\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கர்ம வீரர்

kamrajar_620x749சீசரைப் பெற்ற தாயும்

சிறப்புறப் பெற்றாள் – அன்று

நாசரைப் பெற்ற தாயும்

நலம்பெறப் பெற்றாள் – காம

ராசரைப் பெற்ற தாயோ

நாட்டிற்காகவே பெற்றாள் !!!

-கவியரசு கண்ணதாசன்-

”பெருந்தலைவர்”, “கர்ம வீரர்”, “கிங் மேக்கர்”, “படிக்காத மேதை”, “கருப்பு காந்தி” எனப் பல்வேறு சிறப்புப் பெயர்களும், புகழும் பெற்ற, இந்த நூற்றாண்டு கண்ட ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான காமராஜர் அவர்களின் 40 ஆவது நினைவு தினம் அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வந்து சென்றது. கடவுளுக்கு நிகராக, மிகச்சிறந்த ஆசானாக மற்றும் தலைவனாக தான் மனமார ஏற்றுக் கொண்ட அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளன்றே காமராஜரும் மறைந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையாய்ப் பனிப்பூக்களில் இந்தக் கட்டுரை வெளியாகிறது.

கோடிக்கணக்கில் பணம் கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகளை நாடு கண்டு கொண்டிருக்கிறது. பொது வாழ்வில் நேர்மை என்பது மேடைப்பேச்சில் மட்டும்தான் என்பது எழுதப்படாத வழக்கமாகி விட்ட காலமிது. இது போன்ற நிகழ்வுகளுக்கு நம் மனமும் முழுவதுமாய் இயைந்து போன நிலையில், காமராஜரின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையின் நிகழ்வுகளைப் படிக்கையிலும் ஏதோவொரு திரைப்படம் பார்ப்பது போலவோ, புராண காலக் கதைகளைப் படிப்பது போலவோ தோன்றுகிறதேயல்லாது இது போன்று உண்மையில் நடந்து இருக்க வாய்ப்பு உண்டு என்றே நினைக்க மறுக்கிறது.

இன்று விருதுநகர் என்று அழைக்கப்படும் அன்றைய விருதுப்பட்டியில், 1903 ஆம் ஆண்டு ஜுலைத் திங்கள் 15 ஆம் நாள், குமாரசாமி நாடாருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் பிறந்தவர் காமாட்சி. அந்தப் பெயர் பெண் பெயராக இருப்பதால், நாளடைவில் காமராஜர் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். அவரின் ஆறு வயதில், அவர் தந்தையார் மரணமடைந்ததால், ஆறாம் வகுப்பிற்குப் பிறகு பள்ளிக் கல்வி தொடர இயலாத நிலைக்கு ஆளானார் காமராஜர்.

இந்திய சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்த காலமது. சரித்திரத்தில் ரத்த எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையைச் செய்தித்தாள்களில் படித்தது காமராஜரின் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது. தனது 19 ஆவது வயதினிலே, இந்திய தேசியக் காங்கிரஸில் உறுப்பினராகச் சேர்ந்து, விருதுநகர்ப் பகுதிகளில் பல காங்கிரஸ் கூட்டங்களுக்கு அமைப்பாளராகத் திகழ்ந்தார். தனது வாழ்நாளில் மகாத்மா காந்தியடிகளை ஒரு முறையாவது சந்தித்து விடுவது என்பதே அவரின் குறிக்கோளாக இருந்த காலமது. 1921 ஆம் ஆண்டு மதுரைக்கு வந்திருந்த காந்தியைச் சந்திக்கும் சந்தர்ப்பம் அவருக்கு அமைந்தது. இதனைத் தன் வாழ்வின் அரிய நிகழ்வாகச் சாகும்வரை கொண்டாடியவர் காமராஜர்.

சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரின் தலைமையில் வேதாரண்ணியத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு முதன் முதலாக 1930 ஆம் ஆண்டு சிறைப்படுத்தப்பட்ட காமராஜர், அந்த நிகழ்வு தொடங்கி இந்தியா விடுதலையடையும் வரை பலமுறை பல போராட்டங்களில் சிறை சென்றவர். அவரின் தலைமைத்துவத்தையும், அவர் பின்னர் நின்ற மக்கள் சக்தியையும் கண்டு அஞ்சி, அவர் விருதுநகரில் குண்டு வைத்தார் என்ற பொய் வழக்கு ஒன்றையும் ஜோடித்தது ஆங்கில அரசு. அந்த வழக்கை நேரடியாகச் சந்தித்து, அதில் எந்த உண்மையுமில்லை என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்து வெளிவந்தார் காமராஜர். ”வெள்ளையனே வெளியேறு” போராட்டம் தொடங்குவதற்கு முன்னராக அதுகுறித்த விவரங்கள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக காந்தி பம்பாயில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் கைது செய்ய வெள்ளைய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது. கூட்டம் முடிந்து புகைவண்டியில் திரும்பிய காமராஜர், நேரடியாகச் சென்னை சென்றால் சிறை பிடிக்கப்படுவோமென்றும், அதற்கு முன்னர் போராட்டம் குறித்த முடிவுகளை அனைவருக்கும் அறிவிக்க வேண்டுமென்ற எண்ணத்துடனும் சென்னைக்கு முன்னர் அரக்கோணம் நிலையத்தில் இறங்கிச் சென்றுவிடுவது என்ற முடிவிலிருந்த அவர், புகைவண்டி நிலையம் நெருங்க நெருங்க அங்கே காத்துக் கொண்டிருந்த போலீஸ்காரர்கள் தெரிய, அங்கிருந்து குதித்து எப்படியோ தப்பிச் சென்றார். அங்கிருந்து இராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் மதுரை வழியாகச் சென்று போராட்டம் குறித்த அனைத்து விவரங்களையும் உள்ளூர்த் தலைவர்கள் அனைவருக்கும் அறிவிப்புச் செய்தார். பின்னர் விருதுநகர் சென்றடைந்த பின்னர், போலீஸ்கார்களை டெலிஃபோனில் அழைத்துத் தன்னைக் கைது செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அப்பொழுது சிறை சென்ற அவர் மூன்று வருடங்களுக்கு மேலாக சிறையிலிருந்தார். ஜூன் 1945 இல் விடுதலை செய்யப்பட்ட அவரின் கடைசிச் சிறைப் பிரவேசம் அதுவே.

சுதந்திர இந்தியாவில், சமஸ்தானங்களின் இணைப்பு மற்றும் மாநிலங்களின் நிர்வாகம் போன்றவை உறுதி செய்யப்பட்டுச் சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1954 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இராஜாஜிக்குப் பிறகு பொறுப்பேற்றார் காமராஜர். இவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக வரக்கூடாது என்று தீவிரமாக எதிர்த்த சி. சுப்பிரமணியம் மற்றும் பக்தவத்சலத்திற்கு, தனது முதல் மந்திரி சபையிலேயே முக்கியமான பதவி கொடுத்ததன் மூலம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பைவிட நிர்வாகம் முக்கியம் என்ற தனது எண்ணத்தை அனைவருக்கும் தெளிவு படுத்தினார். கல்விக்கு, கல்வி மேம்பாட்டிற்குக் காமராஜரின் அரசாங்கம் செய்த வேலை மிகவும் பாராட்டுதலுக்குரியது. ஒருவேளைச் சாப்பாட்டிற்கும் வழியில்லாத காரணத்தால் பள்ளிப்படிப்பைத் தொடராத பல குழந்தைகளை நேரடியாகத் தெரிந்ததிலும், தன் சொந்த வாழ்க்கையே அதற்கொரு உதாரணமாக இருப்பதாலும், பிரச்சினையின் ஆணி வேரைப் பிடித்து அதனைச் சரிசெய்வதே சரியான தீர்வு என்பதை உணர்ந்து, பள்ளிகளில் “மதிய உணவு” திட்டத்தை தமிழகத்திற்கு அறிமுகம் செய்தார். அதன்பிறகு வந்த பல அரசாங்கங்களும் பலவித மாற்றங்களைச் செய்தாலும் இன்றளவில் தொடரும் இந்த மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி ஏழை எளிய மக்கள் கல்வி கற்கும் நிலையை உருவாக்கிய பெருமை அவரையே சாரும்.

நாட்டின் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றான வேளாண்மைத் துறையையும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்துக் கவனித்தது அவரது அரசு. பல அணைக்கட்டுக்களையும், கால்வாய்களையும் கட்டியும் வெட்டியும் பாசனத்திற்குப் பெருமளவு வழி செய்தது அவரது அரசு. தொழில்துறையிலும் பல முதலீடுகளையும் சீரமைப்புகளையும் செய்த அவரின் அரசின் சாதனைகளாக, இன்றும் சிறப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் NLC, BHEL, ICF, மணலி ஆயில் ரிஃபைனரி என்று பலவற்றைக் குறிப்பிடலாம்.

காமராஜரை மிகவும் கடுமையாக விமரிசித்த ஈ.வே. ராமசாமி அவர்களே, “காமராஜரின் ஆட்சிக்காலம் மூவேந்தர்களின் ஆட்சிக் காலத்தை விடச் சிறப்பானது” என்று பாராட்டினாராம். 1961-ல் தேவகோட்டையில் பேசும்போது, மரண வாக்குமூலம்போலத் தமது உள்ளக்கிடக்கையை அவர் வெளியிட்டார். அதில், ‘‘தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை. தோழர்களே நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.” இது போன்ற புகழ்ச்சிகளுக்கு மிகவும் தகுதியுடைய வகையில் அவரது ஒன்பதரை ஆண்டுகால ஆட்சி ஒரு பொற்காலமாகத் திகழ்ந்தது என்பதே உண்மையாகும்.

மூன்று முறை முதலமைச்சராகப் பதவி வகுத்த காமராஜர், 1963 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் புதியதாக ஒரு திட்டத்தை அறிவிப்புச் செய்தார். அறுபது வயதிற்கு மேலுள்ள மூத்த தலைவர்கள் தங்களின் பதவிகளைத் தாங்களே முன்வந்து துறந்து கட்சிப் பணிகளை ஆற்றவேண்டும் என்பதே அந்தத் திட்டம். நாட்டு மக்களின் மனதில் பதவியாசை அற்றவர்கள், பொதுநலச் சேவைக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்ற நம்பிக்கையை உருவாக்குவதற்கு இந்தத் திட்டம் பயன்பட்டது. இதற்கு கே. பிளான் (K Plan – Kamaraj Plan) என்றே பெயர் கிடைத்தது. இந்தத் திட்டத்தையொட்டி அவரும், லால்பகதூர் ஷாஸ்த்ரி, ஜகஜீவன்ராம், மொரார்ஜி தேசாய், பிஜு பட்நாயக் போன்ற காங்கிரஸ் மந்திரிகளும் முதலமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். படிப்பறிவில்லாத காமராஜரின் ராஜ தந்திரம், தன்னலமற்ற தியாகம், நேர்மை அனைத்தையும் நன்கறிந்த ஜவஹர்லால் நேரு, அவரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமித்து, புது தில்லிக்குக் குடிபெயரச் செய்தார்.

ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பின்னர் தனக்குக் கிடைத்த, இந்திய நாட்டின் மிக உயர்ந்த பதவியான பிரதம மந்திரிப் பதவியை வேண்டாமென்று தவிர்த்து லால் பகதூர் ஷாஸ்த்ரியைப் பிரதமராக்கினார். பின்னர் ஷாஸ்திரியின் அகால மரணத்திற்குப் பின்னர் மீண்டும் கிடைத்த வாய்ப்பையும் வேண்டாமென்று மறுத்து நேருவின் மகள் இந்திரா காந்தியைப் பிரதமராக்கினார். இவற்றின் மூலம் “கிங் மேக்கர்” என்ற பட்டத்தையும் பெற்றார் காமராஜர்.

நாட்டின் நலனிற்காகத் தன்னலமில்லாமல் உழைத்த காமரஜரும் அவரின் காங்கிரஸ் கட்சியும் 1971 ஆம் ஆண்டு நடந்த மாநிலத் தேர்ததில் மிகவும் மோசமான முறையில் தோற்கடிக்கப்பட்டனர். கர்ம வீரரென்று போற்றப்பட்ட தலைவர், தன்னலமற்ற தியாகி, நாட்டுச் சுதந்திரத்திற்காகப் பலமுறை சிறை சென்றவர், நாட்டு முன்னேற்றத்திற்காகப் பல நல்ல திட்டங்களை வகுத்து மிகவும் திறமையாகச் செயல்பட்ட முதலமைச்சர், சில பிரதம மந்திரிகளை உருவாக்கி கிங் மேக்கரென்று பெருமை பெற்றவர், தனது சொந்தத் தொகுதியான விருதுநகரில் அன்றைய கல்லூரி மாணவன் ஸ்ரீனிவாசன் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார். தோல்வியின் காரணத்தைக் கேட்டுத் துளைத்தெடுத்த பத்திரிகையாளர்களுக்கு, “காமரஜனும் தோற்பான், அதுவே ஜனநாயகம்” என்று பெருந்தன்மை பேசிய தலைவன்.

கட்சியிலும், நாட்டு அரசியலிலும் இவ்வளவு செல்வாக்காகத் திகழ்ந்த ஒரு தலைவர் எப்படித் தன்னலமில்லாமலிருந்தார் என்பதற்குச் சில சுவையான சம்பவங்களை எடுத்துக் காட்டாகக் கூறலாம். காமராஜரைத் தேடிப் பல பதவிகள் வந்தன. அனைத்தையும் வேண்டாமென்று தட்டிக்கழித்தவர் அவர். முதலமைச்சர் பதவியையும் தட்டிக் கழிக்க முயல, கட்டாயப்படுத்தப் படும்பொழுது அவர் தான் ஏற்றுக் கொள்ள வேண்டுமாயின் இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் போட்ட பட்டியல் இது: “கட்சிக்காரர்களோ, நண்பர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ எனது ஆட்சியிலே தலையிடக்கூடாது. பர்மிட், கோட்டா, வேலை வாய்ப்பு, கான்ட்ராக்ட் என்று எதற்கும் என்னிடம் வரக்கூடாது. இந்த நிபந்தனைக் கெல்லாம் நீங்கள் உடன்பட்டால் நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்கிறேன். நான் அரசுக்கும் மக்களுக்குமே உழைப்பேன்” என்றார் காமராஜர். கூடியிருந்தவர்கள், காமராஜரின் இந்தப் பேச்சைக் கேட்டு அசந்து போனார்கள்.

காமராஜர் விருதுப்பட்டியில் வசித்துக் கொண்டிருந்த தன் தாயாரைச் சென்னையில் வந்து தன்னுடன் தங்குமாறு என்றுமே அழைத்ததில்லை. அவர் வந்து தங்கினால், உறவினர், உற்றவர் என்று பலரும் வந்து சேருவர் அவர்களுக்கென சிபாரிசு என்ற பெயரில் ஏதேனும் செய்ய வேண்டியதாகும். அவராகச் செய்யாவிடினும் அவரைச் சுற்றியிருப்பவரிடம் துஷ்பிரயோகம் செய்ய முயலக் கூடும் என்ற காரணத்தால் தன் தாயைச் சொந்த ஊரிலேயே இருக்குமாறு செய்தவர் காமராஜர்.

வழக்கமாக அவருக்கு 120 ரூபாய் மாதச் செலவுக்காக அனுப்புவாராம். அவர் முதலமைச்சர் ஆனதும், அவரின் இல்லத்தில் வந்து சந்திப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அவர்களுக்கு காபி, டிபன் வாங்கிக் கொடுப்பதற்காக இனிமேல் 150 ரூபாயாக அனுப்பு என்று கேட்ட அன்னையிடம், “என் சம்பளத்தில் 120 ரூபாய்க்கு மேல் அனுப்ப இயலாது” என்று விடையளித்த முதலமைச்சர் அவர்.

ஒருமுறை விருதுநகருக்கு வேலை விஷயமாகச் சென்ற காமராஜரின் உதவியாளர் ஸ்ரீனிவாசன், தாயார் சிவகாமி அம்மையார் ஒரு மின்விசிறி கூட இல்லாமல் வெயிலின் துயரப்படுவதைக் கண்டு அவருக்கு ஒரு மின்விசிறி வாங்கிக் கொடுக்க, அதை எப்படியோ கேள்விப்பட்டு அறிந்து கொண்ட காமராஜர், “என் சம்பளத்துல ஃபேனெல்லாம் வாங்கிக் கொடுக்க முடியாது, உன்ன யாரு இதெல்லாம் செய்யச் சொன்னது…  மாசத்துக்குப் பத்து ரூபான்னு மூணு மாசத்துல திருப்பித் தந்துரேன்” என்று கூறிக் கடிந்து கொண்டாராம். என்ன, சினிமாவில் நடப்பது போலத் தோன்றுகிறதல்லவா? ஆயிரக்கணக்கான கோடிகளில் புரளும் சாதாரண எம்.எல்.ஏ. க்கள் வாழும் இத்தேசத்தில் இப்படியும் ஒரு முதலமைச்சர் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்திருக்கிறார் என்று நம்பத்தான் வேண்டும்.

இன்னொரு முறை காமராஜரின் தங்கை மகன் ஒரு வேலை வாய்ப்புக்காகத் தனது தாய் மாமனான முதலமைச்சர் காமராஜரிடம் வந்தார். தான் ஒரு வேலைக்கு மனுப்போட்டிருப்பதாகவும், சிபாரிசு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான்.  அதற்குக் காமராஜர்,  ”நான் சிபாரிசு செய்யமாட்டேன். நீ அந்த வேலைக்குத் தகுதியானவனாக இருந்தால், அவர்கள் தானாகவே உன்னைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். தப்பித் தவறி நீ என் பெயரை உன் வேலைக்காகச் சொல்லக்கூடாது. போய் வா” என்று அனுப்பிவிட்டார்.

காமராஜர் 1948 ஆம் ஆண்டில் சென்னை, தியாகராய நகர், திருமலைப்பிள்ளை வீதியுள்ள எட்டாம் எண் வீட்டில் வாடகைக்குக் குடியேறினார்.1975 ஆம் ஆண்டு, அக்டோபர், 2 ம் தேதி, அவர் இயற்கை எய்திய காலம் வரை அந்த வீட்டிலேயே காமராஜர் வாழ்ந்து வந்தார். 12 ஆண்டு காலத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவி, 9 ஆண்டு காலத் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பு, அதற்குப் பிறகு இரண்டரை ஆண்டுகாலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பொறுப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் என அனைத்துக் காலங்களிலும்

திருமலைப்பிள்ளை வீதியுள்ள வாடகைவீட்டில்தான் காமராஜர் வாழ்ந்து இருக்கிறார். அவர் முதலமைச்சராக ஆனபோது, அரசு மாளிகை ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். ஆனால் அவர் அங்கே குடிபோக மறுத்துவிட்டார்.

காமராஜருக்கும் தன்னலமற்ற தலைவரான ஜீவானந்தத்திற்கும் இருந்த உறவு  படித்துப் படித்துச் சிலாகிக்க வேண்டிய ஒன்று. பரம வைரிகளான இருவேறு கட்சியைச் சேர்ந்த இவர்கள் தன்னலமற்றவர்கள், மக்கள் நலமொன்றே முக்கியமென்று கருதி வாழ்ந்தவர்கள். ஜீவா வாழ்ந்து கொண்டிருந்த தாம்பரம் பகுதியில், ஜீவா அடிக்கல் நாட்டிய பள்ளி ஒன்றின் திறப்பு விழாவுக்குச் சென்ற காமராஜர், செல்லும் வழியில் இருந்த ஜீவாவின் குடிசைக்குச் சென்று அவரையும் திறப்பு விழாவிற்கு வருமாறு அழைத்தார். யாரும் எதிர்பாரா வண்ணம் முதலமைச்சர் ஒரு குடிசைக்குச் சென்று நண்பரைச் சந்தித்த காலமது. ஜீவாவை வற்புறுத்தி வரச் சொல்ல, ஜீவாவும் “நீ போ காமாராசு, நா வாரேன்” எனக்கூற, “லேட்டாப் போனா எனக்குப் புடிக்காது, சரியான நேரத்துல வந்துரு சீவா” என்று இவர் சொல்ல, “சரி, சரி, போ வாரேன்” என்று அவர் அனுப்பி வைத்தார். ஆனால் அவர் அரைமணி நேரம் தாமதமாகவே வந்து சேர்ந்ததைப் பார்த்த காமரஜர், கோபமாய் “எவ்வளவு சொன்னாலும் லேட்டா வர்ரியே” எனக்கேட்க “இருந்த ஒரே வேட்டியைத் துவச்சிப் போட்டிருந்தேம்பா, காய நேரமாயிருச்சு” என்றாராம் அந்த மாஜி மத்திய மந்திரி.

ஜீவாவின் வறுமை காமராஜரை மிகவும் வாட்டியது. அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார். “ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக மாட்டான். காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா, அவனைப் போல தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன செய்யலாம்”….? என்றார். கூட்டத்தில் இருந்த ஒருவர், ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்” என்றார்.

உடனே காமராஜர், “ரொம்ப நல்ல யோசனை. ஆனா, நான் கொடுத்தா அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விட மாட்டான். அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி, ‘வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்கு’ன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே நான் வேலை போட்டுத் தர்றேன். ஆனா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது. முரடன், உடனே வேலையை விட வைச்சுடுவான் ” என்று சொல்லி அனுப்பி வைத்தார். அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு வேலை கொடுத்தார் காமராஜர்.

இருவேறு சித்தாந்தங்களைக் கொண்ட இருவேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் அவர்கள். அரசியல் ரீதியாக என்றுமே ஒன்று சேரா – இன்றுகூட ஒன்று சேராத – இயக்கங்களைச் சார்ந்தவர்கள் அவர்கள். ஆனால் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த மரியாதையும் பாசமும் எழுத்தில் வடிக்க இயலாதவை. எவருக்கும் சிபாரிசு செய்ய மாட்டேன் என்று சொந்த அக்காளின் மகனை அனுப்பி வைத்த தலைவன், தன் சிபாரிசைத் தகுதி மிக்க ஒருவருக்குத் தருவது என்பது எவ்வளவு போற்றுதலுக்குரியது என்பது உணர்வு பூர்வமாகப் பார்க்கப்பட வேண்டிய விஷயம்.

காமராஜரைப் பற்றி, அவரின் திறமை பற்றி, அவரின் எளிமை பற்றி, அவரின் தீர்க்கதரிசனம் பற்றி, அவரின் நிர்வாகத் திறம் பற்றி, அவரின் தன்னலமற்ற தியாக உள்ளம் பற்றி, அவரின் பொதுத் தொண்டு பற்றி, என எழுதிக் கொண்டே போகலாம். இன்றைய தலைவர்களைப் பார்க்கும் போது, இதுபோன்று ஒரு மனிதனும் வாழ்ந்திருக்க இயலுமா என வியக்கும் வண்ணம் வாழ்ந்தவர். தொடக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்ட பாட்டினை எழுதிய கவியரசின் இன்னொரு பாடலை அடியொற்றிக் காமராசரின் பெருமை குறித்துச் சிலவரிகளைக் கூறி இக்கட்டுரையை இத்துடன் நிறைவு செய்வோம்.

“அந்தச் சிவகாமி மகனிடம்

சேதி சொல்லடி – மீண்டும்

பார்த்திடும் நாள் கேட்டுச் சொல்லடி

வேறு எவராலும் அவர்போல

ஆண்டிட இயலாதடி – அதனால்

அவரையே மீண்டும் வந்தாளச் சொல்லடி”

-வெ. மதுசூதனன்-

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. சச்சிதானந்தன் வெ says:

    “இன்றைய தலைவர்களைப் பார்க்கும் போது” – இதில் எனக்கு உடன்பாடு இல்லை

    இக்காலத்தில் தலைவர்களே பார்க்க முடிவதில்லை…அரசியல் பெருசுகள் என சொல்லலாம் தானே!

  2. Ashokkumar says:

    Excellent article. I am really proud to say that I have taken part in the funeral from Saidapet Marmalang bridge to Gandhi Mandapam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad