\n"; } ?>
ad banner
Top Ad

லக்‌ஷ்மன், மாலதி – நேர்முகம்

Filed in அன்றாடம், பேட்டி by on December 27, 2015 0 Comments

LS_INTERVIEW_DEC2015_004_620x3741987 ல் முதன் முதலில் ஒரு பத்துப் பேருடன் கூடிய ஒரு சிறு குழுவாக தொடங்கப்பட்டு, 25 ஆண்டுகளுக்கும் மேல் ஒரு மிக பிரபலமான இசை குழுவாக மக்களிடையே அங்கீகாரம் பெற்ற ஒரு இசைக் குழு என்றால் அது லக்ஷ்மன் சுருதி தான். தொழில் நுட்பங்கள் அதிகமாக புகுந்த இந்தக் காலத்திலும், முழுக்க முழுக்க மனித உழைப்பே கொண்டே இந்த இசைக் குழு செயல்படுகிறது. அந்த குழுவின் தலைவர் லக்ஷ்மன் அவர்களுடன் ஒரு உரையாடல்.

கேள்வி : முதல் முதலில் ஒரு இசைக் குழு அப்படீங்கற குறியீட்டு பெயர்(brand ) யோசிச்சா, மனசுக்கு முதல்ல ஞாபகம் வரது லக்ஷ்மன் சுருதி தான். இதை எப்படித் தொடங்கினீங்க ?

பதில்: காலேஜ் படிக்கும் பொழுது ஆரம்பிச்ச ஒரு சின்ன ட்ரூப் இது. ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் கிடார் வாசிப்பவர்,கீபோர்ட்வாசிப்பவர் இப்படி குழு அமைத்து, அந்தக் குழுவில் மிமிக்ரி செய்ய , தொகுத்து வழங்க என்னைச் சேர்த்துக் கொண்டனர். இந்த இசைக்குழு ஆரம்பிக்கும் முன்னரே நான் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டாக கல்லூரியில் பிரபலமாக இருந்தேன். அந்தக் குழவில் சேர்ந்த பின்னர் எனக்கு குழுவின் மீது ஆர்வம் இருந்தது. இசை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் இசையை விரும்பிக் கேட்பதுண்டு. குழுவிற்குத் தேவையான வேலைகளை நானே எடுத்து போட்டுச் செய்வேன் அப்பொழுது படிக்கும் பொழுதே இரண்டு நிகழ்ச்சிகள்  தொழில் முறையாக (Professional)  செய்தோம். கல்லூரிக்கு வெளியில் ஒரு அரங்கத்தில், டிக்கெட் விற்று செய்தோம். ஒரு அரங்கத்தின் வாடகை அப்பொழுது 975 ரூபாய் இருந்தது. எங்கள் குழுவில் உள்ள  ஒவ்வொருவரும் தங்கள் கைகடிகாரம், மோதிரம் இவற்றை அடகு வைத்து அரங்கத்தின் வாடகை கட்டி நிகழ்ச்சியை நடத்தினோம். ஒரு டிக்கெட் இன் விலை 5 இல்லை 10 என்று விற்று நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினோம். இதனால் படிக்கும் பொழுதே கல்லூரியில் பிரபலமானோம். படித்து முடிக்கும் முன்பே நிறைய நிகழ்ச்சிகள் செய்தோம். கல்யாண வீடுகளில், கோயில் திருவிழாக்கள் என்று நடத்திய நிகழ்ச்சிகளில் எங்களுக்கு மரியாதை கிடைத்தது. தொடங்கிய ஆறு மாசத்தில் 50 நிகழ்ச்சிகள் செய்தோம். பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களில் 200 நிகழ்ச்சிகள் செய்தோம்.

கேள்வி: அப்பாடியோ !! ஒன்றரை வருடங்களில் 200 நிகழ்ச்சிகள் என்பது அசாத்தியமான உழைப்பு. உங்களுக்கு அதிகம் வயது கூட ஆகி இருந்திருக்காது  இல்லையா?

பதில்: ஆமாம். அப்பொழுது வயது 21. 200 நிகழ்ச்சிஒரு பெரிய விருந்தினர் அழைத்து செய்வதாக முடிவு செய்தோம். அப்பொழுது கமல் ரசிகர் மன்றத் தலைவர் என் வீட்டில் குடி இருந்தார் அவர் உதவியுடன் நடிகர் கமல்ஹாசனை நிகழ்ச்சிக்கு அழைத்து வர அவர் வீட்டிற்குச் சென்று அனுமதி பெற்றோம். கமல் வருகிறார் என்ற பெரிய உற்சாகத்துடன் நிகழ்ச்சியைத் திட்டமிட்டொம். 1989 ல், 70000 பட்ஜெட். உடன் அந்த நிகழ்ச்சியை நடத்தினோம்.

கேள்வி: 70000 என்பது அந்த காலகட்டங்களில் பெரிய பணத்தொகை அல்லவா?

பதில்: ஆமாம், மிக பெரிய தொகை. அந்த நிகழ்ச்சி ஒரு பெரிய விழாவாக எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. பொதுவாக ஒரு படம் 100 வது நாள் அன்று தான் 9 ஷீட் போஸ்டர் அடிப்பார்கள். நாங்கள் கமல் வருகிறார் என்று 9 ஷீட்  போஸ்டர் அடித்தோம். சென்னையில் ஒரு பெரிய அளவில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியானது. கல்லூரி மாணவர்கள் நிகழ்ச்சிக்கு கமல் வருகிறார் என்று ஒரே பரபரப்பிற்கு உள்ளான. அந்த நிகழ்ச்சி மிகப் பெரிய திருப்புமுனையானது. முதன் முதலாக குழுவினர் அனைவரும் ஒரு சேர வெள்ளை சீருடை அணிந்து நிகழ்ச்சி நடத்தினோம். அன்று மியூசிக் அகாடமி முழுவதும் 1600 சீட்டும் முழுவதும் நிரம்பி இருந்தது. எங்களை வாழ்த்தி பேசிய கமல், நாங்கள் எவ்வளவு தொழில் திறமையுடன் நடத்தினோம் என்று மெச்சிப் பேசினார் . இவர்கள் 2000 நிகழ்ச்சி நடத்தும் பொழுது என்னை அழைத்தால் நான் கட்டாயம் வருவேன் என்றார். அவரின் அந்த வார்த்தைகள் எங்களுக்குத் தூண்டுகோலாக இருந்தது.

கேள்வி: அந்த 200 ஆவது கச்சேரி க்கு அப்புறம் உங்கள் குழுவிற்கு எப்படிபட்ட வரவேற்ப்பு இருந்தது?

பதில்: நல்லவிதத்தில், பெரிய பேர் கிடைத்தது. தொடர்ச்சியா நிறைய இடங்களில் எங்களை அழைத்து வந்து கச்சேரி நடத்தினார்கள். அப்பொழுது இசை துறையில் சீனியர்களாக இருந்த அத்தனைக் குழுவினரின் கச்சேரிக்கும் சென்று அவர்கள் கச்சேரிகளில் இருந்து நல்லவைகளை எடுத்து அதை எங்கள் குழுவில் சேர்த்து உருவாக்கினோம். அப்பொழுது இருந்த இசை குழுவினர் A .V ரமணன்,ரகுராஜ் சக்ரவர்த்தி,வி.சந்திரன்,ஸ்ரீதர் நவராக்ஸ் ,லூயிஸ் பால், ஆகியோரின்  கச்சேரியைக் கேட்டு அவர்கள் குழுவின் சிறப்பு அம்சம் பார்த்து, கற்று, அவை எல்லாம் சேர்த்து உருவாக்கியது தான் “சுருதி இன்னிசை மழை”. ஒரு ரசிகனாக நான் கச்சேரி கேட்டால் எப்படி ரசிப்பேனோ, அதை போன்ற கச்சேரிகளைத் தர வேண்டும் என்றே முயற்சித்தோம்.

கேள்வி: உங்கள் துணைவியார்  மாலதி எப்பொழுது உங்கள் குழுவில் இணைந்தார்?

பதில்: 1989ல் எங்கள் குழுவில் இணைந்தார். 1990 எங்களுடன் இருந்த குழுவினர் மேல் படிப்புக்காக அவரவர் பிரிந்து விட்டனர். குழுவில் இரண்டோ மூன்று பேரோ தான் மிச்சமாக இருந்தோம். குழுவை எடுத்து நடத்தும் மொத்த பொறுப்பும் எனக்கு வந்தது.

LS_INTERVIEW_DEC2015_007_620x383கேள்வி: எப்பொழுது 2000 கச்சேரிகள் முடித்தீர்கள்?

பதில்: 1994 ல் இரண்டாயிரம் நிகழ்ச்சிகள் முடித்து அதற்கும் தலைமை தாங்க கமல் அவர்களை அழைத்தோம். அந்த விழாவின் பொழுது மாலதி  விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் அவர்களின் பாடல் ஒன்றை பாடினார். அதை கேட்ட கமல் மாலதியின் குரல் வளத்தை பாராட்டினார். அவர் பாராட்டு எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அந்த மேடையில் பேசிய பொழுது கமல் அவர்கள், “ஏதோ மேடை பேச்சுக்காக நான் 200 நிகழ்ச்சியில் சொன்னதை இவர்கள் தூண்டுதலாக கொண்டு 2000 நிகழ்ச்சிகள் வரை செய்தது இவர்கள் உழைப்பைக் காட்டுகிறது. அதே போல் நான் மீண்டும் 20000 என்று கூற மாட்டேன். என்னை 5000 ஆவது நிகழ்ச்சிக்கு அழையுங்கள். நான் வருகிறேன்” என்று சொன்னார்.

கேள்வி: உங்களுடைய வளர்ச்சிக்குப் பெரிய தூண்டுகோலாக கமல் அவர்கள் இருந்திருக்கிறார் அல்லவா?

பதில்: ஆமாம் 2003 ல் எங்களுடைய மியூசிக் ஷாப் திறந்து வைக்கவும்.எங்களுடைய எல்லா முக்கியமான வளர்ச்சிக்கும் ஆதரவு கொடுத்து,முதுகெலும்பாக இருந்து வருகிறார். எங்களுடைய சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியின் ஒன்பதாம் வருடம் தொடங்கி வைக்க வந்திருந்தார். அவர் பிறந்த நாள் அன்றும் எங்கள் கடை திறந்த நாள் அன்றும் அவரைச் சந்தித்து அவரின் ஆத்மார்த்தமான வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்வோம்.

கேள்வி: 36 மணி நேரம் நீங்கள் கச்சேரி செய்ததன் அனுபவம் பற்றி சொல்லுங்கள்.

பதில்: 1994 ல் டிசம்பர் 17,18 இரண்டு நாட்கள் 36 மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தினோம். அதற்கு ஒரு வருடம் முன் கதாசிரியர் ராது 36 மணி நேரம் ஒரு நாடகம் நடத்தினார் என்று தெரிந்து, அதைப் பார்த்து நாமும் அதைப் போல் இசை நிகழ்ச்சி செய்வோம் என்று முடிவு செய்து, ஒரு வருடம் திட்டம் தீட்டி, உலகச் சாதனை படைக்க உழைத்தோம். தொலைக்காட்சி, whats app  போன்ற விஷயங்கள் வராத நேரம் 36 மணி நேரம் நடு இரவிலும் அதிகாலையிலும் 3000 ரசிகர்கள் கொடுத்த உற்சாகம் எங்கள் இசையை நிறுத்தாமல் தொடர வைத்தது. அந்த நிகழ்ச்சிக்கு இசைப்புயல் ஏ.ஆர்  ரஹ்மான்,இசைஞானி இளையராஜா, மெல்லிசை மன்னர் M .S . விஸ்வநாதன், ராமமூர்த்தி, சங்கர் கணேஷ், T.ராஜேந்தர் , கே.ஜே. ஜேசுதாஸ் இப்படி அன்றைய திரை உலக ஜாம்பவான்கள் அனைவரும் வந்து சிறப்பித்தார்கள். இன்று வரை அது ஒரு சாதனை (land mark) நிகழ்ச்சியாகவே இருக்கிறது. கின்னஸ் சாதனை படைக்க முயற்சிக்கும் அனைவரும் எங்களை அணுகி ஆலோசனை கேட்பார்கள். நாம் எந்த ஒரு முயற்சி செய்தாலும் அதில் உண்மையாக உழைத்தால் ரசிகர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நாங்கள் அந்த நிகழ்ச்சியின் மூலம் கற்றுக் கொண்டோம்.

கேள்வி: இதுவரை எத்தனை நிகழ்ச்சிகள் பண்ணி இருக்கிறீர்கள் ?

பதில்: இதுவரை 9000 நிகழ்ச்சிகள் பண்ணி இருக்கிறோம். தமிழகத்தில் மட்டும் அல்லாது, வெளி மாநிலங்களிலும், 25 வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம்.அமெரிக்காவில் 50 நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறோம்.எங்கள் குடும்பத்தாரை விட, எங்கள் இசை குழுவினரிடம் தான் அதிக நேரம் செலவிட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் தூங்கி எழுந்த பின் இன்னிக்கு புதுசா என்ன பாட்டு ரிலீஸ் ஆகுது. என்ன மாதிரி பாட்டை ரசிகர்கள் விரும்பிக் கேட்கிறார்கள். இசை அமைப்பாளர்களின் தற்போதைய ட்ரேண்ட்  என்ன இப்படியே யோசித்து கொண்டு இருப்போம். இப்படி புதுப்பித்தல்கள் இருக்கிற வரை மக்கள் நம்மை மறக்க மாட்டார்கள்.

கேள்வி: இந்தியாவில் நிகழ்ச்சி நடத்துவதற்கும் , வெளிநாட்டில் நடத்துவதற்கும் உங்களுக்கு வேறுபாடு தெரிகிறதா?

பதில்: நிச்சயம், வெளிநாட்டில் நிகழ்ச்சி நடத்தும் பொழுது, சில சமயங்களில் ரசிகர்கள் எதிர் பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியாமல் போய் விடும். ஒரு வருடம் சாப்பிடாம ஒரு முறை சாப்பிட்டால் எப்படி சுவை எதிர்பார்ப்பு இருக்குமோ அது போல, இங்கிருக்கும் ரசிகர்கள் எங்களைப் பார்த்தவுடன் தங்கள் சொந்த பந்தங்களைப் பார்த்தது போல மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களுக்குப் பிடித்த சில பாடல்களைப் பாடி விட்டால். அவர்கள் வீட்டில் விருந்து உண்டது போன்ற மகிழ்ச்சி அடைந்து விடுகிறார்கள். இங்கே கச்சேரி பண்ணுவது சுலபம். ஆனால் மூன்று தலைமுறை ரசிகர்களைத் திருப்திபட செய்வது மிக கடினமாக விஷயம். எங்களால் முடிந்த முயற்சிகளை நாங்கள் எப்பொழுதும் செய்வோம். ஒரு பத்துப் பேர் சேர்ந்து சென்னையில் இருந்து மகாபலிபுரம் செல்வது என்று திட்டம் இட்டு அதை நிறைவேற்றுவதே கடினம், நாங்கள் ஒரு இசை குழுவாக கிளம்பி நாடு கிடந்து வரும் பொழுது, பல தடைகளை மீறி நிகழ்ச்சி நடத்துவோம். ஒரு வெளிநாட்டு டூரில் இரண்டு நிகழ்ச்சி நடத்தினால் அதுவே எங்களுக்கு ஒரு கின்னஸ் சாதனை போல. ஒரு மெல்லிசை கச்சேரி நடத்துவதில் எத்தனையோ கஷ்டங்கள் இருந்தும் அதை எல்லாம் மீறி , கச்சேரி செய்யும் பொழுது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தர வேண்டும். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் முயற்சி செய்வோம். “ஊருக்காக வாழும் கலைஞன் தன்னை மறப்பான் தன கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்” என்ற திரைப்படப் பாடல் வரிகளைத் தினசரி மனதில் வைத்து தொடர்ந்து ரசிகர்களின் கைதட்டல் உற்சாகத்தோடு நிகழ்ச்சி நடத்துகிறோம். என்றும் ரசிகர்களின் எதிர் பார்ப்பை நிறைவேற்றும் விதமாகவே கச்சேரிகள் நடத்துவோம்.

                           

******

LS_INTERVIEW_DEC2015_005_620x312மாலதியுடன் உரையாடல்

கேள்வி:  நீங்கள் முதன் முதலாக இவர்கள் குழுவில் தான் சேர்ந்தீர்களா இல்லை அதற்கு முன்பே பாடினீர்களா?

பதில்: நான் அதற்கு முன்பே பாடி கொண்டே இருந்தேன். 1989 ல் இவர்களுடன் இணைந்தேன்.

கேள்வி: நீங்கள் கே.பி. Sundarambaal பாட்டை அவ்வளவு அருமையாக பாடி உள்ளீர்கள். இதற்கு தனியாக பயிற்சி எடுத்துள்ளிர்களா ?

பதில்: இல்லை முதலில் குழுவில் இணைந்த பொழுது, குழுவில் இருந்தவர்கள் இந்த பெண்ணை ஏன்பா கூப்பிட்டே என்று கேட்பதுண்டு. அந்த அளவிற்கு மிக மெல்லிய குரல் என்னுடையது. அதன் பிறகு இவர் (லக்ஷ்மன்) சில பாடல்களை எடுத்து கொடுத்தார். விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் அவர்கள் பாடலை முதலில் கொடுத்தார். அந்தப் பாடலை முதலில் மேடையில் பாடிய பொழுது பெரிய வரவேற்பு கிடைத்தது. ஒன்ஸ்  மோர் (once more ) கேட்டார்கள். அப்புறம் நிறைய குரல்களை முயற்சி செய்து, பின் கே.பி.சுந்தராம்பாள் குரல் முயற்சி செய்தோம். முதலில் பாடும் பொழுது பயமாக இருந்தது. அவர்களுடைய குரல் மிக கம்பீரமானது. அதோடு கர்நாடக சங்கீதம் தெரிந்தால் தான் ஓரளவுக்காவது பாட முடியும் என்று பயந்து பயந்து முயற்சி செய்தோம். பாட பாட பயிற்சி ஆனது. அதற்கு அப்புறம் எல்லா குரல்களுக்கும் தோதாக என் குரல் தயார் ஆகியது.

கேள்வி: விஜயலட்சுமி நவநீதனின் எந்த பாடலை பாடினீர்கள்?

பதில்: “தன்னனனாதீனம்,தோட்டு கடை ஓரத்திலே, ஆணைமுகத்தொனே ,ஆல ஆல  பிள்ளையாரே” இந்த பாடல்களை எடுத்து பாடினோம்.

கேள்வி: மற்றவர்களுடையது?

பதில்: கே.பி. சுந்தரம்பாள் அவர்களுடையது “தக தக வென ,ஒன்றானவன், பழம் நீயப்பா, அப்புறம் ஏழு மலை இருக்க இப்படி பாடல்கள் எடுத்து பாடினோம். பெங்களூர் ரமணியம்மாள் அவர்களுடைய “குன்றத்திலே குமரனுக்கு, என்னப்பன், வேலவா ” இப்படி பாடினோம். வேற குரல்கள் எடுக்கலாம் என்று சூல மங்களம் சிஸ்டர்ஸ் வாய்ஸ் எடுத்து பாடினோம். இப்படி நிறைய குரல்கள் எடுத்து முயற்சி செய்தோம். ஓரளவிற்கு என்னால் எல்லா குரல்களையும் போல பாட முடியும்.

கேள்வி: நீங்கள் விருப்பபட்டு பாட விரும்பும் பாட்டு?

பதில்: எல்லா பாடல்களுமே பிடிக்கும். எனக்கு குறிப்பாக பக்திப் பாடல்கள் பிடிக்கும். வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ரொம்ப பக்தியோடு இருக்கும் ஆகையால் பக்திப் பாடல்கள் பாடுவது மிக விருப்பம். திரை பாடல்களில் சுஷீலாம்மா, சித்ராம்மா பாடல்கள் பிடிக்கும்.

கேள்வி: உங்கள் குரலை பராமரிக்க என்ன செய்கிறிர்கள்?

பதில்:ஒரு நிகழ்ச்சிக்காக பிரயாணம் செய்யும் பொழுது தொண்டை தான் முதலில் பாதிக்கப்படும். ஆனால் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் மேடை ஏறி ரசிகர்கள் கரகோஷம் கேட்டவுடன் எல்லாம் மறந்து போய் விடும். இந்த நேரத்தில் நாம் நன்றாக பாடவேண்டும். இவர்களிடத்தில் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்கிற ஒரே சிந்தனை தான் இருக்கும். அதனால் பெரிசா தொண்டையைப் பாதுகாக்கிற வேலை எல்லாம் செய்ததில்லை. எல்லா உணவும் அளவோடு உண்ணும் பழக்கம் உண்டு. அவ்வளவு தான்.

கேள்வி: இசைக் குழுவிலும் அந்தக் கால முறை போல் இல்லாமல் இப்பொழுது நிறைய டிஜிட்டல் இருப்பது உங்களுக்கு பாடுவதில் வித்தியாசம் தெரிகிறதா?

பதில்: இப்போ கொஞ்சம் பாஸ்ட் ஆ இருக்கு. சத்ததுல பாட முடியல. எல்லா நேரங்களிலும் மானிடர் கேட்குமான்னு சொல்ல முடியாது. சில நேரங்களிலே மானிடர் நம்மள பேஸ் பண்ணி இருக்காது. அந்த மாதிரி நேரங்களில் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அனுபவத்தினாலே அதைச் சமாளித்து விடுவோம்.

கேள்வி: நீங்க பாடினதிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்?

பதில்: நிறைய பாடல் இருக்கு. சினிமாவில் பார்த்தால், மன்மத ராசா. நான் நினைச்சே பார்க்கலே இவ்ளோ பெரிய ஹிட் ஆகும்னு. இந்த குரலுக்கு இப்படி ஒரு வரவேற்பு இருக்குமா அப்படின்னு சந்தேகம் இருந்தது. மெலடியும் இல்லாமல், பேஸ் வாய்ஸ் மாதிரியும் இல்லாமல் ஷார்ப் ஆனா ஓபன் வாய்ஸ் என்னுடையது. அது எப்படி ஹிட் ஆச்சுங்கறது பெரிய கேள்விக் குறி தான். வெறும் குரலுக்காக மட்டும் அல்லாமல் அந்த பாட்டிற்கு இசை அமைத்த தீனா, தனுஷ்ஷின் நடிப்பு, படம் பிடிக்கப்பட்ட இடம் இது எல்லாம் சேர்ந்து ஒரு டீம் வொர்க் ஆகா அந்த பாட்டின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. அதை தவிர நாட்டுபாடல் ஒன்று வித்யா சாகர் இசைஅமைப்பில் பாடி இருந்தேன் “வாடி மச்சினியே ” என்று அந்த பாடல் பிடிக்கும். தெலுகு படங்களில் நிறைய பாடல்கள் பாடி இருக்கின்றேன். “ஆ அந்தே அமலா புறம், வங்க தோட்டா,இப்படி . இதுல வாங்க தோட்டா பிடிக்கும். அது முதல்ல பாடினது. ரொம்ப தெரியாத மொழியைக் கஷ்டப்பட்டு பாடினது. ரொம்ப ஹை பிட்ச் வேற. அதை பாடி முடிக்க 8 மணி நேரம் ஆனது. இப்படி  நிறைய கஷ்டப்பட்டு பாடிய பாடல்கள் உண்டு, அவை அதிகமாக பிரபலம் ஆகவில்லை. சில பாடல்கள் ரொம்ப ஜாலியாக பாடியதுண்டு. “கும்பிட போன தெய்வம், என் பேரு மீனா குமாரி” போன்ற பாடல்கள் ரெகார்டிங் போது ரொம்ப ஜாலியாக பாடிய பாடல்கள். அவை அதிக பிரபலம் அடைந்தன. இவை எல்லாம் நான் பாடியவைகளில் எனக்கு பிடிக்கும். அதை தவிர திரை உலக பாடல்களில் சுசீலாம்மா, ஜானகி அம்மா, அவர்களின் பாடல்களுடைய வரிசை மிக நீளம். அவ்வளவு பிடித்தமானவை.

கேள்வி: உங்கள் மகளுக்குப் பாடுவதில் பிரியம் உண்டா?

பதில்: நல்லா படுவார் . சபையில் பாடுவதற்கு கொஞ்சம் சந்கோஜப்படுவார். நல்ல மெல்லிய குரல் அவருடையது. மெல்லிசை பாடல்கள் பாடுவதில் மிக விருப்பம் உண்டு.

கேள்வி: லக்ஷ்மன் ஸ்ருதி பாடல் ஆல்பம் வெளியிட எதாவது திட்டம் இருக்கா?

பதில்: இருக்கிறது. என்னுடைய பாடல்களைப் பண்ண வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது. வித்தியாசமான குரல்களுடன் கூடிய பாடல்களைத் தேர்ந்தெடுத்து செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எதிர்காலத்தில் இதை செயல் படுத்தவேண்டும்.

கேள்வி: உங்களுக்கு இந்த ஊரில் கச்சேரி செய்தது பிடித்தா?

பதில்: மிகவும் பிடித்தது. எங்களுக்கு எப்பொழுதும் இங்கே தமிழகத்தை விட்டு வந்து தங்கும் பொழுது, எல்லோரும் நம் வீடு மனிதர்கள் போல பழகுவது பிடிக்கும். இங்குள்ளவர்கள் தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள விருப்பம் பார்ப்பதற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

கேள்வி: மினசோட்டா வாழும் தமிழர்களுக்கு உங்கள் வாழ்த்து?

மாலதி பதில்: மினசோட்டா வாழும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த   நல்வாழ்த்துக்கள். இனி வரும் எல்லா வருடங்களும் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும் என்று  இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.

லக்ஷ்மன் பதில்: அமெரிக்காவில் இருக்கும் எல்லா தமிழர்களுக்குமே எங்கள் இசைக் குழுவின் சார்பாக புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.   இனி வருகிற ஆண்டு மிக நிறைவோடு இருக்கும்படியாக அமைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

இந்தப் பனிப்பூக்கள் மாத  இதழ், இங்குள்ள தன்னார்வல தொண்டர்களைக் கொண்டு, எழுத்து, புகைப்படம், வரைபடம் என அனைவரையும் உற்சாகபடுத்தி , ஊக்கபடுத்தி, தமிழை முதலில் வைத்து நீங்கள் செய்யும் இந்த முயற்சி மென்மேலும் வளர்ந்து, உலகம் முழுக்க பிரபலம் அடைந்து, ஒரு உபயமான  இதழாக உருவெடுக்க எங்கள் இசைக் குழு சார்பாக அன்பான வாழ்த்துக்கள்.

  • பேட்டி: லக்‌ஷ்மி சுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad