மினசோட்டாவின் கதை – பாகம் 2
முதல் மனிதன் வட அமெரிக்காவிற்குக் குறிப்பாக மினசோட்டா மாநிலத்திற்கக்கு வாந்தான் அல்லது வந்தாள் என்று சரியாகத் தெரியாது. எனினும் மனித இனம் ஆசியாவிலும், ஆபிரிக்கக் கண்டங்களிலும் குடியேறியிருக்கும் அதே காலகட்டத்தில் அமெரிக்கக் கண்டத்தில் காணப்படவில்லை என்று இதுவரை வட மற்றும் தென்கண்டங்களில் நடந்துள்ள அகழ்வு ஆராய்ச்சித் தரவுகள் தெரிவிக்கின்றன.
தற்பொழுது மினசோட்டாப்பகுதி மற்றும் வட அமெரிக்கவிற்கு வந்தவர்கள் ஆசியக் கண்டத்தில் இருந்து ருஸ்ய-சைபீரியாவுடாக பெரிங் நீரிணையைக் கடந்து; பெரும் பனியுகம் பின்தாங்கத் தொடங்கியபின்னர் வந்துள்ளனர் என நம்பப் படுகிறது. இது ஏறத்தாழ 20,000 ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்னர் நடைபெற்றுிருக்கலாம் என அகழ்வு ஆராய்ச்சி படிமங்கள் மூலம் அறியப்படுகிறது.
இந்த ஆதிவாசிகள் உறைந்த பனிக்கடலூடாகவும் மற்றும் உருகிய பனிமலைகளின் இடையே உண்டான தரைப் பாதையினாலும் வந்துள்ளனர் என்று ஊகிக்கப் படுகிறது. இவ்வாறு வந்தவர்களே பிரதானமாக வட – தென் அமெரிக்கப் பூர்வீகவாசிகளின் மூதாதைகள் எனக் கருதப்படுகிறனர்.
சில புலம்பெயர்ந்த ஆதிவாசிகள் வேட்டையாளிகளாக இருந்துள்ளனர். இவர்கள் இந்தக் கண்டத்தில் உள்ள வனவிலங்கு மந்தைகளை உணவுக்காகத் வேட்டையாடியதோடு; தொடர்ந்து நாடோடிகளாக வடபுலம் மற்றும் தென்புலக் கண்டங்களில் பரந்து வாழ்ந்தனர். இவர்கள் அந்தக் காலத்தில் காணப்பட்ட கம்பளியானை (Mammoth), புணுகு மாடு (Musk Ox,) பெரும் காட்டெருமை (Giant Bison), பெரும் பீவர் (Giant Beaver) போன்ற பிராணிகளைக் வேட்டையாடி உண்டனர்.
மினசோட்டாவில் இறுதி வரலாற்றுக்காலத்திற்கு முன்காணப்பட்ட தற்போது வடிந்து அகன்ற ஏரிக்கரையில் ஒரு ஆதிவாசி பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது மினசோட்டாவின் பெலிக்கன் றப்பிட்ஸ் எனும் ஊரில் 1931ம் கண்டெடுக்கப்பட்டது. இந்தப் பெண் ஏறத்தாழ பத்தாயிரம் (10,000) ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் ஏரியில் மூழ்கியதால் ஏரி சேற்றில் சிக்கி உயிரிழந்ததாகக் கருதப்படுகின்றது. இந்த எலும்புகள் ஒருகாலத்தில் செயின்பால் நகர நூதனசாலையில் வைத்திருக்கப்பட்டிருந்தது.
-யோகி-