது.
Fusion என்பது இரண்டு வகையான இசைப் பகுப்புகளை ஒன்றாக உருகியோடச் செய்வதாகும். ஆப்பிரிக்க வகை இசையான Blues, Funk, Jazz போன்ற இசைப் பிரிவுகளின் கலவையாக வழங்கும் இது 1960களில் அமெரிக்காவில் பரிட்சார்த்தமாகப் பலரால் முயற்சிக்கப்பட்டது. காரி பர்ட்டன் (Gary Burton) போன்ற கை தேர்ந்த கலைஞர்களுக்கு மட்டுமே நுட்பமான இந்தக் கலவையிசை வசப்பட்டு வந்தது. மிகச் சில பாடல்களே இந்தக் கலவையிசையின் இலக்கணத்துக்குக் கட்டுப்பட்டு வரும் என்பது காரி பர்ட்டனின் கணிப்பு.
ஜெமினி கணேசன். சாவித்திரி நடிப்பில் 1962ல் வெளியான ”காத்திருந்த கண்கள்” படம் புதுமைக்குக் காத்திருந்த எம்.எஸ்.வியின் கண்களுக்கும் விரல்களுக்கும் விருந்தாக அமைந்தது. ஆர்மோனியத்தின் மீது எவ்வளவு காதல் கொண்டிருந்தாரோ அதை விடப் பியோனோ இசையில் அதீத காதலும் திறனும் கொண்டிருந்தவர் அவர். அக்காலங்களில் பொதுவாக ‘கிளப்’ பாடல்கள் என்ற பெயரில் இரவு விடுதிகளில், போதையூட்டும் காட்சிகளில் மட்டுமே பியானோ இசை பயன்படுத்தப்படவேண்டும் என்ற இலக்கணத்தைச் சர்வ சாதாரணமாக மாற்றியவர் எம்.எஸ்.வி. டி.கே. ராமமூர்த்தியுடன் இணைந்து இவர் செய்த புதுமைகளுக்கு அளவேயில்லை. அன்றிருந்த ரசிப்புத்தன்மைக்குச் சிக்காத, புலப்படாத, காலத்துக்கு முந்தைய புதுமைகள் அவை. இன்றுள்ளது போல் இசை வெளியாகும் முன்பே அதைப் பற்றிய எதிர்பார்ப்பும், ஹேஷ்யங்களும், பரபரப்பும் ஏற்படுத்தும் சமூக ஊடகம் இல்லாத காலம்.
நாயகன், நாயகி பாடும் சாதரணமான காதல் பாடல். “காற்று வந்தால் தலை சாயும் நாணல்; காதல் வந்தால் தலை சாயும் நாணம்” கண்ணதாசனின் கவிநயம் பொதிந்த வரிகள் தயார். இதில் என்ன புதுமை செய்ய முடியும். நாயகன் நாயகி பாடுவதால் ஒருவர் முதல் வரியைப் பாடுவதாகவும், அடுத்தவர் இரண்டாவது வரியைப் பாடுவதாகவும் ஏற்பாடானது. இதற்கு உடன்படாத எம்.எஸ்.வி. இதைக் கேள்வி பதில் பாணியில் அமைத்திட முடிவு செய்து ‘காத்திருந்தால் தலை சாயும்’ என்று நாயகன் கேட்பதாகவும், ‘நாணல்’ என்று நாயகி சொல்வதாகவும் அமைக்க முடிவு செய்து பாடல் வரிகளுக்குப் பொருத்தமான மாற்றங்கள் செய்யப்பட்டன. கவியரசர் தனது பங்குக்குக் கடமையை முடித்து விட்டார் தாம் என்ன செய்வது என்று யோசித்தவருக்குத் தோன்றியது பியானோ இசை. வெளிப்புறக் காட்சிக்குப் பியானோவா என்று பலரது புருவங்கள் உயர்ந்தன. இதைப் புரிந்து கொண்டவர் இருபக்க எண்ணங்களையும் நியாயப்படுத்திப் பாடலை உருவாக்க நினைத்தார். இப்படியாக ‘fusion’ என்று ஒரு இசை வகை இருப்பதை அறியாமலே அவர் உருவாக்கியப் பாடல் தான் இது.
பாடலின் துவக்கம் பியானோவின் அமைதியான துள்ளல் இசை மிக ரம்மியமான ஒரு சூழலை உருவாக்க, உடன் இணையும் வயலின்கள் அதை உறுதி செய்யும். அடுத்ததாக இணையும் லாடின் கிட்டாரின் (Latin Guitar – பெரும்பாலும் ஜாஸ் பிரிவு இசைகளில் பயன்படுத்தப்படுவது) மூன்று இசைத் துண்டுகள் ஸ்டரம்மிங் (strumming) ஒலியோடு முடிந்து பாடல் வரிகள் துவங்க வழிகொடுக்கும்.
ஜெமினி கணேசனுக்காகவே உருவானது போலிருக்கும் பி.பி.எஸ்.ஸின் குரல் காதல் ததும்ப ‘காற்று வந்தால் தலை சாயும்’ என்று கேள்வித் தொனியோடு நிறுத்த, ‘நா….ணல்’ என்று விடை பாணியில் பி.சுசிலா முடித்து வைப்பார். எந்த வயதினருக்கும் காதல் சூழலை உருவாக்கித் தரும் பாடல் இதுவென்றால் அது மிகையில்லை. இரண்டாவது முறை ‘காற்று வந்தால் தலை சாயும்’ என்ற நாயகன் பாடும் போது வயலின் பிரவாகமெடுத்து ஒலிக்க, பின்னணியில் பியானோ இந்த வரிகளைத் தூக்கிக் கொடுக்கும். ‘ஆடை தொட்டு விளையாடும் ..’ என்று நாயகி நிறுத்த ‘தென்..றல்’ என்று நாயகன் முடிக்கும் இடத்தில் கிட்டாரின் ஸ்டரம்மிங்.. ஒரு சாதாரணச் சொல்லுக்கு இப்படி ஒரு அலங்காரம். எப்படி இந்த எண்ணம் உருவானது அல்லது சாத்தியப்பட்டது. சிங்கிள் ட்ராக் ரெகார்டிங் முறையில் பதிவு செய்யப்பட்ட அந்தக் காலங்களில் தவறான நேரத்தில் இந்த ஸ்டரம்மிங். ஒலித்திருந்தால், முழுப் பாடலையும் மறுபடியும் ஒலிப்பதிவு செய்ய நேர்ந்திருக்கும்.
மிகவும் சுகமான பல்லவிக்குப் பிறகு அழுத்தமான பியானோவுடன் தொடங்கும் இடையிசை வயலினுக்கு வழிவிட்டுத் தாலாட்ட, TRIANGLE எனும் இசைக்கருவியின் தாளம் மட்டும் இணைந்திடும். (பல்லவி முழுவதும் மெலிதான ட்ரம்ஸ் ரிதம் இருந்தாலும் பியானோ இசையும், கிட்டாரும் மட்டுமே பிரதான தாள இசையாக ஒலித்ததைக் கவனித்தீர்களா?). இடையிசையின் இடையே விஸ்வநாதனின் கற்பனை ஜாலம் விஸ்வரூபம் எடுக்கிறது. எங்கிருந்தோ இணையும் புல்லாங்குழல் வேறொரு இசைச் சூழலை உருவாக்கித் தர ‘மழை வருமுன் வானை மூடும்’ என்ற வரிகள் துவங்க பல்லவியின் பின்னணிகளைத் தகர்த்தெறிந்து தபேலா சேர்ந்து கொள்ளப் பியானோ, கிட்டார், வயலின், புல்லாங்குழல், தபேலா என்றொரு புதிய கூட்டணி!! அதுவரை பாடல் சென்ற விதத்தை, அடிப்படை ராகத்தைச் சற்றும் சிதைக்காமல், பலரால் அதை அறிந்து கொள்ளக் கூட முடியாத வகையில் பியானோ தபேலாவின் இழைவைப் புகுத்தியிருப்பார். இது தான் உச்சம் என்று நினைக்கும் வேளையில் சரணம் முடியும் தருவாயில் ‘பாசத்தோடு சேர்ந்து கொள்வேன் நானும்’ என்ற வரியை நாயகன் முடிக்க, ‘நானு..ம்’ என்று நாயகி பாட, மீண்டும் ‘நானு…..ம்’ என்று நாயகன் பாட இருமனங்களின் சங்கமம் என்று சொல்வார்களே அந்த வரியின் முழு அர்த்தமும் இந்த ‘நானும்’ என்ற ஒரே சொல்லில் சத்தியமாகும். இருவரும் சொல்லும் அந்த ‘நானும்’ என்ற ஒரு சொல்லில் தான் எத்தனை வேறுபாடுகள், பாவங்கள்? இந்த ஆச்சரியங்களிலிருந்து மீள்வதற்கு முன் மீண்டும் பியானோவின் கொஞ்சலோடு பல்லவி
.
முரண்பாடான இசைக் கருவிகள் இணைந்திருந்தாலும், ஒன்றோடொன்று இழைந்து, குழைந்து உருகியோடி வழியும் இந்தப் பாடல் கம்போசிஷன், ஆர்க்கெஸ்ட்ரேஷன் இரண்டுக்கும் மிக அருமையானதொரு உதாரணம். தமிழ்த் திரையிசைப் பாடல்கள் என்ற தலைப்பில் இசையை முன்னிறுத்தி எவரேனும் முனைவர் படிப்புக்கு முயன்றால் இப்பாடலைத் தவிர்த்துவிட முடியாது.
எம்.எஸ்.வியின் எண்ணற்ற பாடல்கள் இசையாய்வுக்கு மேற்கொள்ளப்பட வேண்டியவை. ஏற்கனவே சொன்னது போல் அக்காலத்தில் பலருக்குப் பாராட்டத் தெரியவில்லை; இக்காலத்தில் பாராட்ட யாருக்கும் தெளிவில்லை.
இந்தப் பாடலைப் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். இதே பாசுரத்தில் சோகச் சூழலுக்கு அமைந்தது ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்ற பாடல்.
காத்திருந்த கண்கள் படத்தில் இடம்பெற்ற மற்றொரு மகத்தான பாடலான ‘ஓடம் நதியினிலே’ பாட்டைப் பற்றி அடுத்த இதழில் காண்போம்.
(தொடரும்)
- ரவிக்குமார்.
Superb. Please continue.
Superb. Keep it up and continue.