கலைவாணர்
”சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே
சொந்தமான கை இருப்பு,
வேறு ஜீவ ராசிகள் செய்ய முடியாத செயலாகும்
இந்த சிரிப்பு”
என்ற பாடலைக் கேட்டிராத, ரசித்திராத சென்ற தலைமுறையைச் சேர்ந்த தமிழர்களே இருந்திருக்க இயலாது என்று நினைக்கிறேன். இந்தப் பாடலுக்குக் குரல் கொடுத்து, நடித்து அதற்கு முழு உயிரும் கொடுத்த நகைச்சுவை நடிப்பின் மாமேதை கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுக்கு அறிமுகம் தேவையில்லை. இந்தப் பாடலே அவரின் சிந்தனைக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறலாம். நகைச்சுவையில், சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, திரைப்பட ரசிகர்களைச் சிந்திக்க வைத்தவர். நகைச்சுவையில் தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கி, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவையைக் கையாண்ட இணையில்லாக் கலைஞர் கலைவாணர்.
அவர், 1908 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாகர்கோயிலுக்கு அருகிலுள்ள ஒழுங்கினச்சேரி என்ற கிராமத்தில் பிறந்தார். அவரின் தந்தை பெயர் சுடலையாண்டிப் பிள்ளை, தாயார் இசக்கியம்மாள். மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்ததால், கல்வியென்பது எட்டாக்கனி ஆகிவிட்டது. நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். வயிற்றுப் பிழைப்புக்காக, நாடகக் கொட்டகைகளில் தின்பண்டங்கள் விற்கும் வேலையில், சிறு வயதில் ஈடுபட்டார். நாளடைவில், நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நாடகக் குழுவை அமைத்து, நாடகங்கள் எழுதி இயக்க ஆரம்பித்தார்.
அவரின் தொடக்க காலத்தில் ஒரு வில்லுப்பாட்டுக்
கலைஞனாகவும் இருந்தார். நாடகங்கள் எழுதுவது, இயக்குவது, வசனம் எழுதுவது என்பது அவருக்கு மிகவும் பிடித்தமான தொழிலாக அமைந்தது. நாடகங்களில் தொடங்கி, திரைப்படத் துறையில் ஈடுபடத் தொடங்கிய அவர் நடித்த முதல் படம் சதி லீலாவதி (அந்தக் காலத்துப் படம், கமலஹாசனின் இந்தக் காலத்து “சதிலீலாவதி” படத்திற்கு உந்துதலாக இருந்த படம்) என்றாலும், முதலில் வெளிவந்த படம் ”மேனகா” என்பதே. இதுவே அவரின் முதல் படமாகக் கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 150க்கும் மேலான தமிழ்த் திரைப்படங்களில் நடித்து, இந்தியா முழுவதிலும் மிகப் பிரபலமான நடிகராக உருவெடுத்தவர் என். எஸ். கே.
திரைப்படத்தில் மிகவும் பிரபலமான அவர், மிகச் சிறந்த தேசபக்தர் மற்றும் தீவிரமான காந்தியவாதி. மகாத்மா காந்தியைத் தன் தலைவராக ஏற்றுக் கொண்ட இவர், சமூக நலனுக்காகவும், தேவையுள்ளவர்களுக்குச் சேவையாகவும் பல தொண்டுகளையும், தர்மங்களையும் செய்து பெயர் பெற்றவர் . மகாத்மா காந்தி மீது தனக்கு இருந்த மரியாதையினாலும், அவரின் நினைவைப் போற்றும் வகையிலும், அப்பொழுதே ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் செலவழித்துத் தன் சொந்த ஊரில் ஒரு நினைவுத்தூண் எழுப்பினார்.
காந்தியவாதியாக இருந்த அவர், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளில், தி.மு.க வை ஆதரித்தார். திரு. சி. என். அண்ணாதுரையை ஆதரித்துப் பிரச்சாரங்கள் செய்தார். 1957 ஆம் ஆண்டுத் தேர்தலில், அண்ணாதுரையை எதிர்த்து ஒரு மருத்துவர் தேர்தலில் போட்டியிட்டார். அண்ணாதுரையை ஆதரித்து, காஞ்சிபுரத்தில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய கலைவாணர், அந்த மருத்துவரின் நல்ல குணங்களைப் பற்றி அதிகமாகப் புகழ்ந்து, இறுதியில், “இது போன்ற நல்ல டாக்டரை உங்க ஊரை விட்டு அனுப்பப் போறீங்களா? வேண்டாங்க, உங்க ஊர்லயே வச்சி நல்ல சேவைகளை வாங்கிக்குங்க, அண்ணாதுரையை நாடாளுமன்றம் அனுப்புங்க” என்று பேசி முடித்தாராம். நகைச்சுவையாக அனைத்துத் தர விஷயங்களையும் சொல்லித் தீர்ப்பவர் என்பதற்கு ஒரு சுவையான உதாரணம் இது.
இது போன்ற பொது வாழ்வு கொண்ட கலைவாணரின் இல்லற
வாழ்க்கையில், அவருக்கு மூன்று மனைவிகள். பலதார மணம் என்பது சட்டத்தால் தடை செய்யப்படாத காலமது. நாகம்மை என்ற முதல் மனைவிக்கு கோலப்பன் என்ற மகன் உண்டு. அதன்பிறகு, தன்னுடன் இணைந்து நடித்த புகழ் பெற்ற நகைச்சுவை நடிகை டி.ஏ. மதுரத்தைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அதன் பின்னர், டி.ஏ. மதுரத்தின் தங்கை வேம்பு என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் உண்டு. அவரின் பேரன் என்.எஸ்.கே. ராஜன் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அவருடைய பேத்திகள் அனு வரதன், ரம்யா ஆகியவர்கள் திரைப்படத் துறையில் ஒப்பனைக் கலைஞர்களாகவும் பின்னணிப் பாடகர்களாகவும் இருக்கின்றனர்.
என்.எஸ். கேயின் வாழ்க்கையை மிகவும் பாதித்த விஷயம், ”இந்து நேசன்” என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த லக்ஷ்மிகாந்தன் என்பவரின் கொலை வழக்கு. இந்தக் கொலை வழக்கில், பிரபலமான நடிகர் எம். கே. தியாகராஜ பாகவரும், என்.எஸ்.கேயும் முக்கியக் குற்றவாளிகளாகக் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு 30 மாத காலம் சிறை தண்டனை அனுபவித்தார். இந்த லக்ஷ்மிகாந்தன் நடத்தி வந்தது ஒரு மஞ்சள் பத்திரிக்கை. நடிக நடிகர்களைப் பற்றிய கிசுகிசு எழுதி, அவர்களின் சொந்த வாழ்க்கையை உண்மையும் பொய்யும் கலந்து பல விஷயங்களையும் வதந்திகளாகப் பரப்புவதே இந்தப் பத்திரிக்கையின் தொழில். பத்திரிக்கையில் வந்தால் நிஜமாகத்தான் இருக்க வேண்டும் என்று நம்பிய அந்தக் காலத்தில், தங்களைப் பற்றிய அவதூறு வராமல் இருக்க வேண்டுமென்பதற்காக லக்ஷ்மிகாந்தனுக்குப் பணம் கொடுத்துச் சரிகட்டிக் கொண்டிருந்த சில பிரபலங்களின் செயலால் உற்சாகப்படுத்தப்பட்டு அதனையே தனது தொழிலாக மாற்றிக் கொண்டிருந்தார் லக்ஷ்மிகாந்தன்.
இந்த நிலையில், 1944 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி, சென்னையிலுள்ள புரசைவாக்கம் தெருக்களில் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் லக்ஷ்மிகாந்தன். பெரிய அளவு காயமில்லாமல் சாதாரணமாக நடந்த நிகழ்ச்சியே இது. மருத்துவ மனையிலும், காவல் நிலையத்திலும், சாதாரணமாகவே காணப்பட்ட லக்ஷ்மிகாந்தன், சிகிச்சைகளுக்கு நடுவே, சென்னைக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே பயணிக்கும் “போட் மெயிலில்” நடைபெற்ற தேவகோட்டையைச் சேர்ந்த பணக்காரர் கொலை செய்யப்பட்டதைக் குறித்து விவரிக்கலானார். அந்தக் கொலை நடந்த புகைவண்டியில், பிரபலமான பாடகி, நடிகர் ஒருவர் கொலை செய்யப்பட்டவருடன் இருந்ததாகவும், அதன் பின்னர் காணாமற்போனதாகவும் கூறினார். அவர்தான் இவரைக் கொலை செய்திருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்த லக்ஷ்மிகாந்தன், மறுநாள் மர்மமான முறையில் இறந்தார்.
இந்தக் கொலைவழக்கில், பாகவதரும், கலைவாணரும் குற்றம் சாட்டப்பட்டனர். ஏற்கனவே கூறியபடி, அவர்களும் சிறை சென்று தண்டனை அனுபவித்த போதிலும், அவர்களின் மேல் பாசம் வைத்த ரசிகர்கள் கூட்டம் அவர்கள் இருவரும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதை நம்ப மறுத்தது. இரண்டு முறை மேல்முறையீட்டுக்குப் பிறகு, லண்டனில் இருந்த சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்குத் தள்ளுபடியானது. ஜூரிகளுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் சரியானவையல்ல, கொலை செய்யப்பயன்படுத்தியதாகச் சமர்ப்பிக்கப்பட்ட கத்தியை வைத்துக் கொண்டு, ஒரு எலியைக் கூடக் கொல்ல இயலாது என்பதெல்லாம் அந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்ட கூடுதல் தகவல்கள்.
இந்த வழக்கிலிருந்த வெளிவந்து பின்னர் பாகவதர்
அவர்களால் மீண்டும் திரையுலகில் ஒரு இடத்தைப் பிடிக்க இயலாமல் போனது. ஆனால்
என்.எஸ். கே மீண்டும் பிரபலமைடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1957 ஆம் ஆண்டும் ஆகஸ்டுத் திங்கள் 12 ஆம் நாள் ஹெபடைடிஸ் நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஆகஸ்டு 30 ஆம் தேதி இயற்கை எய்தினார். தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் உருவாகி, சாதித்து, மறைந்திருக்கலாம், ஆனால், என். எஸ். கலைவாணரைப் போல், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக்கூறியவர் எவரும் இல்லை. கருத்துக்களை வழங்குவதில் மட்டும் இவர் வள்ளலாக இருந்துவிடவில்லை, தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்குப் பணத்தை வாரி வழங்கிய அற்புத மனிதர் ஆவார். உண்மையை சொல்லப்போனால், என். எஸ். கிருஷ்ணன் அவர்களை நகைச்சுவை நடிகர் என்ற வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது, சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதைகளைத் தூவிய மாபெரும் சிந்தனையாளர். காலங்கள் மாறினாலும், திரைப்படத்துறையில் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும், என். எஸ். கலைவாணர் அவர்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும், கலையுலகில் சாகா சரித்திர நாயகனாக வாழ்ந்துவருகிறார் என்பதில், எந்தவித ஐயமும் இல்லை. அவரின், இறுதி ஊர்வலத்திற்குக் கூடியிருந்த ஆயிரணக்கான ரசிகர் கூட்டமே அவர் மண்ணின் மேல் வாழ்ந்த நெறியான வாழ்க்கைக்கு உதாரணம்.
வெ. மதுசூதனன்.