மாரியால் மாறினோம்
மரத்துப் போன ஜனங்கள்
மடங்கிச் சுருங்கிய மனங்கள்
மானுடம் மறந்த தன்னலம் ; யாவும்
மாறிடக் கண்டோமே மாரியால்!!
மண்டியிருந்த பேதங்கள் மக்கிப் போயின!
மதர்த்திருந்த மதங்கள் மரித்துப் போயின!
கண்டறியா அண்டைமனிதர் கடவுளாயினர்;
கடல்கடந்த அன்னியமனிதர் வள்ளலாயினர்!
எங்கெங்கு காணினும் புரண்டோடிய நீர்;
எடுத்துப்பருக ஒருதுளியில்லை காணீர்!
மலையளவு செல்வமெனும் மமதையொழிந்து
மடக்களவு நீரின் மெய்விலை கண்டோம்
அடித்துவந்த அலையினூடே அகாலமாய்
அடுத்தடுத்து மிதந்துவந்த சவங்கள்.
மனிதரோடு மிருகசாதிகளும் மாண்டிருந்தன
மண்ணில் நிலையாமை மட்டுமே நிலையென்றன!
மரித்தோரை எரிப்போரின் வலியுணர்ந்தோம்!
மலமள்ளும் துப்புரவாளனின் துயருணர்ந்தோம்!
குட்டிச்சுவர் இளைஞரின் நற்பணியறிந்தோம்;
குச்சுவீட்டு ஏழ்மையிலும் நேர்மையறிந்தோம்;
இல்லாமை கொடுமையென உணர்ந்தறிந்தோம்
இரந்தோர்க்கு இருப்பதை பகிர்ந்தளித்தோம்!
கடுந்துயர் கண்டு கலங்காத உரம்பெற்றோம்
கரம்பற்றி எதிர் கொள்ளும் திடம்பெற்றோம்
ரவிக்குமார்
Excellent Ravi
மாரியால் மாறினோம் கவிதை அருமை