வெழல் வெய்த – வசந்த மாளிகை
மச்சு வீடுகள் எங்கும் மல்கிவிட்ட இந்தக் காலத்தில் குச்சு வீடுகள் நமக்கு மறந்து போனதில் வியப்பொன்றும் இல்லையே. ஆம் வெழல் வெய்த கூரை வீடுகளை இன்று காண்பது அரிதாகி விட்டது. இன்று ஏழ்மையின் அடையாளமாகக் காணப்படும் இந்த வீடுகள்தாம் சிலகாலத்திற்கு முன்புவரை ஒட்டுமொத்த சமுதாயத்தின் அடையாளமாகத் திகழ்ந்தது என்றால் நம்ப முடிகிறதா? எனது சிறுவயதில் வெழல் வெய்த கூரை வீட்டில் வாழ்ந்திருக்கிறேன். அந்தப் பட்டறிவும் அதில் உள்ள இன்ப துன்பங்களைப் பட்டியலிடும் முயற்சியே இந்தக் கட்டுரை.
ஆம்! அன்று இயற்கை அன்னையின் மடியிலே தவழ்ந்து, அவள் ஈந்த பொருட்களைக் கொண்டே வீடுகள் சமைத்தனர். ஆறு, ஏரி, கண்மாய், கரணை, தாங்கல், ஏந்தல், ஊரணி, குளம், குட்டை என வரிசைப் படுத்தி வாழ்ந்த பழந்தமிழரின் நீர் மேலாண்மையைப் போற்றித்தான் ஆகவேண்டும். அந்தப் புரிதல் சிறிதும் இன்றி நாம் அமைத்த பலவீடுகள் வெள்ளத்தில் மாட்டி அவதிப்படுவதை நாம் கண்படக் காண்கிறோம். நீரோட்டப் பாதைகளில் இல்லாத, மேடான இடங்களை முதலில் தெரிவு செய்தனர். நிலத்தின் திடத்தன்மையைப் பரிசோதித்து வீடு அமைக்கத் தேவையான நிலம் எதுவெனக் கண்டு தெளிந்தனர். அரங்கின் கால்கள் அதிமென்மையான மென்னிலமாகவும் இல்லாமல், அதிதிடமான வன்னிலமாகவும இல்லாமல் இடைநிலமாக இருக்கவேண்டும் எனச் சிலப்பதிகாரம் தெளிவு படுத்துகிறது. வீட்டின் உயரத்திற்கு ஏற்பவும் வீட்டின் அகலத்திற்கு ஏற்பவும் கடைக் கால்களை ஆழமாகவும் வலுவாகவும் கருங்கற்களால் அமைத்தனர்.
கருங்கல் அல்லது செங்கற்களை அடுக்கி களிமண்ணைக் கொண்டு சுவர்களை எழுப்பினர். சலித்த மென்மையான மண்ணைப் பசுஞ்சாணத்துடன் கலந்து சுவரில் பூசுவர். பல முறை இந்தக் கலவை பூசப்படுவதால் பல அடுக்குப் பாதுகாப்பினை சுவர் பெறுகிறது. புழங்குவதற்கு ஏற்ற உயரத்தில் சுவர்கள் உருவாக்கப் பட்டன. தரையைச் சமப்படுத்தி நீர் தெளித்து திம்சுச் கட்டைகளைக் கொண்டு அழுத்தித் திடமாக்குவர். சலித்த மண் மற்றும் பசுஞ்சாணம் கலந்து பலமுறை பூசி கரடுமுரடு இல்லாத மென்மையான தரையாக ஆக்குவர். இந்தத் தரையையும், சுவற்றையும் மென்மையாக்கத் தட்டையான, வழுவழுப்பான கூழாங்கல் கொண்டு பலமுறை இழைப்பர்.
வலுவாக நிற்கும் சுவரின் மீது வலிமையானதும் வளைவுகள் இல்லாததுமான மரங்களை வைத்துத் தூலங்களையும் முக்கோண வடிவிலான முட்டுகளையும் அமைப்பர். வீடுகளின் உயர அகலத்தைப் பொறுத்துக் கூடம் மட்டுமல்லாது ஒன்று இரண்டு கூடுதல் அறைகளையும் அமைத்திருந்தனர். வீட்டின் முன்பகுதியில் திண்ணைகளை அமைத்திடுவர். கூரையைத் தாங்கிப் பிடிக்கச் சின்னச் சின்ன தூண்களும் இருக்கும். வீட்டின் உச்சியிலும், முன்னும் பின்னும் பனை போன்ற மரம் கொண்டு நெடிய சாற்றுக் கழிகளை வைத்துக் கட்டுவர். சாற்றுக் கழிகளை இணைத்து மூங்கில் போன்றவற்றைப் பயன்படுத்திப் படல் அமைப்பர். படலின் மீது பின்னப்பட்ட தென்னைக் கீற்றினை வைத்துக் கட்டுவர். இந்தக் கீற்று அடுக்கின் மேலே பிடிப்பிடியாக வெழலை வைத்து அது நழுவாதவாறு கிட்டிக்கொம்புகளை மேலே வைத்து ஈச்சங் கசங்கைக் கொண்டு இறுக்கமாகக் கட்டுவர். கீழுள்ள கட்டுகள் மறைக்கும் விதம் அடுத்த வரிசையைக் கட்டுவர். இவ்வாறு பல வரிசைகள் அடுக்கி உச்சியில் நெடிய வெழல் திரட்டினை வைத்து அதன் மேல் உதிரி வைக்கோலைக் கொண்டு மூடி பலமாகக் கட்டிவிடுவர். இவ்வாறு பாங்கோடு அமைக்கப்படும் கூரை அதிகப்படியாக 10 ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்கும்.
வீசி அடிக்கும் புயல் மழை, கூரையின் மீது குத்தாட்டம் போடும் குரங்குகள், காலத்தில் மாற்றப்படாத கூரை எனப் பல காரணிகளால் கூரை சிதைவுருவதும் உண்டு. இந்த நேரத்தில் மழை பெய்தால் ஒரே திண்டாட்டம்தான். ஆனால் அனைத்தும் அறிந்த அம்மக்களுக்கு எங்கே ஒழுகும், எங்கே தட்டை வைக்க வேண்டும், எங்கே வாளியை வைக்க வேண்டும் என்று தெரியாதா என்ன. குழந்தைகளை ஒழுகாத இடத்தில் உறங்க வைத்து விட்டு, தட்டில் விழும் ஒவ்வொரு சொட்டையும் அவர்களுக்குத் தாலாட்டாக்கி, மழைவிடும் வரை உறங்காத தாய்களை எண்ணுகையில் தாய்மையின் மேல் நமக்கு இன்னும் மரியாதை கூடுகிறது. வெழல் கூரை பழையதாகிவிட்டால் மரவட்டைகளின் படையெடுப்பு ஒருபுறம். விடாது பெய்யும் மழையால் சுவரின் ஈரத்தன்மை அதிகமாகிவிட்டால் அடையடையாகக் கரையான் கட்டும் புற்றுகள் மறுபுறம்.
வீடுகளை அலங்கரிக்க வீட்டுச் சுவர்களைச் சுண்ணாம்பு மற்றும் செம்மண் கொண்டு வண்ணம் சேர்ப்பர். விழாக் காலங்களில் செம்மண் மற்றும் அரிசிமாவுக் கோலங்களால் தரையினை அலங்கரிப்பர். மேலும் சுவரில் மாடங்களையும், காற்றோட்டத்திற்கான சாளரங்களையும் அமைத்திருந்தனர். மாடங்களில் ஏற்றி வைக்கப்படும் அகல் விளக்குகள் இரவினில் வீடுகளுக்கு ஒளியோடு அழகையும் கூட்டிவிடும். உயர்ந்த தூலங்களின் மீது பலகைகளைப் பொருத்திப் பரண்கள் அமைத்துப் பொருட்களைச் சேமித்தனர். வீட்டின் அளவுக்கேற்ப வாசற்படிகளையும், கதவுகளையும் அருமையான தச்சு வேலைப்பாட்டுடன் படைத்திருந்தனர். இயற்கைப் பொருட்களை மட்டுமே கொண்டு இந்த வீடுகள் அமைக்கப்படுவதால் ஏழைகளாலும் தன் திறனுக்கேற்ப ஒரு வீட்டினை கட்டிக்கொள்ள முடிந்தது. வெளியில் வெய்யில் வருத்தெடுக்கும்போது வீடு குளுமையாகவும், குளிர்க்காலங்களில் வீடு வெதுவெதுப்பாகவும் இருப்பது இந்த வீடுகளின் சிறப்பு. கூரை வீட்டின் கட்டாந்தரையில் துள்ளிக் குதித்து வந்த ஆழ்ந்த தூக்கம் இன்று பல அடுக்கு மாளிகையில், பக்கத்திலும் வருவதில்லை. இன்பமான நினைவுகளில் நம்மை மூழ்கடிக்கும் இந்த வீட்டினை வெழல் வெய்த – வசந்த மாளிகை! என்றால் அது மிகையே அல்ல.
– சச்சிதானந்தன் வெ
Patti veetai gnabagap paduthiyathu vasantha maligai! Miga nandru!
தொடர்ந்து படித்து கருத்தினை பதிவதற்கு நன்றிகள் கஜலக்ஷ்மி