பாலிவுட் டான்ஸ் குழுவினருடன்….
(Click here for English Version)
டிசம்பர் 12, 2015; மெல்லிய பனிச்சாரல் கலந்த இதமான மாலைப் பொழுதில் நமது பனிப்பூக்கள் குழுவினர் பாலிவுட் டான்ஸ் சீன் குழுவினருடன் கலந்துரையாட டேபஸ்ட்ரீ ஃபோல்க் டான்ஸ் மையத்திற்கு (Tapestry Folk Dance Center) சென்றிருந்தோம். உள்ளே நுழையும் ஒவ்வொருவரின் முகத்திலும் சுறுசுறுப்புப் பொங்கியது. குழுவின் ஆர்வம் மற்றும் மகிழ்ச்சியைக் காண்கையில் இன்று 2015ன் கடைசி வகுப்பு என நம்ப முடியவில்லை. சில அறிவிப்புகள், நடன ஆசிரியர் அறிமுகம், தயார்ப் படுத்துதல் என வகுப்புத் துவங்கியது. 90 நிமிட வகுப்பிலேயே, அந்தக் குழு ஒரு முழுப்பாடலுக்கான நடன அசைவுகளை முழுவதும் கற்றுவிடுவது அசாத்தியமானதே.2015ம் ஆண்டின் இறுதி வகுப்பில் வேதாளம் படத்தின் ”ஆலுமா டோலுமா” பாடலுக்கு நடனம் பயின்றனர். மும்முரமான வேலைகளுக்கு இடையே பாலிவுட் டான்ஸ் சீன் கம்பனியின் நிறுவனர்கள் திருமதி திவ்யா மாயா மற்றும் திருமதி ஜீனல் வகில் எங்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தனர். அந்த உரையாடலை இங்கே பதிவு செய்கிறோம்.
பனிப்பூக்கள்: இந்தக் கோடையில் பாலிவுட் டான்ஸ் சீன் கம்பெனியைப் பற்றித்தான் எங்கும் பேச்சு. இந்த நிறுவனத்தின் துவக்கம் மற்றும் வளர்ச்சியைப் பற்றிச் சொல்கிறீர்களா?
திவ்யா: கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, ஒத்த கருத்துடைய சிலர் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் நோக்கோடு ஒன்று சேர்ந்தோம். பாலிவுட் நடனத்தைப் பயிற்றுவிக்கும் எண்ணத்தோடு லாப நோக்கமற்ற நிறுவனமான டேபஸ்ட்ரீ ஃபோல்க் டான்ஸ் மையத்தை அணுகினோம். எங்களைச் சோதனை முறையில் முதல் இரண்டு மாதம் அங்கே அனுமதித்தனர். பல புதுமுகங்கள் வந்து பயிற்சியில் கலந்து கொண்டனர். நான், ராஷி மற்றும் ஜீனல் கூடி பாலிவுட் டான்ஸ் சீன் நிறுவனத்தைத் துவங்கினோம்.
பனிப்பூக்கள்: மாற்றத்திற்குப் பெயர் போனது இந்த நாடும் நகரமும். துவக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்கள் நிகழ்ச்சி அரங்கேறும்போது வேறு இடத்திற்குப் பணி மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். நீங்கள் இதனை எப்படி அணுகுவீர்கள்?
திவ்யா: யாரெல்லாம் ஒழுங்காகவும், ஆர்வமாகவும் வகுப்பில் கலந்துகொள்கிறார்கள் எனக் கவனித்து வந்தோம். இதை வைத்தே முதலில் சின்னதொரு நடனக் குழுவினை உருவாக்கினோம். கடந்த இரு ஆண்டுகளாகப் பிரத்யேகத் தேர்வுகள் வைத்துக் கலைஞர்களத் தேர்வு செய்தோம். தேர்வானவர்களிடம் நிகழ்ச்சி அரங்கேறும் வரை அனைத்துப் பயிற்சிகளிலும் பங்கேற்க உறுதியைப் பெற்றுக் கொள்வோம். வாரத்திற்கு 3 நாட்கள் என மூன்று மாதத்திற்குப் பயிற்சிகள் நடக்கும். இது வரை பதிவு செய்துவிட்டு பயிற்சிக்கோ நிகழ்ச்சிக்கோ யாரும் வராமல் இருந்ததில்லை.
பனிப்பூக்கள்: உங்களின் பயிற்சி மையத்திற்கும், நிகழ்ச்சிகளுக்கும் பல்வேறு திறமையாளர்கள் உலகின் பல பகுதிகளில் இருந்தும் வருகிறார்கள். அவர்களை இங்கே கொண்டு சேர்க்கும் மாயம் என்ன?
திவ்யா: எங்களின் வகுப்புகளும், நிகழ்ச்சிகளும் பலரும் விரும்பத் தக்கதாக இருப்பதே எங்களின் தனிச்சிறப்பு. நடனத்தின் மூலம் பன்முகக் கலாச்சாரம் மற்றும் சமூக ஒற்றுமையை ஊக்குவிப்பதே எங்களின் நோக்கம். இந்த நோக்கத்திற்குச் சரியான இடமாக டேபஸ்ட்ரீ திகழ்கிறது. அவர்கள் பன்னாட்டு நடன முறைகளை ஒன்று திரட்டுகின்றனர். முகநூல், மீட்டப் கருப்ஸ் (Meetup Groups) எனப் பல சமூக வலைத் தளங்கள் எங்களின் விளம்பரத்திற்குப் பெரிதும் உதவுகின்றன. பொதுவாக பாலிவுட் திரைப்படங்களும், பாலிவுட்டின் கதை அமைப்பும் மக்களை வெகுவாகக் கவர்கிறது. பலதரப்பட்ட கலாச்சார மற்றும் இனத்தை சார்ந்த மக்கள் வந்து பங்கேற்கிறார்கள். பாலிவுட் என நிறுத்திக் கொள்ளாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என மற்ற மொழி நடனங்களையும் சேர்த்து நீட்டிக்கப்பட்ட பாலிவுட்டாக நாங்கள் கொண்டாடுகின்றோம்.
பனிப்பூக்கள்: பாலிவுட் நடனம் புரிந்து கொள்ள மிகக் கடினமானது. அதற்கான பாடப்பகுதிகளை எவ்வாறு உருவாக்குகிறீர்கள்?
திவ்யா: தனிப்பட்ட பாடப்பகுதிகள் எதுவும் நாங்கள் கடைபிடிப்பது இல்லை. இந்தியத் திரைப் பாடல்களில் வரும் நடன அசைவுகளைக் கொண்டு உருவாக்குகிறோம். இவை இந்தியாவின் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்களைத் தழுவியும் மேற்கத்திய ஹிப்ஹாப்பின் தாக்கத்துடனும் இருக்கும். ஒவ்வொரு 90 நிமிடத்து வகுப்பும் வெவ்வேறு கருவையும் நடன முறையையும் கொண்டிருக்கும். ஒரு வகுப்பைத் தவறவிட்ட ஒருவர், அடுத்த வகுப்பில் கலந்துகொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது. எந்த வகுப்பிற்கும் யாரும் வரலாம். எல்லா வகுப்பிற்கும் வரவேண்டும் எனும் நிர்ப்பந்தம் இல்லாததால் மக்களுக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது.
பனிப்பூக்கள்: வெவ்வேறான நடன அமைப்புகளைப் பயிற்றுவிக்க பலதரப்பட்ட திறமைகளுடன் இருத்தல் அவசியம். நடன ஆசிரியர்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?
