ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-18
இன உணர்வு
(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-17)
இன உணர்வு என்பது எல்லா இனத்தினர்க்கும் உரித்தானதொன்று. தத்தம் இனம் சார்ந்து சிந்திக்கப் பழகிக் கொண்டவர்கள் மனிதர்கள் மட்டுமல்லர். காகங்கள் கூடத் தம்மினத்தில் ஒன்று இறப்பினும் கூடி அழும். சிறிதளவு உணவு கிடைப்பினும் கூடி உண்ணும். இத்தகைய இனமான உணர்வு தமிழரிடத்தில் சொற்ப அளவில் இருப்பதை எண்ணிப் பெருமை கொள்வோம்.
“பட்டினிப் பிசாசு தின்னும்
ஓர் ஆப்பிரிக்கக் குழந்தைக்காய் வழியும்
என் கண்ணீரை
என் இனத்துக் குழந்தைக்காய் மட்டும்
கடன் கேட்கவும்
எனது உணர்ச்சிகளை அழுது வடிய மட்டும்
உத்தரவிடவும்
…………………………………….
நான் தமிழச்சியின் வயிற்றில் பிறந்தேனா இல்லையா என்பதை
உன் காமாலைக் கூடத்துள் பரீட்சித்துக் கொண்டிரு.
நானோ
தமிழ் என்றால் என் உடல் பரவும் உணர்வில்
அதன் எளிமையில்
உறவு கொண்டு கிடக்கிறேன்.”1
தமிழ், தமிழச்சி என்று இன, மொழி உணர்வின்பால் பற்றுக் கொண்டலையும் ஒரு சராசரி மனிதனின் உணர்வுகள் எளிமையான வரிகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
உயிர் பிழைத்தல் என்ற ஒரே நோக்கத்துக்காக ஊரை விட்டு, நாட்டை விட்டு இலட்சக் கணக்கான மக்கள் பிரிந்தனர்.
“நாளைய இருப்புப் பற்றிய
நம்பிக்கையற்ற நடமாடும்
உயிர்ப் பிணங்கள் நாம்
உயிர் தப்ப வேண்டுமானால்
ஊரை விட்டு ஓடுவோம்
ஆனால் விலை கொடுத்து
வாங்கியவனுடன் மட்டும்
ஓட நான் தயாரில்லை.”2
இங்கு கவிஞர் இன உணர்வின் உன்னதமான உச்சக்கட்ட தன்மையினைச் சொன்னார். இன உணர்வு என்பது இரத்தத்தில் ஊறியது. அதனை வன்முறையால் அழிக்கவும் முடியாது பணம் கொடுத்து வாங்கவும் முடியாது என்பதை அழகான கவிதை வரிகள் கூறிச் சென்றன.
அடிக்குறிப்புகள்
- திருநாவுக்கரசு.ப, (தொ.ஆ), புலம்பெயர்ந்தோர் கவிதைகள்,
பக்.56
- மேலது, பக்.167
-தியா-