ஒரு துளி கண்ணீர்
“அம்மா சீக்கிரம் கிளம்பணும். எனக்குப் பதினோரு மணிக்கு விசா interview”.
“ஏம்பா சேது உனக்கு இந்த விசா கிடைச்சா எங்கள விட்டு அமெரிக்கா போயிடுவியா?” அம்மா கண்களில் கண்ணீர் தளும்பக் கேட்டாள் .
சேது சட்டையை அயர்ன் செய்தபடி, “அம்மா திரும்பியும் அழாதே. நான் ரெண்டு வருஷம் தான் போகப் போறேன். எங்க ப்ராஜெக்ட் முடிஞ்சதும் திரும்பி வந்துடுவேன். ரெண்டு வருஷம் நாம சேர்க்கற பணம் புவனா கல்யாணத்துக்கு வெச்சுக்கலாம் “.
“கடவுளே, காசுக்காக என் பிள்ளையை நான் பிரிஞ்சு ரெண்டு வருஷம் இருக்கணுமே. உங்கப்பா மட்டும் இருந்திருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா “. அம்மா மீண்டும் அழத் துவங்க,
ஒரு பெரு மூச்சுடன் சேது, “அம்மா எப்பப்பாரு இந்த மெகா சீரியல் அம்மா மாதிரி அழாதே. ஒரு சிரிப்பு இல்ல. வீட்டில எப்போப்பாரு நை நை ன்னு அழுகை. நானே விசா கிடைக்கணும்னு டென்ஷன் ல இருக்கேன். நீ போகாதே போகாதேன்னு அழுறதக். கொஞ்சம் நிறுத்தறியா ?”.
அவனுடைய பதட்டத்தை வெளியில் கொட்டி எரிச்சல் காட்ட, கொஞ்சம் அமைதியானாள் அம்மா அம்மா அன்பு பெயரைப் போலவே மிக அன்பானவர். இரு பிள்ளைகள் சேது, புவனா இருவரையும் கண்ணைப் போலப் பார்த்துக் கொள்பவர்.
சேது 12 வகுப்பு படிக்கும் பொழுது ஒரு விபத்துக் காரணமாக அப்பா காலமாகி விட, அவர்கள் வீட்டு பொறுப்பை முழுக்க படிக்கும் பொழுதே எடுத்து கொண்டவன் சேது.
அப்பாவின் மறைவிற்குப் பின் காரைக்குடியில் இருந்து சென்னைக்குக் குடிமாறி வந்தார்கள். சேது படித்தபடியே சின்னச் சின்ன வேலை செய்து வீட்டை நிர்வகித்தான். அவர்கள் வீட்டில் அம்மா மற்றும் புவனா தவிர சேதுவின் வயதான அத்தையும், பாட்டியும் உண்டு. சரியான பருவத்தில் தந்தையின் வழிகாட்டலை இழந்ததால் இறுகி விட்டானோ , இல்லை இயல்பான ஆணின் குணமோ எப்பொழுதும் இந்த உணர்ச்சிப் பிழம்பாக அழுது கொண்டே இருப்பது அவனுக்குப் பிடிக்காத ஒன்று.
வீட்டில் நான்கு பெண்களுக்கு இடையில் ஒரே ஆண் மகனானதால் இன்னமும் அவர்கள் அழுகை தேவை இல்லாதது போலக் கோபம் அளிக்கும்.
“அண்ணா நீ கான்சுலேட் போற வழியில என்னக் காலேஜ் ல இறக்கி விடறியா”.
“ம்ம் சரி. ஆனா போற வழில என்னைத் தொண தொணன்னு கேள்வி கேட்கக் கூடாது”.
“சரி. விசா கிடைச்சா எப்போ அண்ணா கிளம்புவே”.
“இன்னும் ரெண்டு வாரத்துல”. பையில் எல்லாம் இருக்கா என்று சரி பார்த்தபடி பதிலுரைத்தான் சேது.
“ரெண்டே வாரத்துலயா?. அண்ணா ரெண்டு வருஷம் எப்படி அண்ணா தனியா இருப்பே ? என் கல்யாணத்துக்காக, அப்படி இப்படினு சொல்லிட்டு நீ போக வேண்டாம். நான் இன்னும் மேல் படிப்பு படிச்சு அப்புறம் வேலைக்குப் போய், சம்பாதிக்கப் போறேன்”. நீ அதனால என்னைக் காரணம் சொல்லி அமெரிக்கா போக வேண்டாம். இங்கேயே இரு”.
பத்து வருடம் முன்பு அப்பா போன பொழுது, பத்து வயதுப் பெண் புவனா. மலங்க மலங்க விழித்து, இவனுடன் ஒட்டிக் கொண்டாள். ஏழு வருட வயது வித்தியாசம் அதனால் இவனை ஒரு தகப்பன் ஸ்தானம் வைத்தே வளர்ந்தாள் . அவள் ஏதோ பெரிய மனுஷி போல் பேசியது சேதுவிற்கு வேடிக்கையாக இருந்தது
“ம் சரி நீ நல்லா படி”.
“அண்ணா ” அழைக்கும் பொழுதே மீண்டும் குரல் கம்மியதை உணர்ந்த சேது,
“இப்போ நீயா , காலைல பாட்டி ,அப்புறம் அம்மா , அப்புறம் நீ , இப்படி மாத்தி, மாத்தி மூக்கைச் சிந்தரதே உங்க வேலையா? முதல்ல அழுகையை நிறுத்து. இதுவே வெறுப்பா இருக்கு”
இறுகிப் போன மனதுடன் சேது ,”என்னால இந்த அழுகையை மட்டும் சகிக்க முடியல, சரி கிளம்பு. நேரம் ஆகுது” என்றான்.
.
***
விசா கிடைத்து, ரெண்டு வாரம் கழித்துக் கிளம்பும் நேரம் வரும் பொழுது,
“யாரும் என்னோட ஏர்போர்ட் வர வேண்டாம். அங்க வந்து அழுது மானத்த வாங்குவீங்க. ரெண்டு வருஷம் தான் சீக்கிரமா ஓடி போயிடும். அம்மா மாமா கிட்ட சொல்லி இருக்கேன் அடிக்கடி வந்து பாத்துப்பார். நீங்களும் உடம்பப் பாத்துக்கோங்க. பாட்டி, அத்தையை நல்லாப் பாத்துக்கோங்க . புவனா நல்லாப் படி. இங்க நடக்கறத அப்பப்ப chat பண்ணிச் சொல்லு”
சொல்லி விட்டு டாக்ஸ்யில் ஏறும் பொழுது சேதுவுக்குக் கொஞ்சம் வருத்தம் வந்தது. நிமிர்ந்து அவர்களைப் பார்த்த பொழுது, அவர்களின் அழுகை முகம் ஏனோ ஆத்திரம் அளித்தது. மனதிற்குள் எல்லோரையும் திட்டினான்.
“எல்லாரும் என்ன பச்சைக் குழந்தையா? எதுக்கு எடுத்தாலும் அழுகை. கேட்டா இது தான் பாசமாம்.”
வீட்டின் ஒரு தூண் போல் அனைவரும் அவனைச் சார்ந்து இருப்பது அவனுக்குத் தெரிந்தது. அதனால் தனக்கு ஒரு விதமான சுதந்திரம் போனதாக உணர்ந்தான் சேது . எப்பொழுதும் தன்னிடம் புலம்பும் அம்மா, எதிர்பார்க்கும் புவனா, தன்னை இரக்கத்துடன் பார்க்கும் பாட்டி , அத்தை. இது எல்லாம் சலிப்பாக இருந்தது.
கொஞ்சகாலம் தனியாக இருப்பது நல்லது என்று தான் அமெரிக்கா ப்ராஜெக்ட் கிடைத்ததும் அதை ஏற்றுக் கொண்டான். இந்த இடைவெளி ஏதோ சுதந்திரம் கொடுப்பதாகத் தோன்றியது. குற்ற உணர்ச்சி வரும் பொழுதெல்லாம், “பொறுப்பிலிருந்து தப்பிக்க நினைக்கவில்லை, உணர்ச்சிப் பிழம்பாகச் சுற்றும் நான்கு பெண்கள் கொண்ட மகளிர் விடுதி போன்ற வீட்டிலிருந்து ஒரு இடைவெளி அவ்வளவு தான் ” என்று மனதிற்கு சமாதானம் சொல்லிக் கொண்டான்.
***
அமெரிக்க மண் தொட்ட அடுத்த நொடியிலுருந்து அவனுக்கு ஏதோ பெரிய நிறைவு ஏற்பட்டது. பார்க்கின்ற அனைவரும் மிகவும் புன்னகையுடன் பேசுவது, சிரித்த முகத்துடன் நலம் விசாரிப்பது என்று எல்லாமே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. வாரம் ஒரு முறை மட்டுமே குடும்பத்துடன் பேசினான். ஒவ்வொரு முறை பேசும் பொழுது அவர்கள் குரலில் இவனைக் குறித்த விசாரணை,அழுகையாக வெளியாகும் பொழுது போர் அடித்தது.
வேலையைக் கருத்துடன் செய்ததால், அலுவலகத்தில் நல்ல பெயர் சீக்கிரம் வாங்கினான். மொத்தத்தில் அவனுக்கு அமெரிக்கா ரொம்பப் பிடித்து, பழகிப் போனது.
இங்குள்ள கடைகளில் இருக்கும் பெண்களும் ,மனிதர்களும் இப்படி அழுவதில்லையே. ஒரு கடையில் பில் போடும் பெண்மணி கூட சிரித்த முகத்தில் நலம் விசாரிக்கும் பழக்கம் சேதுவிற்குப் பிடித்தது. அதையே நம்மூர் கடைகளில் பார்த்தால் அவர்கள் உழைத்துச் சலித்து அழுவது போலவே இருக்கும். சேதுவின் மனம் பல இடங்களில் இதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டது.
வந்து ஒரு வருடம் முடிந்தும் போனது. இன்னும் ஒரு வருடம் கழித்துத் திரும்பிப் போகாமல், இங்கேயே வேறு வேலை மாற்றிக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டு இருந்தான். அவர்களுக்குப் பணம் அனுப்பி விட்டு, ஒரு ஐந்து வருடம் கழித்து அப்புறம் போகலாம் அவர்கள் யாரிடமும் சொல்லாமல் செய்வது நல்லது. சொன்னால் மீண்டும் அழுகை தான்.என்று தனக்குத் தானே முடிவு செய்தான்.
*****
அன்று ஒரு நண்பன் தன் வீட்டிற்கு மதிய உணவிற்கு வரும் படி அழைத்திருந்தான். சேது கூட வேலை செய்யும் ஊழியர் மாறன். அவ்வப்பொழுது வீட்டு உணவிற்கு அழைப்பது உண்டு.
உள்ளே நுழைந்ததும் மாறன்,”வா சேது, உட்காரு “.
“வேலை எப்படி இருக்கு சேது”.
“போகுது மாறன். அடுத்த ப்ராஜெக்ட் மாறியாச்சு. இப்பொழுது தொடக்க வேலை தான் பேசறோம்.”
“ஊருக்கு லீவ் எடுத்துப் போக போறீங்களா?. இப்போ எல்லாம் ரொம்ப டல்லா தெரியறீங்களே “.
மாறனின் ஐந்து வயது மகன் அருகில் வந்து விளையாடத் தொடங்க. அவனைப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான் சேது.
“என்ன சேது இப்போ எல்லாம் ரொம்ப டல்லாத் தெரியற, வீடு ஞாபகம் வந்திடுச்சா “
மாறன் ஒருமையில் அழைத்துக் கரிசனமாக மறுபடியும் அழுத்திக் கேட்கவும். சேதுவிற்கு ஏதோ மனதிற்குள் நகர்ந்தது.
“இல்ல இல்ல, ரெண்டு வருஷம்னு வந்தது. அடுத்த ப்ராஜெக்ட் கிடைத்தும் விட்டது. எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு அமெரிக்கா”.
“அப்புறம் என்ன?”
“வீட்டிற்குப் பேசினா எப்போப்பாரு ஒரே உணர்ச்சிப் பிளம்பா இருக்காங்க. அழுதுகிட்டே இருப்பாங்க. எனக்குக் கோபம் வரும் ஆனா வெறுமையா உணர்ந்தது இல்லை. ஆனா இங்க எல்லாம் ரொம்ப சிரிச்ச முகமா இருக்காங்க ஆனாலும் வெறுமை உணர்வது ஏன் மாறன்?.
ஒரு மெல்லிய மௌனத்திற்குப் பிறகு மாறன் மிக நிதானமாகப் பேசினார்.
“இங்க இருக்கறவங்க எப்போதும் சிரிச்ச மாதிரிப் பேசறதும்,நம்ம கிட்ட ரொம்ப நைஸா நடந்துக்கறதும் நம்ம கிட்ட உண்மையான அன்புன்னு சொல்ல முடியாது சேது. டாக்டர் கிட்ட போனா, நம்ம சூ (sue ) பண்ணிடுவோம்னு ஒரு பயத்தில செய்வாங்களே தவிர, அக்கறையில செய்யறவங்க ரொம்பக் குறைவு.. வெளியில, கடையில, இப்படி எல்லா இடத்திலையும் ஒரு செயற்கையான சிரிப்புத்தான் பார்ப்ப சேது. அந்த செயற்கைல உண்மை இருக்காது. அதான் உனக்கு இங்க ஒரு விதமான வெறுமை தெரியுது. வந்த புதிசில “அட எவ்ளோ மரியாதையா இருக்காங்கன்னு தோணும். ஆனா அப்புறமா நமக்கு அவங்களோட செயற்கையான சிரிப்பு ரசிக்காது. உண்மையான அன்புக்குப் பழகின உன் மனசுக்கு இந்தப் போலியை அடையாளம் தெரிஞ்சுக்கறது சுலபம். அதான் உனக்கு அதை உணர்த்துது.
மாறன் பேசப் பேச ஏதோ புரிந்தது போல இருந்தது.
வீடு திரும்பி வந்த பின், அம்மாவிற்கு ஃபோன் செய்ய எடுத்த பொழுது, சென்னை நம்பர் முழுக்க எதுவுமே கிடைக்காமல் இருக்க, நியூஸ் முழுவதும் எல்லா இடத்திலும் மழை வெள்ளம் என்பது பற்றியதே. தகவல்கள் படித்து மனம் துடித்துப் பதறியது. நான்கு பெண்கள் தனியாக என்ன செய்கிறார்களோ என்று பதை பதைத்துப் போனான்.
எப்பொழுதாவது பேசினால் போதும், பணம் கொடுத்தால் போதும் நம் கடமை தவறவில்லை என்று நினைத்ததன் தவறு மனதைக் கூனிக் குறுக்கியது.
எப்படியோ மாமாவிடம் பேசி அவர்களை வீட்டில் சென்று பார்க்கச் சொல்லி, அவர்கள் இருக்கும் இடத்தில் நிலைமை பயப்படும் படி இல்லை என்ற ஒரு தகவலை அறிந்து கொண்டான். இருந்தாலும் குற்ற உணர்ச்சி மனதை விட்டு அகலவில்லை. அவர்கள் பாசமான குரலைக் கேட்கும் ஏக்கம் அதிகமானது.
ஐந்து நாட்கள், பல யுகமாகத் தோன்றியது.. ஒரு வழியாக தொலை பேசி அழைப்புக் கிடைத்து பேசிய பொழுது, இந்த முறை கண்ணீர் முதலில் எட்டிப் பார்த்தது சேதுவிற்குத்தான். பல போலியான சிரிப்புகளில் கிடைத்த வெறுமையை விட இந்த உண்மை எவ்வளவு உயர்ந்தது என்று காட்டியது
அந்த ஒரு துளி கண்ணீர்”.
– லக்ஷ்மி சுப்பு.
Excellent Lakshmi. It is the way I felt personally 🙁
Priya C K
Excellent story. Every one can relate the story and I liked how the writer bring our day to day experience in an excellent way. Hats off . Great job