சம்மதம் முதல் 5 நிமிடங்களில்
Category – career, business, personal development
அரட்டைப் பேச்சிற்கும், அவசியமான வர்த்தகப் பேச்சிற்கும் வித்தியாசம் தெரியாமல் அவலப்படுபவர்கள் பலர். இது தொழிநுட்பத்துறையிலுள்ளோர்க்கு மாத்திரம் உள்ள பிரச்சனையல்ல, இது விளம்பரம், விமர்சனம் ஏன் விற்கும் தொழிலில் உள்ளவரும் அவர்கள் காரியங்களில் மேம்படவேண்டிய அறிந்து கொள்ள வேண்டிய விடயம்.
தமிழில் ஒரு பழிமொழி ஒன்றுண்டு. எல்லாம் தெரிந்த பல்லி கூழ் பானைக்குள் விழுவதைப்போல. ஊர்ப்புறங்களில் பல்லியின் சத்தம் பார்த்து ஜோஸ்யம் சொல்வார்களாம். ஆனால் நாட்டுப்புறத்தில் அடுக்களையில் திறந்திருக்கும் பானையில் பல்லி சறுக்கி விழுவதும் உண்டு. அதுதான் ஊருக்கே உபதேசம் செய்யும் பல்லி தன் வழியையே சரியாகப் பார்க்கவில்லையே என்று அங்கலாய்ப்பராம் ஊர்க்காரர்.
இதை நாம் தற்போதய தருணத்திலும் உபயோகிக்கலாம். அதாவது நமக்குத் தான் எல்லாம் தெரியுமே என்ற மனப்பாங்குடன் போய், தமது சிந்தித்துத் செயல்படாத தன்மையால் தமக்குத் தாமே சாதகமற்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்பவர் நம்மவரில் பலர். இதில் முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் தகவல் பரிமாற்ற நுணுக்கம்.
ஒருவர் எவ்வாறு தாம் பரிமாறும், விற்கும், ஆதரவை நாடும் தகவலை, அதைக் கேட்பவரும் அது தமக்கும் சலுகையானது என எண்ணி நாட்டம் காண வைப்பதே.
வேலையிலும் சரி, வர்த்தகத்திலும் சரி பணத்தைக் கொடுத்துப் பொருள், சேவைதனை வாங்குபவர்கள் எதிலும் நாட்டம் காட்ட வைப்பது சராசரியாகக் கடினமான விடயம். மேலும் உங்களிற்குக் கரிசனை காட்டுதல் ஒரு சில நிமிடங்களே. இதனுள் உரிய தகவல் பரிமாறாவிட்டால் விளைவுகள் நீங்கள் நினைத்தமாதிரி அமைவதில்லை.
அண்மையில் மினசோட்டா மாநிலத்தில் வர்த்தக சம்மேளனம் ஒன்றினால் நடத்தப்பட்ட பிரபல தகவல் பரிமாற்றுப் பயிற்சி வகுப்பில் இருந்து சில குறிப்புக்களை இங்கு தருகிறோம்.
இந்தப் பயிற்சியின் ஆரம்பத்தில் கீழே தரும் சொற்கள் மந்திரம் போலப் பாவிக்கப்பட்டன.
சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதைச் சரியாகப் பாவியுங்கள், வர்த்தகத்தில் முதல் ஐந்து நிமிடங்களே அத்தியாவசிமானவை.
எனவே முதல் ஐந்து நிமிடங்களிற்குள் உங்கள் தகவலின் உரிய சம்பந்தம் மற்றும் நம்பகத்தன்மைதனைப் பரிமாறுதல் அவசியம்.
உதாரணத்திற்கு நீங்கள் புதியதொரு தொழிநுட்பத்தை வர்த்தகத்தாபன இயக்குநர் ஒருவர்க்கு உங்கள் சேவையை விற்கப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தகவல் பரிமாறல் நடைபெறுமா என்பதற்கான ஆயத்தக்
கேள்விகள்:
- நீங்கள் சந்திக்கும் இயக்குநர், அவர் கம்பெனி மற்றும் அவருக்கும் முக்கியத்துவம் தரும் அவர் கம்பெனி வர்த்தக முயற்சிகள் பற்றி ஆராய்ந்து கொண்டீர்களா?
- நீங்கள் கம்பெனி இயக்குநர் வர்த்தக மொழியைப் பேசுகிறீர்களா, அவரது வர்த்தக முயற்சி பற்றிய அறிவுண்டா அதற்கு எவ்வாறு உதவுவீர்கள்?
- நீங்கள் ஏற்கனவே விற்கும் பொருள், சேவையைப் பணமாக்கிவிட்டீர்களா?
ஒரு பொருளோ சேவையா விற்பவர் மேலேயுள்ளவற்றை முதல் ஐந்து நிமிடங்களில் பரிமாறினால் கம்பெனி இயக்குநர்கள் மேற்கொண்டு கேட்கத்தயாராகுவர். அவர் கேட்கத் தவறிவிட்டால் சந்திப்பு நேரம் குறைந்து போய் அடுத்த சந்திப்புக்கு வாய்ப்பும் கிடைக்காது. வியாபாரத்தில் நாழிகைகளே மரகத முத்துக்கள், அவற்றைத் தமது வர்த்தக மொழிதெரியாதவருடன் பேசுவதை வீண்பேச்சு என்று பெரும்பாலான வர்த்தகர் எண்ணிக்கொள்வர்.
வெற்றி வாய்ப்பளிக்கும் சூத்திரம்
- எதையும் நுண்ணறிவு, உட்பார்வையுடன் ஆரம்பிக்கவும் – தகவல் பரிமாறப்படும் நபருக்கு, உங்களுக்கு எவ்வளவு அவர்கள் நிலவரம், வியாபாரம் தெரியும் என்று தெரிவித்தல். உதாரணமாக வர்த்தகத்துறையில் அவரவர் பொருட்கள், சேவைகள் எவ்வாறு அவற்றின் தனித்துவமான விலைகளை விட்டகன்று பொது மளிகைச் சரக்குப் போன்று குறைந்த விலைகளில் விற்கப்படுகின்றன. இதைக் குறிப்பிட்டுக் கூறுதல்.
- பயனளிக்கும் சிந்தனையொன்று – அடுத்து நீங்கள் மேற்குறிப்பிட்ட வர்த்தகப் பிரச்சனைக்கு பயனளிக்குமுகமாக எவ்வாறு உங்கள் பொருள்,சேவை சார்பான சிந்தனை உதவும் என்பதைப் பரிமாறுதல்.
- உங்கள் சிந்தனையைப் பாதுகாத்தல் அல்லது ஆதரிக்கும் உச்சாந்துணைகளைத் தருதல் – நீங்கள் ஆதாரம் இன்றி மேலோட்டமாகப் பதிலளித்தால் போதாது. அடுத்து நீங்கள் முன் வைத்த சிந்தனையை மதிப்புடன் விவாதிக்க வேண்டும், மேலும் மற்றைய வாடிக்கையாளர், நிரூபிக்கக் கூடிய பயன் தந்த உதாரணங்களை வைத்துச் சாதகமான உச்சாந்துணைகளைத் தரவேண்டும். உங்கள் வாக்கு மரியாதை எவ்வளவு நீங்கள் விற்கும் நபருக்கு ஆதாயத்தையோ இல்லை சேமிப்பையோ தரப்போகிறது என்பதிலியே இருக்கும்.
- அடுத்த கட்டம் பற்றிய விசாரிப்பு – வெற்றிகரமான தகவல் பரிமாற்றத்தின் பின்னர் அடுத்த கட்ட நிலைப்பாட்டைச் சந்தர்ப்பம் சூழ்நிலைக்கென விட்டுவிடலாகாது. எனவே உரியகாலத்தில் அடுத்த கட்ட சந்திப்பை, அல்லது சாதகமாக்கூடயவர்களைத் தெரிந்து கொண்டு சந்திப்பை முடித்துக் கொள்ளல் அவசியம். இதன் காரணம் வர்த்தகத்தில் பல்வேறு காரணிகள் தொடர்ந்தும், வியாபார ஒப்பந்தங்களைப் பிற்போட தினமும் வழிவகுக்கும்.
வெற்றியைத் தரவுதவும் காரணிகள்
மேற்குறிப்பிடப்பட்ட அணுகுமுறைகள் தெரித்திருப்பினும் நடைமுறையில் கையாள்வது எல்லோருக்கும் தானாக வருவதில்லை. உண்மையில் பிறந்ததில் இருந்து நாம் யாவரும் எமது சிந்தனைகளைச் சகாபாடிகளுக்கும், குடும்பத்தாருக்கும், அயலவருக்கும் விற்றவாறு இருப்பினும், வேலை வர்த்தகரீதியில் செய்வது ஒரு சிலரே.
இதற்குக் காரணம் வளர்ந்தவர்கள், படித்தவர்கள் பல்வேறு வகையிலும் மானம் போய்விடுமோ, தோற்றுவிடுவோமோ என்று அச்சம், கலக்கம் பல்வேறு விதங்களிலும் தமக்குள்ளேயே தடைகளைப் போட்டுக் கொள்வதே.
செயல்முறை
- நீங்கள் பேசவிருக்கும் நபர், கம்பெனி, அவர் எதிர்நோக்கும் வர்த்தக விடயங்கள் ஆகியவை பற்றி ஆழமாக ஆராய்ந்து தெரிந்து கொள்ளவும்.
- சந்திக்கவிருக்கும் நபருக்குச் சலுகைதரும் உங்கள் பயன்தரும் சேவை, பொருள் சார்ந்த பதிலையும், அதை எவ்வாறு ஆதாரங்களுடன் நம்பகமாக விவாதிப்பீர்கள் என்பதையும் குறிப்பெடுத்து எழுதி வைத்துக் கொள்ளவும். முக்கியமாக ஆதாயம் அல்லது சேமிப்புப் பற்றித் தெளிவாகத் தெரிதல் மிக அவசியம்.
- வர்த்தகத் தாபனத்து உயரதிகாரியுடன் கருத்துப் பரிமாறவேண்டியிருந்தால் அவருக்குக் கீழ் உள்ளவர்கள், அவரின் வியாபார முயற்சிகள் பற்றித் தெரிந்தவர்களைத் தேடிப் பிடித்து உங்கள் தகவல் பரிமாற்று முயற்சி சரியானதா என்று முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.
இவையாவையும் சரியாகவேயுள்ளது எனில் நீங்கள் எதிர்நோக்கும் நபரின் வர்த்தக மொழியில் நீங்களும் தகவல் பரிமாறக்கூடியவர் என்ற மனத்திடத்துடன் உரியவரை அணுகி வெற்றி பெறலாம்.
தொகுப்பு – யோகி