ஆப்பிள் – கொய்யவும், கொறிக்கவும்
ஆப்பிள் என்று சொல்லிவிட்டு, சாப்பிடும் ஆப்பிள் என அழுத்திச் சொல்லும் காலத்தில் இருக்கிறோம். இது சாப்பிடும் ஆப்பிளைப் பற்றிய கட்டுரை.
ஆதாம் ஏவாள் தான் உலகின் முதல் மனிதர்கள் என்றால், ஆப்பிள் தான் முதல் பழம்.
ஒரு பவுண்ட் ஆப்பிள் – வகையைப் பொறுத்து ஒரு டாலரில் இருந்து கிடைக்கிறது. ஒரு அவகடோ, கிட்டத்தட்ட ஒரு டாலர். ஒரு மாதுளை, கிட்டத்தட்ட இரண்டு டாலர். கொய்யா – வகையைப் பொறுத்து பவுண்ட் இரண்டில் இருந்து ஐந்து டாலருக்கு மேலே கூடப் பார்த்திருக்கிறேன். ஒரு அன்னாசி, மூன்று நான்கு டாலர். இந்தக் கணக்கைப் பார்த்தால் ஆப்பிள் தான் சீப்பாகத் தெரிகிறது.
இருந்தாலும், ஆப்பிள் ஒரு பணக்காரப் பழம் என்ற கண்ணோட்டம் இன்னமும் மறையவில்லை. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரிடம் செல்லத் தேவையில்லை என்று ஒரு ஆங்கிலப் பழமொழியை இன்று வரை சொல்லி வருகிறார்கள். கண்டிப்பாக, இதை ஒரு டாக்டர் சொல்லியிருக்க மாட்டார். வேண்டுமானால், ஒரு ஆப்பிள் வியாபாரி சொல்லியிருக்கலாம். இது போல், ஆப்பிளுக்கு ஒரு புனிதப் பிம்பம் கொடுக்கப்பட்டு, அதன் மேல் இருக்கும் மதிப்புக் குறைந்ததேயில்லை.
உண்மையில், ஆப்பிள் ஒரு சத்து மிகுந்த பழம் தான். விட்டமின்களும், நார்சத்தும் கொண்ட பழம். இதய நோயும், புற்று நோயும் வராமல் தடுக்கவல்லது. அதே சமயம், அதை எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். பூச்சிக் கொல்லி மருந்து, மெழுகு போன்றவற்றைப் போக்க தண்ணீரில் கழுவுவது அவசியம். ஜீஸ், சாஸ் எனப் பிராசஸ் செய்யாமல், முழுப் பழமாகச் சாப்பிடுவது நல்லது. தோலுடன் சாப்பிட வேண்டும். தோலின் உட்பகுதியில் உடலுக்குத் தேவையான முக்கியச் சத்துகள் உள்ளன. அதனால், அப்படியே சாப்பிடவும். விதைகளை மட்டும் விட்டுவிடவும். ஒன்றிரண்டு தெரியாமல் விழுங்கினால் பிரச்சினை இல்லை. பொழுது போகாமல், கால் கிலோ விதையை எடுத்துக் கடித்துத் தின்றால் தான் பிரச்சினை. அதேபோல், கத்தியில் வெட்டிச் சாப்பிடாமல், அப்படியே கடித்துச் சாப்பிடவும். கத்தியில் வெட்டும் போது, பழம் மட்டும் வெட்டுப் படாமல், அதில் இருக்கும் செல்களும் பாதிப்படைகின்றன. வெட்டிச் சிறிது நேரத்தில், வெட்டப்பட்ட ஆப்பிளின் நிறம் மாறும். இப்படி மாறுவதால், பிரச்சினை எதுவுமில்லை. மாறுவதைத் தடுக்க, எலுமிச்சை, உப்பு போன்றவற்றைப் பயன்படுத்தலாம். மற்றபடி, ஆப்பிள் தினமும் உட்கொள்ளக் கூடிய, வேண்டிய பழம் தான்.
இதில் தான் பிரச்சினை. தினமும் சாப்பிடுவதில் என்ன பிரச்சினை? ஆப்பிள் தான் வருடம் முழுக்கக் கடைகளில் கிடைக்கிறதே என்கிறீர்களா? கடைகளில் வருடம் முழுவதும் கிடைக்கிறது. ஆனால், மரத்தில் வருடம் முழுக்கப் பழுப்பதில்லையே? ஒரு வருடத்தில், ஒரு குறிப்பிட்ட காலம்தான் ஆப்பிள்கள் கனியும். அமெரிக்காவில் ஆகஸ்ட் முதல் நவம்பருக்கு இடைபட்ட காலத்தில். ஆனாலும், நமக்கு வருடம் முழுக்க ஆப்பிள் கிடைக்கிறது. எல்லாம் நவீன அறிவியலின் பலனால்.
சில நேரங்களில், நீங்கள் சாப்பிட்ட ஆப்பிள், ஒரு வருடத்திற்கு முன்பு மரத்தில் பறிக்கப்பட்டதாக இருக்கலாம். எல்லா ஆப்பிள்களும் மரத்தில் பறிக்கபட்டவுடன், கடைக்கு வருவதில்லை. வழியில் பதனப்படுத்தும் கிடங்கில் ஒன்றிரண்டு மாதங்களோ, சமயங்களில், ஒரு வருடம் கூடத் தங்கிவிட்டு வரும். அவ்வளவு நாட்கள் கெடாமல் இருக்க, மெழுகுப் பூச்சுடனும், இரசாயனப் பூச்சுடனும் குளிர் நிலையில் பாதுகாக்கப்படும்.
இதைக் கேட்டு, இவ்வளவு நாட்கள் கழித்துச் சாப்பிட வேண்டியிருக்கிறதே என்று வருத்தமும் படலாம். சீசன் என்றில்லாமல் வருடம் முழுக்க ஆப்பிள் கிடைக்கிறதே என்று சந்தோஷமும் படலாம். இப்படிச் சாப்பிடுவதால் பெரிய கெடுதல் என்று எதுவுமில்லை. இரசாயனப் பூச்சும், மெழுகுப் பூச்சும் போக்க, நன்றாகக் கழுவ வேண்டும். எவ்வளவு நாட்கள் பழையது என்பதைப் பொறுத்துப் பழத்தில் சத்துகள் குறைந்தோ, இல்லாமலோ இருக்கும்.
இதையெல்லாம் தவிர்க்க, ஆப்பிள் ரசிகர்கள் தவறாமல் செய்ய வேண்டிய வேலை, ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதங்களில் நேரடியாக ஆப்பிள் தோட்டத்திற்குச் செல்வது தான். அதுவும் மினசோட்டாவில், எக்கச்சக்க ஆப்பிள் தோட்டங்கள் இருப்பதால், இம்மாதங்களில் வாரா வாரம் அங்கு சென்று ஆப்பிள் பறிக்கலாம்.
இம்மாதங்களில், சில கடைகளில் கூட, புதுப் பழங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ள ஆப்பிள்களை, அதிக விலைகளில் விற்று, “இவ்வளவு நாளு பழைய பழத்தையாடா வித்தீங்க?” மொமெண்ட்டை நமக்கு ஏற்படுத்துவார்கள்.
தமிழர்களுக்கு ஆப்பிள் மரம் என்பதே அதிசயம் தான். தமிழ்நாட்டில் எங்கு சென்று ஆப்பிள் மரம் பார்ப்பது? அப்படி உணர்பவர்கள், ஒரு முறையாவது இங்கு ஒரு விசிட் அடிக்கலாம்.
இங்குள்ள சில தோட்டங்களில் பறித்த பழங்களை, தோட்டத்திற்கு வெளியே சிறு கடை அமைத்து விற்கிறார்கள். சில தோட்டங்களில் கட்டணம் வசூலித்துக் கொண்டு, பழம் பறிக்க தோட்டத்திற்குள் அனுமதிக்கிறார்கள். பழம் பறிப்பது என்பதோடு விடாமல், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், சிறு உணவகம் என்று பாதி நாளைக் கழிக்கும் ஏற்பாடுகளும் இருக்கின்றன.
ஆப்பிள் மரம், ரொம்பப் பெரியதாக வளருவதில்லை. மரத்தின் அளவுக்கும் ஆப்பிள்களின் எண்ணிக்கைக்கும் சம்பந்தமில்லை. இங்குள்ள சில மரங்களில், பழங்கள் ஏராளமாகக் காய்த்துக் குலுங்குகின்றன. மரத்தின் கீழேயேயும் நிறையப் பழங்கள் உதிர்ந்து விழுந்து கிடக்கின்றன.
இப்படிப் பறிக்க வருபவர்களுக்காக, தோட்டத்தின் சில பகுதியை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். பழங்களைப் பறித்துப் போட்டு எடுத்துச் செல்வதற்குப் பைகள் விற்கிறார்கள். பையின் விலை அந்தப் பையிற்கு என்றில்லாமல், ஆப்பிளுக்கும் சேர்ந்ததாக இருக்கிறது. அதாவது, ஒரு பிளாஸ்டிக் பையின் விலை இருபது–முப்பது டாலர்கள் என உள்ளது. அதில் எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளிப் போட்டு எடுத்துச் செல்லலாம். ஒன்றிரண்டு போதும் என்று நினைப்பவர்கள், அங்கேயே ஒரு மரத்தின் கீழே அமர்ந்து, வேண்டும் வரை பறித்துச் சாப்பிட்டு விட்டு வரலாம்.
கடை ஆப்பிளையே சாப்பிட்டு வருபவர்கள், முதல் கடியைக் கடித்தவுடனேயே ஒரு புது சுவையை உணரலாம். மரத்தில் பறித்த ஆப்பிளுக்கும், கடை ஆப்பிளுக்கும் உள்ள வித்தியாசம், சூப்பர் ஸ்டாருக்கும், பவர் ஸ்டாருக்கும் உள்ள வித்தியாசம் போன்றது. இவ்வளவு நாட்கள் பவர் ஸ்டாரயா, சூப்பர் ஸ்டார் என்று நினைத்திருந்தோம் என்று நீங்கள் ஏமாந்த விஷயமும் புரிபடும்.
அதனால், ஆப்பிளின் உண்மைச் சுவையை அறிய, உடனே மினசோட்டாவின் ஏதோவொரு ஆப்பிள் தோட்டத்திற்கு விரைந்திடுங்கள்.
ஆப்பிளைப் பறிப்போம். ஆப்பிளைக் கொறிப்போம். :
–சரவணகுமரன்.