முப்பரிமாணப் பிம்பப் படிமப் பிரதிபலிப்பு
முப்பரிமாணப் பிம்பத் தொழில்நுட்பம் ஒருவர் மறைந்த பின்னும் அவர் விட்டுச்சென்ற எண்ணங்களுடன் தொடர்பு கொண்டு உரையாட உதவலாம்
இரண்டாயிரத்து நாலாம் ஆண்டு இறுதியில் இந்திய உபகண்ட இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட கடற்கோளில் மரித்த மக்கள் பலர். இதில் தமிழ்ப் பிரதேசங்களில் பலமக்கள் மடிந்தனர். வரலாற்றுப் படிமங்களிலிருந்து எமது சந்ததிகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கடற்கோள் பற்றி அறிந்திருந்தும், பெரிய அளவில் கடற்கோள் நிகழாததால், தற்கால சந்ததியினர் ஒருவருக்கும் ஞாபகத்தில் வரவில்லை. இதனால் ஒரு வகையில் பார்த்தால் எம்மக்களுக்கு கடல் நீர் வற்றும் பொழுது அதன் பிரதிபலன் என்னவென்று தெரியாமல் விவரம் பார்க்கச் சென்று மடிந்தவர் பல்லாயிரக்கணக்கானவர்கள். இப்படிப்பட்ட வாழ்க்கையனுபவங்களை எவ்வாறு தலைமுறைகளாக நினைவில் வைத்துப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதற்கு புதிய கண்டுபிடிப்புக்கள் உதவிக்கு வரலாம்.
ஒரு காலத்தில் தமிழர்கள் வாழ்ந்தவிடங்களில் நடந்த பாரதூரமான இயற்கை, செயற்கை கோள்களில் இருந்து அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முப்பரிமாணப் பிம்பங்களைப் பிரதிபலிக்கும் தொழில்நுட்பம் உபயோகமாகலாம்.
தென் கலிபோர்னிய மாநில பல்கலைக்கழகத்தின் படைப்புத் தொழிற்நுட்ப நிறுவனம் Institute of Creative Technologies (ICT) எனப்படும் லாஸ் ஆஞ்சலிஸை இருப்பிடமாகக் கொண்ட ஆராய்ச்சிக்கூடம் பல்லாண்டுகளாக முப்பரிமாணப் படிமம், உருவகப் பிம்பங்கள் உருவாக்குதல் மற்றும் சுயாதீன மொழியல் கணனித்துவம் போன்ற தொழில்நுட்பக் கைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு சில விஞ்ஞானக் கற்பனைக் கதைகளில் வரும் முற்போக்குச் சிந்தனைகளை நிஜத்தில் உருவாக்கியவாறுள்ளனர்.
இதில் ஒன்றுதான் மனித உருவக முப்பரிமாணப் படிமப் பிம்பப் பிரதிபலிப்பு. இந்த உருவகத்தின் முக்கியத்துவம் அந்தப் பிம்பம் உணர்ச்சிகளோடு, முகபானையோடும் சத்தமிட்டு உரையாடக் கூடியமையாகும்.
இந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒரு வர்த்தக கணினிப்பட விவரணை (Graphic Design) தாபனத்துடனும், மேலும் பல்கலைக்கழகங்கள் உதவியுடன் இரண்டாம் மகாயுத்த யூத இன அழிப்பு பற்றிய வரலாற்று விபரங்களை, அதிலிருந்து தப்பியவர்களிடமிருந்து அறிந்து, தொகுத்து வெளியிட ‘நவீன பரிமாண சாட்சிகள்’ என்ற தலைப்பில் ஒரு திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம் இன அழிப்பை நேரடியாகக் கண்ட சாட்சிகள் உயிரோடிருந்து தாம் அனுபவித்ததை, கண்டதை ஆவணப்படுத்தி, எதிர்காலச் சந்ததியினருக்கு கதையாகச் சொல்வதே .
இந்த வகைத் தொழில்நுட்பம் வருங்காலத்தில் நூதனசாலைகளில் ஒருகாலத்தில் உயிர்வாழ்ந்து மடிந்த மூதாதை மக்களின் முப்பரிமாணப் பிம்பங்களுடன் உரையாடி, சம்பாசணை ரீதியில் தகவல் அறிந்து கொள்ளக்கூடியதாக அமையும். இதற்கு அன்றாட உதாரணத்தில் பார்த்தால் 2004ம் ஆண்டு நடைபெற்ற கடற்கோள் பற்றிய விபரத்தைத் நேரிடையாகப் பாதிக்கப்பட்ட இந்திய இலங்கைத் தமிழ் மக்கள் தமது வாழ்நாட்கள் முடிந்த பின்னரும், தமது கொள்ளுப் பேரன் பேத்திகளிகற்கு உரையாடல் முறையில் தமது அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளலாம்.
தற்போதய ICT ஆராய்ச்சி நிறுவனம் போலந்து நாட்டில் இருந்து யூத இன அழிப்புச் சம்பவ நேரடிச்சாட்சியான கட்டர் எனும் முதியவரை மையமாக வைத்து முப்பரிமாணப் படிமப் பிம்பங்களைப் பரீட்சார்த்தமாக உருவாக்கியுள்ளனர். ஏறத்தாழ இரண்டாயிரம் கேள்விகளை உருவாக்கி இந்த முதியவரை, அதற்கான விளக்கங்களை, உரையாடல் மூலம் கதையாகச் சொல்லவைத்துள்ளனர்.
தொழில்நுட்பரீதியில் பார்த்தால் இந்த நபரை ஓரிடத்தில் இருத்தி 216 அதிவேக ஓடுபடப் பிரதிபலிக்கும் சாதனங்களைக் (high speed projectors) கொண்டு, 135 பாகைகளில் அசைந்து பேசும் முப்பரிமாணப் பிம்பப் பிரதிபலிப்பை உருவாக்கியுள்ளனர்.
இந்தப் பல திசைப் பிரதிபலிப்புக்களானவை ஒரு இரண்டு மீட்டர்/ ஆறரை ஆடி உயரமுடைய திரையில் தோன்றவைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரையின் நுணுக்கம் என்னவென்றால் வரும் ஒளிக்கதிர்களை அவற்றின் தூரத்திற்கேற்ப பரவிப் பிரதிபலிக்கச் செய்து முப்பரிமாணத் தன்மையை அடைதல். எனவே இந்தப் பிம்பத்தைப் பல கோணங்களில் இருந்து பார்வையிடுபவர்களுக்கு அது முப்பரிமாணமாக அவரவர் கோணத்திற்கேற்ப இடப்பக்கம், வலப்பக்கம், மேல் கீழ் என மனித உருவகம் தோன்றும். இது நாம் சாதாரணமாக முன்னுக்கு இருக்கும் நபரைப் பார்த்துப் பேசுவது போன்று தோன்றும். மேலும் இந்தவகையான பிரதிபலிப்பு இதுவரையுள்ள முப்பரிமாண தலைக் கவசம் (3D Helmet), கண்கவசங்கள், முப்பரிமாணக் கண்ணாடிகள் போலல்லாமல் நேரடியாகவே பார்க்கக் கூடியதாகவிருக்கும்.
மேலும் இந்த பிம்பம் சுயாதீன மொழி கணினித் தொழில்நுட்ப உதவியுடன் நேரடியாக உரையாடல் அளவில் மக்கள் பிம்பத்துடன் தொடர்புகொள்ளக் கூடியதாகவும் இருக்கும். இது தற்போதைய ஆப்பிள் கைத்தொலைபேசியில் அமைக்கப் பட்டுள்ள மனித குரல் சம்பாசணை மென்பொருள் சீரீ (SIRI) போன்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு அமையும். குறிப்பாக சீரீ போன்ற மென்பொருள் மின்வலயத்தேடலைப் பின்னணியில் கொண்டு அமைந்தது. ஆயினும் இந்த பழைய ஞாபகங்களை வைத்து அமைக்கப்படும் தகவல் பரிமாறும் முப்பரிமாணப்பிம்பங்கள் தமது தகவலை, சாதாரண மனிதரின் ஞாபகங்கள் போன்று குறிப்பான கேள்விக்குக் குறிப்பான பதில் தரும்வகையில் அமையும். இதற்காகவே பரீட்சார்த்த ரீதியில் போலந்து யூத இன போராட்டத்தைப் பார்த்த முதியவர் கட்டரை இரண்டாயிரம் கேள்விகள் கொண்டு தகவல் திரட்டப்பட்டு அமைக்கப்பட்டது.
வருங்காலத்தில் அந்த முதியவர் மரித்தாலும், அவர் நினைவுகள், ஞாபகங்கள் வருங்காலச் சந்ததிகளுக்கு அவர் வாழ்க்கை அனுபவங்களில் ஒரு பகுதியைச் சம்பாசணை மூலம் பரிமாறிக் கொள்ள உதவும். இதுவரை இந்த சம்பாசணைக் கேள்வி பதில்களை பதிந்து, பரிமாறும் கணினி மென்பொருள்கள் ஏறத்தாழ கேட்பவர் கேள்விகளுக்கு மும்பரிமாண பிரதிபலிப்புடன் எழுபது சதவீத துல்லியத்துடன் பதிலைத் தரக்கூடியது.
நிச்சயமாக இது போன்ற தொழில்நுட்பங்கள் தமிழர் மத்தியிலும் எமது பாட்டி கதைகள் தொட்டு, பரந்த இதிகாசங்கள் வரை யாவற்றையும் கலாச்சாரத்தில் முதிர்ந்த ஏன் இளையவர்களின் அனுபவங்களாகவே எதிர்காலச் சந்ததிகளுக்குச் சேகரித்துப் பரிமாற வழிவகை செய்யும்.
– யோகி