அமெரிக்கத் தேர்தல் – பகுதி 1
அமெரிக்க அரசியலிலும் இதெல்லாம் சாதாரணமப்பா..
“அந்த மூஞ்சியைப் பாரு .. யாராவது அதுக்கு ஓட்டுப் போடுவாங்களா? இந்த மூஞ்சிக்கு அடுத்த ஜனாதிபதி ஆகத் தகுதி இருக்கா?”
“மெய்யாலுமே என் சொந்த மயிரு தான் .. பாக்கறியா.. பாக்கறியா .. தொட்டு வேணாப் பாக்கறியா?”
‘சும்மா அங்கனக்குள்ளயே எதுக்கு நோண்டிக்கிட்டு இருக்கிற? பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்’
இவையெல்லாம் கவுண்டமணியோ, வடிவேலுவோ பேசிய திரைப்பட வசனங்கள் அல்ல. வல்லரசு நாடான ஐக்கிய அமெரிக்காவில் 2016ம் ஆம் ஆண்டு அதிபர் பதவிக்குப் போட்டியிடும் நபர்கள் சிலர் அரசியல் கூட்டங்களில் பேசியவை இவை. இதற்கு மேலும் சில காமெடியான, அருவருப்பான கருத்துகளையும் இவர்கள் அவ்வப்போது உதிர்த்து வருகின்றனர். இன்னும் பத்து மாதங்களுக்கு இவர்களால் ஊடகத் துறைகளுக்குச் சரியான தீனி கிடைக்கப்போகிறது என்பது மட்டும் உறுதி.
ஐக்கிய அமெரிக்காவில் இருநூறு ஆண்டுகளில் பல கட்சிகள் தோன்றி பலமிழந்து போயின. இன்று சிறிய கட்சிகள் பலவிருந்தாலும், ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு முக்கியக் கட்சிகளே அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களை முன்னிறுத்துகின்றன. ஒரு சில சுதேச்சை வேட்பாளர்களும் இந்தப் போட்டியில் இடம் பெறுவதுண்டு.
தற்போதைய நிலையில் இரு முக்கியக் கட்சிகள் சார்பிலும் பல வேட்பாளர்கள் போட்டியில் இடம் பெற்றிருந்தாலும் இறுதியில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் ஒவ்வொரு போட்டியாளரே எஞ்சி நின்று மோதுவர்.
2010 கணக்கெடுப்பின் படி, முற்றிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தோரின் எண்ணிக்கை மூன்று மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்து விட்டது. ஆசிய நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் வரிசையில், சீனா, ஃபிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அடுத்ததாக இந்திய நாட்டினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். இவர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் வாக்குரிமை பெற்றவர்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தல் ஏறத்தாழ மற்ற நாடுகளின் தலைவர்கள் தேர்தலைப் போலத் தெரிந்தாலும், சில சிக்கலான செயல்முறைகள் நிரம்பியவை. அமெரிக்க அரசியலில், இந்தியாவைப் போல ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்குப் பல மாதங்கள் முன்னரே தங்கள் கட்சியின் சார்பாக ஒரேவொரு வேட்பாளரை அறிவிப்பதோ, பெரிய அளவிலான கூட்டணி விவகாரங்களோ கிடையாது. ஒரு கட்சியின் சார்பில் பல வேட்பாளர்கள் போட்டியிட ஆசைப்பட்டாலும் அவர்களது பலம், பலவீனங்கள் பரிசீலிக்கப்பட போதிய அவகாசம் அளிக்கப்பட்டு, அவர்களில் சரியான முறையில் தங்கள் கட்சிக்கும், நாட்டுக்கும் வலிமை சேர்க்கும் ஒருவரையே ஒவ்வொரு கட்சியும் தீர்மானிக்கின்றன.
வரும் ஃபிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபரை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்காற்றும் ஐயோவா காகஸ் மற்றும் நியு ஹாம்ஷையர் ப்ரைமரி நடைபெறவுள்ளது. அதற்கான பரபரப்பும், ஆரவாரமும் ஏற்கனவே துவங்கி விட்டன. காகஸ் (caucus), ப்ரைமரி (primary), ஓபன் ப்ரைமரி (open primary), சூப்பர் டுயுஸ்டே (Super Tuesday), எலக்டோரல் (electoral), பாப்புலர் வோட் (popular vote) போன்ற பல குறுமொழிகள் தொலைக்காட்சி சேனல்களில் ஒலிக்கத் துவங்கி விட்டன.
கட்சி சார்பின்றி, அதிபர் தேர்தலிலுள்ள பல்வேறு படிநிலைகளையும் அவற்றின் காரணங்களையும் விளக்குவதே இத்தொடரின் நோக்கம். நம் வாசகர்களில் பலரும் வரும் தேர்தலில் புதிதாக வாக்களிக்கவுள்ளனர். அவர்களுக்கு மட்டுமின்றி வருமாண்டுகளில் வாக்குரிமை பெறவுள்ள நம்மில் பலருக்கும் இக்கட்டுரை உதவிடக்கூடும்.
நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அதிபர் தேர்தலில் பலத்த காரசாரமான விவாதங்கள், கடுமையான போட்டிகள் நிலவியதும் உண்டு. பெரும்பான்மையான மக்கள் ஆதரவு இருந்த போதிலும், சர்ச்சைக்குரிய விதத்தில் அதிபர் பதவியைப் பிடிக்க முடியாமல் போனவர்களும் உண்டு. போட்டியிட எவரும் முன் வராத நிலையில் அதிபராக ஒருவர் நியமிக்கப்பட்டதுமுண்டு. துவக்க காலங்களில் எவரும் அதிபராக முன் வராத காலங்களும் உண்டு. அமெரிக்க வரலாற்றில் இடம்பெற்ற சில சிறப்பு வாய்ந்த தேர்தல் முடிவுகளைப் பார்ப்போம்.
1789 ஆண்டு, அமெரிக்காவில் காலனி ஆதிக்கம் முடிந்த சமயத்தில், தங்களில் ஒருவரை நாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் கட்டாயத்துக்கு உள்ளாயினர் அப்போதைய தலைவர்கள். கான்ஸ்டிடியூஷன் எனப்படும் அரசமைப்புச் சட்டம் முழு வடிவம் பெறாத காலம் அது. சுதந்திர அமெரிக்காவை நிறுவிய தலைவர்கள் ஜார்ஜ் வாஷிங்டன் நாட்டின் தலைவராக வேண்டுமென விரும்பி அவரைப் போட்டியிட வற்புறுத்தினர். ஆனால் ஜார்ஜ் வாஷிங்டனுக்கு இதில் துளியும் விருப்பமில்லை. பதவி என்பது தானாக அளிக்கப்பட வேண்டும், அதற்குப் போட்டியிடுவது அந்தப் பதவியை அவமதிப்பதாகும் என்று வாஷிங்டன் கருதியதே இதற்குக் காரணம். அந்த நேரத்தில் ஜார்ஜ் வாஷிங்டனை சம்மதிக்க வைத்து அதிபராக்கியதில் அலெக்ஸாண்டர் ஹாமில்டனுக்குப் பெரும்பங்குண்டு. எலக்டர் எனப்படும் உறுப்பினர் பதவியை அந்தந்த மாநிலமே முடிவு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டது. (பொது மக்கள் ஒட்டளித்தாலும் எலக்டர் எனப்படுபவர்கள் தான் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் சக்தி படைத்தவர்கள். இதைப் பற்றி பின்னர் வரும் பகுதிகளில் காணலாம்).
அந்தக் காலகட்டத்தில் வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துக்களைக் கொண்ட வெள்ளையர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை கிடைத்தது. இதனால் நாடெங்கிலும் சேர்த்து, மொத்தமாக 38800 பேர் மட்டுமே வாக்களித்தனர். இவர்களின் பரிந்துரைப்படி பத்து மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 69 எலக்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு வாக்குகள் போடவாய்ப்பளிக்கப்பட்டது. அதிகபட்ச வாக்குகளைப் பெறுபவர் அதிபராகவும், இரண்டாவது இடத்தைப் பெறுபவர் துணை அதிபராகவும் நியமனமாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக 69 பேரும் தங்கள் முதல் தெரிவாக ஜார்ஜ் வாஷிங்டனுக்கு ஓட்டளித்தனர். 34 பேரின் இரண்டாவது தெரிவாக கருதப்பட்டவர் ஜான் ஆடம்ஸ்.
இதன்படி அதிகபட்ச வாக்குகளைப் பெற்ற ஜார்ஜ் வாஷிங்டன் அதிபராகவும், இரண்டாவது இடத்தைப் பிடித்த ஜான் ஆடம்ஸ் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்தல் பரபரப்பு. ஆரவாரம், ஆர்பாட்டங்கள் இல்லாமல் சுதந்திர அமெரிக்காவின் முதல் அரசாங்கம் அமைதியாக உருவானது.
(தொடரும்).
– ரவிக்குமார்