ஆட்டிஸம் – 2
ஆட்டிஸம் என்பதை ஒரு நிலை என்று விளக்குவதே சரியாக
இருக்குமென நினைக்கிறேன். இது குழந்தையின் வளர்ச்சிக் குறைவு, பொதுவாக, குழந்தையின் மூன்று வயதுக்குள் தோன்றுகிறது. குறைபாடுகள் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பல வகைகளில் வேறுபடுகின்றன. சில குழந்தைகள் மற்றவரிடம் தான் தெரியப்படுத்த விரும்புவதைக் காட்ட இயலாத நிலையில் இருக்கலாம். வேறு சில குழந்தைகளால் சிறிய இயக்கங்களைச் செய்ய இயலாத நிலை – அதாவது ஒரு சின்ன கரண்டியையோ, பொம்மையையோ எடுத்து நகர்த்தி வைக்க இயலாத நிலை – இருக்கலாம். ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் சாதாரணக் குழந்தைகளைவிட பல விதத்திலும் வேறுபட்டவர்களாகக் காணப்படுகிறார்கள். அவர்கள் செய்யும் சில செயல்கள் பார்ப்பவர்களைப் பெருமளவு பாதிக்கும் வகையிலும் அமைகிறது. சற்றுத் தாக்கம் குறைவான குழந்தைகள் பொதுவாகப் பேச்சு மற்றும் சமூகப் பழக்க வழக்கங்கள் தொடர்பான வளர்ச்சி குறைவானவர்களாக உள்ளனர். இவற்றைத் தவிர, அதிகத் தாக்கமுள்ளவர்கள் வன்முறைகளில் ஈடுபடும் வாய்ப்புக்களும் அதிகம். வன்முறை என்றால் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வதற்கும் இவர்கள் தயங்குவதில்லை. இவர்கள் தெருவில் இறங்கி ஓடுவதற்கோ, பல வாகனங்கள் வரும் சாலையில் இறங்கிச் செல்வதற்கோ சற்றும் தயங்குவதில்லை என்பதே உண்மை.
ஆட்டிஸம் என்பது குணப்படுத்த இயலாத நிலை என்பதே
பரவலான புரிதலாக உள்ளது. ஆனால், பல ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வந்த ஆராய்ச்சிகளின் விளைவாகச் சில சிகிச்சைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதும் உதவிகரமான தகவலாக இருக்குமென நம்புகிறேன். இதற்கான சிகிச்சை அவரவர்களின் நிலையைப் பொறுத்து மாறுபடும், இதற்கான முழு விவரங்களையும் மருத்துவ ஆலோசனையின் மூலம் பெறுவதே சரியானதாக இருக்கும்.
ஆட்டிஸம் குறித்த சில அடிப்படை உண்மைகளை முதலில்
அறிந்து கொள்ளலாம்.
-
ஏப்ரல் 1ஆம் தேதி “ஆட்டிஸம் விழிப்புணர்வு” தினமாகவும், ஏப்ரல் மாதம் முழுவதும் “ஆட்டிஸம் விழிப்புணர்வு” மாதமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. -
புள்ளிவிபரப்படி 68 குழந்தைகளில் ஒருவர் ஆட்டிஸத்தால்
பாதிக்கப்பட்டவராய் இருக்கிறாராம். -
ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளை விட நான்கிலிருந்து ஐந்து
மடங்கு அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். -
அமெரிக்காவில் இந்த “வளர்ச்சிக் குறை”வால் பாதிக்கப்படுபவர்களின்
எண்ணிக்கை அதிகரிப்பு முதன்மையானதாக இருக்கிறதாம். -
ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை இருக்கும்
குடும்பத்திற்குச் சராசரியாக $60,000 வரை ஒரு வருடச் செலவு ஆகிறதாம். -
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் (National
Institute of Health) ஒதுக்கப்பட்ட மொத்த நிதியான $31 பில்லியனில், வெறும் $169 மில்லியன் மட்டுமே ஆட்டிஸம்
ஆராய்ச்சிக்காக ஒதுக்குகிறதாம். வளர்ந்து வரும் இந்த நிலையை எதிர்கொள்ள இன்னும்
அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட வேண்டுமென்பது அனைவரும் புரிந்து கொள்ளக் கூடியதே.
ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் ஒவ்வொரு
நாளையும் எதிர்கொள்வதென்பது ஒரு கலை என்றே கூற வேண்டும். இதற்கு மாற்று ஏற்பாடாக
எதுவுமில்லையென்பதுதான் வருந்தத்தக்க உண்மை. குழந்தையின் இளம் வயதில், அதாவது பிறந்ததிலிருந்து மூன்று
வயது நிரம்பும் வரையிலும் ஒவ்வொரு மருத்துவப் பரிசோதனையும் மிகவும் முக்கியமான
நிகழ்வுகளாக எடுத்துக் கொள்ளப்படவேண்டும். இந்தச் சோதனைகளுக்குச் செல்லும்பொழுது
கொடுக்கப்படும் ஒவ்வொரு கேள்வித்தாள்களையும் (Questionnaire) அவற்றில் கொடுக்கப்பட்டிருக்கும்
அனைத்து கேள்விகளும் மிகவும் முக்கியமானவை, அவற்றில் கேட்கப்பட்டிருக்கும்
சூழ்நிலைகளில் தங்களின் குழந்தை எவ்வாறு செயல்படுகின்றது என்பதைக் கவனிப்பது
மிகவும் முக்கியம். சில கேள்விகள் திரும்பத் திரும்பக் கேட்கப்படுவது போலத்
தோன்றினாலும், அதனைப்
பெரிதாகக் கருதாமல் எல்லாவற்றுக்கும் உண்மையாகப் பதில் எழுதுவது உங்களின்
குழந்தைகளின் எதிர் காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதுதான்
நிதர்சனம்.
உங்கள் குழந்தை இரண்டு மாதத்தில், மூன்று மாதத்தில், ஆறு மாதத்தில், ஒன்பது மாதத்தில், ஒரு வருடம் நிறைவடையும்போது, ஒன்றரை வருடம் ஆகும்பொழுது என ஒவ்வொரு நிலையிலும், அந்தந்த நிலைகளில் செய்யப்பட வேண்டிய செய்கைகள் அனைத்தையும் செய்கிறதா என்று கண்காணிப்பது மிக முக்கியம். குழந்தை தவழா விட்டால், எதிர்பார்க்கப்படும் சத்தங்களை எழுப்பாவிட்டால், கண்களோடு கண்களைச் சந்தித்துப் பார்க்கா விட்டால், விளையாட்டுச் சாமான்களோடு ஸ்பரிசம் காட்டாமலிருந்தால் – இது போன்ற சாதாரண விஷயங்கள் செய்யப்படவில்லையெனில், அவையனைத்துமே கவனிக்கப்பட வேண்டியவை. உடனே மனநல மருத்துவரை அணுகுவது என்பது அவசியம். உடனே கவனம் செலுத்துவதால், உங்கள் குழந்தைக்கும், உங்களுக்கும் பெரிய அளவில் உதவி புரிகிறீர்கள் என்பதை விளங்கிக்கொள்வோம்.
ஏதேனும் வித்தியாசத்தை உங்களின் குழந்தையிடம்
உணர்ந்தீர்களானால், உடனடியாக இந்தியாவில் இருக்கும் பெற்றோரிடம் சொல்லத் தோன்றும். சொல்லியவுடன் அவர்களும், “இதுக்கெல்லாம் கவலைப்படாத, நீயே இரண்டு வயசு முடியறவரைக்கும் ஒரு வார்த்தைகூடப் பேசினதில்லை…… உன் தம்பி நாலு வயசு வரைக்கும் பேசினதில்லை, உங்க பெரியப்பா பையன், இப்பகூட சிங்கப்பூர்ல சூப்பரா இருக்கானே, அவன்…. ஒண்ற வருஷம் வரை நடக்க ஆரம்பிக்கல….. ஒண்ணும் கவலப்படாத” என்று கூறுவார்கள். அவர்கள் உங்கள் மேல் உள்ள ஆதங்கத்தால், உங்களுக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு அவ்வாறு சொல்வார்கள். அவர்களே இங்கே வந்து உங்களுடன் இருந்து, குழந்தையை நேரடியாகப் பார்த்தால் அதே அறிவுரையை வழங்க மாட்டார்கள் என்பதுதான் நிஜம். அதனால், அவர்களின் அறிவுரைகளைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, நீங்கள் நேரடியாகப் பார்த்ததால் அமைத்துக் கொண்ட கருத்தை வைத்து, உங்களின் உள்மனம் சொல்வதைக் கேட்டு, அதன்படி செயல்படுங்கள். மருத்துவ ஆலோசனையே சரியான வழி.
மனநல மருத்துவர் ஏதேனும் கண்டுபிடித்தாரென்றால், அதுதான் ஆரம்பம். குழந்தையின் எந்த வளர்ச்சிக் குறைவாக உள்ளது என்பது அவரின் பரிந்துரையில் தெரியவரும். உங்கள் குழந்தைக்கு எந்த முறையில் ஆதரவு தர இயலும் என்பதையும் விளங்கிக் கொள்ள இது உதவுகிறது. பெரும்பாலும் அவரின் பரிந்துரை, தொடக்க நிலை, சற்று அதிகரித்த நிலை அல்லது மிகவும் மேம்பட்ட நிலை என்ற நிலைகளில் ஏதேனும் ஒரு நிலையில் இருப்பதாகத்தான் இருக்கும். பொதுவாகப் பெரும்பாலானவர்கள் இருக்கும் நிலை PDD-NOS (Pervasive Delay Disorder – Not Otherwise Specified) என்பதாகும். முதன் முதலாகச் செய்ய வேண்டியது என்பது இதுபோன்ற சிறப்புத்தேவையுள்ள குழந்தைகளுக்கான வகுப்பில் (Early Childhood Special Education) சேர்ப்பது என்பதே. குழந்தைகள் படிக்கும் “பள்ளி மாவட்டத்திலிருந்து” (School District) ”பேச்சுச் சிகிச்சை” தரும் சிறப்புத் தொழில் நிபுணர் (Speech Language Pathologist OR Occupational Therapist) ஒருவரை உங்கள் வீட்டிற்கே அனுப்புவர். ஒவ்வொரு தினமும் 45 நிமிடங்களிலிருந்து ஒருமணி நேரம் வரை அவரும் நம் வீட்டிற்கு வந்து குழந்தையுடன் செலவிடுவார். ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் திரும்பத் திரும்பச் செய்யப்படும் செயல்களை (Pattern or Routine) மிகவும் நன்றாகப் புரிந்து கொள்வர். இது போன்ற வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகளைப் புரிந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் சிரமமான விஷயம். மேலே குறிப்பிட்ட நிபுணர்கள், இந்தக் குழந்தைகள் வழக்கத்திற்கு மாறான விஷயங்களைப் புரிய வைப்பது எப்படி என்பதில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
இவை மட்டுமில்லாமல், மிகவும் விரிவான, மிகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இன்னொரு முறை ABA என்பது. Applied Behavior Analysis Therapy. இது மிகவும் ஆழமான தீவிரமான, வலிமையான ஒரு முறை. பலவித அணுகுமுறைகளையும், உக்திகளையும் உட்கொண்டது. மனதைப் பலவிதங்களிலும் ஓடவிடாமல் ஒரே நிலையில் கவனத்தைக் குவியச் செய்யப் பல முயற்சிகளையும் செய்யும் முறை இது. PDD-NOS ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 40 மணிநேர ABA பயிற்சி பொதுவாகப் பரிந்துரைக்கப்படும். அமெரிக்காவில் பல பகுதிகளிலும் இந்தப் பயிற்சி கொடுக்கும் நிறுவனங்கள் பல அமைந்துள்ளன. இவை நிரூபிக்கப்பட்ட பயிற்சி, பெற்றோர்கள் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. இவற்றால் குழந்தைகளுக்கு மிக அதிக அளவு பயனுள்ள முன்னேற்றம் ஏற்படும் என்பது சர்வ நிச்சயம்.
(தொடரும்)
மூலம்: சுரேஷ் ரங்கமணி
மொழிபெயர்ப்பு: வெ. மதுசூதனன்.