காட்டுப்பன்றி சின்ன வெங்காயப்பிரட்டல்
தமிழரின் பாரம்பரியங்களில் காட்டுப் பன்றி வேட்டையானது வில்லேந்தும் வேந்தனில் இருந்து, சேனைப் பயிர் செய்த செவ்விளங்காளைகள் தொட்டு, வேட்டையாடும் வன்னியர் வரை யாவரும் விரும்பிச் செய்த கருமம். தக்கிண பூமியில் இந்தியக் கண்டம் தொட்டு இலங்கை வரை பரந்து வாழ்ந்த வளமான வயல் காட்டு, நாட்டரிசியும், வாயூறும் வகை வகையான வனவிறைச்சிகளையும் சுவைக்கும் தமிழர் யாவரும் உட்கொண்ட உணவு பன்றி.
இன்று மினசோட்டா மாநிலத்தில் தென்மேற்குப் பகுதியிலும், அயல் விஸ்கான்சின் மாநிலத்திலும் இருந்தும், கனேடிய ஒன்டாரியோ மாகாணத்தின் கிழக்குப் பாகத்திலிருந்தும் காட்டுப்பன்றி இறைச்சி பெற்றுக் கொள்ளமுடியும்.
தேவையானவை
10-12 சின்ன வெங்காயம் – சிறிதாக அரிந்து எடுத்துக் கொள்ளவும்
1 பச்சை மிளகாய் – நறுக்கி எடுக்கவும்
1 கிளை கறிவேப்பிலை
3 உள்ளிப்பூண்டு நகங்கள்
1½ அங்குலம் இஞ்சி
1 இறாத்தல் காட்டுப் பன்றியிறைச்சி
2-3 ஏலக்காய்கள் குத்தித் தோலுடன் எடுத்துக் கொள்ளவும்.
1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
2 தேக்கரண்டி அரைத்தெடுத்த மல்லி (Coriander)
½ கோப்பைக் கட்டித் தயிர் – ஊரில் எருமைத்தயிர், இவ்விடம் கிரேக்கத் தயிர் (Greek Yogurt) பாவிக்கலாம்
15-20 மிளகுகள் – அரைத்து எடுத்துக் கொள்ளவும்
சமையல் எண்ணெய் அல்லது நெய்
உப்பு போதியளவு எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை
மண்சட்டியில், வாணெலியில் சமைத்தால் நன்றாக இருக்கும், ஆயினும் சதாரணத் தட்டையான சமையல் பாத்திரத்திலும் பக்குவமாக ஆக்கலாம். முதலில் இஞ்சி,உள்ளியை நன்றாகப் பசையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து காட்டுப் பன்றியிறைச்சியை சிறிய ஓரங்குலத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து இறைச்சியை உப்பும், மிளகில் சிறிதளவு சேர்த்துத் தடவி ஒருபக்கத்தில் வைத்துக் கொள்ளவும்.
பாரமான, அகன்ற பாத்திரத்தில் அடுப்பின் மத்திம சூட்டில் ஓரிரு கரண்டி நெய்விட்டு ஏலக்காயைத் தாளித்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காய் நறுமணம் பரவ உடன் சின்ன வெங்காயத்தையும், கறிவேப்பிலையையும் கொட்டிப் பொன்னிறமாகும் வரை தாளிக்கவும் உடன் பச்சை மிளகாய்த்துண்டுக்களையும் சேர்த்துச் சிறிது வதக்கவும்.
தாளித்த கூட்டை வெளியே எடுத்து விட்டு அதே பாத்திரத்தில் பன்றியிறைச்சித் துண்டுகளை அவற்றின் அனைத்துப் பக்கங்களும் வெந்து மண்ணிறமாகும் வரை பொரித்துக் கிளறி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து சூடான சமையல் பாத்திரத்தை நெருப்பில் இருந்து அகற்றி இறைச்சித் துண்டுகளுடன் மிளகாய்த்தூள், ஏற்கனவே வதக்கிய வெங்காயக் கறிவேப்பிலை, உள்ளி, இஞ்சிப் பசை ஆகியவற்றை இட்டு மெதுவாகப் பிரட்டி மீள அடுப்பில் ஏற்றவும். இறைச்சித் துண்டுகள் கூட்டுடன் சேர்ந்து மேலும் அவையும் மண்ணிறமாகவர விடவும்.
அரைத்த மல்லி,தட்டிய மிளகு, தயிர், ¼ கோப்பை ஆகியவற்றைச் சேர்த்துத் தண்ணீர் விட்டுக் கிளறவும். இதைக் குறைந்த சூட்டு அடுப்பில் இன்னும் 10-15 நிமிடங்கள் விட்டு, அதன் பின்னர் அடுப்பைத் தணித்து இன்னும் 10 நிமிடங்களில் குத்தரிசிச் சோற்றுடனோ, ஆவி பறக்கும் தேங்காய், அரிசிமாப் புட்டுடனோ பரிமாறிக் கொள்ளலாம். இளம் வாலிப வட்டங்கள் பரோட்டாவுடனும் இதைத் தின்பர்.
- யோகி அருமைநாயகம்.