தலையங்கம்
வாசகர்கள் அனைவருக்கும் பனிப்பூக்களின் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
புத்தாண்டில் பலர் பல விதமான தீர்மானங்களைச் செய்திருக்கலாம். அது இன்றிலிருந்து தொடர்ந்து உடற்பயிற்சி செய்வேன் என்பதாக இருக்கலாம். அல்லது ஏதேனும் கெட்ட பழக்கங்கள் இருந்தால் அதனைக் கைவிடுவதாக இருக்கலாம். அது எதுவாக இருப்பினும் அந்தத் தீர்மானத்தை நீங்கள் வாழ்நாள் முழுவதும் உறுதியாகக் கடைபிடித்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டுமென்று இதன்மூலம் வேண்டிக் கொள்கிறோம்.
2015 ஆம் வருட சாதனைகள் என்றும், 2016 ஆம் வருடத்தில் எதிர் நோக்க வேண்டிய நல்ல விஷயங்கள் மற்றும் சோதனைகள் என்றும் பத்திரிக்கைகள் அடுக்கிக் கொண்டே போகின்ற இந்தக் காலகட்டத்தில், நம் கவனத்தைக் கவர்ந்தது என் சொந்தக் கிராமத்தைப் பற்றிய, அந்தக் கிராமத்தில் நான் படித்த பள்ளியைப் பற்றிய ஒரு செய்தி, இச் செய்தி நம் உயிரை உலுக்கி, உணர்வுகளைப் பிளந்தெடுத்தது என்றால் மிகையாகாது. பதினேழு வயதான, பதினொன்றாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவன், ஆசிரியர் கோபித்துப் பலர் முன்னிலையில், குறிப்பாக மாணவிகளின் முன்னிலையில், திட்டினார் என்ற காரணத்திற்காக வேதியியல் ஆய்வகத்தில் புகுந்து தீக்குளித்து இறந்து போனதாகப் பிரசுரமான அந்தச் செய்தியே அது. இதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அந்த மாணவனின் பெற்றோரையும், குடும்பத்தையும் நினைக்கையில் சொல்லொணாத் துயர் நம்மை வாட்டி வதைக்கிறது. அந்த ஆசிரியரையும், அவரின் குடும்பத்தையும் நினைத்தாலும் நம் நெஞ்சம் கனக்கிறது. ஆசிரியர் என்பவர் நமது எதிர்காலத்தைச் செதுக்குபவர் என்ற முழு நம்பிக்கையுடன் இருந்த மாணவர்களும், அதே நம்பிக்கையுடன் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்களும், இந்த மாணவனின் எதிர்காலம் முழுவதும் என் கையிலேயே இருக்கிறது என்று எண்ணிப் பொறுப்புடன் செயல்பட்ட ஆசிரியர்களும் வாழ்ந்த காலம் மாறிவிட்டதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தைப் பற்றிப் பத்திரிக்கைகளில் பலவகையிலும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. வழக்கம் போல, இவற்றில் எதை நம்புவது என்ற குழப்பம் நமக்கு இருப்பதால் இந்தச் சம்பவம் குறித்து நமது கருத்தை அல்லது தீர்ப்பை நீதித் துறைக்கும் காவல் துறைக்கும் ஒதுக்கி வைத்துவிட்டு, இதிலிருந்த நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன என்பதை மட்டும் பார்ப்போம்.
பெற்றோர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய தருணமிது. சாதாரணச் சிறிய விஷயங்களிலிருந்து, இடியே தலைமீது வீழ்வது போன்ற விஷயங்களுக்கும் அஞ்சாத உரம் பாய்ந்த நெஞ்சத்தை நம் பிள்ளைகளுக்குக் கொடுப்போம் என்பதில் பெற்றோர்கள் உறுதியாயிருக்க வேண்டும். பெண்கள் முன்னால் திட்டப்பட்டு விட்டோம் என்பதற்காகத் தற்கொலை நாடும் அளவுக்குப் பலவீனமான இதயம் இல்லாதவர்களாக அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமையே. இளைஞர், இளைஞிகளும் விழித்துக் கொள்ள வேண்டிய தருணமிது. வாழ்வில் நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். எதிர்காலம் உங்களின் கையில், அடைய வேண்டிய உயரங்கள் பல. அதனால் சிறிய விஷயங்களுக்கு மனதைத் தளரவிடாமல் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்வைக் கொண்டு செல்லுதல் அவசியம் என்பதை உணர வேண்டும்.
அவ்வாறு நல்ல உறுதியான எண்ணங்களையும், குணங்களையும் கொண்ட சமுதாயமாக இன்றைய சமுதாயம் உருவெடுக்கும் என்ற உயர்வான நம்பிக்கையை இந்தப் புத்தாண்டு நமக்கு வழங்குமாக !!!
ஆசிரியர்.