\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

“குத்துக்கல்…!”

Filed in இலக்கியம், கதை by on January 31, 2016 0 Comments

குத்துக்கல்2வளும் நானும் ரொம்ப வருஷமா இப்டித்தான் வாழ்ந்திட்டிருக்கோம். ஸாரி, வாழ்ந்திட்டிருக்கோமில்ல….இருந்திட்டிருக்கோம்…சேர்ந்து இருக்கிறவங்கள்லாம் சேர்ந்து வாழ்றதா அர்த்தமாகாதுல்ல…அதுனால அப்டிச் சொன்னேன்….வாழ்றதுங்கிறது ஆத்மபூர்வமானது….அப்டித்தான் நா நினைக்கிறேன்…இதயத்துல ஒருத்தர வச்சு போஷிக்கிறது…பூஜிக்கிறதுன்னு கூடச் சொல்லலாம்…அப்டியிருந்தா பரஸ்பரம் ஒருத்தர் நலத்துல இன்னொருத்தருக்கு அக்கறை பரிபூர்ணமா இருக்கும்…முணுக்குன்னா மனசு சங்கடப்படும்…என்னாச்சோ, ஏதாச்சோன்னு பதறும்…அப்டியெல்லாம் எந்த அதிர்வும் எங்க வாழ்நாள்ல ஏற்பட்டதுல்ல…அவளுக்கும் சரி, எனக்கும் சரி…சிறு சலனங்கூடக் கெடையாது…அதுனாலதான் சேர்ந்து இருக்கிறதுங்கிற பதத்தைப் பிரயோகப்படுத்தினேன்.

இதுல என்ன விசேஷம்னா, எங்களோட இருப்பு இதுநாள் வரைக்கும் யாருக்கும் தெரியாது. இத்தன வருஷத்துல ஒருத்தருக்கும் இம்மியும் சந்தேகம் வந்திருக்காது… இப்டியிருக்குமோ, அப்டியிருக்குமோன்னு எவனும் லேசா நினைச்சுப் பார்த்திருக்கக் கூட முடியாது. ஏன்னா, நாங்கதான் அடுத்தவங்க முன்னால எதையும் காண்பிச்சிக்க மாட்டோம்… அந்தக் கள்ளத்தனம் உண்டு எங்க ரெண்டு பேருக்கும். எங்கள மாதிரி ஒத்துமையா இருக்கிற தம்பதியர் யாருமேயில்லன்னு அத்தனை பேரும் நிச்சயம் நினைப்பாங்க… என்ன ஒரு இணக்கம் இவங்களுக்குள்ளன்னு மூக்கு மேல விரல வைப்பாங்க…

அப்டிப் போலியா எப்டி  இருக்க முடிஞ்சிதுன்னு இப்ப நினைச்சுப் பார்த்தாக் கூட ஆச்சரியமாத்தான் இருக்கு… அப்டி இருந்து இருந்தே, அதுவே இயல்பாப் போயிடுச்சு…. அதென்னவோங்க… என்னப் போலவே அவளும் கச்சிதமா நடிப்பா…. அத்தனை தத்ரூபமா இருக்கும்…. ஆர்ட் ஃபிலிம் எடுக்கலாம் போங்க…! ஆத்மார்த்தமா இருந்தாத்தானே அப்படிப் பொருந்தி வரும்? ரெண்டு பேர்ட்டயும் அவ்வளவு திறமை மறஞ்சிருக்குன்னுதான் சொல்லணும்… ஆனா ஒண்ணு… எல்லாரும் போயிட்டாங்களா… எங்கேயிருந்துதான் வருமோ அந்த விரிசலும் சண்டையும்… இன்ன காரணம்தான்னு அறுதியிட்டுச் சொல்லவே முடியாது… ஒரே கர்ர் புர்ர்ருதான்…. கடுவம் பூனை மாதிரி…. எதாச்சும் உப்புச் சப்பில்லாததாக் கூட இருக்கும்…. ஆட்டமேடிக்கா வள் வள்ளுன்னு குலைச்சிக்கிட்டு விலகிடுவோம்….அப்டியே இருந்து இருந்து அது வந்திடுச்சா… இல்ல ஆரம்பத்துலேர்ந்தே அது சகஜமாயிடுச்சா… ரெண்டு பேருக்குமே அது தெரியாது…. நாங்களே நினைச்சிக்கிறது சமயத்துல… இதையே ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிக்கிறதுக்குப் பயன்படுத்தியிருந்தா எவ்வளவு நல்லாயிருந்திருக்கும்?…. புரிஞ்சிக்கிட்டதுனாலதான் இந்தவினை…. ஈகோ விட மாட்டேங்குது ரெண்டு பேரையும்… புடிச்சி ஆட்டி வைக்குது…. ரெண்டு பேரையும்னு சொன்னனோ? தப்பு… தப்பு…

எனக்கு ஈகோவெல்லாம் கெடையாதுன்னுதான் நா சொல்லுவேன்… ஆனா அவ ஒத்துக்க மாட்டா… ஜாக்கிரதையா உன்னை ஒதுக்கிக்கிறயாக்கும்… பெரிய யோக்யன் மாதிரி…. அது அப்டியில்ல… அதுதான் உண்மை… அதனால சொல்றேன்…ஏன்னா ஆரம்பத்துலேர்ந்தே தணிஞ்சு தணிஞ்சு போனவன் நான்தானே…பல வீடுகள்லயும் அதுதான் நடக்குது…எந்த வீட்ல ஆம்பள அட்ஜஸ்ட் பண்ணாம இருக்கான்…? நூத்துக்குத் தொண்ணூறு வீடு அப்டித்தான். எந்த வீட்ல பொம்பள அட்ஜஸ்ட் பண்ணியிருக்கா? அவ நிக்கிற எடத்துலயேதான் நிப்பா…இவன்தான் சரி சரின்னு போவான்…இதைத்தான் தணிஞ்சு போறதுன்னு சொல்லிட்டேன் நான்…..சரி, கெடக்கு…இதுலென்ன இருக்குன்னு சண்டை வர்றப்போவெல்லாம் ஒதுக்கிட்டு நாந்தான் வலியப் பேசுவேன்…ரைட் விடு…ரைட் விடுன்னு சொல்லிட்டே, கிட்டப்போய் கொஞ்சி, கோபத்தப் போக்கிட்டு, அடுத்தடுத்த காரியங்களச் செய்ய ஆரம்பிச்சிடுவேன்….பல வீடுகள்லயும் ஆம்பளைங்க அப்டித்தானே போயிட்டிருக்காங்க…? யாராச்சும் இல்லன்னு சொல்ல முடியுமா? இவனுக்குத்தான் அப்பப்போ அவ வேண்டிர்க்கே…! அந்த வீக்னஸ்ஸே ஆள மண்டியிட வச்சிருமே…! பெரிய்ய்ய அசிங்கங்க அது…ஆனா எங்கதை தனி…

தணிஞ்சு போறதுன்னா என்ன மட்டமா? நாமளா நினைச்சிக்கிறதுதான் இதெல்லாம்….தணிவு, குனிவு அப்டியெல்லாம் ஒண்ணும் கெடையாது….குடும்பம் நிம்மதியா ஓடணும்…அன்றாடப் பாடு அமைதியாக் கழியணும்…இதுக்கு யாரேனும் ஒருத்தர் கொஞ்சம் வளைஞ்சு கொடுத்திட்டோம்னு வச்சிக்குங்க…பிரச்னை ஓவர்….ஆனா ஒண்ணு…இதுக்கும் ஒரு பக்குவம் வேணும்னுதான் சொல்லுவேன்… சின்னப் புள்ளைலேர்ந்தே கஷ்டங்களையும், வறுமையையும் பார்த்து, அனுபவிச்சு வளர்ந்தவனுக்குத்தான் இந்தக் குணம் இருக்கும்….எடுத்த எடுப்புலயே அவன் தன்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கத் தயாராயிடுவான்….எந்தப் பிரச்னையானாலும் அங்க தன்னால அந்தச் சிக்கல் தீரும்னா தன்னை ஒதுக்கிக்கிடுவான்…அல்லது முழுசாத் தாங்குறதுக்கு இம்மீடியட்டாத் தயாராயிடுவான்….ஒரு பெண்ணும் இப்டியெல்லாம் இருக்க முடியும்தான்…அவ வந்த வழியும் அப்டியிருக்கணும். ஆனா என்னன்னா, ஒரு ஆண் பெண்ணைச் சார்ந்து இருக்கிறதுனால இது சாத்தியமாகாமப் போயிடுது…ஊடல்னு ஒண்ணு உள்ளே நுழைஞ்சிடுது…ஆம்பள வளைஞ்சு கொடுத்துப் போறதுக்கு, அதுவும் ஒரு காரணமாயிடுதுங்கிறதுதான உண்மை… “உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல்”….

ஆனா ஒண்ணுங்க…இதுவேதான் அவனுக்குப் பிரச்னையும் ஆகிடுதுன்னுவேன்…வீட்டுப் பொம்பள இதுக்குப் பக்குவப்படாதவளா இருந்தான்னு வச்சிக்குங்க…. தலவலிதான்… வாழ்க்க பூரா இவன் ஒருத்தனே வளைஞ்சிக்கிட்டு இருக்க வேண்டிதான்… குறுக்கு ஒடியற மட்டும் விடமாட்டாங்க…..நம்ம வீடு, நம்ம பிள்ள…எல்லாம் இருக்கும்…நம்ம புருஷன்ங்கிறது உதட்டளவுலதான்… உள்ளுக்குள்ள கசறெடுக்கிற வேலதான்…ஒரு நா நீங்க சிவனேன்னு இருக்க முடியாது…

இப்போ இங்க கதயே அதுதான்னு சொல்லுவேன்… .இன்னை வரைக்கும் ஒரு விஷயத்துல கூட அவ என்னை அட்ஜஸ்ட் பண்ணினதில்லீங்க… அதுதான் நிஜம்….தாங்க மாட்டாம ஒருநா சொன்னேன்…. அப்பாடான்னு இருந்திச்சு….

ன்னால எனக்கு மனசளவுலயும் நிம்மதியில்லே…. உடலளவுலயும் திருப்தியில்லே…- போட்டேன் ஒரு போடு…

அதுக்கு, சுகந்தி…அதான் அவ பேரு….என்னா பதில் சொன்னான்னு நினைக்கிறீங்க…? எந்தப் பொம்பளயும் இந்தப் பேச்சுப் பேச மாட்டா… அம்புட்டு வாய்த் துடுக்கு இவளுக்கு… மனசுல கண்டமேனிக்குத் தோணும்தான்.. அதெல்லாத்தையும் பேசிட முடியுமா? அப்டிப் பார்த்தா மேலே சொன்னதை நானும் சொல்லியிருக்கக் கூடாதுங்கிறதுதானே நியாயம்? ஏடா கூடமாப் பேசினம்னா அப்புறம் வாழ்க்கை நரகம்தான்… அத கட்ஷார்ட் பண்றதுக்குதான் மனுஷனுக்குக் கடவுள் புத்தியக் கொடுத்திருக்கான்… அப்புறம் அவனுக்கும், மிருகத்துக்கும் என்ன வித்தியாசம்? பேச்சக் கொற… பேச்சக் கொறன்னு நம்ம பெரியவங்க  வாய்க்கு வாய் அடிச்சிக்குவாங்களே… அதெல்லாம் சும்மா இல்லீங்க… அவ சொன்னா……

அப்டீன்னா காவியக் கட்டிக்கிட்டு சந்நியாசியாப் போகலாம்… ஒண்ணு…. இன்னொண்ணு ஏதாச்சும் ப்ராஸ்ட்டுகிட்டப் போயிட்டு வரலாம்… திருப்தி கிடைக்க…..- என்னா திமிரு பார்த்தீங்களா?

என்னவொரு எடுத்தெறிஞ்ச பேச்சு? நா தேவடியாட்டப் போகணுமாம்….மனசளவுல, உடலளவுல திருப்தியில்லேன்னு நான் சொன்னது சரியாப்போச்சா…! அத ஒத்துக்கிட்டாளா? அப்டித்தானே அர்த்தம் இந்தப் பேச்சுக்கு,?

மொதக் குழந்தைக்கு டெலிவரிக்குப் போனவ, வந்த பின்னாடி  அடியோட அப்டியே ஒதுங்கிட்டாங்க… அதுக்கப்புறம் என்னை அவ நெருங்கவே விட்டதில்ல….வெட்கத்த விட்டுச் சொல்றேங்க…. இந்த என்னோட எடத்துல நின்னு பாருங்க தெரியும் வயித்தெறிச்சல்… சிசேரியனாம்… அதுனால பக்கத்துல வரக்கூடாதாம்… உலகத்துல அப்டியா இருக்காங்க மத்த பொம்பளைங்க… ஒவ்வொரு குழந்தைக்கும் சிசேரியன் பண்ணிக்கிட்டவங்கள நாம பார்த்ததேயில்லையா? அதெல்லாம் மனசு வேணுங்க… மனமுண்டானால் எடமுண்டு… அம்புட்டுதான்…

அம்பது தாண்டின வயசுல பேசுற பேச்சா இதுன்னு தோணலாம்… எங்கம்மா அம்பத்திரெண்டு வயசுல என்னோட கடசித் தங்கச்சியப் பெத்தாங்க… நம்புவீங்களா….? இந்த வயசுல பிரச்னயத்தான் பேசுறேன் நான்…. எத்தனையோ காலத்தத் தவற விட்டாச்சுங்கிறதுக்குச் சொல்ல வர்றேன்… ஒரு பொண்ணு பெத்துருக்கலாமில்ல… எம்புட்டோ சொன்னேங்க… கேட்கவேயில்ல…. இன்னைக்கு அந்தப் பயமவனும் அம்மாக்கு சப்போர்ட்டா இருக்கான்… பசங்க எப்பயும் ஆத்தா பக்கம்தான… ஒரு பொண்ணு இருந்திச்சின்னா, அது அப்பாவுக்குப் பரிஞ்சு பேசுமில்ல… அதுக்கு வழியில்லாம அநாதயா நிக்கிறேன் நா…!. ஒரு வேளை அது தெரிஞ்சே இவனப் பழி வாங்கணும்னே இருந்திட்டாளோ என்னவோ? மறுபடியும் பிள்ளையாப் பெத்திருந்தா? டபுள் சப்போர்ட்டுல்ல அவளுக்கு… அத்த ஏன் நினைக்க மாட்டேன்னுட்டா…? பயங்கரப் பிடிவாதகாரிங்க….

அடி வாடீ… பெரிய்ய்ய இவ நீ…ன்னு இழுத்துக் கிடத்துறதுக்கு ஒண்ணும் ரொம்ப நேரம் ஆவாது… அத விரும்பல நா…. உடலொழுக்கம், மன ஒழுக்கம்னு சம்பிரதாயங்கள் பார்க்கிறவன் நான்… அப்டி வன்முறையா ஒண்ணை அடைய விரும்பலை…அவ உரிமையுள்ள பொண்டாட்டியா இருந்தாக்கூட அது ஆகாதுன்னு நினைக்கிறவன் அநாகரீகமா இந்த விஷயத்துல நடந்துக்க நா என்னைக்குமே விரும்பினதுல்ல……அப்டி உருவாகுற குழந்தை நல்லபடியா இல்லாமப் போச்சின்னா, நாளைக்கு அதுவுமில்ல மனசப்போட்டு உருத்தும்…. காலத்துக்கும் அந்தக் கொடுமைய எவன் அனுபவிக்கிறது? கூடப் படுக்கிறதுக்கே தயங்குற இவ, நாளைக்கு எனக்குத் தெரியாம அபார்ஷன் பண்ணிக்கிட மாட்டாங்கிறது என்ன நிச்சயம்? என் மனசுக்குப் பிடிக்காத குழந்தைய நான் உனக்குத் தர முடியாது…. நீ என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ…ன்னு தலைய விரிச்சிப் போட்டுட்டு நின்னா…. அந்தக் கருமத்த நா எங்க போய்த் தொலைக்கிறது?

முதலிரவு அறைல ஏன் குழந்தை படங்களயும், புல்லாங்குழலோட உள்ள கோகுல கிருஷ்ணன், ராதையோட படங்களையும் வைக்கிறாங்க…? அது ஒரு புனிதமான விஷயம்…. ரெண்டு பேரும் மனசு ஒன்றி, பரிபூர்ணமா, ஆத்மார்த்தமா இணைஞ்சு இயங்குற சமாச்சாரம்…! அதுல பொறாமையும், கோபமும், அசூயையும், ஆங்காரமும் கலந்திருந்தா வௌங்குமா? அதத்தான் சொன்னேன் அநாகரீகம்னு…. நா அப்டி ஆளில்லைங்கிறதே அவளுக்குப் ப்ளஸ்ஸாப் போயிடுச்சி… ஒரு லிமிட்டுக்கு மேல இவன் போக மாட்டான்…. சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு, சமூகத்துக்கு,  உலக நடைமுறைகளுக்குப் பயந்தவன்ங்கிற தீர்மானம் அவ மனசுல இருக்கு… அதுனாலதான் என்னை அவ இப்டி ஆட்டி வைக்கிறான்னுவேன் நான்.

அப்டி அவ மனசுல நெனச்சிக்கிட்டிருக்கலாம்தான்… ஆனா அவ தெனமும் ஒரு தண்டனையை விடாம அனுபவிச்சிட்டிருக்காங்கிறதுதான் உண்மை… அது ஒரு நாளைக்கு அவளுக்குக் கட்டாயம் உறுத்தும்…, இப்போ அதை அவ உணரலை… அவ்வளவுதான்… ஆனா அன்னைக்கு அது காலங்கடந்ததா இருக்கும்….கைய விட்டு நழுவிப் போயிருக்கும்.. எந்த ஒருத்தனும், ஒருத்தியும் தன்னோட தவறுகள உணராம செத்ததேயில்லன்னுதான் சொல்லுவேன்… பல பேரு பேசக்கூட முடியாம, உதடு துடிக்க,  சாவோட நுனில படுத்துக் கெடக்கைல கண்கலங்குறாங்களே… அதல்லாம் என்னன்னு நினைச்சீங்க… விழியோரத்துல கண்ணீர் வழிஞ்சி ஓடிக்கிட்டேயிருக்கே…. அதெல்லாம் என்ன சும்மாவா? உள்ளே நினைவுகள் படமா ஓடுதுன்னு அர்த்தம்… யார் யாரப் பார்க்கிறாங்களோ அவுங்க சம்பந்தமான நல்லது கெட்டதுகள் அத்தனையும் கணத்துல ஞாபகத்துல வந்து மறையுமாக்கும்… அப்போக் கெடந்து மனசு தவிக்குது பாருங்க… அதான் ஒரு மனுஷன் தன்னை உணர்ற கட்டம்….உணர்ந்து என்னா பிரயோஜனம்…? அப்டியே வாயப் பொளக்க வேண்டிதான பாக்கி….மிச்சம் மீதாரி இருந்திச்சின்னா அது அடுத்த ஜென்மத்துக்குப் ப்ராட் ஃபார்வர்ட் ஆகுமாயிருக்கும்…. யார் கண்டது? எவன் கண்டு சொன்னவன்…?

அப்டித்தான் இவளும் ஆகப்போறாளாயிருக்கும்….யார் முந்தி, யார் பிந்தின்னு யார் கண்டது? இதத்தான் ஆரம்பத்துலயே சொன்னேன்…இப்பத் திரும்பச் சொல்றேன்…யார் நம்புறீங்களோ இல்லியோ….சொல்லத் தோணுது… சொல்றேன்… அவளும் நானும் முகத்துக்கு முகம் பார்த்துப் பேசி வருஷம் முப்பதாவப் போகுது…..எம் பையனுக்கு இருபத்தஞ்சு….இப்போ வயசு…. அதுக்கும் முன்னாடியே நாங்க பேசறத நிப்பாட்டியாச்சு…. பொழுதன்னிக்கும் இவளோட பொருத முடிலப்பா நம்மளாலன்னு…. ஒரு நாளைக்கு உதறினவன்தான்…. இன்னைவரைக்கும் நிக்கிறேன் அதே எடத்துல… .நம்புவீங்களா? நீங்க நம்பணும்னுட்டு நா இதச் சொல்லல…. வாழ்ந்த வாழ்க்கையப் பத்தி யார்ட்டயாச்சும்…. ஒரு வெட்ட வெளிலயாச்சும் வாய்விட்டுக் கத்தணும்னு தோணிச்சி…. கணேசா… இந்த ஒலகத்துக்குச் சொல்லுடான்னு மனசு ஓலமிடுது…

ஆனா பாருங்க….ஓ.கே.ன்னுட்டு அவளும் இருந்திட்டாளே இத்தன வருஷம்? ஒரு பொம்மனாட்டிக்கு எத்தன திண்ணக்கம் இருந்தா, ஒருத்தி இப்டிக் கிடப்பா? இவ என்ன பொம்பளதானா இல்ல வேறே ஏதாச்சுமா? இப்டி இருப்பாளாம்… ஆனா குடும்பம்ங்கிற அமைப்பு மட்டும் வேணுமாம்… நா வேணாம்னா, உதறிட்டுப் பொறந்த வீட்டுக்குப் போக வேண்டிதான…? அது மட்டும் முடிலல்ல? அப்போ பொத்திக்கிட்டுக் கிடக்க வேண்டிதான? பொத்திக்கிட்டுத்தான கிடக்குறா…! திறந்தா போட்டிருக்கா….?

ஆனா குடும்பம் நடந்திருக்குதுங்க… என்ன பெரிய மாய்மாலமா இருக்குங்கிறீங்களா? வேணுங்கிறத பொதுவா வச்சிருக்கிற நோட்டுல எழுதிடுவா… நான் போயி வாங்கியாந்து போட்டிடுவேன்… ரெண்டு பேத்தோட சம்பளப்பணமும், வங்கிக் கணக்குக்குப் போயிடும்… தேவைக்கு அவளும் எடுத்துக்கிடுவா… நானும் எடுத்துக்கிடுவேன்….அதான் ஏ.டி.எம். கார்டு இருக்கே… ஒரு கார்டை வச்சி எப்டிங்கிறீங்களா? அதுவும் பொதுதான். டேபிள் ட்ராயர்ல கிடக்கும்….அவளுக்கு வேணுங்கிற டிரஸ்ஸை அவ எடுத்துக்கிடுவா… எனக்கு வேணுங்கிறதை நான் எடுத்துக்கிடுவேன்… ரெண்டு பேரும் சேர்ந்து போனோம்ங்கிற சோலி கிடையாது… ஆனா ஒண்ணு… பையன் வந்திட்டா மட்டும் அவ்வளவாக் காண்பிச்சிக்கிறதில்ல… அப்பப்போ ஒண்ணு ரெண்டு வார்த்தைகள்… ரொம்ப சகஜமா, யதார்த்தமா இருக்கும்…. எவனுக்கும் இம்மியும் சந்தேகம் வராது…. எதுக்கு இந்த நாடகம்னு தோணும்…. வலிய வலியப் பேசி திரும்பத் திரும்பக் கேவலப்பட்டதுதான் மிச்சம். சுமுக நிலையில்லன்னா, அது என்ன குடும்பமா? சுடுகாடுங்க….

என்னத்தக் கொண்டு போகப் போறோம் இந்த உலகத்துலேர்ந்து….ஒத்தப் பைசா எடுத்திட்டுப் போக முடியாது….நெத்திக் காசக் கூடத் தெரியாமக் கடைசில பிடுங்கிடுவாங்க….இந்தப் பூமிலர்ந்து வந்தது எல்லாமும், திரும்பவும் இந்தப் பூமிக்குத்தான்… எவனும் எதுக்கும் சொந்தம் கொண்டாட முடியாது… அப்பப்போ வெறுமே என்னுது… என்னுதுன்னு டிராமா போட்டுக்கிட்டுத் திரிய வேண்டிதானே தவிர, ஒரு பிரளயம் வந்திச்சின்னு வச்சிக்கிங்க… அது எதுக்கு, வெறுமே ஒரு பூகம்பம் வரட்டும்….6.5. ரிக்டருக்கு மேலே ஒண்ணு கூடட்டும்….. எவனெவன் எங்கருக்கான்றது எவனுக்குத் தெரியும்? பெரிய பெரிய பணக்காரன்லாம் ஒரே நாள்ல ரோட்டுக்கு வந்திட்டதை, குஜராத்துல நாம பார்க்கலயா…?

ஆனாலும் வீர்யம் விடுதுங்கிறீங்களா? அவளுக்கும் விடல… எனக்கும் விடலன்னுதான் சொல்லணும்….உனக்கு நா பணிஞ்சு போறதாவது? அது இந்த ஜென்மத்துல இல்ல….பார்த்துருவோம் கடைசி வரைக்கும்…னு ரெண்டு பேரும் முறுக்கிக்கிட்டு நின்னே இத்தன வருஷம் ஓடிப் போச்சி….ஒரு உண்மை. அவ நின்ன இடத்துலயே நிலைச்சிட்டா…நாந்தான் ஆரம்பத்துலேர்ந்தே தடுமாறிட்டிருக்கேன்… அப்பப்போ விட்டுக் கொடுத்தது நாந்தானே?

யாருக்காச்சும் எங்க கத முழுசாத் தெரிஞ்சிச்சின்னு வச்சிக்கிங்க….சிரிப்பாச் சிரிப்பானுங்க….சரியான கேனைங்கப்பா இவங்கன்னு… அதுக்காக விட்டிட முடியுமா? ஒரு பொம்பளயே வீட்டுக்கு அடங்காம இப்டி இருந்தா, ஒரு ஆம்பள அப்புறம் என்னதாங்க பண்றது? அதுலயும் நா ரொம்ப வறுமைப்பட்ட குடும்பத்துலேர்ந்து வந்தவன்….சின்ன வயசுல ரொம்ப ரொம்பக் கஷ்டப்பட்டவன்…எனக்கு கொஞ்சம் துடிப்பு அதிகமாத்தான இருக்கும்…சுயகௌரவம் உடம்போட ஒட்டினதா, ரத்தத்தோட ஊறினதாத்தானே கிடக்கும்…. ரொம்ப சென்சிடிவ்வான ஆளுங்க…நா அப்டித்தான இருக்க முடியும்…! அவதான் தன்னை மாத்திக்கணும்…..வீட்டுப் பொம்பளைங்க எப்டி அடங்கிக் கிடக்காங்கற்கிறதைப் பொறுத்துத்தான் ஒரு வீடு வௌங்கும்… வௌங்காமப் போகும்….குத்து விளக்கு மாதிரிங்க… அடக்கமா நின்னு எரியணும்… அப்பத்தான் அழகு…..

எவ்வளவோ சொல்லிப்புட்டேன்….மறைமுகமாவும், நேரடியாவும் சொல்லிச் சொல்லி எனக்கும் அலுத்துத்தான் போச்சு….அவ திருந்துறாப்ல இல்ல….நா இருக்கிறபடிதான் இருப்பேன்னு இருந்துக்கிட்டிருக்கா….கேட்டா இது பிறவிக்குணம்ப்பா…அது ஒரு சாக்கு….அதென்ன பிறவிக் குணம்ங்கிறேன்? மனுஷன் தன்னை மாத்தியமைச்சிக்கிறதுக்குத்தான கடவுள் அறிவப் படைச்சிருக்கான்…? ஆறறிவு எதுக்காக? நாக்கு வழிக்கிறதுக்கா? வெறுமே யூஸ் பண்ணாம வச்சு பூஜை போடுறதுக்கா? ஆளு வளர வளர அறிவும் வளரணும்ல…? தனியா இருக்கந்தட்டியும் சரி… கலியாணம் ஆகி குழந்த குட்டிங்க… குடும்பம்னு ஆனப்புறமும் அப்டியே இருந்தா? சொந்த எடத்துலேர்ந்து, வந்த எடத்துக்கு மாறினப்புறமும் அப்பாம்மாட்ட முறுக்கிக்கிட்ட மாதிரியே இங்கயும் பண்ணினா? கழுத, எத்தன வருஷமாச்சு… மாற்ராங்கிறீங்களா? எனக்கும் சொல்லிச் சொல்லி, சண்ட போட்டுப் போட்டு அலுத்துத்தான் போச்சுங்க….இவ்வளவுதான் நம்ம லைஃப்புன்னு இப்பல்லாம் சுத்தமா உதறிட்டேன்….மனசு விட்டுப் போச்சுங்க…சாமியோவ்….அத்துக்கலாம்னு ஆயிரம்வாட்டி சொல்லிட்டேன்…அப்ப மட்டும் சைலன்ட் ஆயிடுவா…என்னவோ ஒரு அல்ப திருப்தி அப்போ எனக்கு…மனசோட மூலைல ஒரு சிறு நம்பிக்கை…என்னைக்காச்சும் கைகோப்பாளோ…?

எவ்வளவோ தரம் நான் என்னை மாத்திக்கிட்டு, வலிய வலிய அவகிட்டப் பேச்சுக் கொடுத்து, சரி பண்ணப் போராடியிருக்கேன்… கட்டுன பொண்டாட்டிகிட்ட என்ன கௌரவம் வேண்டிக் கெடக்குன்னு விளக்குமாராத் தேய்ஞ்சு தணிஞ்சு போயாச்சுங்க….அவ இருக்கிற எடத்தவிட்டு நகர்றாப்ல இல்லை… சரியான லூசு போலிருக்கு….எதுக்காக நாம இப்டி இருக்கோம்னு என்னைக்கு அவளுக்குத் தோணப் போகுதோ? அப்டித் தோணிச்சின்னா, அன்னைக்குத்தாங்க அவளுக்கு விடிமோட்சம்… ஆனா அப்போ யாரு இருப்பா, யாரு இருக்க மாட்டாங்கங்கிறத, ஆண்டவன்தான் நிர்ணயிக்கணும்… அவளுக்கான தண்டனைன்னு சொன்னம்பாருங்க… அதுதான் இது…

இந்த உலகத்துல பலருக்குமே, ஏன் எல்லாருக்குமேன்னே சொல்லலாம்….காலங்கடந்த ஞானமாத்தானே அமைஞ்சிருக்கு….என்ன வாழ்க்க வாழ்ந்தோம்னு ஒரு நாளைக்கு தோணிச்சின்னு வச்சிக்குங்க…. மனசு பட்டுன்னு வெறுத்துப் போயிடும்…. அப்பத்தான் ஒருத்தன் ரெண்டு பேர் தற்கொலை, அது இதுன்னு போயிடுறான்…. இவளுக்கெல்லாம் அப்டித் தோணுறதுக்கு, தோணாமயே இருக்கலாம்… ஏன்னா இவ அந்தமாதிரிக் கேசுதான்…..மனசுல வெட்டித் திமிராத் திரியறதென்ன மெச்சூரிட்டியா? அது இம்மெச்சூரிட்டில்ல? அப்டியாப்பட்ட ஆளுங்களுக்குத் திடீர்னு ஞானோதயம் வந்திச்சின்னு வச்சிக்குங்க, அது ஏறுக்கு மாறாப் போயி முடியறதுக்கும் வாய்ப்பிருக்கு…. கடைசி நஷ்டம் யாருக்கு? மீதமிருக்கிறவனுக்கு…. குடும்பத்துக்கு…. அதானே?

இத யாராச்சும் யோசிக்கிறாங்களா? யோசிச்சு, ஆரம்பத்துலயே தன்னை முழுமையா மாத்திக்கிட்டவங்க ஒருத்தரச் சொல்லுங்க பார்ப்போம்…. ஆம்பளயும் சரி, பொம்பளையும் சரி…. ஒவ்வொரு எடத்துல ஒவ்வொரு மாதிரி இருக்குல்ல…. எனக்கு அமைஞ்சது இப்படி… பல எடத்துல வீட்டு ஆம்பளைங்க கதையும் கந்தலாக் கெடக்குல்ல… பொம்பளைங்க கெடந்து பாடாப் படுறாங்கல்ல… இங்க நான் படுறமாதிரி…!

ஆனா ஒண்ணு சொல்றேங்க… என்னத் தவிர வேறே எவன் இவளுக்கு அமைஞ்சிருந்தாலும் என்னைக்கோ தற்கொல பண்ணிட்டுச் செத்துப் போயிருப்பான்…. அல்லது விட்டிட்டுக் கண்காணாம ஓடியிருப்பான்…. அதுதாங்க நெஜம்…. இம்புட்டுத் தொரட்டிழுப்புக்கும் ஈடுகொடுத்து வந்திருக்கேன்னா… அது எங்கப்பாம்மா என்னை வளர்த்த வளர்ப்புதாங்க…. அதுல ஒண்ணும் சந்தேகமேயில்ல….

என்னவோப்பா…. என்னென்னவோ சொல்ற…. நீ சொல்றதப் பார்த்தா எனக்குள்ள பயம்தான் வருது… எதுவும் ஏடா கூடாமாப் பண்ணிப்புடாத… பொம்பளயாக்கும்…. அந்தப் பாவத்தக் கட்டிச் சுமக்க முடியாது…. நெட்டயோ குட்டயோ…. வச்சிட்டு ஓட்டு…. இதுதான் நம்மளோட இந்த சன்மத்து தலவிதின்னு நெனச்சிக்க…. என்னைக்காச்சும் உன்னப் புரிஞ்சு பொருந்தி வராமயா போகப்போறா….? வருவா… அந்த நம்பிக்கையோட காலத்த ஓட்டு…..!

என்னை நினைச்சு எங்கம்மா சொன்ன வார்த்தைக இதுதான்…. இந்த உளைச்சல்லயே அம்மா சீக்கிரமாப் போயிட்டாகளோன்னு அடிக்கடி எனக்குத் தோணும்…. உங்கப்பா இருந்திருந்தா, இன்னும் திருத்தமாப் பார்த்திருப்பாக… எனக்கு அம்புட்டுத்தான் புத்தி….ன்னு அம்மா கடைசியாக் கண்கலங்கினது இன்னும் என் மனசுல அப்டியே….

சரி விடுங்க…. நீங்க எதுக்கு வருத்தப் படுறீங்க…. என் துயரம் என்னோட போகட்டும்… என்னவோ சொல்லணும்னு தோணிச்சு இன்னைக்கு…. கரை உடைஞ்ச மாதிரி வந்திடுச்சி…. கொட்டிட்டேன்….. காலம் மாறாமயா போயிடும்…. சக்கரம் சுத்தும்தானே…. என்னை மன்னிச்சிடுங்கன்னு ஒரு வார்த்த சொல்லாமயா போயிடப் போறா….அது கூட வேண்டாங்க….சம்பாதிக்கிறவ….அப்டிப் பகிரங்கமாக் கேட்குறதுக்கு லஜ்ஜையாக் கூட இருக்கலாம்… அப்டி ஓப்பனா எதிர்பார்க்கிறது கூடத் தப்புதான்னு சொல்லுவேன்….. மறந்திருங்க எல்லாத்தையும்னு சொல்லட்டும்…அது போதும்ங்கிறேன்….அப்டியே கட்டிப் பிடிச்சு அள்ளி முத்தத்தப் பொழிஞ்சிர மாட்டேன்? எம்புட்டு நேரம் ஆகும்….கணத்துல எல்லாஞ் சரியாப் போயிடாது…..நா அதுக்குத்தானங்க துடிச்சிக்கிட்டிருக்கேன்….இத்தன வருஷமா கல்லு மாதிரி நிக்கிறேன்னா…எவ்வளவு சகிப்புத்தன்மை இருக்கணும்னு நெனச்சிப்பாருங்க….எங்கப்பாம்மா எம்புட்டு உரத்தோட என்னை வளர்த்திருப்பாங்கன்னு நம்புங்க….அத்தனையும் நல்லதுக்குத்தான்னு நான் இருக்கேன்….அதான் இங்க முக்கியம்…எனக்கு எங்கம்மா வார்த்தைதான் முக்கியம்….அதக் காப்பாத்தேலேன்னா அப்புறம் அவுங்களுக்குப் புள்ளையாப் பொறந்து என்னா பிரயோசனம்? அவுங்க ஆத்மா என்னைக் கேட்டுக்கிட்டே கெடக்கும்ல…?

  நிலவைப் பார்த்து வானம் சொன்னது…..என்னைத் தொடாதே….

  நிழலைப் பார்த்து பூமி சொன்னது….. என்னைத் தொடாதே….. –

எங்கோ ஒலிக்கும் பாடல் வரிகள்                                       

  • உஷாதீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad