\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அப்பாவை காணவில்லை

Filed in இலக்கியம், கதை by on January 31, 2016 0 Comments

appavai-kanavillaiஅப்பா காலையில் வாக்கிங் சென்றவர் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்பது இவனுக்கு அலுவலகம் கிளம்பும்போதுதான் தெரிந்தது.அதுவும் அவன் மனைவி அதை ஒரு குறையாகச் சொன்னாள் ” கரண்ட் பில் கட்டறதுக்கு உங்கப்பாவை அனுப்பலாமுன்னா காலையில வெளிய போன மனுசன் இன்னும் காணல” என்றவளிடம் அப்பா இன்னும் வரலயா? ஆச்சர்யமுடன் கேட்டவன் இந் நேரத்துக்கு வந்திருப்பாரே, குரலில் கவலையைக் காட்டினான். நீங்க கிளம்புங்க, அவர் வந்துட்டாருன்னா உங்களுக்கு ஃபோன்ல சொல்றேன், அவன் மனம் ஊசலாட ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது அப்பாவைத் தேடிக் கிளம்பினால் அலுவலகத்துக்கு அரை நாள் லீவு போடவேண்டியதாகிவிடும், இவளும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு எனக்கு எதுக்காச்சும் லீவு போடுங்கன்னா உங்களுக்கு ஆகாது என்பாள். யோசித்தவன் சரி அப்பா வந்தவுடன் எனக்கு ஃபோன் பண்ணு என்று அரை மனதாய்க் கிளம்பினான்.

பத்தரைக்கு மனைவியிடமிருந்து ஃபோன். குரலில் பதட்டம் இன்னும் உங்கப்பாவைக் காணலிங்க, அவனுக்கு மனதுக்குள் பெரும் திகில் வந்து உட்கார்ந்துகொண்டது. எங்கு போயிருப்பார்? வீட்டிலிருந்து ஒரு அரைஃபர்லாங்க் நடந்தால் பூங்கா ஒன்று வரும், இதில்தான் இவரோடு சேர்ந்து நான்கைந்து பேர் வாக்கிங் செல்வர், ஆனால் அவர்களுடன் எனக்கு அறிமுகமில்லையே,
மதியம் மேல் அரை நாள் விடுப்பு எழுதிக்கொடுத்து விட்டு வீடு வந்தவன் அவசர அவசரமாக உடை மாற்றிக்கொண்டு அவன் அப்பா தினம் நடக்கும் பாதை வழியே நடக்க ஆரம்பித்தான்.யாரிடம் விசாரிப்பது? அவனே இந்த ஏரியாவுக்கு குடி வந்து ஒரு வருடம் தான் ஆகிறது.

யாரிடமும் முதலில் அறிமுகப்படுத்திக்கொள்ள சங்கடப்பட்டதால் இந்த இக்கட்டான நேரத்தில் யாரிடம் போய் கேட்பது என்பது புரியவில்லை, அவன் கால்கள் அந்தப் பூங்காவை நோக்கி இழுத்துச்சென்றன. மெல்ல பூங்காவுக்குள் எட்டிப் பார்க்க அந்த உச்சி வெயிலில் ஒருத்தரும் உள்ளே இருப்பதாய்த் தெரியவில்லை, மெல்ல உள்ளே நடை போட்டான்.காலை நேரத்தில் பரபரப்பாய்க் காணப்படும் பூங்கா அந்த வெயிலில் ஆளரவமில்லாமல் இருந்தது. ஓரிருவர் மட்டும் பெஞ்சில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். இதில் தன் அப்பா எங்கேனும் உறங்குகிறாரா என ஒவ்வொருவர் முகத்தையும் உற்றுப்பார்த்தான். பின் அவனே தன் செயலுக்கு வெட்கப்பட்டுக்கொண்டான், தன் அப்பா ஒரு போதும் பொது இடங்களில் இப்படிப் படுத்து உறங்குபவரல்ல, அப்படியென்றால் எங்கு போயிருப்பார்? அவருக்கும் இந்த ஊர் புதியதுதான், ஆனால் இவனைப்போல அவர் கூச்சப்படுபவர் அல்ல, வந்த ஒரு வருடத்துக்குள் அவருக்கு என்று நண்பர் வட்டாரத்தை ஏற்படுத்தி இருந்தார். காலையில் எழுந்து கைகால் கழுவிக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினார் என்றால், அவருடன் வாக்கிங் செல்ல பத்துப்பேராவது ஒன்று சேர்ந்து விடுவர். இவன் எழுந்திருப்பதற்கு ஏழு ஏழரை ஆகி விடும், அதற்குள் வீடு வந்துவிடுவார்.அதன் பின் ஒரு குளியல், பின் மருமகளுக்கு சமையலுக்கு உதவி செய்வார். இவர்கள் திருமணம் ஆகி மூன்று வருடங்கள்தான் ஆகியிருந்தது, அதனால் இவன் மனைவிக்கு அப்பா கூட இருப்பது ஒரு பலம் என்று கூட சொல்லலாம். இருந்தாலும் சில நேரங்களில் தன்னிடம் பேசுவது போல வெடுக்கென அப்பாவிடம் பேசியிருப்பாளோ? என்று யோசித்தான். அப்பா தேவையில்லாமல் யாரிடமும் வாய் கொடுப்பவர் அல்ல, அதே நேரத்தில் எல்லோரிடமும் நல்ல முறையில் பழகுவார்.இதுவரை இவனிடம் இவன் மனைவியைப்பற்றி எந்தக் குறையும் சொன்னதில்லை, ஒரு வேளை நாம்தான் அவரிடம், இவள் எப்படி உன்னிடம் நடந்து கொள்கிறாள் எனக் கேட்காமல் விட்டு விட்டோமோ? இப்படி யோசித்தான்.

     பத்தாவது படித்துக்கொண்டிருந்த போது அம்மா என்னையும், அப்பாவையும் விட்டு மேலுலகம் போய் சேர்ந்தாள். அதற்குப்பின் அப்பா தான் உலகம் எனக்கு என்றாகிவிட்டது. அப்பா காலையில் எழுந்து இவனுக்குக் காப்பி வைத்துக் கொடுத்து எழுப்பி அதன் பின் சாப்பாடு செய்து டிபன் பாக்ஸில் வைத்து அவனைப் பள்ளிக்கு அனுப்புவது வரையில் ஒரே பரபரப்பாய் வேலை செய்து, அதற்குப்பின் அலுவலகம் கிளம்புவார். ஞாயிறு அன்று அவனுக்கு அசைவம் பிடிக்கும் என்று செய்து வைத்து விட்டுத்தான் வேலைக்குக் கிளம்புவார். அவருக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்றுதான் விடுமுறை, அதனால் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இருப்பது இரவு நேரம் மட்டும்தான். அப்பா ஓய்வு எடுத்து அக்கடாவென உட்கார்ந்திருந்ததை இவன் பார்த்ததே இல்லை.

அம்மாவின் நினைவு இவனைக் கஷ்டப்படுத்தக்கூடாது என்று இவர் அம்மா செய்து கொடுக்க வேண்டிய வேலைகள் அனைத்தையும் இழுத்துப்போட்டுச் செய்வார். இவன் பட்டப்படிப்பு முடித்து ஒரு வருடம் வேலையில்லாமல் வீட்டில் இருந்தபோது
கூட இவனை வேலையே செய்ய விடவில்லை அப்பா, அவனுக்கு வழக்கம்போல எல்லா வேலைகளையும் செய்துவிட்டே செல்வார். அதே போல் “எம்ப்ளாயிண்ட்மெண்ட் நியூஸ்” பத்திரிக்கை எல்லாவற்றையும் வாங்கி வந்து நிறைத்து விடுவார். அரசு வேலைக்கான தேர்வு அனைத்தையும் எழுதச்சொல்லி ஊக்கப்படுத்துவார்.

ஒரு வழியாக அவனுக்கு வேலை ஒன்று கிடைத்தது. அடுத்த வருடத்தில் ஒரு போட்டோவைக் கொண்டு வந்து காட்டினார் பெண் பிடிச்சிருக்கா என்றார், அப்பா அதற்குள் என்ன அவசரம் என்று கேட்டவனுக்கு உன் அம்மா இருந்தால் அவசரப்பட்டிருக்கமாட்டேன், பாவம் என் கையால சாப்பிடற கொடுமை உனக்கு வந்துடுச்சு, சீக்கிரம் ஒரு பொண்ணு கையால சாப்பிட ஆரம்பிச்சியின்னாத்தான் என் மனசு நிம்மதியாயிருக்கும், என்று அவன் வாயை அடைத்தவர், இந்தப் பொண்ணு என் நண்பனோட பொண்ணு, உனக்கு எப்படி அம்மா இல்லையோ அது மாதிரி இந்தப்பொண்ணுக்கும் அம்மா இல்லை, ஆனா அவனுக்கு இரண்டு பொண்ணுங்க இருக்கு, முதப் பொண்ண நான் எடுத்துக்கறன்னு அவங்கம்மா இறந்தப்பவே சொல்லி வச்சுட்டேன், நீ இப்ப என்ன சொல்ரே, இதற்கு மேல் அவன் எதுவும் சொல்லவில்லை, கல்யாணம் நல்லபடியாக நடந்து, அப்பாவுக்கு சமையலில் இருந்து ஓய்வு கொடுத்தது அவனுக்கு பெரும் நிம்மதியை கொடுத்தது. இருந்தாலும் அப்பா சும்மாயிருக்காமல் மருமகளுக்கு கூட மாட அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பார்.அடுத்து வந்த வருடத்திலேயே விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டார். இவர் வீட்டில் ஓய்வாக இருப்பதைப் பார்த்த இவனுக்கு மனசு சந்தோசமாக இருந்தது.மறு வருடமே இவனுக்கு மாற்றல் வர இவர்கள் இங்கு குடிவந்து இந்த ஒரு வருடத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி.

காக்கிச்சட்டை போட்டுக்கொண்டு ஒருவர் மூலையில் உட்கார்ந்திருந்தார். அவரிடம் இங்க காலையில வயசானவர் ஒருத்தர் வாக்கிங் வந்தாருங்களா? இங்க வர்ற எல்லாரும் வயசானவங்கதானே, “ஏதோ நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்து பேசிய அந்த காக்கிச்சட்டைக்காரர் இவனின் கவலை தோய்ந்த முகத்தைப்பார்த்தவுடன் உடனே அமைதியாகி “சார் அவரு எப்படி இருப்பாரு அப்டீன்னு சொன்னீங்கன்னா அடையாளம் சொல்லுவேன். நான் காலையில இருந்து இங்கதான் இருக்கேன், இந்த பூங்காவுக்கு நான்தான் வாட்ச்மேன், அவன் அப்பாவின் அங்க அடையாளங்களை சொல்ல ஓ தினம் ஒல்லியா கொஞ்சம் உசரமா ஒருத்தர் வருவாரே அவரா, அவரைக் காலையில இருந்து இங்க பாக்கலீங்களே,இவனின் பதிலில் மேலும் உடைந்து போனான். பூங்காவுக்கே வரலையின்னா எங்க போயிருப்பாரு.?

யாரிடம் சொல்வது? என்ன செய்வது என்று ஒன்றுமே புரிபடாமல் நிலைகுலைந்து வீட்டுக்குத் திரும்பினான் ஒருவேளை அப்பா அங்கு வந்திருப்பாரோ என்று. அங்கே மனைவியின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்தவுடன் புரிந்துகொண்டான், அவர் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று.

இதுவரை அமைதியாய் அவன் சட்டைப்பையில் இருந்த “செல்ஃபோன்” கிண்கிணித்தது. “மகேஸ்” அப்பாவின் குரல், இவன் நெஞ்சில் பாலை ஊற்றியது போல் இருந்த்து. “அப்பா” எங்கேப்பா போயிட்டீங்க, குரல் உடைந்தது. சாரிடா காலையில வாக்கிங் கிளம்பி வரும்போது, தினமும் என் கூட வாக்கிங் வரவர்றோட ஒய்ஃபுக்கு திடீர்ன்னு நெஞ்சு வலி வந்து அவங்களை கூட்டிட்டு ஆஸ்பிடல் வந்துட்டோம், ஆனா பிரயோசனமில்லடா, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது, என்னோட பழகறவங்க ஒய்ஃப்ங்க இப்படி போய்ச் சேர்ந்திடராங்களேடா, குரல் உடைந்து அழுவது போல் இருந்தது. இப்ப ஆஸ்பிடல்ல இருந்து அவங்களை வீட்டுக்கு எடுத்துட்டு போயிட்டு இருக்கோம். அதுக்குள்ள உன் கூட வழியில இருந்த ஃபோன்ல இருந்து பேசறேன், நீ மனசைப் போட்டு அலட்டிக்குவியேன்னுதான் ஃபோன் பண்றேன்.எல்லாம் முடிச்சுட்டு வந்திடுறேன்.

அப்பா..அப்பா, அப்பாவின் மீது கோபப்படமுடியாமல் தடுமாறினான். எப்பொழுதும் பிறருக்காகக் கவலைப்படும் அப்பா, இந்த அரை நாளில் என்னை நிலைகுலையச்செய்துவிட்ட அப்பா. “வழியில பசிக்கு ஏதாவது சாப்பிடு”. முடிஞ்சவுடனே சீக்கிரம் வந்து சேரு, குரலில் வருத்தம் தெரிய ஃபோனை அணைத்தவன், குலுங்கக் குலுங்க அழுதான். இந்த அளவு அவன் அம்மா அவனை விட்டு மறைந்தபோது கூட அழுததில்லை.

தாமோதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad