ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-17
(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-16)
சுதந்திர வேட்கை
சுதந்திரம் என்பது மனிதர்களின் பிறப்புரிமை. அது மறுக்கப்பட்ட நிலையில் வாழும் ஈழத் தமிழர்கள் தமது விடுதலை உணர்வின் வேட்கையினை மனதுக்குள் போட்டுப் பூட்டி வைத்து மௌனியாகி வாழாவிருக்கின்றனர். சோகங்களில் மூழ்கி வாழ்வினைத் தொலைத்த போதிலும் நம்பிக்கை ஒன்றே வாழ்வின் மூலதனமாக நின்று செயற்படுவதாகத் ‘தமயந்தி’ எழுதிய “நம்பிக்கையான மௌனம்” என்ற கவிதை குறிப்பிடுகின்றது.
“துளிர்ப்புக் காலத்தை
எதிர்நோக்கி தவமிருக்கும்
பனிப்புலத்து
இலையுதிர் மரங்களைப் போல்
மெளனமாய் எங்கள் இருத்தல்
ஓர்
துளிர்ப்புக் காலத்தின் வருகைக்காக
நம்பிக்கை
எங்கள் வாழ்தற் கிளைகளில்
கோடுகள் கீறும் கிரணங்கள்
அந்தக் கோடுகளினூடு புலப்படும்
துளிர்ப்பு.
அதற்காகவே எங்கள்
மௌனமான காத்திருப்பு”1
இருள் சூழ்ந்த வாழ்வினைக் ‘கிரகணம்’ என்ற குறியீட்டின் மூலம் காட்சிப்படுத்திய விதம் சிறப்பானது.
பானுபாரதியின் “வாழ்விழக்கும் வார்த்தைகள் புதைத்தாலென்ன?” என்ற கவிதையும் நம்பிக்கையின் மீதான அழுத்தமான பார்வையினை முன்வைக்கிறது.
“சுதந்திரமான,
சுதந்திரத்தின்பால்
தொடுக்கப்படும் சமரின் மீதான
வெல்தலின் பெயரால் கொள்ளும்
நம்பிக்கை மீதான
வார்த்தைகள் மட்டும்
இங்கே வாழட்டுமுயிரெமக்குள்”2
வலிகளைத் தாண்டி, அவலங்களுக்கு மத்தியிலும் வாழும் மனிதர்கள் இருள் நீங்கி ஒளி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் ‘விடிவு’ ஒன்றே நோக்கமென வாழ்வதனைப் புரிந்து கொள்ள முடிகின்றது.
அடிக்குறிப்புகள்
- திருநாவுக்கரசு.ப, (தொ.ஆ), புலம்பெயர்ந்தோர் கவிதைகள்,, பக்.53
- மேலது, பக்.166
-தியா-