அந்த நாள் ஞாபகம் நெஞ்சினில் வந்ததே……….
சமீபத்தில் சென்னையில் அண்ணா சாலையில் பிரயாணிக்கும்
சந்தர்ப்பம் கிடைத்தது. சென்னையிலேயே மிகவும் உயரமான கட்டிடம் என்ற பெருமையைப் பல
வருடங்களாகத் தக்கவைத்துக் கொண்டிருந்த எல்.ஐ.சி கட்டிடம் இருந்த திசையிலிருந்து
தியாகராய நகர் நோக்கிப் பயணம். சென்னையின் கம்பீரமாகப் பல திரைப்படங்களில்
காட்டப்படும் அண்ணா மேம்பாலத்தில் ஏறுகையில் தற்செயலாகக் கண்கள் காரின் கண்ணாடி
ஜன்னல்களுக்கூடாக வெளியே பார்த்தன.
அமெரிக்கன் கான்சுலேட்… அதன் காம்பவுண்ட் சுவர். அதை ஒட்டிய பிளாட்ஃபார்ம்…. கொளுத்தும் வெயில்.. நூற்றுக்கணக்கான இளைஞர்கள், இளைஞிகள்… தங்களின் வாழ்வே அந்தக் காம்பவுண்ட் சுவரின் மறுபுறம்தான் இருக்கிறது என்று பரிபூர்ணமான நம்பிக்கையுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்க்கையில் எனது பழைய கால நினைவுகள் சேரன் படத்தில் வருவதுபோல் கருப்பு வெள்ளையாய் உருள ஆரம்பித்திருந்தது.
இன்றும் பசுமையான நினைவு. அண்ணனின்
கல்யாணத்திற்காகவும் எனது அமெரிக்கப் பயணத் தேவைகளுக்காகவுமென மல்டி பர்பஸாகத்
தைத்த முதல் கோட். ”டபுள் ப்ரெஸ்டா, சிங்கிள் பிரஸ்டா”, கேட்ட ராதாகிருஷ்ணன் சாலையின் பிரபல டெய்லர் சையத் பாக்கரிடம் என்ன விடை சொல்வது எனத் தெரியாமல் விழித்த சம்பவம் இன்னும் நினைவிலிருக்கிறது. ”முன்னர் பின்னர் செத்திருந்தால் தானே சுடுகாடு தெரியும்” என்ற நகைச்சுவையான பழமொழி ஒன்று எங்கள் ஊரில் பிரபலம். ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து கோட் சூட் தைத்துக் கொள்வது சாதாரணமாக எல்லாரும் செய்யும் செயலன்று. பொதுவாக கல்யாண மாப்பிள்ளைக்கு அவரின் ரிசப்ஷனுக்காக மட்டுமே தைப்பார்கள். ஒருசில விதி விலக்குகள் நம்மைப் போல. அந்தப் பச்சை நிற டபுள் பிரஸ்ட் கோட் போட்டுக் கொண்டு, அந்த வேகாத வெயிலில் ஒதுங்குவதற்காக நிழல் என்று கூட இல்லாத அந்த பிளாட்ஃபார்மில் சில மணி நேரங்கள் நின்று கொண்டிருந்த நினைப்பு வர, சற்றுச் சிரிப்பும் வந்தது. (அந்தக் கோட் இன்னும் எனது க்ளாஸட்டில்.. ஒரு கை கூடப் புக இயலாத நிலையில்.) கோட்டுக்குப் பின்னே பேண்ட் கழன்று விழுந்து விடாமலிருக்கப் போட்டிருந்த கருப்பு பெல்ட் கிட்டத்தட்ட இடுப்பை இரண்டு சுற்றுச் சுற்றுவதற்குப் போதுமானதாக இருந்தது. அதன் கடைசி முனை முழுவதுமாக முதுகுப் புறம் இருந்த நாள் நினைவுக்கு வர, காரிலேயே அமர்ந்து கொண்டு இன்றைய கருப்பு பெல்ட்டைத் தடவிப்பார்க்கிறேன். ஒரு சுற்றை முடித்து அரை இன்ச் மட்டுமே அதிகமாயிருந்தது அது, ஊருக்குப் போனப்புறம் ”அடுத்த சைஸ்ல ஒரு பெல்ட் வாங்கணும்.” உள் மனசின் பாடல்….
கையில் தூக்கிக் கொண்டு சென்ற அந்த ரெட் ஃபோல்டர்
இன்னும் நினைவின் அடித்தளத்தில் அமர்ந்து போக மாட்டேன் என்று அடம் பிடித்துக்
கொண்டிருக்கிறது. அதற்குள் ஒவ்வொரு சர்ட்டிஃபிகேட்டையும் ஒரு சரியான வரிசையில்
வைத்து, இண்டர்வியூ ஆஃபிஸர் எந்த வரிசையில் கேட்பாரோ, உடனே டாண் டாண் என எடுத்துக் கொடுக்க வேண்டுமெனத் தயார் செய்து கொண்டது நினைவுக்கு வருகிறது. அன்று இந்தியாவின் மத்திய அரசு காங்கிரஸா, வேறு ஏதேனும் கூட்டணிக் கட்சிகளா என்று சரியாக நினைவிலில்லை, ஆனால் அமெரிக்காவில் பில் கிளிண்டனின் தலைமையிலான ஜனநாயகக் கட்சிதான் ஆட்சியிலிருந்தது என்பது பசுமரத்தாணி போல நினைவிலிருக்கிறது. காரணம் அத்தனை முறை ராப்பகலாக மனப்பாடம் செய்ததுதான் – ஒருவேளை அந்தக் கேள்வி கேட்டு பதில் தெரியாமல் போய் விசா இல்லையென்று சொல்லி விடுவார்களோ என்ற பயம்.
அந்த கான்சுலேட் ஆஃபிஸர் ஒரு பெண்மணி. என்னை என்ன
கேள்வி கேட்டார் என்பது இன்று வரை எனக்கு விளங்கிக் கொள்ள முடியாத ஒன்று.
வாழ்க்கையில் முதல் முறையாக ஆங்கிலத்தை வேறு ஏதோ ஒரு வழியில், முறையில், உச்சரிப்பில், பேசிய ஒரு நபரைச் சந்திக்கிறேன். கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை படித்து முடித்த எனக்கு, சென்னை மாநகரத்தில் பொறியியல் கல்லூரியில் படித்திருந்தாலும், ஆங்கிலம் என்றால் கொஞ்சம் அலர்ஜி பொதுவாகவே. அதிலும் வெள்ளைத் தோலுடன், ஆழமான மேக்கப்புடன் அசத்தலான உச்சரிப்புடன் ஏதோ கேள்வி கேட்ட அந்தப் பெண்மணியுடன் பேசுகையில் மன்னன் படத்தில் அழகுப் பதுமை விஜயசாந்தியைப் பார்த்து “எஸ்…. எஸ்….” என்று சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் வராத ரஜினி போல் பதில் சொல்லத்தான் முடிந்தது. அந்த நேர்முகத்தேர்வுக்கு சில தினங்களுக்கு முன்னர்தான் அந்தத் திரைப்படம் பார்த்திருந்தேன் – அந்தப் படத்தில் இது போன்ற ஒரு காட்சி இருந்ததா என நினைவில்லை, ஆனால் பொதுவாக ரஜினி படத்தில் இது போன்ற அப்பாவித்தனம் தவழும் காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அது சினிமா, அதனால் ரஜினிக்கு அழகுப் பதுமை மனைவியாவாள். நிஜ வாழ்க்கையில் அந்த இரண்டு நிமிடங்களுக்கப்புறம் அந்த வெண்ணிற மேனகையை நான் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை – ஆனால் அந்த லிப்ஸ்டிக் மட்டும் இன்றும் நினைவிலிருந்து அகலவில்லை, முதல் முறை அவ்வளவு அடர்த்தியான லிப்ஸ்டிக் அணிந்த பெண்ணொருத்தியை அவ்வளவு க்ளோஸ்-அப்பில் பார்த்த மயக்கம்.
மத்தியானம் வந்து ரிசல்ட் தெரிந்து கொள்ளச்
சொன்னார்கள். உள்ளே இருக்கையில் கிட்டத்தட்ட ஐந்து வெள்ளைக்காரர்களைச் சந்தித்து
என்னென்னவோ ஃபார்மாலிடிஸ் முடிக்க வேண்டியிருந்தது. நான்கு பேர் பெண்கள், ஒரே ஒருவர் ஆண். எப்படி ஒரு மனிதனுக்குத் தோல் இவ்வளவு வெள்ளையாக இருக்க முடியும், அதிர்ச்சியிலிருந்து நம் மனம் கடைசி வரை வெளி வரவேயில்லை. என் பள்ளியில் உடன் படிக்கும் மாணவர்களில் சிவப்பாக இருப்பவன் எப்பொழுதும் சொங்கியே, சாமர்த்தியமற்றவனாக, பயப்படுபவனாக, படிப்புத் தவிர வேறு எதிலும் திறமையில்லாதவனாகத் தான் இருப்பான் என்பது எழுதப்படாத சட்டம், நம்பிக்கை. நல்ல வேளை நான் கருப்பாய் இருந்ததால் அந்த “சிவத்த கம்போண்டர்” கோஷ்டியில் சேர்க்கப் பட்டிருக்கவில்லை.
இன்று போல் திரும்பிய பக்கமெல்லாம் ஷாப்பிங் மாலும், அதில் அடுத்த டேபிளில் அமர்ந்து சப்வே சாண்ட்விச் சாப்பிடும் அமெரிக்கனும் சற்றும் காணக் கிடைக்காத காலம் அது. கான்சுலேட்டில் மட்டும்தான் வெள்ளைத் தோல்காரர்கள் வாழ்ந்திருப்பர் என்று நினைக்கிறேன். அப்போது வெளியில் வந்ததிலிருந்து, திரும்பவும் மதியம் உள்ளே நுழைந்து ரிசல்ட் தெரியும் வரையிலும் ஒரே டென்ஷன். நமக்குச் சத்தியமாக விசா கொடுக்க மாட்டார்கள் என்றுதான் நினைத்தேன் – நமக்குத்தான் அந்த ஐந்து பேர் பேசியதில் ஒரு வார்த்தை கூட விளங்கவில்லையே. எந்தப் பதிலும் சரியாகச் சொல்லாத ஒருவனுக்கு எப்படி விசா அப்ரூவ் பண்ணுவார்கள். கிடைக்குமா, கிடைக்காதா என்பதல்ல இப்போது குழப்பம். கிடைக்கவில்லை என்பதை எப்படியெல்லாம் அண்ணனிடம் விளக்குவது என்பதில்தான் மனம் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இதுபோன்ற டென்ஷனில் நகத்தைக் கடித்துக் கொண்டு, அந்த வேகாத வெயிலில் பச்சை டபிள் பிரஸ்டெட் கோட் அணிந்து கொண்டு, வியர்க்க விறுவிறுக்க பிளாட்ஃபார்மில் நின்று காத்துக் கொண்டிருந்த என்னை ஒரு செக்யூரிடி, பெயரைக் கொலைசெய்தபடி அழைத்தார். அப்பொழுதுதான் போய்விட்டு வந்திருந்தாலும் (ரோடில்) பயத்தால் அடிவயிற்றை முட்டியது சிறுநீர். உள்ளே அழைத்தார்கள். ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி மறுபடியும். தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள். இரண்டு மூன்று முறை அவள் விளக்கியதற்கப்புறம் அவளும் என்னைக் காலையில் சந்தித்த ஐந்து மனிதர்களில் ஒருவர் என்று புரிந்தது. “எல்லா வெள்ளக்காரய்ங்களும் பாக்குறதுக்கு ஒரே மாரியாத்தான் இருக்காய்ங்க” – நம் மைண்ட் வாய்ஸ்.
அவள் சொல்வது புரியாவிட்டாலும், அவளின் முக பாவத்திலிருந்து நல்ல செய்தி தான் சொல்கிறாள் என்று புரிந்தது. எனது இந்திய பாஸ்போர்ட்டை எடுத்து நீட்டினாள். அவசர அவசரமாய்ப் பிரித்துப் பார்த்த நமக்கு அளப்பறிய சந்தோஷம். ஜன்ம சாபல்யத்தை அன்றே அடைந்ததாக ஒரு திருப்தி. அதே சமயத்தில், ”இந்த அஞ்சு பேரு பேசுரதே நமக்கு ஒரு எளவும் புரியலேயே, அங்க எப்படிச் சமாளிக்கிறது” என்று அந்த லாஜிக்கல் பர்ஸன் இன் மி கேள்வி கேட்க ஆரம்பித்தான். அவனைப் புறந்தள்ளிவிட்டு, அருகிலிருந்த ஃபோன் பூத் ஓடிச் சென்று வீட்டிற்குத் தகவல் சொல்லத் தயாரானேன். அன்றிலிருந்து கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஓடிவிட்டன.
அன்றைய என் பதைபதைப்பை, பயத்தை, அறியாமையை இன்றைய இளைஞர்களில் பார்க்க முடிகிறதா என்று அவ்வப்பொழுது நினைத்துக் கொள்வதுண்டு. அந்த வரிசையில் நிற்கும் பொழுதும் பெரும்பாலானவர்களிடம் ஒரு பயம் இருப்பதாகத் தெரியவில்லை. அது சரி, அமெரிக்க கான்சுலேட் விசா கொடுக்கவில்லையெனில் பக்கத்தில் தான் இருக்கிறது பிரிட்டிஷ் கான்சுலேட், இல்லையெனில் ஜெர்மனி, பிரஸ்ஸல்ஸ், நெதர்லாண்ட்ஸ், ஜப்பான், சைனா, சிங்கப்பூர் – பட்டியலின் நீளம் அதிகம். வாய்ப்புகள் மிக அதிகம். உலக நாடுகளை உள்ளங்கையில் வைத்திருக்கிறான் இன்றைய இளைஞன். தகவல் தொடர்பு சாதனங்கள் செய்த மாபெரும் சாதனைகள் இவை.
உலகின் பல மூலைகளிலும் இந்தியனுக்கும குறிப்பாகத்
தமிழனுக்கும் வேலை செய்து நல்வாழ்வு வாழ ஏராளமான வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. அவன்
சொந்த ஊரில், அண்ணா மேம்பாலமருகே வரிசையில் நிற்கையில் கொளுத்தும் வெயிலிலிருந்து காத்துக் கொள்ள ஒரு ஷெல்டர் மட்டும்தான் கிடைப்பதில்லை.
வெ. மதுசூதனன்.
Good one Madhu. Anthe Marriage coat.. ennai nenaithu ezuthiyathu maathiriye irunthathu..
உலக நாடுகளை உள்ளங்கையில் வைத்திருக்கிறான் இன்றைய இளைஞன்… 100% correct.
நன்றி ராஜேஷ். நம்மில் பலருக்கு இந்த அனுபவம் பொதுவானது என்றே நினைக்கிறேன்.