திருவிவிலிய கதைகள் – நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?
“தம்பி உடையான் படைக்கு அஞ்சான்” என்பது தமிழர்கள் நாம் அனைவருக்கும் மிகவும் பழக்கமான கூற்று. இது சகோதரப் பிணைப்பைப் பாராட்டுவதாகும். சமுதாயத்தை அன்போடு பிணைத்துக் காப்பது சகோதர பாசமே. ஆனாப் பாருங்க, இன்னைக்கு நேற்று இல்ல, ஆதி காலத்திலிருந்து அண்ணன், தம்பி சண்டை இருக்கத்தானே செய்யுது.
சரி இப்ப, ஆதி மனிதனான ஆதாமுடைய குடும்பத்தில சகோதரர்களுக்கு இடையே நடந்த ஒரு நிகழ்வைப் பார்க்கப்போறோம்.
கிருஸ்துவ மறையின் புனித நூல் திருவிவிலியம் (Bible) ஆகும். இது புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு என்ற இரு பெரும் பகுதிகளைக் கொண்டது. பழைய ஏற்பாட்டுல ஆதிமனிதன் தொடங்கி இயேசுநாதருக்கு முன்பு வரை நடந்த நிகழ்வுகளையும், புதிய ஏற்பாட்டுல இயேசுநாதருடைய வாழ்க்கையைப் பற்றியும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கும்.
முதல்ல ஆதி மனிதன் ஆதாம் எப்படி வந்தார்னு பார்ப்போம்.
கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார். பின்பு அதனில் ஒளியையும், இருளையும், நீரையும், நிலத்தையும், புற்பூண்டுகளையும், விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும், திரளான உயிரினங்களையும் மேலும் வானத்தில் பறவைகள், நிலத்தில் ஊர்வன, கால்நடைகள், காட்டுவிலங்குகள் என எல்லாவற்றையும் படைத்தார். இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக அழகுறப் படைக்கக் கடவுள் 6 நாட்கள் எடுத்துக் கொண்டார். பிறகு ஏழாவது நாள் ஒய்வெடுத்துக் கொண்டார்.
அப்புறமா கடவுள் கிழக்கே இருந்த ஏதேன் என்ற இடத்தில ஒரு தோட்டம் அமைத்து, மேற்கண்ட படைப்புகளை ஆள்வதற்கு ஒருபிடி மண்ணை எடுத்து தனது மூச்சுக் காற்றை ஊதித் தன் சாயலில் உயிர் உள்ள ‘ஆதாம்’ என்ற மனிதனைப் படைத்தார். ‘ஆதாம்’ என்பதற்கு எபிரேய மொழியில் ‘மண்ணால் ஆனவன்’ என்பது பொருள்.
பின்பு கடவுள், மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று என்று நினைத்து அவனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, ஆதாம் விலாவிலிருந்து எலும்பு ஒன்றை எடுத்து ஒரு பெண்ணை உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார். அதனாலதான் பெண்களை விட ஆண்களுக்கு ஒரு விலா எலும்பு குறைவாக இருக்கும்.
ஆதாம் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான். ‘ஏவாள்’ என்றால் உயிருள்ளோர் எல்லோருக்கும் அவளே தாய் என்று பொருள்.
எதேன் தோட்டத்தில எல்லாவசதி இருந்தும், கடவுளுக்குக் கீழ்ப்படியாது, மனைவி ஏவாள் கேட்டுக்கொண்டதற்காக, ஆதாம் பாம்பு வடிவத்திலிருந்த சாத்தானின் சொல்லைக் கேட்க, கோபமானார் கடவுள். அதனால, இனிமேல் மனிதன் கடினமாக உழைத்துத்தான் வாழ வேண்டும் என்று சொல்லி இரண்டுபேரையும் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றி விட்டார். அப்போது கடவுள் “மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்” என்றார்.
இப்பத்தான் நாம எதிர்பார்த்துக்கிட்டு இருந்த அண்ணன் தம்பி வர்றாங்க.
ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அப்போது ஏவாள் காயினைப் என்ற மகனைப் பெற்றெடுத்தாள். ‘காயின்” என்றால் மனிதனால் உருவாக்கப்பட்டவன் என்று பொருள்.
காயினுக்கு ஆபேல் என்ற சகோதரன் பிறந்தான்.
தம்பி ஆபேல் ஆடு மேய்ப்பவன். நல்ல குணத்தையும் கடவுள் பக்தியையும் கொண்டவன்.
காயின் நிலத்தைப் பண்படுத்துபவன் காய் கனிகள் பயிரிடுபவன்.
சில நாள்கள் சென்றன. காயின் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான். கடமைக்காக வாடிய காய் கனிகளைக் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்ததாலும், அவனுடைய மனது செருக்குற்று இருந்ததாலும், கடவுள் காணிக்கையை ஏற்கவில்லை. வெளி வேடத்திற்காக நாம என்னதான் கடவுளுக்குச் செய்தாலும், கடவுள் பார்ப்பது நம்முடைய உண்மையான உள் மனதையும், நல்ல எண்ணத்தையும் தான் என்பது உண்மையாயிற்று.
ஆனால், கபடமற்ற நல்ல உள்ளம் கொண்ட , ஆபேல் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுக் கன்றுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார்.
அதைப் பார்த்த, காயின் கடுங்கோபமுற்றான். அவன் முகம் வாடியது.
இதை உணர்ந்த கடவுள் காயினிடம், “நீ ஏன் கோபமாயிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்? நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடங்கி ஆளவேண்டும்” என்றார்.
கடவுளின் வார்த்தையைக் கேட்காத காயின், தன் சகோதரன் ஆபேலிடம், “நாம் வயல்வெளிக்குப் போவோம்” என்றான். அவர்கள் வெளியில் இருந்தபொழுது, சகோதர பாசத்தை மறந்தவனாக, வெறுப்பின் காரணத்தினால் காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து தாக்கி அவனைக் கொன்றான்.
தன் தவறை மறைத்து, ஒன்றுமே தெரியாதவன் போல காயின் நடந்து வந்தான்.
ஆண்டவர் காயினிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?” என்று கடவுளைப் பார்த்துக் கேட்டான்..
அதற்கு ஆண்டவர், “நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய். நீ மண்ணில் பயிரிடும் பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்” என்றார்.
எவன் ஒருவன் தன் சகோதரனை வெறுத்து ஒதுக்கிவிட்டு “நான் கடவுளை அன்பு செய்கிறேன், நான் கடவுளுக்கு அன்பானவன்” என்று பறை சாற்றுகிறானோ அவன் பொய் சொல்கிறான் என்று பொருள். கண்ணால் காணக்கூடிய சகோதரனை அன்பு செய்ய முடியாதவன் எவனும் மனித பார்வைக்கு அப்பாற்பட்ட கடவுளை அன்பு செய்ய முடியாது.
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதை அறிந்தவர்கள் நாம். சகோதர பாசம் என்பது கூடப்பிறந்த அண்ணன் தம்பி, அக்கா தங்கை என்று மட்டும் பொருளல்ல, நண்பனை, சக மனிதனை அன்போடு அரவணைத்துச் செல்லவேண்டும் என்பதும் அதன் பொருளே.
நான் எப்போதும் என் சகோதரனுக்குக் காவலாளியே என்ற அன்பு நிறைந்த உணர்வோடு வாழ்வோம்.
ம. பெஞ்சமின் ஹனிபால்
நல்ல கருத்து, விவிலியம் படிக்க இனிமையக அமைந்த்திருந்த்தது
உண்மையான தகவலை பேச்சு வழக்கில் கலோக்கியல் பாணியில் நன்றாக புரியும்படி கட்டுரை வழங்கிய ஹனிக்கு வாழ்த்துக்கள். எனக்கு ஒரு விளக்கம் தேவை. ஆதாம். ஏவாளுக்கு பிறந்த குழந்தைகளால் தான் சந்ததிகள் பெருகி உள்ளதை மறுக்க முடியாது. அப்படியென்றால் அண்ணண் – தங்கை அல்லது அக்காள்-தம்பியால் தான் சந்ததிகள் பெருகி இருக்க வேண்டும். இதற்கு மாற்று கருத்து இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். – அ. சேசுராஜ்