\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இறைவனிடம் கையேந்துங்கள்

Filed in இலக்கியம், கதை by on November 30, 2015 0 Comments

kadavulai-kaiyenthungal_620x880இறைவன் உங்களுக்கு உதவி செய்வானாகில் உலகில் எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது.. உங்களுக்குச் சேர வேண்டிய எதையும் தடுத்திட முடியாது.. வாய்மையான இறை நம்பிக்கையாளர்கள்..

பீயிங் .. பீயிங் என்று சிணுங்கியது லேப்டாப் அலாரம். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்தான் அமித். 113 ‘வேக் அப் கால்’ என்று காட்டியது கணினி. மணி ஏழாகி விட்டிருந்தது. அறை எண்ணில் தங்கியிருக்கும் லிண்டாவுக்கு ஃபோன் செய்து எழுப்பி விட்டான். ‘வேனோஸ் தியஸ் அமிகோ’ என்று சொல்லியபடி உள்ளே நுழைந்தாள் ஃபேபியா.

‘குட் மார்னிங் .. ரூம் 207 .. கஸ்ட் அரைவிங் 9 .. கிளீன் ..ஒகே’ என்று அவளுக்குப் புரியும் ஆங்கிலத்தில் சொன்னான்.

‘ஒகே ..ஒகே ..’ என்று சொல்லியபடி சென்றாள் அவள். எத்தனை முறை சொன்னாலும் எம்ப்ளாயிஸ் வாயிலை அவள் பயன்படுத்துவதே இல்லை. எல்லா அறைகளுக்கும் அன்றைய செய்தித் தாளைப் போட்டுவிட்டு மீதமிருந்த நான்கு பிரதிகளை லாபியிலிருந்த மேஜை மீது அலங்கோலமாகப் போட்டுவிட்டுச் சென்றிருந்தான் புருனோ. மனதில் அவனைத் திட்டிக் கொண்டே அவற்றை எடுத்துப் பக்கத்திலிருந்த மேகசின்ஸ் ரேக்கில் வைத்தான். ஜிம் ஜான்சன் – அவனது பாஸ்; அந்த ஓட்டலின் முதலாளி – அவர் வழக்கமாகத் தங்கும் அறை 201 லிருந்து பார்த்தால் லாபி துல்லியமாகத் தெரியும். இதையெல்லாம் பார்த்தால் அவர் இவனைத்தான் திட்டுவார். ஏன் இவர்களுக்குப் புரிய மாட்டேன் என்கிறது? சலிப்பு ஏற்பட்டது அமித்துக்கு. சட்டென்று ஜிம் இன்று எட்டரை மணிக்கு அட்டர்னியைச் சந்திக்கவேண்டும் என்று சொல்லியிருந்தாரே; அவருக்கு வண்டி தேவைப்படுமோ என்று தோன்றியது. அவர் எட்டு மணிக்கு வந்து வண்டி வேண்டுமென்றால் அங்குமிங்கும் அலைய வேண்டியிருக்கும். எதற்கும் அவருக்கு ஃபோன் செய்து கேட்டுவிடலாம் என்று நினைத்தான். 201ஐ அழைத்த போது அவர் எடுக்கவில்லை. ஒருவேளை பாத்ரூமில் இருப்பார் என்று நினைத்துப் பத்து நிமிடம் கழித்து மீண்டும் அழைத்தான். பதிலில்லை. தூங்கிவிட்டாரோ? நேரில் சென்று எழுப்பலாம் என்று படியேறிச் சென்று கதவைச் சன்னமாகத் தட்டி விட்டு டையைச் சரி செய்து கொண்டு காத்திருந்தான். அந்த ஹால்வே நிசப்தமாக இருந்தது. மீண்டுமொரு முறை தட்டினான். பதிலில்லை. இந்த முறை சற்று பலமாகக் கதவைத் தட்டிவிட்டு, குட்மார்னிங் ஜிம்” என்று குரல் கொடுத்துப் பார்த்தான். உள்ளே சத்தமேயில்லை. பதட்டமானான்.. ஜிம் .. என்று சற்று உரக்கக் கூப்பிட்டான். மற்ற அறைகளில் தங்கியிருப்பவர்களைத் தொந்தரவு படுத்திவிடப் போகிறோம் என்ற பயம் வேறு .. ம்ஹும்.. பயனில்லை. இனியும் தாமதிக்கக் கூடாதென நினைத்து இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த மாஸ்டர் கீ கார்டை எடுத்து எலக்ட்ரானிக் லாக்கில் நுழைத்திட, தாழ்ப்பாள் திறந்தது. கதவை உட்புறமாகத் தள்ளி, சிறிய இடைவெளி ஏற்படுத்தி, ‘எக்ஸ்யூஸ் மீ ஜிம்.. ஆர் யு தேர்’ என்று அழைத்தான். சத்தமேயில்லை. கதவை வேகமாகத் திறந்து ‘ஜிம்’ என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தவன் அதிர்ந்து போனான்.. ஜிம் நிலைகுலைந்து தரையில் விழுந்து கிடந்தார்.. ‘ஜிம் ஆர் யூ ஆல்ரைட் ? .. ஜிம் ‘ என்று கத்தி கொண்டு அவரருகே முட்டிக்காலிட்டு அமர்ந்து அவரது தலையைப் பிடித்துத் தூக்கினான்..கனமான கல்லைத் தூக்குவது போலிருந்தது … சுற்று முற்றும் பார்த்தான் .. அவரது இடது கைக்கு அருகே செய்தித்தாள் விரிந்து கிடந்தது.. அருகே ஒரு … நொடி நேரத்தில் நடந்ததை யூகிக்க முடிந்தது அமித்தால். சட்டென்று செயலில் இறங்கினான்.

–o0o–

அமித் … அண்மையில் நாற்பதைக் கடந்து விட்டவன். வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்ற நப்பாசையில், பெற்றோர்களிடம் சண்டை போட்டு, பூர்விக நில புலன்களை விற்கச் செய்து, பல லட்சங்கள் செலவு செய்து கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவன். படிப்பு முடிந்த கையோடு, திருச்சியிலிருந்த ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் ‘அபெரிண்டிஸ்’ பட்டத்தோடு நான்கு மாதங்கள் ‘ஸ்டைஃபண்டு’ அடிப்படையில் சில ஆயிரங்களைக் கொடுத்ததோடு கைவிரித்து விட்டது கல்லூரி நிர்வாகம். பின்னர் தட்டுத் தடுமாறி எங்கெங்கோ வேலை செய்து யார் யார் காலிலோ விழுந்ததில்   மயாமி க்ருஸ் லைன்ஸில் பெல் பாயாக வேலை கிடைத்தது. இரண்டாண்டுகள் நேரம் காலமின்றி உழைத்ததில் மூன்று லட்சத்துச் சொச்ச ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர்களையே அவனால் சேமிக்க முடிந்தது.  அதற்குள் காண்ட்ராக்ட் முடிந்து விட, அவனுக்கு விடுமுறை அளித்து, தேவைப்பட்டால் மீண்டும் அழைப்பதாக க்ரூஸ் லைன்ஸ் நிர்வாகம் கூறிய போது, அதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. நிலத்தை விற்ற காசையாவது சேர்க்காமல் ஊருக்குப் போவதில்லை என்று முடிவெடுத்தான். மயாமியிலிருந்து, அட்லாண்டா வழியாக அவனுக்கு டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது. அட்லாண்டா வந்திறங்கியவன் இந்தியாவுக்கான டிக்கெட்டை வீசி எறிந்துவிட்டு அட்லாண்டாவில் நுழைந்தான்.

இரண்டாண்டுகள் அமெரிக்காவில் இருந்தான் என்றுதான் பேர். நகர, இயல்புகள் எப்படியிருக்கும் என்று அவன் அறிந்திருக்கவில்லை. இருபத்தி நான்கு மணி நேரமும், உல்லாசமாக விடுமுறையைக் கழிக்க வரும் குடும்பத்தினர், அவர்களை மகிழ்விக்க வரும் நடனக்காரிகள், இசைக் கலைஞர்கள் இவர்களது முகங்களை மட்டுமே பார்த்தவன். அதை விட்டால், அவனைப் போலவே அல்ப சம்பளத்திற்காகக் குடும்பத்தினர், மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து ஒரு நாளுக்குப் பதினைந்து மணி நேரம் உழைத்து அந்த உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல், விருந்தினர்களை மகிழ்விக்கப் போலியாகச் சிரித்து, ஏக்கத்துடன் வாடும் தொழிலாளிகளின் முகங்களை மட்டுமே அவன் பார்த்ததுண்டு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நாலா புறமும் தெரியும் கடல் தான் அவனது வாழ்க்கை என்றாகி விட்டிருந்தது. அட்லாண்டா எர்போர்ட்டுக்கு வெளியே வந்த பொழுது தான் எந்த தைரியத்தில் இந்த முடிவை எடுத்தோம் என்ற அழுத்தமான பயம் தொற்றிக் கொண்டது. பல மாதங்களுக்கு முன்பு அவனைப் போலவே முடிவெடுத்து நிலப்பகுதிக்கு ‘ஜம்ப்’ செய்த பிலிப்பைன்ஸ் நண்பன் ரூபர்டோ தான் உதவி செய்தான்.

கிட்டத்தட்ட பதினோரு வருடங்கள் பல இன்னல்கள் – வசிக்குமிடம், உணவு, உடை எல்லாமே போராட்டமாய்ப் போனது. ஆறாண்டுகளுக்கு முன்னர் நியுயார்க்கில் அவனது ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாகத் தங்கும் நபர் ஒருவர் மூலம் ஜிம் கார்சனின் அறிமுகம் கிடைத்தது. ரெட்விங்கில் கேசினோவுக்குப் பக்கத்தில் அவர் நடத்தி வந்த ‘விங்க்ஸ் ஸ்டே’ ஹோட்டலில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி, இன்று தனி ஒருவனாக அந்த ஹோட்டலை நிர்வகிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளான். ஜிம்மின் மனைவிக்கு உடல் நலம் குன்றியதால், அவர் அதிகமாக ஹோட்டலுக்கு வருவதைக் குறைத்துக் கொண்டு முழுப் பொறுப்பையும் அமித்திடமே கொடுத்திருந்தார். பத்து நாட்களுக்கு ஒரு முறை வந்து ஓரிரு நாட்கள் தங்கி மேற்பார்வையிடுவதோடு சரி. அமித்தும் தனது சொந்த நிறுவனத்தைப் போலவே பார்த்துக் கொண்டான். ஓரளவுக்கு குடும்பத்தைச் சமாளிக்கக் கூடிய அளவுக்கு வருமானம். ஆனாலும் அமித்துக்குத் தனியே தொழில் தொடங்கி சாதித்துக் காட்டவேண்டும் என்ற வெறி மட்டும் தகித்துக் கொண்டேஇருந்தது. பக்கத்தில் ஒரு இந்திய உணவகம் விலைக்கு வந்த போது வாங்க நினைத்துப் பணப் பற்றாக்குறையால் முடியாமற் போனது.. ஆனால் எப்படியும் ஒரு தொழில் தொடங்க வேண்டுமென்ற வெறி பன்மடங்காகிப் போனது. பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் ஒரு சில நிபந்தனைகளுடன் அமெரிக்க குடியுரிமையும் கிடைத்தது. அந்த நிபந்தனைகளில் ஒன்று ‘ஓழுக்கமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், குடியுரிமை ரத்து செய்யப்பட்டு, பிறந்த நாட்டுக்கு அனுப்பப்படுவீர்கள்’.

–o0o–

சீருடை அணிந்த போலீசாரும், ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்சும் பரபரப்பாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர். லாபி முழுதும் கவலை தோய்ந்த முகத்தோடு பணியாளர்களும், விருந்தினர்களும் நின்றிருந்தனர். அமித் முகமெல்லாம் வேர்த்து, பதற்றத்துடன் நின்றிருந்தான். ஏற்கனவே நடந்தது அத்தனையையும்  போலிஸ் சார்ஜண்ட் ஒருவரிடம் சொல்லியிருந்தான். அப்போதே, தான் சில விஷயங்களை மறைப்பது முகத்தில் தெரிந்து விடாமலிருக்க பெரும்பாடு பட்டான். மீண்டும் சூப்பிரண்டண்ட் ஒருவர் வந்து ஏறத்தாழ சார்ஜன்ட் கேட்ட அதே கேள்விகளைக் கேட்ட போது, எதையும் மாற்றிச் சொல்லிவிடப் போகிறோமோ என்ற பயம் கொப்பளிக்க, யோசித்து யோசித்து, பதில் சொன்னான். ஜிம்மின் வீட்டு டெலிஃபோன், முகவரி, ஜிம்மின் மனைவி சூசனின் எண் என அத்தனையும் கொடுத்தான்.

பாராமெடிக்ஸ் இருவரும் ‘சடன் கார்டியாக் அரெஸ்ட்’ என்று நினைப்பதாகச் சொன்னார்கள். முந்தின தினம் என்ன உணவருந்தினார், யாருடன் இருந்தார், காலையில் அவருக்கு வந்த டெலிஃபோன் கால் என அத்தனை விஷயங்களையும் கேட்டார்கள். சூப்பிரண்டண்ட் ஒவ்வொரு கேள்வியைக் கேட்க அவன் முகத்தைப் பார்க்கும் போதும், அவரது சந்தேகக் கண்கள் அவனைத் துளைத்துச் சென்று அவன் மறைக்க முயலும் உண்மையைக் கிளறி விடுமோ என்ற பயம் அடி வயிற்றைக் கலக்கி அவசரமாக டாய்லெட் போக வேண்டும் போலவொரு அவஸ்தை. அது போன்ற செய்கைகள் மேலும் சந்தேகத்தை உண்டாக்கும் என்று அடக்கிக் கொண்டான்.  

மருத்துவ உதவியாளர் ஒருவர் சக்கரம் வைத்த ஸ்டெரெச்சரில் ஜிம்மின் உடலை வைத்து உருட்டி வந்தார். அமீத்தின் மனதுள் ஜிம் ‘ஹவ் கேன் யூ டூ திஸ் அமிட்?’ என்று கேட்டவாறு அவனை நோக்கி நடந்து வருவது போலத் தோன்றியது. தலையை ஆட்டிக் கொண்டான்.

இன்ஸ்பெக்டர் அவனை நோக்கி வந்தார். ‘உங்களது துயரம் எனக்குப் புரிகிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த அறை மட்டும் பூட்டியே இருக்கட்டும். மற்றபடி நீங்கள் இயல்பான பிசினசைக் கவனிக்கலாம். ஜிம்மின் உடலை அடாப்ஸிக்காக சேவியர்ஸ் மெடிகல் சென்டருக்கு எடுத்துச் செல்கிறோம். நான் கிளம்புகிறேன். இவர்களில் ஒருவர் சிசிடிவி ரெகார்டிங்கை வாங்கிக் கொள்வார்கள்… ‘ சுரீரென்றது அமித்துக்கு. அவரது காலில் விழுந்து உண்மையைச் சொல்லிவிடலாமா? அப்புறம் எதிர்காலம்? சட்டென்று அறைகளுக்குள் நடப்பது எதுவும் சிசிடிவியில் பதிவாகாது என்ற தெளிவு பிறந்தது. ஒரு நொடியில் அனைத்தையும் வீணடித்திருப்பான். ஜிம்மின் புன்னகைக்கும் முகம் கண் முன்னே வந்து போனது. கண்களில் நீர் சுரந்தது.. ‘ஐ அம் சாரி..’ என்று சொல்லிய இன்ஸ்பெக்டர் அவனை அணைத்து, முதுகில் தட்டிக் கொடுத்தார்.

–o0o–

இரண்டு நாட்களில் நடைப் பிணமாகி விட்டிருந்தான் அமித். உணவு, ஊழியம் எதையும் சுயநினைவின்றி இயந்திரம் போலச் செய்து வந்தான். வழக்கமான ஆறு மணி நேர நிம்மதியான உறக்கம் விடைபெற்றுச் சென்று விட்டிருந்ததினால் கண்களில் எப்போதும் அயர்ச்சி ஒட்டிக் கொண்டு விட்டது. ஹோட்டலில் பலரும் அவனது நிலைமைக்கு வருந்தினர். அவனது மனைவி நிஷா கூட, ஜிம்மின் மறைவு அவனை மிகவும் பாதித்து விட்டது என்று தான் நினைத்தாள். அதில் ஓரளவுக்கு உண்மையும் இருந்தது.  ஜிம்மின் மறைவுக்கு உண்மையிலேயே வருந்தினான். ஆனால் அதை விட அன்று அவன் செய்த காரியம் அவனது மனதை அரித்துக் கொண்டிருந்தது. தன் வாழ்நாள் முழுதும் பின்பற்றி வந்த நேர்மை ஒரு நொடி சபலத்தில் தொலைந்து போனதற்கு வெட்கப்பட்டான்.  தனது நேர்மையும் ஜிம்முடன் சேர்ந்து மரித்து விட்டதாய் உணர்ந்தான்.  தனது எதிர்காலக் கனவுகளுக்காக ஒரு நல்ல மனிதரின் குடும்பத்துக்குத் துரோகம் இழைப்பதா? கூடவே நாம் எதையும் வேண்டுமென்றே செய்யவில்லையே. எதேச்சையாக நடந்த செயல் தானே என்று சமாதானமும் தோன்றியது.

அன்று நடந்தது இதுதான் .. அறையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த போது, ஜிம் தரையில் சரிந்து கிடந்தார். ‘ஜிம் .. ஜிம்’ என்று அழைத்துப் பார்த்து பதிலில்லாததால், அவரது கழுத்தின் கிழே கை விட்டுத் தலையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டான். அவர் இறந்து விட்டாரென்று சந்தேகம் வலுத்திட, சுற்று முற்றும் பார்த்தான். அவரது இடது கைக்கருகே செய்திதாளிலிருந்த பக்கத்தில் முந்தைய தினம் நடந்த லாட்டரி முடிவுகள்.. செய்திதாளின் பக்கத்தில் .. ஒரு லாட்டரி டிக்கெட்.. மிகவும் எதிர்பார்த்து பரிசு விழாத அதிர்ச்சியில் இதயத் துடிப்பு நின்றிருக்குமோ? இல்லை, ஒருவேளை?? .. அவரது தலையை மெதுவே கீழே வைத்துவிட்டு லாட்டரி டிக்கெட்டை எடுத்தான்.. இடது கையில் அந்த செய்தித்தாளை எடுத்தான் .. சாட்சாத் லாட்டரி டிக்கெட்டில் இருந்த எண்ணுக்கு முதல் பரிசாக 367 மிலியன் டாலர் கிடைத்துள்ளதான அறிவிப்பு… உடலெங்கும் மின்சாரம் பாய்வதைப் போலிருந்தது. மனதில் எங்கோ ஒளிந்திருந்த சாத்தான் எட்டிப் பார்த்தது. பின்பாக்கெட்டில் வைத்திருந்த வாலட்டை எடுத்து, சீட்டை நான்காக மடித்து வெளியே தெரியாதவாறு சொருகி வைத்தான். மரணப் போராட்டத்தின் இறுதியில் அழுத்திப் பிடித்ததினால் கசங்கியிருந்த செய்தித்தாளைச் சுருக்கம் நீக்கி, இயல்பான நிலைக்கு மடித்து வைத்தான். அறையிலிருந்த ஃபோனிலிருந்து, அவசர உதவிக்கான 911 எண்ணை அழுத்தியிருந்தான்.  

–o0o–

ஹோட்டல் வரவேற்பு மேஜையில் தனது வழக்கமான் இடத்தில் அமர்ந்திருந்தான். எப்போதும் மெலிதாக இசைக்கவிடும் ரேடியோவை ஆன் செய்யக் கூட மறந்துவிட்டிருந்தான்.

இப்போது நினைத்தால் கூட அவனது செயல் வெட்கமளித்தது. எப்படி தான் இப்படி நடந்து கொண்டோமென்று அவனுக்கே புரியவில்லை. ஆனாலும், இது திருட்டு இல்லை; இத்தனை ஆண்டுகள் வறுமையால் பல துன்பங்களைச் சந்தித்துவிட்ட தனக்கு இறைவன் அளித்த பரிசாகக் கூட இருக்கலாம் என்று நினைக்கத் தோன்றியது.

ஏதாவது விதத்தில் அந்த லாட்டரி டிக்கெட்டை ஜிம் தான் வாங்கினார் என்று நிருபித்துவிடுவார்களோ? அப்படியெனில் தான் அதைத் திருடி விட்டதாகத் தன் மீது பழி வந்து விடுமோ? குடியுரிமை ரத்தாகிவிடுமோ? நிஷாவின் நிலை? அனாவசியமாகக் கலவரம் கொள்வதாகத் தோன்றியது. நிதானமாக யோசிக்கலாம். முதலில் எந்தக் கடையில் இந்தப் பரிசுச் சீட்டு வாங்கப்பட்டுள்ளது என்று பார்க்க வேண்டும். மேஜை டிராயரில் ஜிம்மின் அறையிலிருந்து எடுத்த வந்த செய்தித்தாளை வைத்தது நினைவுக்கு வந்தது. டிராயரைத் திறந்து தேடினான். அவன்  வழக்கமாக காலையில் படிக்கும் மறைநூல் சரிந்து விழுந்தது. எரிச்சலாக வந்தது. ஒரு போதும் நாம் தேடுவது கிடைப்பதில்லை. மறைநூலை எடுத்துக் கடைசி ட்ராயரில் போட்டான். செய்திதாளைத் தேடியெடுத்துப் படித்தான். அவனது அதிர்ஷ்டம் ரெட்விங்கில் நுழைவதற்கு முன் இருக்கும் ஒரு கேஸ் ஸ்டேஷனில் தான் அது வாங்கப்பட்டிருந்தது. மேலும் அந்தக் கடையில் கண்காணிப்புக் கேமரா இல்லாததால் யார் வாங்கியது என்று தெரியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. நல்ல வேளை.. ஜிம்மின் சொந்த ஊரான விஸ்கான்சினில் வாங்கப்பட்டிருந்தால், அவன் எப்போது அங்கே போனான் என்ற கேள்வி வரக்கூடும். ஒரு வேளை ஜிம்மின் கிரெடிட் கார்ட்டை வைத்து அடையாளம் கண்டுபிடிப்பார்களோ? அடுத்த கணமே .. என்ன முட்டாள்தனம் .. லாட்டரி டிக்கெட்டுகளைப் பணம் கொடுத்தல்லவா வாங்க வேண்டும். எதற்கு இப்படி குழம்புகிறோம் என்று நினைத்தான். இருந்தாலும் வலிய போய் மாட்டிக் கொள்ளக் கூடாது.

‘குட் மார்னிங் அமிகோ .. ‘ என்ற குரல் கேட்டு அவசர அவசரமாகச் செய்தித்தாளை உள்ளே சொருகினான். இறப்பதற்கு முன் தினம் ஜிம் ட்ரை வாஷுக்குப் போட்டிருந்த ப்ளேசரைக் கொண்டு வந்திருந்தான் அலெக்ஸ். அவர் விரும்பி அணியும் வெளிர் நீல நிறத்தில் கருங்கோடிட்ட ப்ளேசர். மெதுவாகத் தொட்டுப் பார்த்தான். கண்ணீர் வழிந்தது.

ஹோட்டல் டெலிஃபோன் ஒலித்தது. ஜிம்மின் அட்டர்னி ராஸ் ரோசந்தால் பேசினார். ஜிம்மின் மனைவி சூசன் அவனைச் சந்திக்க விரும்புவதாகவும், நாளை மறுநாள் சைரன் விஸ்கான்சினில் அவரைச் சந்திக்க வருமாறும் கேட்டுக் கொண்டார். பக்கென்று ஆனது அமித்துக்கு.

–o0o–

இரவு முழுதும் தூக்கம் வரவில்லை. எதற்காக நம்மை அழைத்திருப்பார். ஜிம் லாட்டரி டிக்கெட் வாங்கியிருப்பதைப் பத்தி சொல்லி இருப்பாரோ? லாட்டரி டிக்கெட் நம்பரை சூசனிடம் சொல்லியிருந்தால்? நாம் வகையாகச் சிக்கிக் கொள்வோமே.. வேலையை விட்டு அனுப்பி விடுவாரோ?

இரண்டு மூன்று நாட்களில் முதன் முறையாக இறைவனின் ஞாபகம் வந்தது. காலையில் மறைநூலை எடுத்து அடியில் போட்டதற்காக மன்னிப்புக் கேட்டான். பக்கத்தில் படுத்திருந்த ஆறு வயது அஜிஸ் தூக்கத்தில் கனவு கண்டு சத்தமாகச் சிரித்தது தனது சிறிய புத்தியைப் பார்த்துதானோ? சம்பந்தேயில்லாமல், ஜிம்மும் அவனது வாப்பாவும் கை கோர்த்துக் கொண்டு அவனை நோக்கி நடந்து வருவதாகக் காட்சி வந்தது. பல எண்ணங்கள் மாறி மாறித் தோன்றி அவனை அலைக்கழித்தன. என்ன அவஸ்தை இது. அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியாமல் .. , விட்டொழிக்கவும் முடியாமல்.. எப்படியாவது இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும்.

–o0o–

சைரன் விச்கான்சினை அடைந்த போது லேசாகக் குளிரியது. ராஸ் கொடுத்த முகவரியைத் தேடிச் சென்ற போது அவனுக்கு வியப்பாக இருந்தது. ஜிம்மின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவன் அதிகம் அறிந்ததில்லை. பெரிய அளவில் இல்லையென்றாலும் ஒரு சிறிய பங்களாவையாவது எதிர்பார்த்து வந்தான். ஆனால் அது மிகச் சிறிய ஒரு அபார்ட்மென்ட் போலிருந்தது. காரை விட்டுக் கீழே இறங்கி ஜிம்மின் ப்ளேசர் இருந்த பையை எடுத்துத் திறந்து பார்த்தான். பல வருடங்களாகத் தனக்கும் ஜிம்முக்கும் இருந்த உறவு இதோடு முடிந்து விட்டதாக எண்ணினான்.கடைசியாக ஒரு முறை ப்ளேசரின் பாக்கட்டைத் தொட்டுப் பார்த்தான்.

உள்ளே நுழைந்தபோது அது சீனியர் லிவிங் ஹோம் எனத் தெரிந்தது. எழுபத்திரண்டு வயதான சூசன் ஜன்னலோரமாக இருந்த சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். அமித்தைப் பார்த்து ‘நீ தான் அமிட் என்று நினைக்கிறேன்’ என்று உட்கார்ந்த படியே  கை குலுக்கினார்.

அவர் காலில் விழுந்து உண்மையைச் சொல்லி விடலாமா என்று தோன்றியது..

‘மன்னிக்கணும் உன்னை நான் இத்தனை ஆண்டுகளில் சந்தித்ததேயில்லை .. ‘ நாற்காலியை உருட்டிக் கொண்டு சென்று மேஜை மேலிருந்த ரிமோட்டை எடுத்து டி.வி.யை நிறுத்தினார்.

‘ஜிம் உயிரோடு இருந்த போது, பலமுறை உன்னைக் குடும்பத்தோடு விருந்துக்கு  அழைக்க வேண்டும் என்று சொல்லுவார்.. எனது உடல்நிலை காரணமாகக் கடைசி வரை அந்த ஆசை முடியாமலே போய்ச் சேர்ந்து விட்டார் .. ‘

‘அது பரவாயில்லை ..ஐ ஆம் சாரி ..!  நான் இந்த மாதிரி புத்தி கெட்டு ..’

‘ஹோட்டலில் சொன்னார்கள் .. ஜிம்மின்  மறைவுக்குப் பிறகு நீ மனசொடிந்து மிகவும் கவலையோடு காணப்படுகிறாய் என்று … என்ன செய்வது எல்லாருக்கும் ஒரு நேரம் வருமல்லவா ..ஜிம்முக்குக் கொஞ்சம் சீக்கிரமே வந்துவிட்டது போலிருக்கு …’

‘இல்லை நான் சொல்ல வந்தது ..’

‘நீ சொல்ல வருவது புரிகிறது .. உன்னைப் போல நல்லவர்களோடு அதிக காலம் வாழ அவருக்குக் கொடுத்து வைக்க வில்லை …’

அமித் உண்மையைச் சொல்ல வந்த போதெல்லாம், சூசன் அமித்தைப் பேசவிடாமல் அவரே ஏதேதோ பேசினார். அமித் அவரிடம் அந்த ப்ளேசர் கவரைக் கொடுத்தான். பிரித்துப் பார்த்த சூசன் .. ‘ஓ .. ஜிம்மின் பிரத்யேக ப்ளேசர்..’ பாசத்துடன் தடவிக் கொடுத்தார் .. ‘.. பார்த்தாயா இந்தக் கோட்டை நீ திருப்பிக் கொடுத்திருக்க வெண்டிய அவசியமே இல்லை .. இருந்தாலும் நீ பொறுப்பாக இதைக் கொண்டு வந்திருக்கிறாய் .. ஜிம் எடுத்த முடிவில் தவறில்லை என்று நீ நிருபித்திருக்கிறாய் . அந்த மேஜையில் .. இரண்டாவது டிராயரில் ஒரு சிகப்புப் பை இருக்கும் எடுக்கிறாயா ?’

அமித் அந்த பையை எடுத்துக் கொண்டு வந்து தந்தான் ..பையைப் பிரித்த சூசன் .. ‘இந்தா .. ஜிம் பல நாட்களாகச் சொல்லிக் கொண்டிருந்தது .. அவரது இறுதிச் சடங்கு நடத்தும் முன்பு அவரது ஆசையை நினைவாக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன் .. நேற்று தான் ராஸ் கொண்டு வந்து தந்தார்.. ஜிம் அந்த ஹோட்டலையும் அவரது மற்ற சொத்துக்களையும் உனக்கு மாற்றித் தர ஆசைப்பட்டார் .. அது விஷயமாத் தான் ரெண்டு நாளுக்கு  முன்னர் அட்டர்னியைப் பார்க்க வந்திருந்தார் .. அதற்குள் இப்படியாகிப் போனது .. அவரது பிசினஸைப் பார்த்துக் கொள்ள  பிள்ளைகள் இல்லையே என்ற குறை இருந்து வந்தது எங்களுக்கு .. உனது நேர்மை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. இத்தனை ஆண்டுகளில் கணக்குகளில் ஒரு டாலர் வித்தியாசம் கூட இருந்ததில்லை.. அது மட்டுமில்லாமல் நீ ஹோட்டலை உன் மனைவி பிள்ளைக்கு மேலாக நேசித்து வருவதாகவும் சொல்வார்.. ஆறு மாதங்களுக்கு முன்னரே அதை மாற்றித் தந்துவிட வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்… எதோ வேலைகள் வந்ததினால் அப்படியே தள்ளிப் போய்விட்டது..தனது முடிவு நெருங்கி விட்டது என்று தெரிந்து தானோ என்னமோ எப்படியாவது இந்த வாரத்தில் அதை முடித்துவிட வேண்டும் என்று கிளம்பினார்…’  சூசன் பேசியது எதுவும் அவனுக்கு கேட்கவில்லை.. தன்னைப் பற்றியும், தனது கீழ்த்தரமான புத்தியையும் நினைத்து வெட்கப்பட்டான்.. அவரது காலில் விழுந்து கதற வேண்டும் போலிருந்தது. அழுகை பொத்துக் கொண்டு வந்தது..

சூசன் ஏதேதோ பேசிக் கொண்டேயிருந்தார்.. ‘உன் மனைவி பிள்ளையை அழைத்து வருவாய் என நினைத்தேன்.. நீ நாளை மறுபடியும் என்னை வந்து பார்.. எனக்கு அவர்களைப் பார்க்கவேண்டும் போலுள்ளது.. போ.. ஹோட்டலைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்.. என்றாவது குணமானால் நான் ஒரு நாள் வந்து உன் ஹோட்டலில் தங்குகிறேன்..’

என்ன பேசுவது அல்லது ஏதாவது பேசினோமா என்று கூட அவனுக்குத் தெரியவில்லை. உணவு பரிமாறும் நேரமாகிவிட்டதால் விருந்தினர்கள் கிளம்ப வேண்டிய நேரமாகி விட்டதாகக் கேர் டேக்கர் வந்து சொன்னார். அமித் சூசனின் கையைப் பிடித்து அழுந்த முத்தமிட்டுவிட்டுக் கிளம்பினான். ஜிம்மின் ப்ளேசரை சூசன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருந்தார். ப்ளேசரின் முன் பாக்கெட்டில் இருந்த லாட்டரி டிக்கெட் அவனைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது.

–o0o–

அஜிஸ் தூங்கிய பிறகு நிஷாவிடம் நடந்தது அத்தனையும் சொல்லிக் கதறி அழுதான் அமித். இத்தனை நல்ல மனிதருக்குத் தவறு செய்ய நினைத்தாயே என்று அவள் அவனைத் திட்டினாள். அவள் திட்டியது அவனுள் பெருஞ்சுமையைக் குறைத்தது. கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுப் பிரார்த்தனை செய்யுமாறும், அவரது ஆத்மா சாந்தியடைய நாற்பது நாட்கள் நோன்பிருப்போம் என்றும் சொன்னாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவனது கைப்பேசி ஒலித்தது .. ராஸ் பேசினார் .. ‘நீ ஏற்கனவே நிலைகுலைந்திருக்கிறாய்.. உன்னிடம் மற்றுமொரு துர்செய்தியைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.. என்னை மன்னித்து விடு.. ஜிம்மின் மனைவி சூசன் ஜான்சன், இன்று மாலை ஆறரை மணியளவில் இறந்து விட்டார் .. நீ பார்த்து விட்டு வந்த ஓரிரு மணி நேரங்களில் இது நடைபெற்றிருக்கிறது. இறக்கும் முன்னர் நீ அவரிடம் கொடுத்த ஜிம்மின் ப்ளேசரை உன்னிடம் சேர்ப்பித்து விடச் சொன்னாராம்..’

அமித் மயங்கி விழுந்த காரணம் தெரியாமல், அவனை ஒரு கையால் உலுக்கிக் கொண்டு.. செல்ஃபோனை எடுத்து ‘ ஹலோ ஹலோ..’ என்று கத்தினாள் நிஷா.

-மர்மயோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad