\n"; } ?>
ad banner
Top Ad

ஈழத்துச் சித்தர்கள்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 27, 2015 0 Comments

yogarswami_300x392சித்தில் வல்லவர் சித்தர் என்பது பண்டைய தமிழ் மக்களின் பாங்கான வாய்மொழி. சித்து என்பதற்கு அறிவு என்றும் ஒருபொருள் உண்டு. எனவே சித்தர்கள் என்பவர்கள் அறிவுடையார், புத்திஜீவிகள் (Intellects) என்றும் தற்காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆயினும் ஈழத்திலும், தமிகத்திலும் சித்தர்கள் பலதர அறிவு சார்ந்த விடயங்களிலும், யோகமார்க்கத்திலும் வல்லவராயிருந்து வந்தனர்.

பலதுறைகளிலும் கவனம் செலுத்திய தமிழ்ச் சித்தர்கள் வைத்தியத் துறையிலும் ஆராய்ச்சிகளையும்  மேற்கொண்டனர். சித்தர்கள் சத்திர சிகிச்சை முறை, மூலிகைத் தயாரிப்பு, தாவரவியல் என பலதரப்பட்ட விடயங்களிலும் தமது ஆற்றலைப் பல்லாயிரம் ஆண்டுகளாகக் காட்டியுள்ளனர்.

குறிப்பாக ஈழத்தில் சித்தவைத்திய முறையானது ஆங்கிலேய வைத்தியங்களுக்குச் சமமாக அன்றைக்காலம் வரை கடைபிடித்து வரப்படுள்ளது.  மேலும் சித்தர்கள் சாதிமதங்கள், ஆசாரக் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு பண்டைய காலத்தில் புத்திஜிவி வர்க்கமாகவே இருந்து வந்தனர்.

சித்தர்களின் குறிக்கோள் உடலைத் திடமாக வைத்து நீண்டகாலம் வாழ்வது எப்படி என்று ஆராய்வதும் அதனை அனைவருக்கும் பகிர்வதேயாகும். இவைபற்றிய பல்வேறு குறிப்புக்களையும் பாமர மக்களுக்குத் தந்தனர். இவற்றையே

ஈழத்தமிழர் பிரதானமாக சித்தவைத்தியம் என்பர்.

ஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கடயிற் சுவாமி, ஆனைக்குட்டிச் சுவாமி, பரமகுருசுவாமி எனும் முன்று சித்தர்கள் மக்களிடையே கலந்தனர். இவர்கள் ஏறத்தாழ நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்தவர்கள்.

கடையிற் சுவாமிகள் – இந்த சித்தர் தென்னிந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் எனக் கருதப்படுகிறது. இவரது பேச்சு மொழி தெலுங்கு அல்லது கன்னடமாக இருந்திருக்கலாம், இவரது தோற்றத்தைக் கண்டாலே கடைவைத்திருப்பவர்கள் நல்ல சகுனமாக எண்ணி அவருக்குச் சிறு காணிக்கைகளைக் கொடுத்து மதித்து வாழ்ந்துள்ளனர். ஆயினும் அவர் யாழ்ப்பாண நகரப் பெரிய கடை எனும் சந்தைப் பகுதியில் வாழ்ந்ததால் இவர் கடையிற் சுவாமி என அழைக்கப்பட்டார். கடையிற் சுவாமிகள் பல சித்துக்களையும் மக்களுக்காகச் செய்தார். இந்த சித்தர் கைக்கமக்கட்டில் கறுப்புக் குடையும், கறுப்பு ஆடையும் அணிந்து உலவிவந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சித்தர் கடையிற் சுவாமிகள் இறைபதம் அடைந்த சமாதி யாழ்ப்பாண வண்ணை நீராவியடியில் காணப்படுகிறது.

கடையிற் சுவாமிகளுக்குச் சீடராக குழந்தைவேலுச்சுவாமிகள், வைரமுத்துச் செட்டியார், சின்னச் சுவாமி, நன்னையார், சடைவரதர், செல்லப்பாச் சுவாமி,சார்ஷன் சுவாமி எனப் பலரும் இருந்தனர்.

சார்ஷன் சுவாமிகள் –  யாழ்ப்பாணம் கந்தர்மடம் வேதாந்த மடத்தைத் தாபித்தார்.

வைரமுத்துச் செட்டியார் – சித்தர் சின்னச் சுவாமிகள் சமாதியையும், நல்லூர் நாவலர் வீதியில் உள்ள அன்ன சத்திரம் உள்ள காணியையும் தானமாக ஈழமக்களுக்குத் தந்தார்.

நன்னையார் சித்தர் – இவர் யாழ்ப்பாணக்கடல் மண்டைதீவைச் சேர்ந்தவர்.

குழந்தை வேலுச்சுவாமிகள் – தமது உயர்பதவிகளை அரசிலிருந்து துறந்து சமயப் பணியில் தம்மிறுதி வாழ்வைச் செலவழித்து வலிகாமம் வடக்கு கீரமலையில் சமாதியானர்.

சடைவரதர் – இந்தச் சித்தரின் சீடர்கள் யாழ் குடாநாட்டின் வடக்கில் ஏழாலையிலும், யாழ்ப்பாணக் குடாவாட்டை எஞ்சிய ஈழநாட்டு நிலப்பரப்புடன் தொடக்கம் மிருசுவில் கிராமத்தின் உசன் பகுதியிலும் அன்னதான மடங்களை உருவாக்கினர்.

ஆனைக்குட்டிச் சுவாமிகள் – ஈழத்தில் ஆங்கிலேயத் தலைநகராக்கப்பட்ட கொழும்பில் சஞ்சரித்த சித்தர் இவர். இவரை 19ம் நூற்றாண்டுத் தமிழ்த்தலைவர்கள் சேர் பொன் அருணாசலம், மற்றும் கொழும்பு வாழ் தமிழ் வர்த்தகர் சமூகமும் மிகவும் போற்றிக் காத்து வந்தனர். ஆனைக்குட்டிச் சுவாமிகள் சமாதி கொழும்பு முகத்துவாரத்தில் உள்ளது.

ஆனைக்குட்டிச் சுவாமிகளின் ஒரேயோரு சீடராக ஒரு பெண்மணியை மாத்திரம் தான் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மொட்டாச்சி அம்மையார் என்பவரே அவர்.  ஈழநாட்டின் வடமேற்குப் பாகமாகிய மன்னர், மாந்தை பாலாவிக்கரையோர திருக்கேதிச்சரத்தில் குடில் அமைந்து வாழ்ந்துள்ளார்.

குமரகுரு சுவாமிகள் – இந்தச் சித்தரும் தென்னிந்தியவைத் தாயகம் ஆகக் கொண்டவர். இவர் பிறப்பிடம் தமிழக இராமநாதபுரம் கிடாரிப்பட்டியென்பர் ஒருசாரார். மற்றோர் குமரகுரு சுவாமிகள் ஈழத்து மலைநாட்டில் தோட்டத் தொழிலாள் மத்தியில் உதித்தார் என்பர்.

எனினும் இந்தச் சித்தர் யாழ்ப்பாண மருதனர் மடம், கீரிமலை,வண்ணை போன்ற வடக்குப் பிரதேசங்களிலும், ஆங்கிலேய ஆளுனர் மையமாகிய கொழும்பிலும், ஆதி ஈழத்தமிழர் தோன்றிடங்களில் ஒன்றுமாகிய ஈழநாட்டின் மதிய மலையக மாத்தளையிலும் உலவியுள்ளார். இந்தச் சித்தற்கென யாழ்ப் பெருந்தமிழர் கீரிமலையில் மடம் உருவாக்கினாலும், அவர் சமாதி மாத்தளையிலேயே அமைந்தது.

யோகர் சுவாமிகள் – இவர் ஈழத்துச் செல்லப்பாச் சுவாமிகள் எனும் சித்தரின் சீடர். யோகர் சுவாமிகள் பிரதானமாகச் சித்தர் மரபுகளையும், வேதாகம மரபுகளையும் ஒருமித்து உபதேசித்தார். மேலும் இவர் ஈழத்தின் சைவ சமயப் பரிபாலனத்தின் மூலம் முக்கிய காலகட்டங்களில் பொதுமக்களுக்கும், பக்திமான்களுக்கும் அறிவு ஞானத்தில் தெளிவு தந்தார்.

ஈழநாட்டைப் பொறுத்தளவில் சித்தர்கள் பனைமரத்து அடியில் தோன்றும் வடலிபோன்று காலகாலமாய்த் தோன்றிச் சமுதாயத்திற்கு நன்மைகள் பல செய்துள்ளனர். இதுவும் ஈழநாட்டின் பெருமைகள் ஒன்று.

  • யோகி

உச்சாந்துணை

  1. ஈழநாட்டின் சித்தர் மரபு – கட்டுரை, ச. அம்பிகைபாகன்
  2. நற்சிந்தனை/Natchinthani – ISBN 955-97247-1-1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad