மினசோட்டா மக்கள் அறிகுறி
- உங்கள் பக்கத்து ஐஸ்கிரீம் கடை செப்டெம்பர் மாதத்திலிருந்து அடுத்த மேமாதம் வரை மூடியிருந்தால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம்
- சில சமயம் ஷாட்ஸ் போட்டுக் கொண்டு ஜாக்கட்டு அணிந்து ஒரே தரம் வெளியே போய் வரப் பாவித்தீர்களேயானால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம்
- உங்கள் பயணங்களை மணித்தியாலக் கணக்கில் மாத்திரமே ஒப்பிடுவீர்களேயானால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம்
- உங்களுக்குத் தெரியாதவர் தவறாகத் தொலைபேசியில் அழைத்தும் பலமணி நேரம் முகம் முறிக்காது பேசியுள்ளீர்கள் ஆனால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம்
- விடுமுறையென்றால் சியூ ஃபால்ஸ் (Sioux Falls) மற்றும் விஸ்கான்ஸின் டெல்ஸ் (Wisconsin Dells) போன்ற இடங்களுக்கு மாத்திரம் வார இறுதியில் போய்வருவது என்றால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம்.
- கடைகளின் ஊழியராக இல்லாவிடினும் ஹோம் டிப்போ (Home Depot), ஏஸ் ஹார்ட்வேர் (Ace Hardware) போன்ற கடைகளில் நீங்கள் யாருக்காவது உதவியாகவோ அல்லது யாராவது உங்களுக்கு உதவியாக இருப்பார்களானால் நிச்சயமாக நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். .
- உங்களுக்குத் தெரிந்த பலர் சாலையில், தெருவில் ஒரு தடவைக்கு மான்களை வாகனத்தினால் முட்டியுள்ளதாகக் கேள்விப்பட்டீர்களானால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம்
- வீசியடிக்கும் பனிப்புயலில் இரண்டடி ஆழமான பனியிலும் மணித்தியாலத்திற்கு 75 மைல் வேகத்தில் வண்டியோட்டுபவரானால் நீங்கள் மினசோட்டாக்காராரகத்தான் இருக்க வேண்டும்.
- நீங்கள் உங்கள் வீட்டு வாகனங்களில் ஜம்பர் கேபிள் (Jumper Cable) எப்பொழுதும் வைத்துச் செல்வீர்களேயானால், உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் ஏன் பிள்ளைகளுக்கும் அதை எவ்வாறு உபயோகிக்கலாம் என்று கற்றுக் கொடுத்திருந்தீர்களானால் நீங்கள் மினசோட்டா மனிதராகத்தான் இருக்க வேண்டும்.
- ஹலோவீன் பண்டிகைக்கு உங்கள் குழந்தைகள் கேளிக்கை உடுப்புக்களைப் பனி ஜாக்கெட்டிற்கு மேலாகப் போடக்கூடியதாகத் தைத்தீர்கள், வாங்கினீர்களேயானால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம்
- ஒரே நாளில் ஒரு தரம் ஹீட்டர் (Heater), மற்றொரு முறை ஏர் கண்டிஷனர் (A/C) வாகனத்தில் போடவேண்டி வந்தால் நீங்கள் மினசோட்டாவில் வாழ்பவராகத் தான் இருக்க வேண்டும்.
- பத்துப்பாகை ஃபாரன்ஹைட்”சற்றுக் குளிர்” என்று கூறினீர்களேயானால் நீங்கள் மினசோட்டாக்காரராக இருக்கலாம்
- உங்கள் வீட்டு வாகனம் தரிக்குமிடத்திற்குப் பாதுகாப்பு ஒளிச் சாதனங்கள் (security lights) போட்டு விட்டும் வீட்டுக் கதவு, கராஜ் கதவு ஒன்றையுமே பூட்டாது விட்டீர்களேயானால் நீங்கள் மினசோட்டா மனிதராகத்தான் இருக்க வேண்டும்.
- பனிக் காலத்தில் வாகனமோட்டுவது ரோட்டின் குழிகள் பனியால் மூடப்பட்டுள்ளதால் உள்ள சௌகரியம் என்று நினைப்பவரானால் நீங்கள் மனிதரேதான்.
- உங்களுக்குத் தெரிந்தப் பருவ காலங்கள் பனி, சற்றுப் பனி, மூடுபனி, ரோட் கன்ஸ்ட்ரக்கஷன் (Road Constructions), ஆயின் நீங்கள் மினசோட்டாவில் வாழ்பவராக இருக்க வேண்டும்.
- உங்களுக்கு ஷாகோபீ (Shakopee), ஃபேர்பால்ட் (Faribault), லீ ஸுவர் (Le Sueur), பெராம் (Perham), வினிபுகாஷிஷ் (Winnibigoshish) போன்ற சொற்களைச் சகஜமாக உச்சரிக்கத் தெரியுமானால் நீங்கள் மினசோட்டா மனிதரேதான்.
- நீங்கள் ஓட்டும் வண்டியை விட, உங்கள் பனி அகற்றும் சாதனம் அதிக தூரத்தைக் கடந்ததைக் கொண்டாடினீர்களேயானால் நீங்கள் கண்டிப்பாக மினசோட்டாவில் வாழும் அதிர்ஷ்டமான உயிரினமே தான்.
- யோகி அருமைநாயகம்.