\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சித்த மருத்துவம்

Filed in அன்றாடம், பேட்டி by on October 25, 2015 0 Comments

kai-vaithiyam_620x699உலகின் மூத்தமொழியான நம் தமிழ்மொழியில் இருக்கும் பலகலைகளில், நம் மக்களோடு ஒன்றிணைந்து, நம் வாழ்வியலோடு இணைந்திருக்கும் மிகமுக்கிய கலை சித்த மருத்துவ கலையாகும்.  சித்த மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்று, கடந்த 22 ஆண்டுகளாக மக்களுக்குச் சிறப்பாக மருத்துவ தொண்டாற்றிவரும் , சித்த மருத்துவர் ப.செல்வ சண்முகம் எம்.டி (சித்தா), பி.எச்.டி  அவர்கள் , நம்  மினசோட்டா தமிழ்ச் சங்கத்தினர்  ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் , 09/27/15 அன்று, ரிட்ஜ்டேல் நூலகத்தில் “சித்த மருத்துவ அடிப்படையும்,வாழ்வியல் முறைகளும்” என்ற கருத்தரங்கில் பங்குபெற்று,சித்த மருத்துவத்தின் பெருமைகளை உரைத்து,மக்களின் கேள்விகளுக்கு சிறப்பான முறையில் விளக்கம் அளித்து ஒரு விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தினார்.  மருத்துவர் அவர்களிடம்  நம் பனிப்பூக்கள் இதழுக்காக  பேசுவோம் வாருங்கள் ….

கே :அய்யா உங்களின் மருத்துவப் படிப்பு மற்றும் தங்களின் சேவைகளைப்பற்றி சொல்றீங்களா ?

ப :   நான் சித்த மருத்துவர் செல்வ சண்முகம், கடந்த 22 ஆண்டுகளாகச் சித்த மருத்துவ சேவை செய்து வருகிறேன். 1987-93ஆம் ஆண்டுகளில்  பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியில் இளங்கலை பட்டமும்(BSMS) , 1994-97 ஆண்டுகளில்   எம்.ஜி.ஆர் மருத்துவ கல்லூரியில் பொதுமருத்துவ பிரிவில் முதுகலை பட்டமும் (MD Siddha) பெற்றேன். அதன்பின் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில், 2003-07 ஆண்டுகளில் , மதுமேக நோயிற்கு (Diabetes)  சித்த மருத்துவத்தால் கிடைக்ககூடிய தீர்வுகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம்(BS) பெற்றேன். இதை தவிர மூலிகைகள், உணவு, ஜோசியம் போன்றவற்றில் பட்டய படிப்பும் படித்து இருக்கிறேன்.

சென்னையில் இயங்கிவரும் இந்திய நல்வாழ்வு நல்லறம் என்ற அரசு சார் அமைப்பு,ரெட் கிராஸ் மருத்துவமனையுடன்  இணைந்து, ஆங்கில மற்றும் சித்த மருத்துவத்தை இணைத்து, குறைந்த செலவில், எளிமையான முறையில், மக்களுக்கு நிறைந்த பலனை அளிக்கும் வகையில் மருத்துவச் சேவை செய்து கொண்டிருக்கிறோம். இது மருத்துவர் திரு தெய்வநாயகம் அவர்களால் தொடங்கப்பட்ட ஓர்  அமைப்பாகும்.

கே :சித்த மருத்துவம் எவ்வளவு தொன்மையானது ?

