ஆதாம் ஏவாள்
அந்தகாரச் சூனியத்தில்
அச்சுக் கொண்ட இரண்டாய்
நாம்…
வழியெங்கும் திசை
மாறும் பாதம்
நமக்கானது…
ரத்தம் என்று நானும்
குருதி என்று நீயும்
நிழல் புளிப்பைத் தெளிப்பதில்
உருவம் மாறிக் கொள்கிறோம்…
மார்பு சுமந்து
கனத்துத் திரிந்த எனக்கு-உன்
சிறகுகள் இரண்டு…
தேக்கு முதுகின்
திடங்கள் கொழுத்து
தீர்க்கமென நிற்கும்
நானாக நீ…
வெற்றுடை துறந்த
தேசத்தில் காதல்
செய்து தவழ விட்ட நாம்
ஆதாம் ஏவாள்….
ஓய்வில் ஒளிந்து திரிந்த
பொழுதில் மாற்றி மாற்றி
அடித்தே கடவுளைக் கொன்ற
பொழுதில் தோன்றியது…
அந்தகாரமாகவே இருந்து
விட்டுப் போகட்டும்
இந்தப் பூமி..
நம்மோடே சாகட்டும்
இந்தக் காதல்….
கவிஜி