\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

குறை ஒன்றும் இல்லை

Filed in இலக்கியம், கதை by on January 31, 2016 4 Comments

kurai_onrum_illai_1“கோகி வீட்டில பிறந்த நாள் அழைப்பு குடுத்திருக்காங்க மனோ ” கணிப்பொறித் திரையைப் பார்த்தபடி மனோவிடம் பேசினாள் பிருந்தா.

“யாருக்குப் பிறந்த நாள் ?”

” அவங்க பெரிய பையன் ஆகாஷ்க்கு 9 வது பிறந்த நாள்”.

“எப்போ?, எங்கே?”.

“வர சனிக்கிழமை , ஒரு விளையாட்டுத் திடலில் “.

“எங்கே?” மறுபடியும் மனோ வினவ, ஒரு பெரிய விளையாட்டு அரங்கம் பெயரைக் குறிப்பிட்டாள் பிருந்தா.

“அங்கே என்ன இருக்கு?”

“மினி golf, அப்புறம் குதிக்கறதுக்கு ஒரு பெரிய inflatable எல்லாம் இருக்கும்  போல”.

பதில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான் மனோ.

“வரோம்னு எஸ் போடவா?”

“ஹ்ம்ம்” என்று ஒரு முனகலாக பதில் வர, எழுந்து வந்து அவனிடம்,

“என்ன வேற வேலை இருக்கா அன்னிக்கு ?” என்று கேட்டாள்.

“இல்ல இதே மாதிரி இடத்துக்கு, பார்ட்டிப் பல தடவை போயிருக்கோம் “

“ஆமாம் அதுக்கென்ன ?”

“திருப்பி திருப்பி ஒரே மாதிரி பார்ட்டிக்குப் போகணுமா?”

“நமக்கு ஒரே மாதிரி தான் இருக்கும் மனோ . பிரணவுக்கும், ம்ரிதுவுக்கும் இதெல்லாம் எப்போவும் குஷி தான்.

“அவங்களுக்கு எது தான் குஷி இல்ல சொல்லு. பல தடவை பார்த்த அதே படத்தை நேத்து திரும்பியும் பார்த்தாங்க. அதுக்கு அவ்ளோ குஷி, கும்மாளம் எல்லாம். அது ஃப்ரீயா இருந்தது. இப்போ பாரு இந்த மாதிரி பார்ட்டி வெளியில கொண்டாடி , நமக்குக் காசு தான் கரி”

“கம்மான் மனோ இதுல என்ன செலவு உங்களுக்கு?”.

“இப்போ பாரு இந்தப் பார்ட்டி நடக்கிற இடத்தில ஆர்க்கேட் கேம்ஸ் நெறைய இருக்கும் . பார்ட்டி நடத்தறவங்களால அதுக்கு எல்லாப் பசங்களுக்கும் டோக்கன் வாங்கிக் கட்டுபடியாகாது.ஆனா போனவுடனே பசங்க அங்க தான் காசு போடச் சொல்லுவாங்க .”

“நமக்கு என்ன காசு கஷ்டமா சொல்லுங்க . அந்த விளையாட்டு, பசங்க முகத்தில எத்தனை சந்தோஷம் கொடுக்குது. அதுக்கு விலையுண்டா என்ன? நம்ம என்ன அடிக்கடி போறோமா எப்பவாவது தானே”.

“அதுக்காக அத்தனை பணம் செலவு பண்ணியா  விளையாடுவாங்க? அதுக்குத் திருப்பிக் கொஞ்சமா ஸ்டிக்கர், இல்ல ஒரு குட்டி முட்டாய் இப்படி ஒரு ப்ரைஸ். அதுக்கு ஒரு பெரிய வரிசை வேற நிக்கும்”

“சரி ஆளுக்குக் கொஞ்சம் வாங்கிக் கொடுங்க. சின்னப் பசங்க தானே”.

“முன்னாடி ரெண்டு மூணு மாசத்துக்கு ஒரு பார்ட்டிவரும். இப்போவெல்லாம் மாசம் ஒண்ணுன்னு திரும்பிப் பார்த்தா இது தான். காசுக்கு காசும் விரயம். போர் வேற அடிக்குது.”

