\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஆட்டிஸம் – பகுதி 3

Filed in இலக்கியம், கட்டுரை by on January 31, 2016 0 Comments

autism-3_620x620

(ஆட்டிஸம் – பகுதி 2)

இந்தப் பகுதியில் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான இரண்டு முக்கிய விஷயங்களைப்பற்றி  பார்க்கலாம்.

  1.     அவர்களுக்குப் பொருத்தமான உணவு வகைகள்
  2. பயோமெடிக்கல் சிகிச்சை முறை

பொருத்தமான உணவு வகைகள்

ஆட்டிஸம் போன்ற நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தகுந்த உணவு என்னவென்பதில் பல ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன என்பதை அறிந்து கொண்டோம். அந்த ஆராய்ச்சியின் விளைவாகக் கண்டுபிடிக்கப்பட்ட GFCF (Gluten Free Casein Free) வகை உணவுகளையே எங்களது மகனுக்குக் கொடுத்துக் கொண்டு வருகிறோம்.  முதலில் GFCF என்றால் என்னவென்று பார்ப்போம்.

க்ளூட்டன் (Gluten) என்பதற்குத் தமிழில் ‘பசையம்’ என்று கூறலாம். இது உணவுப் பொருட்களின், குறிப்பாக மாவுப் பொருட்களின் பசைத்தன்மைக்குக் (elastic texture) காரணமாக அமைகிறது. மேலும், இது பல வகையான தானியங்களிலும், குறிப்பாக அவற்றின் தோல்/உமியில் இருக்கிறது. குழந்தைகளுக்குப் பொதுவாக மிகவும் பிடிக்கும் பீட்ஸா (Pizza), பாஸ்தா (Pasta), ரொட்டி (bread), சீரியல் பார் (Cereal Bar), வறுவல்கள் (Chips), ஓட்ஸ் (Oats) மற்றும் பிஸ்கட் (crackers) போன்றவற்றிலும் க்ளூட்டன் நிறைந்திருக்கிறது. இவற்றைக் குழந்தைக்குக் கொடுக்க இயலாது என்றால் நினைத்துப் பாருங்கள்.

அதே போன்று, கேசீன் (Casein) என்ற ஒருவகையான புரதச் சத்து (protein) பால் பொருட்கள் பலவற்றில், உறைந்த நிலையில் (coagulated) உள்ளது. பால், தயிர், மோர் மற்றும் அனைத்து வகையான, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பல உணவுப் பொருட்களிலும் கேசீன் நிறைந்துள்ளது. பொதுவாக இந்த உணவுப் பொருட்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், நோயெதிர்ப்புச் சக்திக்கும் (Immunity) உறுதுணையாக இருப்பவையெனினும், ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இவை பெருமளவு தீங்கு விளைவிப்பவையே.

இந்த விவரங்களெல்லாம், தற்பொழுது பத்து வயதாகும் எங்கள் மகன் மூன்று, நான்கு அல்லது ஐந்து வயதாக இருக்கும்பொழுது நாங்கள் அறிந்திராத ஒன்று. அந்தக் காலங்களில் வயிறு வலி, அஜீரணம், வயிறு உப்புதல் (bloated stomach) மற்றும் மலச்சிக்கல் (constipation) போன்றவைகளால் மிகவும் துன்பப்பட்டான். தொடர்ச்சியான காது வலி (Ear Infection), காய்ச்சல், இருமல், சளி என அவனைத் துரத்திக் கொண்டேயிருந்தது. இதுபோன்று அடிக்கடி நிகழ்வதால் மிகவும் கவலைக்குள்ளான நாங்கள், சிறப்பு மருத்துவர்களை அணுக ஆரம்பித்தோம். அவர்கள் DAN (Defeat Autism Now) என்று ஒரு சிறப்புப் பெயர் கொண்டவர்கள். அவர்கள் செய்த முதல் பரிந்துரையே GFCF உணவு வகைகள். அதுவரை க்ளூட்டன் மற்றும் கேசீன் உள்ள உணவு வகைகளை மிகவும் விரும்பிச் சாப்பிட்ட எங்கள் செல்வனுக்கு அவற்றைக் கொடுக்காமல் தவிர்ப்பது என்பது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. தவிர, அதுபோன்ற உணவு வகைகள் எங்கே கிடைக்கும் என்பதை ஆராய்ச்சி செய்வதே சற்று கடினமானதாகும். கடைசியில், இயற்கை வகை உணவுப் பொருட்கள் (Organic Foods) கிடைக்கும் ஹோல் ஃபூட்ஸ் (Whole Foods) போன்ற கடைகளில் கிடைக்கும் என்பதை அறிந்து கொண்டோம். இதுபோன்ற இடங்களில், சாதாரணமாகக் கிடைக்கும் சீரியல் (Cereal), வாஃபில்ஸ் (Waffles), ரொட்டி (Bread) மற்றும் ஓட்ஸ் (Oats) போன்ற உணவுப்பண்டங்களே GFCF வகையில் தயாரிக்கப்பட்டுக் கிடைக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டபொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல், க்ளூட்டன் இல்லாத மாவுவகைகளை (Dough) வாங்கிப் பல உணவுகளைச் சமைக்கலாம் என்று அறிந்தபோது எங்களுக்குக் கிடைத்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. இப்பொழுதெல்லாம், க்ளூட்டன் இல்லாத உணவு என்பது சர்வ சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைப்பதாகி விட்டது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் நிலைமை அப்படி இல்லை.

GFCF உணவுகளையே எங்கள் மகனுக்குப் பல வருடங்களாகக் கொடுத்து வருகிறோம். அது அவன் உடலுக்கு மிகவும் ஒத்த உணவு வகையாக இருக்கிறது. ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இவ்வகை உணவு நன்மை தரக்கூடும்.  

பயோமெடிக்கல் சிகிச்சை முறை (Biomedical Treatment)

சில வருடங்களாகக் கடைபிடிக்கும் இந்த முறை எங்களுக்குப் பெருமளவு பயன் தரும் முறையாக அமைந்தது. பொதுவாக, ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டோர் மட்டுமின்றி, எல்லோரின் ஆரோக்கியத்திற்குமே இந்த முறை பயனளிக்குமென்பதே மருத்துவர்களின் கணிப்பு. பொதுவாகக் காற்றில் உலோக நச்சுத்தன்மை (metallic toxins) இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த விஷத்தன்மை (oxidative) ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடம்பில் அதிகமாக இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே குறிப்பிட்ட DAN மருத்துவர்கள் இந்த நிலைக்குச் சிகிச்சை அளிப்பதில் வல்லவர்கள் என்று கேள்விப்பட்டோம். எங்கள் மகனைத் தினமும் அழைத்துச் செல்லும் சிகிச்சையிடங்களிலுள்ள மற்ற குழந்தைகள் காலை, மதியம் மாலையென மருந்துகள் உட்கொள்வதைக் கவனித்து, விசாரிக்கத் தொடங்கினோம். விசாரித்ததில் அறிந்து கொண்டதே இந்த பயோமெடிக்கல் சிகிச்சை முறை.

மினசோட்டாவில், இடைனா (Edina) என்ற நகரத்தில் இந்த முறையில் சிகிச்சை கொடுக்கப்படுவதாக அறிந்து அங்கே சென்றோம்.  அங்கிருந்த DAN மருத்துவர் எங்கள் மகனைப் பலவகையான சோதனைகளுக்கு (tests) உள்ளாக்கினார். இரத்தப் பரிசோதனை, சிறுநீர் மற்றும் மலச் சோதனை போன்றவைகளுடன் தலைமுடியையும் சோதனை செய்தனர். இந்தச் சோதனைகளின் இறுதியில் உலோக நச்சுத்தன்மை அவன் உடலில் மிகவும் அதிகமான அளவு உள்ளதாகக் கண்டறிந்தனர். இது மூளைக்குச் செல்லும் நரம்புகளைப் பாதிப்பதுடன், அறிவுசார் வளர்ச்சியையும் (Intellectual Devleopment) பெரிதளவு பாதிக்கும் என்று அறிந்தோம். DAN மருத்துவர்களின் ஆலோசனையின்படி இயற்கை உணவுகளும், புரோபயாடிக் உணவுகளும் உடம்பிலிருக்கும் நச்சுத்தன்மையைக் குறைக்க வல்லது என்பதை அறிந்தோம். மற்ற சிகிச்சைகளுடன் சேர்ந்து, இதனையும் பின்பற்ற ஆரம்பித்தோம்.

பயோமெடிக்கல் சிகிச்சை மற்றும் GFCF உணவு முறை ஆகியவை எங்கள் மகனின் உடல்நிலையில் பெருமளவு முன்னேற்றத்தைக் கொடுத்தது. இந்தச் சில வருடங்களில், அவனது நோயெதிர்ப்புச் சக்தியும் பல மடங்கு வளர்ந்துள்ளதாக அறிந்து மிகவும் மகிழ்வடைகிறோம். ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியும் இது போன்ற முறைகளுக்கு வெவ்வேறு விதத்தில் மாறுபடும் என்றாலும், இவை பொதுவாக நல்லது செய்யக் கூடியவையே  என்பது எங்கள் எண்ணம்.

ஆனாலும், முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது இவற்றிற்காக ஆகும் பணச்செலவு. மிகக் குறுகிய காலத்தில் கணிசமான செலவாகுமென்பதே உண்மை. பொதுவாகக் கிடைக்கும் காப்பீடுகளோ (Insurance), அலுவலகத்தின் மூலம் பெறப்படும் காப்பீடுகளோ இதற்கான செலவீனங்களை ஈடுகட்டாது என்பதே அமெரிக்காவில் இன்றைய பொதுவான நிலை. ஆனால், அமெரிக்காவில், மத்திய (Federal), மாநில (State), மாவட்ட (County) மற்றும் நகர (City) அரசாங்கங்கள் வழங்கும் மருத்துவ உதவித் திட்டங்களின் (Medical Assistance Programs) மூலம் இதற்குத் தேவையான நிதி உதவிகள் பெற இயலும். இது குறித்த விவரங்களை அடுத்த இதழில் பகிர்கிறேன்.

(தொடரும்)

  • முலம்: சுரேஷ் ரங்கமணி.
  • மொழிபெயர்ப்பு: வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad