பஞ்சாமிர்தப் பழரசப்பாகு
பஞ்சாமிர்தம் என்றால் வழக்கமாக வாழைப்பழம், பேரிச்சை,முந்திரி, தேன் என்றுதான் தெரிந்தவர்கள் மனம் போகலாம். ஆயினும் நாம் இவ்விடம் இதமான பலவர்ணச் சுவையுடைய கனிகளின் சுழைகள் கொண்டு பழரசப்பாகு செய்ய முனைவோம்.
தேவையான பொருட்கள்
2 நன்கு பழுத்த மாம்பழம்
1 பழுத்த பப்பாப்பளம்
1 அன்னாசிப்பழம்
2 தோடம்பழம் (Orange)
2 வாழைப்பழம்
1 தேசிக்காய்
4 ounce/110 g சீனி
½ கோப்பை தண்ணீர்
1 தேக்கரண்டி வனிலா வாசனைத் திரவியம்
வேண்டியவர்கள் 5 தேக்கரண்டி ரம் (Rum) சேர்த்தும் கொள்ளலாம்.
செய்முறை
எலுமிச்சையையும், வாழைப் பழத்தையும் தவிர மற்றைய பழங்கள் யாவற்றையும் தோலுரித்து, நறுக்கி, சுழைகளில் இருந்து விதைகளையும் அகற்றிக் கொள்ளவும். அடுத்து வாழைப்பழத்தைத் தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி, எலுமிச்சஞ் சாற்றைப் பிழிந்து அதன் மேல் போட்டுக் கொள்ளவும். இது வாழைப்பழம் உடன் நிறம் மாறாதிருக்க உதவும்.
ஒரு அகன்ற கண்ணாடி, அல்லது துருப்பிடிக்காத உலோகப் பாத்திரத்தில், Salad bowl பழத்துண்டகள் யாவற்றையும் இட்டு இலேசாக பிரட்டிக் கொள்ளவும். அடுத்து அடு்ப்பில் சிறியபாத்திரத்தில் நீரைக் கொதிக்கவைத்துச் சீனியை இட்டு அது நீரினுள் கரையும் வரை காய்ச்சி அடுப்பிலிருந்து அகற்றிக் கொள்ளவும்.
அடுத்து வனிலா ( வேண்டியவர்கள் ரம் 5 தேக்கரண்டிகளும்) சேர்த்து பழக்கூட்டின் மேல் ஊற்றிக்கொள்ளவும். அடுத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து யாவையும் குளிர்மையை அடைந்து பின்னர் பரிமாறிக்கொள்ளலாம். இதனுடன் சிறிதளவு குளிர்பாலேடு (ice cream) சேர்த்தும் கொள்ளலாம்.
யோகி அருமைநாயகம்