திவ்யா: இந்தியாவின் ஒவ்வொரு மூலைகளில் இருந்து வந்துள்ள நாங்கள் மூவரும், பலதரப்பட்ட நடன வடிவங்களை அறிமுகம் செய்தோம். தில்லிக்காரரான ராஷி பாங்க்ரா, கார்பா மற்றும் ராஸ் நடன வகைகளில் திறமை பெற்றவர். பெங்களூரு எனது சொந்தவூர். எனக்குத் தென்னிந்திய நடன முறைகள் அத்துபடி. மும்பையைச் சேர்ந்த ஜீனல் லாவணி போன்ற மராட்டிய நாட்டிய வகைகளில் தேர்ந்தவர். நாங்கள் மேடை நிகழ்ச்சி மற்றும் வகுப்புகள் தவிர பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் நடத்துவோம். “Out In The Backyard” எனும் “LGBTQ” சமுதாயத்தினருடன் இணைந்து நிகழ்ச்சிகள் தந்திருக்கிறோம். மேலும் ஹோலி, கர்பா போன்ற விழாக்களும் கொண்டாடுகிறோம். இவை பலரையும் ஈர்க்கிறது. மேடை நிகழ்ச்சிக்கான தேர்வுகள் மூலம் இருபதிற்கும் மேற்பட்ட நடன ஆசிரியர்களைக் கண்டெடுத்துள்ளோம். விக்ரம் என்பவர் பாங்க்ரா நடன நிபுணர். ஆர்வம் இருக்கும் பட்சத்தில் நாங்கள் எந்தத் தடையும் இல்லாமல் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கச் செய்கிறோம்.
பனிப்பூக்கள்: “Spicy Masala Chai” மற்றும் “Hi! Hello! Namaste” போன்ற உங்களின் மேடைப் படைப்புகளைக் கண்டு ரசித்திருக்கிறேன். மேடை நிகழ்ச்சி தொடர்பான தங்களின் பட்டறிவைப் பகிர முடியுமா? அரங்கின் ஒருங்கிணைப்பாளர்கள் உங்களின் நிகழ்ச்சியை ஏற்றுக் கொள்வதில் எவ்வளவு ஆர்வம் காட்டினர்?
திவ்யா: 75ற்கு மேற்பட்டோரின் உழைப்பை உள்வாங்கியது இந்த முயற்சி. மேடையில் பங்களிப்பு, திரைக்குப் பின் வேலைகள், விளம்பரம் மற்றும் நிதி திரட்டுதல் என அவர்களின் உழைப்பு பல வகைப்பட்டது.. இந்த உழைப்பை ஒப்பிடுகையில் மேடையில் நிகழ்ந்தது சிறு துளியே. கடந்த இரண்டு ஆண்டுகளும் ஃபிரிஞ்ச் விழாவில் (Fringe Festival) பங்கேற்றோம். ஃபிரிஞ்ச் விழாவில் பங்கேற்க நிகழ்ச்சிகளைக் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள்.
பனிப்பூக்கள்: நிகழ்ச்சியின் வெற்றிக்கு இசைத் தேர்வு மிக முக்கியம். மேலும் பார்வையாளர்களை மகிழ்விக்க சிறந்த கதையும், கேளிக்கையும் அமைப்பது அவசியம். எப்படி நிகழ்ச்சிக்கான இசை மற்றும் பாடல்களைத் தேர்வு செய்கிறீர்கள்? நிகழ்ச்சிக்குத் தேவையான கதையை எப்படி வடிவமைக்கிறீர்கள்?
திவ்யா: எழுத்தாளர்களும், நடன ஆசிரியர்களும் கதைக் கருவினை ஆராய்ந்து தேவையான பாடல்களையும், நகைச்சுவைகளையும் தேர்ந்தெடுப்பர். பொதுவாக வேகமான பாடல்களையும், கதையின் நடைக்கு பொருந்தும் பாடல்களையும் தேர்வு செய்வோம். ஹிமான்ஷு மற்றும் அலெக்ஸ் ஆகிய இருவரும் மேடை நிகழ்ச்சிக்கான கதை வசனத்தைத் தயார் செய்வர். இவர்கள் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவில் வெகுகாலம் வாழ்ந்து வருவதால், அமெரிக்க ரசிகர்களுக்கு எது பிடிக்கும் என்று நன்கு அறிவர். பரவலாக ஏற்றுக் கொள்ளக் கூடிய நகைச்சுவைகளை வடிவமைப்பதில் கை தேர்ந்தவர்கள் இவர்கள்.
பனிப்பூக்கள்: பயிற்சி அரங்கிலும், மேடை நிகழ்வுகளிலும் ஏற்படும் தடைகள் யாவை? அவற்றை எவ்வாறு அணுகுவீர்கள்?
திவ்யா: அதிர்ஷ்ட வசமாக நாங்கள் ஏதும் சிக்கல்களைச் சந்திக்கவில்லை. இது நடனத்தின் மீது பற்றுக் கொண்ட தன்னார்வலர்கள் சேர்ந்து நடத்தும் நிறுவனம். எங்களுக்குப் பெரிய சவால் என்றால் நிதி திரட்டுவதுதான். அங்கும் பல புதிய யுக்திகளைக் கொண்டு நன்கொடைகள் மூலம் தேவையான நிதியைச் சேர்க்கிறோம். அரசு மற்றும் மற்ற நிறுவனங்கள் மூலம் நிதி உதவி பெற முயற்சிகளைத் தொடங்கி உள்ளோம்.
ஜீனல்: மேலும் திவ்யாவிடம் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் பேராற்றல் உண்டு..
பனிப்பூக்கள்: ஃபிரிஞ்சு விழாவில் சிறந்த நிகழ்ச்சிகளைத் தயாரித்தமைக்கு எங்களின் வாழ்த்துகள். தங்களின் அடுத்த திட்டம் என்ன?
திவ்யா: கடந்தாண்டு எங்களின் “Spicy Masala Chai” நிகழ்ச்சி ஃபிரிஞ்சு வரலாற்றில் அதிக விற்பனை கண்ட நிகழ்வாகத் திகழ்ந்தது. இதனால் மினசோட்டா ஹிஸ்டரி சொசைடி (Minnesota History Society) எங்களை நிகழ்ச்சி நடத்த அழைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்வு 2016 ஏப்ரல் 30 மற்றும் மே 1ல் மினசோட்டா வரலாற்று அருங்காட்சியகத்தில் (Minnesota History Museum) நிகழ்கிறது. வாஷிங்டனின் ஸ்மித்சோனியன் நிறுவனம் ஒருங்கிணைக்கும் பியாண்ட் பாலிவுட் (Beyond Bollywood) என்ற நிகழ்விலும் கலந்து கொள்கிறோம்.
பனிப்பூக்கள்: நீங்கள் பெரும்பகுதி இளையோருக்குப் பயிற்சிகள் அளிப்பதால், வளரும் கலைஞர்களுக்கு ஏதாவது சொல்ல விழைகிறீர்களா?
திவ்யா: நாம் நல்ல நடனக் கலைஞரா, இல்லையா என்ற தயக்கங்களை எல்லாம் விடுத்து எங்களுடன் வந்து நடனம் ஆடுங்கள்! முன்னர் நடனமே செய்யாத பலர், எங்களின் நிகழ்ச்சிகளில் அசத்தியதும் உண்டு. எங்களின் இரண்டு மேடை நிகழ்ச்சியிலும் அசத்திய திருமதி ஜெயந்தி அவர்கள், இதற்கு முன் மேடை நிகழ்ச்சியில் பங்கேற்றதே இல்லையாம். சுருங்கச் சொன்னால், இங்கே கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
மேலும் பனிப்பூக்கள் அந்தக் குழுவில் இருந்து கேட் எனும் ஒரு நடன ஆர்வலருடன் உரையாட நேரிட்டது.
பனிப்பூக்கள்: எது உங்களை பாலிவுட் டான்ஸ் சீன் பக்கம் ஈர்த்தது?
கேட்: எனது ஐந்து பிள்ளைகளுக்கும் நடனம் ஆடுவதில் ஆர்வம் அதிகம். நிரம்ப இந்திய நண்பர்கள் எங்களுக்கு உண்டு. மேலும் இந்தியக் கலாச்சாரம் மிகவும் பிடித்திருந்து. இந்த ஆர்வத்திற்கு உயிரூட்ட இந்த இடம் சரியானது என உணர்ந்தோம். நாங்கள் மிச்சிகனில் இருந்து செயின்ட் பாலுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னம் குடிபெயர்ந்தோம். எங்களின் பூர்வீகம் லெபனான். எனக்கு ஏரோபிக் நடனம் கொஞ்சம் தெரியும். பாலிவுட் டான்ஸ் சீன் புத்துணர்ச்சியை அளிக்கிறது. உலகில் நிகழும் போர்களை நினைக்கையில், அவர்களை எல்லாம் ஒன்றாக நடனம் ஆட வைத்து விட்டால், உலகில் யுத்தங்களே இருக்காது என நினைக்கிறேன்.
- வெ. சச்சிதானந்தன்.