தலையங்கம்
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
என்றார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். உலகிலுள்ள அத்தனைக் கலைச் செல்வங்களையும் நம் நாட்டிற்குக் கொண்டுவந்து சேர்க்கச் சென்றிடுவீர் எட்டுத் திக்கும் என்பதே அவரின் அறிவுரை. தமிழர் எட்டுத் திக்கல்ல பதினாறு திக்குகள் என்று கூடச் சொல்லலாம். பல செல்வங்களைச் சேர்த்தோம். கலைச் செல்வங்கள் என்று குறிப்பாகக் கூறமுடியாது. ஆனால் பிறந்த தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளோம் என்றே குறிப்பிட வேண்டும்.
அதுபோன்ற சாதாரணப் பெருமைகளின் நடுவே ஒரு சிலர் ராட்சதப் பெருமைகள் சேர்த்துள்ளனர் என்பதே உண்மை. சமீபத்திய உதாரணம், சென்னையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, உலகமே வியக்கும் வண்ணம் நாற்பத்தி மூன்றே வயதில் உலகின் மிகப் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றான கூகிள் நிறுவனத்திற்கு சி.இ.ஓ. நிலையை அடைந்த சுந்தர் பிச்சையின் சாதனையைக் குறிப்பிட வேண்டும். நம்மில் பலரைப் போல நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சுந்தர் என்கிற சுந்தரராஜன். GEC நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்த ரகுநாதப் பிச்சைக்கும், ஆசிரியைத் தொழில் செய்துவந்த லக்ஷ்மி அவர்களுக்கும் மகனாகப் பிறந்த சுந்தரராஜன் நம் போலவே சாதாரணப் பள்ளிகளில் பயின்று, சாதாரணக் கல்வி பெற்றவர். நன்கு படித்து நன் மதிப்பெண்கள் பெற்றதன் மூலம் IIT இல் சேர்ந்து பொறியியல் படிக்கும் வாய்ப்புப் பெற்ற அவரின் வாழ்க்கை அதற்குப் பின்னர் ஏறுமுகமே.
வாழ்வின் அடித்தட்டிலிருந்து அண்ணாந்து பார்க்கும் உயரத்தை எட்டிய சுந்தர் போன்றவர்களின் வாழ்க்கை இளைய சமுதாயத்திற்கு அறிவுறுத்துவது இதுதான்: “உனது இன்றைய நிலை எதுவாக இருப்பினும், உலகமே வியந்து நோக்கும் உயரிய நிலையை உன்னால் அடைய இயலும்” என்பதே அந்தச் செய்தி.
இந்தச் செய்தியை இன்றைய இளைய சமுதாயம் பெற்றிருக்கும் என்ற நம்பிக்கையுடன், இன்னும் பலப்பல தமிழர்கள் உலகின் போற்றுதலுக்குரிய நிறுவனங்களில், போற்றுதலுக்குரிய பதவிகளைப் பெற்று, தமிழர்களின் பெருமைகளை உயர்த்த வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கேட்டுக் கொண்டு பனிப்பூக்களின் அக்டோபர் 2015 க்கான இதழை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
- ஆசிரியர் குழு.