ப :   சித்த மருத்துவம் என்பது தமிழர் வாழ்வியலோடு ஒன்றிணைந்த  ஓர் மருத்துவமுறை ஆகும், தமிழ் தோன்றிய காலத்திலேயே தோன்றி இருக்க வேண்டும் என்பது எங்களின் நம்பிக்கை. தொல்பொருள் மற்றும் இலக்கிய ஆய்வாளர்கள், கிடைத்து இருக்கின்ற ஆதாரங்களை வைத்து கி.மு 10000 முதல் 4000 ஆண்டுக்குள் தோன்றி இருக்கக்கூடும் என்று கருதுகின்றனர்.  தமிழ் ஆர்வலர்களும் , வழிகாட்டிக்களுமான சித்தர்கள், சிறந்த வாழ்வியலுக்கு தேவையான பேரின்பம், அமைதி, நல்வாழ்வு, உயர்ஞானம் போன்றவற்றை அடைவதற்கான ஒரு வழிமுறையாக  அமைத்தவை தான்  சித்த மருத்துவத்தின் அடிப்படை. காலமாற்றத்தில் பல நிலைகளைக் கடந்து இன்று ஒரு முழுமையான மருத்துவ முறையாக நம்மிடையே இருக்கிறது.

கே : சித்த மருத்துவம் எதன் அடிப்படையில் இயங்குகிறது ?

ப : சட்டமுனி என்ற சித்தரின் பாடலில் இதற்கான பதில் இருக்கிறது.

அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும்

பிண்டத்தில் உள்ளதே அண்டத்திலும்

அண்டமும் பிண்டமும் ஒன்றே

அறிந்துதான் பார்க்கும் போதே !

அண்டம் என்பது பிரபஞ்சம், பிண்டம் என்பது நம் உடல். இரண்டிற்கும் அடிப்படை  கூறுகளாக அமைவது , பஞ்சப்பூதங்களான நீர், நெருப்பு, காற்று, நிலம் மற்றும் ஆகாயம் ஆகும். இவை நம் உடலில் தசையாக. எலும்பாக, குருதியாக, மூளையாக, சுவாசமாக   இருக்கின்றது, இவற்றில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களே நோய்களாக வெளிப்படுகிறது. பிண்டத்தில் பஞ்சபூதங்களால் ஏற்படும் மாறுதல்களை, அண்டத்தில் உள்ள பஞ்சபூதங்களில் இருந்து பெறக்கூடிய பொருட்களை  கொண்டு  சரிசெய்வதே சித்த மருத்துவ முறையாகும்.

கே : இயற்கை மருந்துகள் பயன்படுத்தபடுவதாக சொன்னீர்கள் ,என்ன மாதிரியான பொருட்கள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தபடுகின்றது?

ப : இயற்கையாக கிடைக்கும் மூலிகைகள், தாவரங்கள் , அவற்றின் பட்டை, வேர், இலை, பூ மற்றும் பழங்கள் போன்றவற்றையும்,உலோகங்களான தங்கம், வெள்ளி,தாமிரம் போன்றவை மற்றும் பாதரசம், முத்து, பவளம், சிப்பி, தாது உப்புக்கள், உலோக மண்டலங்கள், பாடவகைகள் மற்றும் மான்கொம்பு போன்ற இயற்கை பொருட்கள் சித்த மருத்துவத்தில் பெரும்பாலும் மருந்தாக பயன்படுத்தபடுகிறது.

கே : நீங்க சொல்லும் மருந்து பொருட்களை வைத்து பார்த்தால், சித்த மருத்துவ முறை இயற்கையோடு ஒன்றிய ஒன்றா?

ப : நிச்சயமாக! உலகம் வேறு நம் உடல் வேறு அல்ல. இயற்கையோடு ஒன்றிய நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை,இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சரி செய்வதே சித்த மருத்துவமாகும்.

கே : நோய்நாடி நோய்முதல் நாடி என்பது வள்ளுவரின் வாக்கு, சித்த மருத்துவத்தில் எதுமாதிரியான சோதனைகள் செய்து  நோயின் முதல் நாடியை கண்டறிகிறீர்கள்?

ப : அன்று சித்தர்கள் சொல்லிவைத்த அதே பரிசோதனை முறைகள் தான் இன்றும் பயன்படுத்துகிறோம். அதில் மிகமுக்கியமானது நாடி, இது ஆங்கில மருத்துவத்தில் பார்க்கும் நாடி கணிப்பல்ல. வழி, அயல் மற்றும் ஐயம் போன்ற உயிர் தாதுக்களை  மோதிரவிரல், ஆள்காட்டி மற்றும் நடுவிரல்களைக்  கொண்டு நோயாளிகளின் உயிர் ஆற்றலின் ஏற்ற இறக்கங்களை வைத்து நோயைக் கணிப்பது. சிறுநீரின் நிறம் அதன் தன்மையை வைத்துக் கணிப்பது , சிறுநீரில் ஒரு துளி நல்லெண்ணெய் விட்டு அது பரவும் விதத்தின் மூலமாகவும் ,தோற்றுவிக்கும் உருவத்தின் மூலமாகவும் துல்லியமாக கணிப்பது மற்றும்  நோயாளிகளிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் இவற்றையெல்லாம் ஒப்புநோக்கி நோய்களைச் சித்த மருத்துவத்தில் நாங்கள் கண்டுபிடிக்கிறோம்.

கே : தங்கம் மருந்தாகப் பயன்படுத்துவதாக குறிப்பிட்டீர்கள்,   நம்ம ஊர்ல தங்க பஸ்பம் பத்தி பெரிய கதையெல்லாம்  சொல்லுவாங்க,  இத தொடர்ந்து சாப்பிட்டுதான் ஒரு நடிகர் தங்கம் மாதிரி மின்னினார்னு ஒரு கதை கேட்டு இருக்கோம். ,தங்க பஸ்பம் என்று ஒன்னு இருக்கா?

ப : தங்கபஸ்பம் என்பது உண்மைதான், தங்கம் மட்டும் இல்லை வெள்ளி,தாமிரம் போன்ற பொருட்களும் பஸ்பமாக பயன்படுத்த படுகிறது. இது மாதிரியான உலோகங்களை சரியானமுறையில் பக்குவப்படுத்தி, அதன் நிலையை மாற்றி பஸ்பமாக தயாரித்து மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.  இதுமட்டும் அல்ல எய்ட்ஸ், கேன்சர் போன்ற நோய்களுக்கு, பாதரசத்தில்(Mercury) இருந்து தயாரிக்கப்படும் இரசகந்தி என்ற  மருந்தைதான் அதிகம் பயன்படுத்துகிறோம். மிகுந்த நச்சுத் தன்மை கொண்ட பாதரசத்தில் தன்மையை மாற்றி, அதில் சில மூலிகைகளைச் சேர்த்து மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை ஹைதராபாதில் இயங்கி வரும் (Indian Institute of Chemical Technology) என்ற ஆய்வு நிறுவனத்தின் சோதனைக்கு அனுப்பி வைத்தோம், அங்கு அவர்கள் (x ray photoelectron spectroscopy) என்ற முறையில் சோதனைசெய்து இந்த மருந்தில் பாதரசம் இல்லை என்று சான்று அளித்து உள்ளனர். ஆக இது மாதிரியான பொருட்களை அப்படியே மருந்தாக பயன்படுத்துவது இல்லை, அதன் நிலையை மாற்றி எப்படி அரிசியின்  நிலையை சோறாக மாற்றி உணவாக எடுத்து கொள்கிறோமோ அதுப்போல உலோகங்களின் நிலையை மாற்றி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

கே: இதுபோன்ற சித்த மருந்துகளுக்கு என்ன மாதிரியான தர கட்டுப்பாடுகள்  மற்றும் சான்றிதழ்கள்  வழங்கப்படுகிறது?

ப : உலக சுகாதார மையம்(WHO ) நம் செய்முறைகள் மற்றும் மருந்துகளை ஆய்வு செய்து தர சன்றிதகள் வழங்குகிறார்கள். குறிப்பாக செய்முறைக்கு என்ன மாதிரி ஆதாரங்கள் இருக்கிறது என்பதையும், 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான புத்தகத்தில் இந்த விளக்கங்கள் இருகின்றனவா போன்ற ஆய்வுகள் செய்கிறார்கள். இந்திய அரசு  (Drugs  & cosmetic act ) மூலமாக  பல தரக்கட்டுபாடுகள் விதித்துள்ளனர், இவற்றுக்கு உட்பட்டு, சரியான சான்றிதழ்கள் பெற்றபின் தான் மருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்குத் தரப்படுகிறது.

கே : மருந்துகளைப் போன்று, மருத்துவர்களுக்கும் சான்றிதழ்கள் தரப்படுகின்றதா? ஏன் இந்த கேள்வி எழுகிறதென்றால், தொலைகாட்சியிலும், பத்திரிக்கைகளிலும் நிறைய விளம்பரங்கள் வருது, சனிக்கிழமை அந்த ஊரில் சந்திக்கிறார் போன்ற சுவரொட்டிகளும் நிறைய பார்க்கமுடிகிறது, யார் சரியான சித்த மருத்துவர் என்று எப்படி கண்டறிவது?

ப : சரியான சித்த மருத்துவரை, அரசாங்கதின் சன்றிதழ் மூலமாகத்தான் கண்டறிய முடியும், இரண்டு விதமான சான்றிதழ்கள் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.

1) சித்த மருத்துவ கல்லூரியில் முறையாக (BSMS / MD ) படிப்பை முடித்து, சித்த மருத்துவ வாரியத்தில் பதிவு செய்யப்பட மருத்துவர்கள்.

2) பாரம்பரியமாகச் சித்த மருத்துவம் செய்பவர்கள், அரசு நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் அவர்களுக்கு (RIMP ) என்ற சன்றிதழ் தரப்படும்

இந்த சான்றிதழ்கள் வைத்து இருப்பவர்களே அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்கள், விளம்பரத்தில் வருகிறார், சிறப்பாகப் பேசுகிறார் என்ற காரணத்திற்காக , சன்றிதழ் இல்லாத மருத்துவர்களிடம் மருத்துவம் பார்க்கவேண்டாம்.

கே: சித்த மருத்துவத்தில் பயப்படற இன்னொரு விஷயம் பத்தியம், முகப்பருவுக்கு ஒருமுறை சித்த மருத்துவரைப்  பார்த்தேன், அவர் இதெல்லாம் சாப்பிட கூடாதுன்னு ஒரு பெரிய பட்டியல் தந்தார். இதெல்லாம் சாப்பிடாம இருக்கிறதுக்கு, பருவோடவே இருந்திடலாம்னு விட்டுட்டேன். பத்தியத்தின் பயத்தைப்  போக்குவதற்கு உங்கள் கருத்துகள் ?

ப: பயப்படறதுக்கு பத்தியம் ஒன்னும் பேயோ, பூதமோ இல்லை, பத்தியம் என்பதே ஒரு உணவுமுறை தான். ஒரு நோய்க்கு மருந்து கொடுக்கும்போது அதற்கு பலம் கூட்டுவதற்கான உணவுகளைச் சேர்த்துக் கொள்ளவும் , எதிர்வினை ஆற்றக்கூடிய உணவுகளைத் தவிர்க்கவும்னு  சொல்றோம் இது தான் பத்தியம். இது நோயை விரைவில் குணப்படுத்துவதற்காகத் தான். கடந்த 30 வருடங்களில் நம் தமிழர்களின் உணவுமுறைகள் முற்றிலும் மாறிவிட்டது, இதன் விளைவுதான் இன்றைக்கு நம்மிடம் பெருகி உள்ள தொற்றா  நோய்களான ரத்த கொதிப்பு ,கேன்சர்,சர்க்கரை , இருதய சம்பந்தமான நோய்கள். இவற்றை தவிர்ப்பதற்கான  சரியான உணவுமுறை தான் பத்தியம். நீங்க சொல்ற மாதிரி முகப்பருவுக்கு  பெரிய பட்டியலைப் பத்தியமா சொல்றதெல்லாம் தவறு.

கே : நீங்க சொல்றமாதிரி  தொற்றா நோய்கள் குறிப்பாக சர்க்கரை, இந்நோயின் தலைநகர் இந்தியா என்று சொல்லும் அளவிற்கு, சர்க்கரை நோய் இந்தியாவில் பெருகி வருகிறது , அதிலும் இளம் வயதிலேயே பலருக்கு இந்த நோய் வருகிறது , சர்க்கரை நோயைப் பற்றி ஆய்வுசெய்து, முனைவர் பட்டம் பெற்ற உங்கள் பார்வையில் அதை விரட்டுவதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான வழிகள் என்ன?

ப : எந்த ஒரு சமூகம் தன் பாரம்பரிய உணவுமுறைகள் மற்றும் பழக்க வழக்கங்களை விட்டு விலகாமல் இருக்கிறதோ, அந்த சமூகத்தில் இதுமாதிரியான நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. இன்றைய அவசரக் காலத்தில், உணவு என்று எதையோ உண்டு, அன்று நாம் பயன்படுத்திய மனிசம்பா, மப்பிளைசம்பா என்று ஒரு 300க்கும் மேலான அரிசி வகைகள் இருந்தன, இவற்றில் கிளைசெமிக்  இன்டெக்ஸ் (glycemic index) என்பது வெறும் 45 க்கும் குறைவானது, இந்த அரிசி வகைகள் எல்லாம் இன்று வழக்கத்தில் இல்லை , இன்று கிடைக்கும் பட்டைதீட்டப்பட்ட     வெள்ளை அரிசியில் (polished rice ) கிளைசெமிக்  இன்டெக்ஸ்(glycemic index) 95 க்கும் மேல் உள்ளது, இது நம் உடலிற்கு முற்றிலும் தீங்கு. இவைதவிர சுத்தகரிக்கப்பட்ட உப்பு, எண்ணை, மற்றும்  வெள்ளைச் சக்கரை (refined sugar ) போன்ற நச்சுப் பொருட்களைத் தொடர்ந்து  உட்கொள்வது தான் சர்க்கரை நோய்க்கான முதல் காரணம். இவற்றைத் தவிர்த்துவிட்டு தானிய உணவுகளான கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, சோளம் குதிரைவாலி  போன்றவற்றையும், தோலோடு உள்ள கருப்பு உளுந்து, பாசிப்பயறு மற்றும் கடல் உப்பு, நல்லெண்ணெய்  போன்றவற்றை உணவில் பயன்படுத்துவதன் மூலம் சர்க்கரை, இதய நோய், ரத்தக்கொதிப்பு போன்ற பல நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். சர்க்கரை நோயை  ஆரம்ப கட்டத்திலே கண்டுபிடித்துவிட்டால் மருந்துகளே இல்லாமல், நம் உணவுமுறை, உடற்பயிற்சிகள் மற்றும் வாழ்வியலில் செய்யும் சிறு செயல்பாடுகளை மாற்றி அமைப்பதின் மூலமாக இவற்றை கட்டுப்படுத்தி, திரும்பவும் தலைதூக்காத அளவிற்கு குணப்படுத்த முடியும்.

கே :நம் உணவுமுறைகளில் இருந்து விலகிப் போனதுதன் இதற்கெல்லாம் காரணமா ?

ப :நிச்சயமாக, அதுதான் முழுமுதல் காரணம்.

கே : இன்று சவாலாக பல நோய்கள் இருக்கிறது , அதில் எந்த மாதிரியான நோய்களுக்கு சித்த மருத்துவத்தால் மிகச்  சிறந்த பயன்களைப் பெற முடியும் ?

ப : இந்தக் காலத்தின் சவாலான நோய்களான ரத்தக் கொதிப்பு (BP ) , சர்க்கரை ,தோல் நோய்களான சொரியாசிஸ் (soriasis ) ,தோல்கரப்பான் (eczema ), லுக்கோடெர்மா  (Leukoderma ) போன்ற நோய்களையும் மற்றும் ஆஸ்த்மா (ashtma  ) , மூட்டுவாத நோய்களான ருமட்டிஸம்  (Rheumatoid arthritis) போன்றவற்றை    முற்றிலும் கட்டுப்படுத்தி பின் முழுமையாக  குணப்படுத்தும் மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளது.

கே : எதுமாதிரியான நோய்களுக்குச் சித்த மருத்துவம் அவ்வளவு  சிறப்பாக அமையாதுனு சொல்லமுடியுமா?

ப : நிச்சயமா, இன்றைய கட்டத்தில் அதிதீவர நோய்களான மாரடைப்பு , சிக்கலான எலும்பு முறிவுகள், சிக்கலான மகப்பேறு, மூளையை தாக்கும் நோய்களுக்கு  சித்தமருத்துவம் உகந்தது அல்ல . அதிதீவரமான மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படுகின்ற நோய்களுக்கு ஆங்கில மருத்துவமுறையே சிறந்ததாகும்.

கே : நாங்கள் வசிக்கின்ற மினசோட்டாவில் குளிர் காலமானது மிகவும் சவாலான ஒரு காலம் , கடுமையான குளிர், போதிய சூரியஒளி பற்றாக்குறை போன்ற காரணங்களால் பல சிக்கல்கள் வருகிறது, இதை எப்படிச் சமாளிப்பது ?

ப : நம்வாழ்வில் அன்றாடம் பின்பற்றக்கூடிய பழக்கவழக்கங்கள் மூலமா குளிர்காலத்தை மட்டும் அல்ல அனைத்து காலத்தையும் எளிதில் சமாளிக்க கூடும், குறிப்பாக எண்ணை தேய்த்து குளித்தல், உணவு முறைகளில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும். மிளகு, இஞ்சி, சுக்கு, சீரகம், தனியா, பெருங்காயம்  மற்றும் பூண்டு போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாகக் குளிர் காலத்தைச் சமாளிப்பதற்கு  ,

1) வாரமொருமுறை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையில் மிளகும், சீரகமும் சேர்த்துக் காய்ச்சி , தலை மற்றும் உடல்முழுவதும் தேய்த்த பின் வெண்ணீரில் குளிக்கவேண்டும்.

2) கலையில் வெறும் வயிற்றில் , துளசி மற்றும் மிளகு சேர்த்து உண்பது..

3) இஞ்சி , சின்ன வெங்காய சாற்றுடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் உண்பது.

4) உடலின் வெப்பத்தைக் கூட்டும் உணவுகளான, மிளகு, இஞ்சி, பூண்டு, பெருங்காயம் , கருவேப்பிலை போன்றவற்றைக் கூடுதலாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

5) அவ்வப்போது சுக்கு, மிளகு  மற்றும் தனியா போன்றவற்றின் வடிநீரை அருந்துவது.

6) குடம்புளி(Garcinia ) போன்றவற்றை பயன்படுத்துவது.

7) அவ்வபோது தண்ணிரில் புதினா, துளசி, மஞ்சள் மற்றும் மிளகாய் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரில் ஆவி பிடிப்பதின் மூலமாக, தலையில் நீர் கோர்க்கும் நிலையில்  இருந்து தற்காத்துகொள்ள முடியும்.

8) தண்ணிரில் மஞ்சளோ, மிளகோ அல்லது துளசி போட்டு கொதி நிலையில் அறையில் வைப்பதின்மூலம் அதில் இருந்து வரும் நீராவியை சுவாசிப்பதின் மூலம், மூச்சுப்பாதையை சுத்தப்படுத்தி சுவாச பிரச்சனையில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். இதுபோன்று உணவுமுறை மற்றும் பழக்கவழக்கத்தின் மூலமாக குளிர்காலத்தை எளிதில் நம்மால் சமாளிக்க முடியும்.

கே : அமெரிக்காவில் வசிக்கம் இந்தியர்களின் பெரும்பான்மையானவர்கள் , கணிப்பொறி துறையில் வேலை செய்கின்றனர், தொடர்ச்சியாக கணிப்பொறி திரையை பார்ப்பதினால்  கண் எரிச்சல்  மற்றும் தலை வலி போன்ற பல தொந்தரவுகள் வருகிறது, இதை எப்படிச் சமாளிப்பது?

ப : கணிப்பொறியில் வேலைபார்ப்பவர்கள், கட்டாயம் வாரமிருமுறை நல்லெண்ணெய் அல்லது வெளக்கெண்ணையை உச்சந்தலையில் நன்றாக ஊறும் அளவிற்கு தேய்த்து உடலில் துவாரங்கலான  காது, மூக்கு, கண் உட்பட உள்ள நவதுவாரங்களில் படும்படியாக தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் சுத்தமான தேங்காய் எண்ணையை ஒரு 20 சொட்டு அளவிற்கு உட்கொள்வதின் மூலமாக இதுபோன்ற பிரச்சனையில் இருந்து தற்காத்து  கொள்ள முடியும். தொடர்ச்சியாக அமராமல் , 50 நிமிடத்திற்கு ஒருமுறை சிறிது நடப்பதின் மூலமாகவும், 20 நிமிடத்திற்கு ஒருமுறை தொலைவில் உள்ள பொருளைப் பார்ப்பதன் மூலமாகவும் கண்களின் அழற்சியைத் தவிர்க்கலாம்.

கே : நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எவற்றையெல்லாம்  தவிர்க்க வேண்டும் ?

ஆரோக்கியமாக  வாழ்வதற்கு முக்கியமாக உணவில் தான் அதிகம் கவனம் செலுத்தவேண்டும் , குறிப்பாக சுத்தகரிக்கப்பட்ட(refined ) எண்ணெய், பொடி உப்பு, வெள்ளை சர்க்கரை , மைதா, பட்டை தீட்டப்பட்ட அரிசி  மற்றும் துரித உணவுகளான நூடுல்ஸ் போன்ற உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பதட்டத்துடன் உணவு உண்பதையும்  முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

கே : நோய்கள் தாக்காமல், ஆரோக்கியமாகவும் ,வலிமையாகவும் வாழ்வதற்கு உங்களுடைய அறிவுரைகள் என்ன ?

ப: உணவுமுறை மற்றும் நம் செயல்கள் மூலமாக நாம் இதை எளிதில் அடையலாம், சூரிய உதயத்திற்கு முன் துயிலெழுவது , காலை உணவை 8 மணிக்குள் உண்பது , சீரான உடற்பயிற்சி, மனஅமைதிக்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி யோகம் மற்றும் மூச்சு பயிற்சிகள் செய்வது, 7 மணிநேரம் இரவு தூக்கம் மற்றும் வாரமொருமுறை  எண்ணை தேய்த்து  குளித்தல் போன்ற தொடர் செயல்கள் மூலமாகவும்,   சிறுதானியங்கள் , அரிசி வகைகளில் சம்பா ,கைகுத்தல் மற்றும் கார அரிசிகள் பயன்படுத்துவது , கீரைகள், பழங்கள், சுத்தமான குடிநீர், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை உணவில் தொடர்ச்சியாக சேர்த்துகொள்ளுதல் மூலமாக இதை அடையமுடியும்.

தமிழ் என்பது வெறும் மொழிமட்டும் அல்ல, அது வாழ்வியலோடு கலந்த உயிர் போன்றது. தமிழில் சொல்லப்பட்டிருக்கும் உணவுமுறைகள், பழக்கவழக்கங்கள் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்ட கலைகள் மற்றும் வாழ்வியல் முறைகளிலிருந்து விலகாமல் அதையொட்டியே வாழ்வை அமைத்துக் கொள்வதின் மூலமாக உடல் ஆரோக்கியத்துடனும் , மன வலிமையுடன் கூடிய அறிவார்ந்த சமூகமாக நம் தமிழ் சமூகம் வாழமுடியும் என்பது நிச்சயம்.

மருத்துவரைத் தொடர்புக்கொள்ள:

101 உஸ்மான் சாலை,

தியாகராய நகர்,

சென்னை -17

பேட்டித் தொகுப்பு – விஜய் பக்கிரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad