காமத்தின் தொடக்கம்
அமிழ்து ஊறித் ததும்பும் அதரங்கள்
அன்பு எனும் ஊற்றின் பிறப்பிடம்
அழகாய் விரிந்து ஓடிய ரேகைகள்
அற்புதம் தீட்டிய கோலங்கள் அறிவீரோ?
செயற்கைச் சாயப் பூச்சாய் இருப்பினும்
செழிப்பான இயற்கைக் கோலம் எனினும்
செக்கச் சிவந்ததோ செரிய கருமையோ
செல்வோரை வலியத் திருப்புமென அறிவீரோ?
உள்ளம் கசிந்த காதல் அமுது
உணர்வுகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து
உருக்கமாய் உதிர்த்த முதல் முத்து
உதடெனும் மேடையில் ஆடியது அறிவீரோ?
கடைப் பார்வை காதலி காட்டினால்
கற்பாறை தவிடு பொடியாகும் என்பர்
கன்னி அவளின் அதர அசைவினால்
கடவுளரே கால்தூசி ஆவரென்று அறிவீரோ?
மேற்கத்திய நாகரிகம் இதழ்சேர் முத்தம்
மேதாவித் தனமாய்ச் சொல்லும் மனிதர்காள்
மேனியின் மிகுதியாய் இதழ்களை வர்ணித்த
மேன்மை பொருந்திய அகநானூறு அறிவீரோ?
தனிமையில் எண்ணிக் களிப்பதும் மகிழ்ச்சியே
தழுவுதல் தரும் இன்பமும் மேன்மையே
தவறில்லா உறவில் புணர்வதும் இன்பமே
தன்னிகரில்லா இன்பமது இதழ்சேர்வது, அறிவீரோ?
காமனின் பாணம் காணாமல் விழுந்தது
காதலன் மனமோ கண்டதை நினைக்குது
காட்சிகள் பலவும் கருத்தினை உருக்குது
காலங்கள் அனைத்தும் அதரங்களில் அடங்குது !!!
- வெ. மதுசூதனன்.
Madhu kavithai malarattum