முதற் காதல்
எழுதி எழுதித் தீர்த்தாலும் இனி
எழுதுவதற்கு இல்லையென இருந்திட இயலாது….
அழுது அழுது தீர்த்தாலும் இனி
அழுவதற்கு ஏதுமில்லையென அமைந்திட இயலாது…
அரும்பாக இருக்கையிலே அழகாக அரும்பியது
துரும்பாக இருந்ததையும் தூசிதட்டி விரும்பியது
குறும்பாக நடந்ததெல்லாம் குறுகுறுத்துப் பருகியது
இரும்பான இதத்தையும் இளக்கிடவே திரும்பியது
காலையில் எழுகையிலே கால்வண்டி தான்மிதித்து
காடுமேடு உடன்சென்ற களிப்பான நினைவுகள்
கண்கசக்கிப் பல்துலக்க, வேப்பமரக் குச்சியிலே
கண்மணிக்குப் பயிற்சி தந்த நினைவுகள்
குனிந்து நிமிர்ந்து உடற்யிற்சி செய்ய
குளிர்ந்த காலையிலே குமரிவந்த நினைவுகள்
குளிப்பதற்குத் தண்ணீர்க் குழாய் திருப்ப
குதித்து நான்நீராடிய குளம்வந்த நினைவுகள்
சாளரம் மேல்வைத்த சலவைத் துணிபார்க்க
சாளரம் வழிபார்த்த சிலையவளின் நினைவுகள்
சாமியறை உள்சென்று சம்பிரதாயமாய்க் கும்பிட
சாமிகளின் முன்னின்று சத்தியம்செய்த நினைவுகள்
நடுவீட்டில் அழகாய் நயந்துநின்ற வாழைநோக்க
நயமோடு அமர்ந்திருந்த வாழைத்தோப்பு நினைவுகள்
நறுமணச் சமையலை நாசியில் நுகர்கையில்
“நல்லாச் சமைக்க வராதே” கேட்ட நினைவுகள்
மேசையில் ஆவிபறந்த இட்லி பார்க்கையில்
மேனியைக் கள்ளமாய் மேய்ந்திட்ட நினைவுகள்
மேகமூட்டம் அத்தினமென தொலைக்காட்சி சொல்கையில்
மேட்டுக்குப்பின் மறைந்து மழைநனைந்த நினைவுகள்
காலைச் சூரியன் கண்களைக் கூசுகையில்
காமத்தைக் கண்பார்த்து அடக்கிய நினைவுகள்
காரினில் அமர்ந்து காரியாலயம் செல்கையில்
காடுமேடு முழுவதும் கைகோர்த்த நினைவுகள்
மாலையில் திரும்புகையில் மறுகிடும் நெரிசலில்
மாவிளக்குத் திருவிழா மத்தியிலவள் நினைவுகள்
மாடிசென்று கண்ணாடியில் முகம்கழுவிப் பார்க்கையில்
மாலையும் கழுத்துமாய் மங்கைநின்ற நினைவுகள்
பளபளப் புடவையில் பளிங்குச் சிலையென
பலர்பார்க்க நின்றவள். பவித்திர மணப்பெண்ணின்
பக்கத்தில் நின்றவன் நானில்லை, ஏனென்று
பலமுறை யோசித்தும் புலப்படாத நினைவுகள் !!!
வெ. மதுசூதனன்.
Tags: love