\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பகுத்தறிவு – பகுதி 2

Filed in அன்றாடம், ஆன்மிகம் by on January 31, 2016 1 Comment

pakuththarivu2_620x446

(பகுதி – 1)

இந்தப் பகுதிக்கான முன்னுரையை எழுதி இரண்டு மாதங்கள் உருண்டோடி விட்டன. இரண்டாம் பகுதி எழுதும் “மனநிலை” (மூட்) வரவேயில்லை. ஏனென்று தெரியவில்லை. ஒருவேளை அந்தக் கடவுளுக்கு நான் இதுபற்றி எழுதுவது பிடிக்கவில்லையோ? அவன்தான் தனது திருவிளையாடலினால் எனக்கு “மூட்” வரவிடாமால் செய்கிறானோ? இருக்கலாம்.. ஆனால் அந்தக் கடவுளுக்கு இந்த உலகத்தில் வாழும் கோடானுகோடி மனிதர்களில், அடுத்த வீட்டு மனிதருக்குக்கூட அவ்வளவாக அறிமுகமில்லாத என்னைத் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் வந்திருப்பது சாத்தியமோ? அப்படியே தெரிந்து கொண்டாலும், நான் என்ன காளமேகப் புலவரா, அரம் பாடியே அழித்து விடுவேன் என்று பயந்து அவன் நான் எழுதுவதை நிறுத்த முயன்றிட?

அது சரி, இதுவரை அவன், அவன் என்று சொல்கிறேனே, யார் அவன்? அதனை ஒரு ஆண்பாலாகக் குறிப்பிடுவது சரிதானா? அது பெண்ணினத்தை ஒதுக்குவதாக ஆகாதா? ஆணினத்தின் ஆதிக்க வெறியாகத் தோன்றாதா?

இந்தக் கட்டுரைக்காகத் தோண்டித் தோண்டி ஆராய்ந்து எது குறித்து எழுதலாம் என்று நினைத்துப் பார்க்கையில், திரும்பத் திரும்ப நினைப்பின் மையக் கருத்தாக வந்து நிற்பது ”கடவுள்” என்ற கருத்தே. நூற்றுக் கணக்கான வேறு பல விஷயங்களையும் எழுத முடியுமென்றாலும், அவற்றில் பலவற்றை எழுதப் போகிறோமென்றாலும், கடவுள் பற்றி எழுதுவதே முழுமுதலான தேவையாகத் தோன்றுகிறது. கடவுள் என்ற ஒன்று இருக்கிறது அல்லது இருக்கிறார் என்று நினைப்பது மூட நம்பிக்கைகளின் உச்சமான ஒன்று என்று இன்றைய “பகுத்தறிவாளர்கள்” என்று தங்களைப் பறைசாற்றிக் கொள்ளும் நாத்திகவாதிகளின் கருத்தாகத் தோன்றுகிறது. கடவுள் இல்லை என்று நினைப்பது, நம்புவது அவர்களின் உரிமை. அது குறித்து நமக்கு எந்த மறுப்பும் இல்லை. ஆனால், “கடவுளை நம்புபவன் முட்டாள்” என்று கருத்துமணியைப் பொதுமேடையில் உதிர்க்கையில்தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. இதற்குச் சரியான பதிலடி கொடுக்க வேண்டுமென்று தோன்ற ஆரம்பிக்கிறது. பதிலடியைத் தனிமனிதச் சாடலாக ”கடவுளை நம்பாதவன் முட்டாள்” என்று இல்லாமல், நமது நம்பிக்கைகளின் காரணங்களையும், நம்பாதவர்களின் வாதங்களின் பலவீனங்களையும் எடுத்துக் காட்டுவது என்று முடிவு செய்வது அவசியமாகிறது.

அவர்கள் பொதுவாகப் பலவிதமான கேள்விகளைக் கேட்பது நாம் அறிந்ததே. இவற்றில் புத்தி பூர்வமான கேள்விகளும் அடக்கம், மரியாதைக்குரிய பத்திரிக்கைகளில் எழுத முடியாதவைகளான கேள்விகளும் அடக்கம். இன்றைய சமூகத்தில், கிட்டத்தட்ட எல்லா மதங்களிலுமே இடைச் செருகல்களாகப் புகுந்து விட்ட பல விஷயங்கள் கடவுள் நம்பாமல் இருப்பவர்களின் கருத்துக்களுக்கு வலிமை சேர்க்கும் அளவுக்குத்தான் இருக்கிறது என்பது நாம் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. இதுபோன்ற மூட நம்பிக்கைகள் உலகின் எல்லா இனங்களை, மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் உள்ளன என்பதுதான் உண்மை. ஆனாலும், நமக்கு ஓரளவு அறிமுகமானது நாம் பிறந்து, நம் பெற்றோர்கள் கடைபிடித்த மதமான ஹிந்து மதம் மட்டும்தான். அதனால் அந்த மதம் குறித்து மட்டுமே எழுத முடியுமென்பதால் அதனை மட்டுமே எழுதுவதென முடிவெடுத்திருக்கிறோம்.

பகுத்தறிவாளர்கள் என்று தங்களைக் காட்டிக் கொள்ள நினைக்கும் நாத்திகவாதிகள் பொதுவாகச் சொல்லும் இன்னொரு விஷயம் “மதச்சார்பின்மை”. அவர்களின் மதச்சார்பின்மை சற்று வித்தியாசமானது. மதச்சார்பின்மைப் போர்வை அவர்களுக்குக் கொடுக்கும் வசதி, ஆன்மிகம் குறித்த எந்தச் சடங்கையும் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதே. உண்மையான மதச்சார்பின்மை என்பது, தான் பிறந்த அல்லது சார்ந்துள்ள ஒரு மதத்தை மட்டும் பெரிதாக நினைத்து வேறு மதத்தினரின் நம்பிக்கையைப் புண்படுத்தாமல் இருப்பதே என்ற கருத்தெல்லாம் அவர்களுக்கு அறிவு பூர்வமாகப் புரிந்தாலும், அவர்களின் இறை மறுப்பே மதச்சார்பின்மையைப் பெரிய அளவு பேசத் தூண்டுதலாக இருக்கிறது என்பது நமது கருத்து. இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், தீபாவளி, கிறிஸ்துமஸ், பக்ரீத் என எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதுதான் உண்மையான மதச்சார்பின்மை என்று பலர் கருதினாலும், இவை எல்லாவற்றையும் அறவே துறப்பதே மதச்சார்பின்மை என்பர் நாத்திகர்கள். இவர்களின் வாதத்தை ”மதச்சார்பின்மை” என்று ஏற்றுக் கொள்வதைவிட “நாத்திகத்தனம்” என்று மட்டுமே பார்க்க இயல்கிறது. இவர்களிடமாவது ஓரளவு நேர்மை இருக்கிறது என்று ஒப்புக் கொள்ளலாம்.  ஒரு சில அரசியல்வாதிகள், தங்களைச் சீர்திருத்தவாதிகள், முற்போக்கு வாதிகள் எனக் காட்டிக் கொண்டு, ஆடி அமாவாசைக்கு உபவாசம் இருப்பது மூடநம்பிக்கை எனக் கூறி ரம்ஜான் நோம்பு இருப்பது உடலுக்கும் மனதிற்கும் உயர்வைக் கொடுக்கும் என்று பேசுவர். இது எப்படிப்பட்ட முற்போக்குவாதம், பகுத்தறிவு வாதம் அல்லது மதச் சார்பின்மை ஆகுமென்பது நாமறியாதது.

ஹிந்து மதம் குறித்துப் பேசப் போகிறேன் என்ற காரணத்தினால், நான் மதச் சார்பின்மை இல்லாதவனல்ல என்பதை விளக்குவதற்காகவே மேலுள்ள கருத்துக்களைக் குறிப்பிட்டேன். நான் “இந்தியன்” என்றால் மற்றெல்லா நாட்டுப் பிரஜைகளையும் குறைவாகப் பேசுகிறேன் என்று அர்த்தமல்ல. நாடு என்பது ஒரு அடையாளம் என்பது போல் மதம் என்பதும் ஒரு அடையாளமே. நான் இந்த மதத்தைச் சார்ந்தவன், அதனால் அடுத்த மதங்களை இழிவாகப் பேசுவேன், நடத்துவேன் என்று இருப்பது மட்டுமே மிகவும் கடுமையாகக் கண்டனம் செய்யப்பட வேண்டியது. அது போன்ற எண்ணங்கள் இல்லாமல் எல்லோரையும் சமமாக நினைத்து, நடத்தும் ஒருவர் ஏதோ ஒரு மதத்தின் நம்பிக்கைகளை, சடங்குகளை, பழக்க வழக்கங்களைக் கடைபிடித்து வாழ்வேன் என்று நினைப்பதில் எந்த ஒரு தவறுமில்லை என்று ஆணித்தரமாகச் சொல்லிக்கொள்ள விழைகிறேன்.

மதத்தோடு சேர்ந்து மொழியையும் குறிப்பிட வேண்டிய கட்டாயம் இப்பொழுது. தமிழ் மொழி தொன்மையான மொழிகளில் ஒன்று என்று கூறுவதை விட, உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி என்று கூறுவதுதான் சாலச் சிறந்தது என்பது நம் சொந்தக் கருத்து. தமிழ் உயர்வான மொழி என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் அதற்காக மற்ற மொழிகளெல்லாம் ஏதோ பேசுவதற்கே தகுதியில்லாதவை என்று நினைக்குமளவுக்கு ஒருதலையான எண்ணம் கொண்டவரன்று நாம்.

மதங்களையும், நம்பிக்கைகளையும், ஆதாரங்களையும், அர்த்தங்களையும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் மொழிபற்றிய புரிதல் ஆழமாக இருக்க வேண்டுமென்பதும் உண்மை. ஹிந்து மதத்தின் தாத்பரியங்களையும் அவற்றின் ஆழத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் சமஸ்கிருதத்திலோ அல்லது தமிழிலோ ஆழமான புரிதல் இருப்பது மிகவும் உதவிகரமானது என்பது எனது சொந்த அனுபவம். பல தமிழ் பேசும் நாத்திகர்கள் மதச்சார்பான விஷயங்களை வெறுத்து ஒதுக்குவது அவை சமஸ்கிருதத்தில் அமைந்துள்ளன என்பதுதான் நமது புரிதல்களில் ஒன்று. அவை சமஸ்கிருதத்தில் மட்டும்தான் அமைந்துள்ளன என்பது தவறான புரிதல்களில் ஒன்று, அதுபற்றி விவரமாக இனிவரும் இந்தத் தொடரில் பார்ப்போம். ஆனால், அப்படியே ஒரு வேளை அந்தக் கருத்து உண்மையென்று வைத்துக் கொண்டாலும், கணினி குறித்த பாடங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ள நிலையில் அதனைப் படிப்பதற்குத் தயங்காத இந்தத் தமிழ்ப் பற்றாளர்கள் சமஸ்கிருதத்தைப் படிப்பதற்கு மறுப்பதற்கான காரணம் என்ன என்பது நம்மை எப்போதுமே வாட்டியெடுக்கும் கேள்விகளில் ஒன்றாகும். இதற்கு நம் மனதில் ஒரு பதில் உள்ளது, அந்த பதில் சரிதானா என்று ஆராய்ந்தறிய வேண்டிய பொறுப்பிருப்பதாக நினைப்பதால், நமது அனுமானத்தைக் குறிப்பிடுவது சரியாக இருக்காது என நினைத்துத் தவிர்க்கிறோம்.

(தொடரும்)

  • வெ. மதுசூதனன்.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. M K RAMMOHAN says:

    Super, God bless you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad