ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-16
(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-15)
- போரினால் விளைந்த அவலங்கள் –
1983ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஈழயுத்தம் தீவிரமடைய தொடங்கியபோது, ஆரம்பத்தில் அது பல்லாயிரக்கணக்கானோரை வெளிநாடுகளுக்குப் புலம்பெயர வைத்தது. தேசங்கள் தோறும் சிதறிஓட வைத்தது. இந்தப் புலம்பெயர்வு ஆரம்பத்தில் பணவரவினூடான வாழ்வினைத் தந்தாலும் காலப்போக்கில் வலியைத் தரத்தொடங்கியது.
ஈழத் தமிழரின் அன்றாட வாழ்வில் யுத்தம் பெருமளவிலான பாதிப்பினை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இது அங்கு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை மட்டுமன்றி புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள உடன் பிறப்புக்கள், உறவுகள் மீதும் தாக்கத்தை விளைவிக்கத் தொடங்கி விட்டிருக்கிறது.
போர் எந்தளவுக்கு விடுதலையின்மீது அதிகாரத்தைக் கட்டவிழ்த்து விடுகிறதோ அந்தளவுக்கு முனைப்பாகவும் பிரக்ஞை பூர்வமாகவும் அது படைப்புக்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இந்நிலையில் ஈழத் தமிழர்கள் பரவி வாழும் உலகின் திசையெல்லாம் ஈழப் போராட்டத்தின் ஆதரவு – எதிர்ப்புக் குரல்கள் பிரதிபலிக்கத் தொடங்கின.
புலம்பெயர்ந்தோரின் கவிதைகளில் போரினால் விளைந்த அவலங்கள், மனிதர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட உரிமை மீறல்கள், தாயகம் பற்றிய சுதந்திர வேட்கை, தமிழின உணர்வு, விரக்தி, மன உழைச்சல், நிராசைகள், வலிகள், இழப்புக்கள் முதலிய பல்வேறுபட்ட விடயங்கள் பேசப்பட்டன. பொதுவாகப் புலம்பெயர்ந்த படைப்பாளிகளில் பலர் ஈழப்போரினாலும் யுத்தத்தினாலும் நேரடியான முறையில் கொடூரமான பாதிப்புக்கு உள்ளானவர்களாகவும், நிராகரிப்புக்கு உள்ளானவர்களாகவும் தம்மை உணர்ந்து கொண்டமையினால் தமது அனுபவங்களின் பிரதிபலிப்புக்களாகவே கவிதைகளை எழுத முனைந்தனர்.
ஈழத் தமிழர்களின் வாழ்வில் போர் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி, சொல்ல முடியாத அவலங்களுக்கு அவர்களை இட்டுச் சென்றுள்ளது. நாளாந்தம் செல்லடி, குண்டு வீச்சு, சுற்றிவளைப்பு என பெருந் துயருக்கு மத்தியில் வாழ்ந்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். உறவுகளைப் பிரிந்து தாங்கமுடியாத மனப் பாரத்துடன் தனிமையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டுப் பிரச்சினை இன்று முடியும் நாளை தீரும் என எதிர்பார்த்துப் பார்த்து முப்பது ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்க, சொந்த நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்தவர்கள் தமது தாய்நாட்டில் மக்கள் படும்அவலங்களை, எவ்விதமான புற அழுத்தங்களுமின்றி, சுதந்திரமாகக் கவிதைகளில் எடுத்துக் கூறிவருகின்றனர்.
“குண்டு வீச்சில்
சிதறிய வீட்டில்
முத்தங்களுடன் பிரிந்தோம்
பனித்தன உன் விழிகள்”1
நாடு விட்டுப் புலம்பெயர்ந்த போது உறவுகளிடம் இருந்து பிரிந்த சூழலை விவரிக்கும் ஒருவரின் பின்னணியில், குண்டு வீச்சில் சிதறிய அவருடைய வீடு காட்சி தருகின்றது. இத்தகைய ஒரு இக்கட்டான சூழலிலும் உறவுகளைப் பிரிந்து தொலைதூரம் போகக் காரணமான யுத்தம் மேலும் மனிதர்களைக் கொன்று தீர்த்தது.
“சிதறிக் கிடந்த உன் எலும்புகளையும்
சதைத் துண்டுகளையும்
கூட்டி அள்ளி
ஊன் சிதைக்கு தீ வைத்தேன்”2
‘வலி’ என்ற தலைப்பிலமைந்த பாமதியின் இந்தக் கவிதை வரிகளில் போரினால் ஏற்பட்ட உச்சக்கட்ட அவலம் வெளிப்பட்டமையினை அவதானிக்க முடிகின்றது. வேறு சில கவிதைகளில் புலம்பெயர்ந்த நாடுகளில் மனிதர்களைக் காணும் போதெல்லாம் தமது இந்த நிலைக்கு அவர்கள்தான் காரணம் என்ற வெறுப்பையும் கொட்டித் தீர்க்கின்றனர்.
“இனியவர்களே!
என் உடன் பிறப்பு உயிர் கொடுத்தது
உங்கள் நாட்டிலிருந்து இறக்கிய
துப்பாக்கிக் குண்டுகளுக்குத்தான்
இனியவர்களே!
என் வீட்டு மாடு செத்ததும்
உங்களின் நிலக் கண்ணிக்குத்தான்
ஐரோப்பிய கனவான்களே!
உங்கள் நாட்டுப் பணமும்
உங்கள் நாட்டு ஆயுதங்களுமே
எங்களை அகதியாக்குகின்றன.”3
போரினால் இலட்சக் கணக்கில் அகதிகளாகச் சென்று புலம்பெயர் தேசங்களில் சொல்லமுடியாத துன்பங்களுக்கு மத்தியில் மனித இயந்திரங்களாக உழைத்துக் களைத்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிலரின் ஆதங்கங்கள் இப்படிக் கவிதைகளாக வெளிப்பட்டன.
அடிக்குறிப்புகள்
- திருநாவுக்கரசு.ப, (தொ.ஆ), புலம்பெயர்ந்தோர் கவிதைகள்,, பக்.104
- மேலது, பக்.173
- மேலது, பக்.114-115
-தியா-