ஞாயிறே போற்றி!
தமிழ் மக்கள் கொண்டாடும் விழாக்களில் பொங்கல் விழா மிகச் சிறப்பு வாய்ந்தது. உழவர்கள் திருநாள் என்றும் இதைக் கூறுவர். இந்தத் திருநாளின் இன்னொரு சிறப்பு இது சூரியப்பொங்கலாகக் கொண்டாடப்படுகிறது. சூரியன் தெற்கிலிருந்து வடக்கு முகமாக நகர்வது இந்த நாளின் சிறப்பு.
நம் அனைவரும், ஏன் இவ்வுலகில் உள்ள அனைத்தும் நட்சத்திரத் துகள்களால் ஆனது என இயற்பியல் கூறுகிறது. நாம் உண்ணும் காய்கறிகள் எல்லாம் கதிரவனின் கதிரொளியை உணவாக உண்டு வளர்ந்தவை. கடல் தண்ணிரை மேகமாக மாற்றி, வயலுக்கு மழையாய்க் கொடுப்பதும் சூரியன் தான். அந்தத் தண்ணிரையும் ஒளியையும் உண்டு மரங்களும் செடிகளும் உணவைக் கொடுக்கின்றன. இறைச்சி உண்டாலும், அந்த விலங்கிற்கோ பறவைக்கோ உணவளித்தது இந்தச் செடிகளும் மரங்களும் தான்.
நம் வாழ்விற்கு ஆதாரமாக இருப்பது சூரியன் என்பதைக் கண்டோம். ஆனால் அதுமட்டும் அல்ல, தன்னையே எரித்து நமக்கு வெப்பம் கொடுப்பதினால் இந்தப் பூமி நாம் வாழ்வதற்கு ஏதுவாக இருக்கிறது. வெப்பம் கூடினாலோ, கடல் நீர் எழும்பி பூமி வெள்ளக்காடாக மாறிவிடும். வெப்பம் குறைந்தாலோ இந்தப் பூகோளம் பனியால் கவரப்பட்டு ஒரு உயிரும் வாழவழி கிடைக்காமல் ஆகிவிடும்.
நமக்கு உணவு, உடை, வாழ்வாதாயம் தரும் தட்பவெப்பம் எனக் கொடுக்கும் கதிரவனைப் புகழ்ந்து கண்ணதாசன் கர்ணன் படத்திற்காக ஒரு அருமையான பாடல் எழுதியுள்ளார்.
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றிப் போற்றி!
சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. பூமி சுழலுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் என்ற ஆராய்ச்சி. அதன் படி, மரங்கள், தாவரங்கள், நாம் எல்லோரும் மணிக்கு நூற்றுக்கணக்கான மைல் வேகத்தில் தூக்கி எறியப்படுவோம் என்றும், கடல் அலைகள் நிலத்தில் புகுந்து எல்லாவற்றையும் அழிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் பூமி சுழல்வதற்குச் சூரியனே காரணம். பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள புவி ஈர்ப்பினால் தான் பூமி சுழல்கிறது.
தன்னையே எரித்து இந்தப் பூமியையும் அதில் வாழும் ஜீவராசிகளுக்கும் உணவளித்து உடுக்க உடை கொடுத்து தியாக ஸ்வரூபமாகத் திகழும் சூரியனை வாழ்நாள் முழுவதும் துதிப் பாடினாலும் போதாது. கடவுள் எங்கே, எங்கே எனத் தேடும் மக்களுக்குக் கண்முன்னே தினமும் தோன்றி மறையும் கடவுள் சூரியன். சூரிய பகவானைத் தினமும் வழிப்பட்டு அவர் நமக்களித்த இந்தப் பூமியை நன்கு பராமரிக்க உறுதிக் கொள்வோம். சூரியப் பகவானை தினமும் வழிப்படாமல் இருந்தாலும் வருடத்திற்கு ஒரு முறையேனும் வழிப்படுவோம். அதுதான் இந்தப் பொங்கல் பண்டிகை. அன்று சூரிய பகவானுக்கு நன்றி சொல்லி, அவர் வாழ்த்தினைப் பெற்று நலமுடன் வாழ்வோம்.
ஞாயிறே போற்றிப் போற்றி!
–பிரபு ராவ்