இதற்கு மேல் அவனிடம் பேசுவதில் பயன் இல்லை என்று பிருந்தா நகர்ந்து விட்டாள் .

பழைய பிருந்தா என்றால், சண்டை பிடித்துத் தான் சொல்வது தான் சரி என்று ஒத்துக் கொள்ள வைக்க முயற்சித்திருப்பாள். திருமணத்திற்கு முன்னர் துடுக்கென்று பேசும் துரு துருப் பெண்ணாக வளர்ந்தவள்.

இவள் அப்பா வேடிக்கையாகச் சொல்வது கூட உண்டு “நீ பேசாம வக்கீலுக்குப் படிடா” என்று. ஒரு விவாதம் என்று வந்து விட்டால் போதும் களத்தில் இறங்கி தன் பக்க நியாயங்களைப் பிறரை ஒத்துக் கொள்ள வைக்காமல் விட மாட்டாள். ஆனால் பதினொரு வயது திருமண வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பெரிய பாடம், எல்லா விஷயத்திலும் பதில் சொல்லி ஒருவரை ஒருவர் ஒப்புக்கொள்ளச் செய்வது என்பது முடியாதது.

சில சமயங்களில் மனோ பேசுவது அபத்தமாக இருந்தாலும் அவள் அமைதியாக இருந்து விடுவாள். ஆங்கிலத்தில் “you have to pick your battle”, என்று சொல்வது போல.

மனோ ஒன்றும் கஞ்சன் அல்ல,ஆனால் அவனது பொதுவான பார்வை குற்றம் கூறுவது போலவே இருக்கும். அதற்கு நேர் எதிர் பிருந்தா. அவளுக்கு எல்லாமே நல்லது போலத் தோன்றும். பார்க்கும் மனிதர்கள், நடக்கும் விஷயங்கள் எல்லாவற்றிலும் நல்லது மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.

மனோ இப்படிக் குறையோ குற்றமோ சொல்லும் பொழுது பெரிய அழகான பலூன் உடைவது போல இருக்கும் அவளுக்கு. இத்தனை ஆண்டுகளில் அவனது இந்த சுபாவம் கொஞ்சம் பழகிப் போனாலும் சில சமயங்களில் அவனை மாற்ற முயற்சித்து, பேசிப் பார்த்து அலுத்தும் விடும் அவளுக்கு.

கோகி வீட்டு அழைப்புக்கு எஸ் வருகிறோம் என்று பதில் அனுப்பி விட்டு. வெளியில் பிரணவ், ம்ரிதுவுடன் விளையாடச் சென்றாள்.

பிருந்தாவிற்கு குழந்தைகள் உலகம் மிகவும் பிடித்த ஒன்று. அங்கு கள்ளம் இல்லை , குற்றம் இல்லை. உள் ஒன்று வைத்து வெளி ஒன்று பேசும் மனம் இல்லை. அது எல்லாவற்றுக்கும் மேல் அனைவரும் நல்லவர் என்றே நினைக்கும் மனம்.

“நீ இன்னும் child fantasy உலகத்தில் இருக்கிறாய் என்று மனோ கேலி செய்வதுண்டு. எவ்வளவு நினைத்தாலும் , குறையுடன் அலுத்துப் பேசுவது என்பது பிருந்தாவிற்கு முடியாத ஒன்று. அது ஒரு நெகடிவ் உலகம் போலத் தோன்றும்.

” நான் அப்படியே இருக்கிறேன் . அந்த உலகம் நன்றாகத்தான் இருக்கிறது”. என்று சிரித்தபடி பதில் உரைத்து விடுவாள்.

                                                          ***

அடுத்த சில தினங்களில் அந்தப் பார்ட்டி பற்றிய பேச்சை யார் எடுத்தாலும் அப்பொழுது எல்லாம் , அதிக செலவு குறித்தும், இவை தேவை இல்லாத பார்ட்டிகள் என்றும் குறை கூறிக் கொண்டே இருந்தான் மனோ.

சனிக்கிழமை பார்ட்டி செல்லும் நேரமும் வந்தது. குழந்தைகள் அழும் முன்னர் இருவருக்கும் வேண்டிய டோகன்ஸ் வாங்கிக் கொடுத்தான், முனகியபடி தான். அவர்கள் விளையாடும் பொழுது கூடவே நின்று, இந்தக் காசைப் பேசாம குப்பையிலே போட்டிருக்கலாம் அத்தனை வேஸ்ட் என்று புலம்பிக் கொண்டு இருந்தான்.

ஏனோ அந்தப் பிஞ்சு முகங்கள் விளையாடும் பொழுது காட்டும் அந்தச் சந்தோஷம் அவன் கண்களில் தெரியாது போல. அவனுக்குப் பதில் உரைக்காது குழந்தைகளுடன் விளையாடுவதில் கவனம் செலுத்தினாள் பிருந்தா.

பார்ட்டி முடியும் நேரம் கிளம்பும் பொழுது,

“அப்பா இன்னொரு தடவை கேம்ஸ் கார்டு பணம் போட்டுத் தரியா ?” என்று ம்ரிது கேட்க.

“இல்லை போதும் அவ்ளோ தான் ” என்று மறுத்து உரைத்து விட்டு மனோ திரும்பவும் முனகத் துவங்கினான்.

“சரி ” என்று உரைத்து விட்டு , இவர்கள் விளையாடிய டோகன்ஸ்க்கு மாற்றாகப் பரிசு வாங்க வரிசையில் நின்றார்கள். பிரணவ், ம்ரிது இருவருக்கும் பெரிய சாதனை செய்தது போல ஒரு நிறைவு. என்ன பரிசு தேர்வு செய்வது என்று பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் முன்னர் இருந்த குடும்பம் அதிக நேரம் எடுத்துக் கொள்ள, மீண்டும் அவர்களைப் பற்றிய ஒரு முனகலுடன் பேச ஆரம்பித்த பொழுது தான் மனோ அவர்களைச் சரியாகக் கவனித்தான்.

ஒரு கூட்டமாக இருந்த அவர்கள் நடுவில் ஒரு சக்கர நாற்காலியில் ஒரு பையன் எச்சில் ஒழுகியபடி, வாய் கோணிச் சிரித்த படி இருந்தான். அவன் முகம் பார்த்த நிமிடம் அவன் நிலைமை புரிந்து விட்டது. மனோவிற்கு மனதின் ஓரத்தில் எங்கோ வலித்தது.

சிறுவனுடன் வந்திருந்த மூவரும் சக்கர நாற்காலியைத் தள்ளியபடி ஏதோ அவனுடன் பேசினார்கள். அந்தச் சிறுவன் ஜாடையாக ஏதோ குளறிப் பேச, அதைப் புரிந்த அவர்கள் அவன் இன்னொருமுறை செல்ல விழைகிறான் என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

அவன் தந்தை போல் இருந்தவர், “Oh yes buddy, anything that makes you smile”. என்று அத்தனை மகிழ்வுடன் அவனைத் தள்ளினார்.

ம்ரிது , பிரணவ் இருவரும் அவர்கள் பரிசைத் தேர்ந்தெடுத்துக் கிளம்பிய பொழுது எல்லாம், மனோவின் கண்கள் அந்தச் சக்கர நாற்காலிச் சிறுவனின் மீதே இருந்தது. அவன் ஏதோ சிரித்தபடி பந்து எறிய அவன் பெற்றோர் அவன் சிரிப்பை ரசித்தபடி நின்றிருந்தனர். அவர்கள் முகத்தில் முழுமையான மகிழ்ச்சி இருந்தது.

யாரிடம் உண்மையான குறை என்று மனோவிற்குப் புரிந்தது.

வண்டியை வீட்டிற்குத் திருப்பும் பொழுது, காரில் வழக்கமாக ஒலிக்கும் கர்நாடக சங்கீதத்தில் MS பாடிய “குறை ஒன்றும் இல்லை ” முதன் முறையாக மனோவிற்கு முழுமையாகப் புரிந்தது.

லக்ஷ்மி சுப்பு

Comments (4)

Trackback URL | Comments RSS Feed

  1. Radhika says:

    Awesome Lakshmi. I really like it.

  2. Amutha says:

    Nice one! CcSee the world from kids perspective and we might rediscover the kid in us too!

  3. Anand says:

    Very touching. Well narrated by author

  4. Anonymous says:

    Very nice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad