\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

காதலும் கடந்து போகுமோ?

Filed in இலக்கியம், கதை by on January 31, 2016 0 Comments

காதலும்_கடந்து_போகுமோபனிக்காலங்களில் போர்ச்சில் அமர்ந்து அந்த ஏரிக்கரையைப் பார்த்துக் கொண்டிருப்பது விக்கிக்கு மிகவும் பிடிக்கும். உறைந்து போய் வெண்படுகையாய் மாறிப் போன ஏரி; இலைகள் உதிர்ந்து கிளைகள் பரவிக் கிடக்கும் மரங்கள்; ஒரு பக்கமாகக் காற்று வீசியதால் அவற்றில் பாதிப் பக்கங்களில் ஒட்டியும் ஒட்டாமலும் காற்றில் ஊசலாடிக் கொண்டிருக்கும் பனித்துகள்கள்; இரவு தொடங்கப் போகிறது எனக் கட்டியங்கூறும் தூரத்து வீடுகளில் மஞ்சளாய் எரியும் விளக்குகள்; எங்கிருந்து வந்தன என்று அறியாத வண்ணம் விர்ரென்று பறந்து போகும் சிறு பறவைகள் – எல்லாம் சேர்ந்து ஏற்படுத்தும் விகல்பமில்லா நிச்சலம் அவருக்கு மிகவும் பிடித்தவொன்று. அந்த ரசனைக்காகவே தேடித் தேடிப் பார்த்து ஏரியை நோக்கியிருக்கும் வீட்டை வாங்கினார். ஒவ்வொரு தினமும் இதை நினைத்துத் தன்னைத் தானே அவர் பாராட்டிக்கொள்வதுண்டு. அன்றும் அப்படித்தான், கனமான ஸ்வெட்டர், பேண்ட் அணிந்து, சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஏரியை ரசித்துக் கொண்டிருந்தார்.  கையிலிருந்த கண்ணாடி டம்ளரில் குளிருக்கு இதமான ரம்மில், ஐஸ் கட்டிகள் மிதந்து கொண்டிருந்தன.

‘ஹாய் மிஸ்டர்.மேனன் .. எப்படி இருக்கீங்க…’ பக்கத்து வீட்டு முற்றத்திலிருந்து எட்டிப் பார்த்த அபி – கேட்டாள்.

‘நான் நல்லாயிருக்கேன்.. நீ எப்படி இருக்கே …’

‘நானும் நல்லாவே இருக்கேன் .. இன்னைக்கு நேரமிருக்குமா? …

’வெள்ளிக்கிழமை சொல்றேன்னு ரெண்டு நாளைக்கு முன்னாடி சொன்னீங்க .. இன்னைக்கு வெள்ளிக்கிழமை .. நான் வரவா?’

விக்கி உதட்டளவில் புன்னகைத்தாலும், இவள் விட மாட்டாள் போலிருக்கிறது என்று அலுத்துக் கொண்டு …’ வா .. வா .. பார்க்கலாம் ‘ என்றார்.

‘பார்க்கலாம் எல்லாம் இல்லை … இன்னைக்குக் கண்டிப்பாச் சொல்லணும் நீங்க .. இன்னும் இருபது நாளைக்குள்ள நான் எல்லாம் தயார் பண்ணணும் ..’

‘சரி .. வா’ என்று கையசைத்து அழைத்தார்.

அபி – அபிகெய்ல் – பக்கத்து வீட்டிலிருக்கும் 23 வயது இளம்பெண். ஸ்காட்லாந்து பூர்வீகம்; ஆனால் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மினசோட்டாவில் தான். மினியாபோலிஸ் ஆர்ட் இன்ஸ்டிட்டியூட்டில் திரைக்கதை புனைவில் சிறப்பாய்வுப் பட்டம் படித்து வருகிறாள். விக்கியைப் போலவே தனிக்கட்டை. அதனால் தானோ என்னமோ வீட்டிலிருக்கும் மாலை வேளைகளில் விக்கியுடன்  அரட்டையடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டவள். எப்போதோ ஒருமுறை வாலண்டைன் சமயத்தில் “நீங்க எப்பவாது, காதலிச்சிருக்கீங்களா?” என்று அதிரடியாய்க் கேட்டு வைக்க,  என்ன சொல்வதென்று புரியாத விக்கி ‘அது எப்பவோ … சரியா ஞாபகம் கூடயில்லை ‘ என்று சமாளித்தார். சென்ற மாதம் திடீரென ஒரு நாள் அபி வந்து தனது ப்ராஜெக்ட்டுக்காக ஒரு கதையைத் தேடிக்கொண்டிருப்பதாகவும், விக்கியின் காதலைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலுடன் இருப்பதாகவும் சொல்லி, மெல்ல அரித்து அரித்து இன்று ஒரு முடிவுடன் வந்து கொண்டிருக்கிறாள்.

உள்ளே சென்று கிளாசை நிரப்பிக்கொண்டு வருவதற்குள், அபி வந்து நின்றாள். ஒரு கையில் செல்ஃபோனும், மறு கையில் பகார்டி ரம் பாட்டிலுமாக நின்ற அவள் குட்டையான பச்சை நிற ஸ்கர்ட்டும், மேலே வெளிர் மஞ்சளில் கார்டிகனும் மட்டுமே அணிந்திருந்தாள்.

‘இன்றைய நீண்ட இரவுக்காக நேற்றே வாங்கி வைத்தேன்’ என்று பகார்டி பாட்டிலை உயர்த்திக் காட்டி இரு கைகளையும் விரித்தாள்.

‘இந்தக் குளிருக்குப் பொருத்தமான உடை தான் அணிந்து வந்திருக்கிறாய் ..பைத்தியமா உனக்கு’ என்றவாறு அவளைச் சன்னமாக அணைத்தார் விக்கி. அவளது உடல் சில்லிட்டுக் கிடந்தது.

‘இல்லை .. நீங்க சரின்னு சொன்னதும், உங்க மனசு மாறதுக்குள்ள வந்துடணும்னு ஓடிவந்தேன் .. குளிரைப் பற்றி நினைக்கவேயில்லை..’ என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே உள்ளே சோபாவில் கிடந்த பெரிய கம்பளியை எடுத்து நீட்டினார் விக்கி. பகார்டியையும், ஃபோனையும் மேஜை மீது வைத்துவிட்டு நன்றி சொல்லியவாறு வாங்கி அணிந்து கொண்டவள் கைகளைப்   பரபரவென்று தேய்த்து இரு கன்னங்களிலும் வைத்து “சுகமாக இருக்கிறது” என்றாள்.

மேஜை மீதிருந்த மற்றொரு கிளாசில் சிறிதளவு பகார்டியை ஊற்றி முகத்தருகே வைத்து முகர்ந்துவிட்டு ‘வாவ்’ என்று சொல்லி நாற்காலியில் அமர்ந்து ‘நேரம் கடத்தாமல் துவங்கலாம் … சொல்லுங்கள்’ என்று விக்கியின் கண்களை ஊடுருவினாள்.

அவளது குரலின் கண்டிப்பை  உதாசீனப்படுத்துவது போல, தோள்களை லேசாகக் குலுக்கி ‘என்ன சொல்வது?’ என்றார் விக்கி.

‘உங்களின் காதலைப் பற்றிச் சொல்லுங்கள் ..’

‘அது நிறைய வருஷங்களுக்கு முன்பு நடந்தது .. எனக்குப் பெரிசாக எதுவும் நினைவில்லை..’

‘எனக்குத் தெரியும்.. இந்தியர்களின் காதல் வலுவானது

..உணர்வுப் பூர்வமானது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்… உங்களுக்கு நினைவிருக்கும் வரை சொல்லுங்கள் போதும்.’

‘நினைவிருக்கும் விஷயங்களைச் சொல்கிறேன் . கேலி செய்யக் கூடாது, சரியா?’

‘சத்தியமாகக் கிண்டலடிக்க மாட்டேன் .. ‘

‘எனக்குப் பதினெட்டு, பத்தொன்பது வயதிருக்கும் சமயத்தில் அவளை முதல் முதலாக சந்திக்க நேர்ந்தது.. நாள் தேதியெல்லாம் நினைவில்லை.. ஆனால் மெட்ராஸில் நான் சி.ஏ. தேர்வுக்காகப் பயிற்சி பெற்று வந்த கல்வி நிலையத்தில் அவளும் படித்து வந்திருக்கிறாள் என்பதை அறியவே வெகு நாட்களானது…’

‘ஒகே.ஒகே.. அவங்க பேரு என்ன?’

‘சாரு .. சாருலதா’

அந்தக் கல்வி நிலையம் நகரத்தில் பல ஆடிட்டர்களை உருவாக்கிப் பிரசித்திப் பெற்றிருந்தது. நிஜமாகவே சில புத்திசாலி மாணவர்களும், புத்திசாலிகளாகக் காட்டிக் கொள்ள முனைந்த பல மாணவர்களும் அங்கே சேர்ந்திருந்தனர். பணம் ஒன்றையே அடிப்படைத் தகுதியாகக் கொண்ட என்னையும் அங்கே என் அப்பா தான் சேர்த்துவிட்டார். காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரையிலும் கூட்டம் அலை மோதும். ஆறு மாதத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருவதாக அப்பா சொல்லியிருந்த ஒரே காரணத்தினால் அங்கு சேர்ந்திருந்த என்னால் யாருடனும் எளிதில் பழக முடியவில்லை. காலையில் எழுந்து குளித்து, பட்டையாக விபூதி பூசி, பெரிய புத்தகங்களைச் சுமந்து வந்து, வகுப்பு இடைவேளைகளில் முந்தின தினம் கேட்ட இளைய பாரதம் நிகழ்ச்சியை அலசும் கூட்டத்தினரை ஏறெடுத்துக் கூட பார்த்ததில்லை நான்.

ஒரு நாள் இடைவேளையில் வகுப்பில் அமர்ந்திருக்கும் போது பக்கத்து அறையிலிருந்து எனக்கு மிகவும் பரிச்சயமான தமிழ்ப் பாடலை யாரோ ‘ஹம்’ செய்வது கேட்டது. என்னையுமறியாமல் மேஜையில் தாளம் போட்டேன். திடிரென்று ‘ஹம்மிங்’ நின்று ‘நீங்களா தாளம் போட்டது?’ என்று ஒரு முகம் எட்டிப் பார்த்தது. அது தான் அவளை முதன் முதலில் கவனித்தது என்று நினைக்கிறேன். அங்கிருந்த கும்பலில் நட்புடன் பேசிய முதல் குரல்! அதை நான் எதிர்பார்க்காததால் சற்றுத் தடுமாறியபடி பதில் சொன்னேன்.

‘ஆமாம்.. இல்லை என்னையறியாமல் செய்து விட்டேன்.. எனக்குப் பிடித்த பாட்டு அது ..’

‘எனக்கும் இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும்..’ சொல்லிவிட்டு மறைந்து விட்டது அந்த முகம். அதுவரையில் யாரிடமும் பழகாததாலோ என்னமோ, அந்த முகம் பிடித்துப் போனது.

அதன் பின் அவளைப் பலமுறை அங்கிருக்கும் கும்பல்களில் பார்த்திருக்கிறேன். அரட்டையடிக்கும் கும்பலில் மெதுவே அவள் மட்டும் தனித்துத் தெரிந்தாள். என்னைக் கவனித்து விட்டால் அவள் மட்டும் அமைதியாகி விடுவதையும், அவளது கண்களின் படபடப்பையும், மூடிய இதழ்களிடையே தோன்றி மறையும் சிரிப்பையும் புரிந்து கொள்ளச் சில காலம் ஆனது. திடிரென ஒரு நாள் ரங்கராஜன் மாஸ்டர் வராததால், இரண்டு வகுப்புகளை ஒன்றாக இணைக்க ஏற்பாடானது. இடைவேளையில் இளைய பாரதக் கூட்டம் வெளியேறிவிட அதற்காகவே காத்திருந்தது போல்

‘ஏன் எப்போதும் அமைதியா இருக்கீங்க?’ என்றாள்.

‘இல்லை எனக்குத் தமிழ் அவ்வளவா வராது..ரண்டு வருஷமாத்தான் மெட்ராஸ்ல இருக்கேன்’

‘மலையாளமா?’

‘ஆமாம்.. எப்படிக் கண்டுபிடிச்சீங்க..’

‘’ரண்டு’ செகண்டுக்கு முன்னாடி தோணுச்சு.’ சிரித்தாள். பொதுவாக என்னை யாராவது கிண்டலடித்தால் கோபம் வந்துவிடும். அன்று வரவில்லை.

நாட்கள் செல்லச் செல்ல, நானறியாமல் என்னுள் புகுந்து, நிரம்பி மனதை ஆக்கிரமித்து அரித்துக் கொண்டிருந்தாள். வலிய அவளுடன் தனித்துப் பேச சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டேன். அதிசயமாக எனக்குப் பிடித்த விஷயங்களும், ரசனைகளும் அவளுக்கும் பிடித்திருந்தன. அவளுக்குப் பிடித்தவற்றுடன் நான் பிடித்தம் ஏற்படுத்திக் கொள்ள முயன்றேன். எல்லாவற்றையும் விட எங்களுக்குள் பழக்கமும், நெருக்கமும் ஏற்படுத்தியது எங்கள் இருவரின் இசை ரசனை தான். இந்தியத் திரையிசை வட்டத்துக்குள் சுற்றி வந்த என்னை, உலக இசைக்கு அறிமுகப்படுத்தியவள் அவள்தான். இசையைப் பற்றிப் பேசத் தொடங்கி விட்டால் அவளுள் ஏற்படும் துள்ளலும், கண்களில் வழியும் மகிழ்ச்சியும் சொல்லி மாளாது. சில சமயங்களில் வாத்திய அடுக்குகளை விளக்கக் கண்களை மூடிச் சன்னமாக அவள் ஸ்வரங்களைப் பாட கேட்பதற்கு அலாதிச் சுகம் பிறக்கும்.

விரைவில் எங்களது அன்னியோன்யம் இன்ஸ்டிட்டியூட்டில் பலரது புருவங்களை உயர்த்தியது. அசைன்மெண்ட் என்ற பெயரில் ஒரு நாள் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அவளது பேச்சும், அணுகுமுறையும் அனைவரையும் கவர்ந்திட நேரமிருக்கும் சமயங்களில் அவள் என் வீட்டுக்கு வருவதும், நான் அவளது வீட்டுக்குப் போவதும் வாடிக்கையானது. பல சமயங்களில் வகுப்பு முடிந்து ரயில் நிலையம் வரையில் இருவரும் ஒன்றாக நடந்து வருவதுண்டு. ரயில் நிலையத்துக்கு நெருக்கத்தில் தண்டவாளத்தைக் கடந்து தான் ரயிலடிக்குச் செல்ல வேண்டும். அந்தச் சமயங்களில் ஒற்றைத் தண்டவாளத்தில் பேலன்ஸ் செய்தவாறே நடந்து வருவது அவளுக்குப் பிடிக்கும். ஒரு முறை அப்படி நடக்கும் போது கீழே விழ இருந்தவள் பக்கத்தில் நடந்து வந்த என் தோளைப் பிடித்துக் கொண்டாள்.

‘நான் இல்லைன்னா கீழ விழுந்திருப்பீங்க ..’ என்று நான் சொன்னதுக்கு,

‘நீங்க தான் எப்பவும் பக்கத்தில இருப்பீங்களே.. விழ மாட்டேன்’ என்று அவள் சொன்னது என் மண்டையை அரிக்கத் தொடங்கியது.

ஏன் அவள் அப்படி சொல்ல வேண்டும்? என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் அதே எண்ணங்கள் அவளுள் ஓடுகிறதோ? என்னை ஆழம் பார்க்கச் சொல்லியிருப்பாளோ? தினமும் அதைக் கேட்டுவிட வேண்டும் என்று மனம் துடித்தாலும், அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ, அதனால் இந்த உறவு முடிந்து விடுமோ என்ற பயம் .. பத்து நொடிகளில் அவள் கேட்டது பல மாதங்கள் என்னை அலைக்கழித்தது. அவளும் இதே நிலையிலிருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு நாள், வழக்கமாக ரயிலடியில் காத்திருந்து அவள் வராமல் போகவே நான் மட்டும் வகுப்புக்குப் போக, அவள் எனக்கு முன்னரே வந்து விட்டிருந்ததை வாசலில் கிடந்த அவளது செருப்புகள் சொல்லின. ஏன் என்னை வீணாகக் காக்க வைத்தாளென்று கோபம் வந்தது. எல்லாம் ஓரிரு நொடிகள் தான்.. கருநீலப் புடவையில் தேவதை போல் நின்றிருந்தாள். அவள் நெற்றியிலிருக்கும் சிறிய மஞ்சள் கீற்றும், கூந்தல் வாசமும் கிறங்கடித்து வசியம் செய்தது. என்னைப் பார்த்ததும் அவளது கண்கள் பிரகாசமாக விரிந்தன. ஈரமான, வில் போன்ற நேர்த்தியான அதரங்கள் பிரிந்தன…  

“விபூதி எடுத்துக்குங்க .. இன்னைக்கு உங்க பர்த்டே தானே?”

தூக்கிவாரிப் போட்டது எனக்கு.

“எனக்கே ஞாபகமில்லை ..உங்களுக்கு எப்படி ..”

“எல்லாம் தெரியும்.. உங்கம்மா கிட்ட ரெண்டு.. இல்லையில்ல ரண்டு மாசம் முன்னாடியே கேட்டு வெச்சிட்டேன்” .. சிரித்தாள்.. கன்னங்கள் குழித்தன..

அத்தனை அன்பா சாரு என் மேல்? அதற்கு முன்பு பல முறைகள் தெரிந்தோ, தெரியாமலோ அவள் உடல் என் மீது பட்டபோதெல்லாம் தோன்றாத உணர்வு என்னை ஆட்டிப் படைத்தது. ஏற்கனவேயிருந்த கோபம், வேகம் அனைத்தும் முறுக்கேற்றிவிட அவளை அப்படியே அணைத்து முத்தமிடவேண்டும் போலிருந்தது. என் மனவோட்டத்தைப் புரிந்துக் கொண்டதைப் போல..

“ஷ்…யாரும் பாக்கிறதுக்கு முன்னாடி விபூதி மட்டும் எடுத்துக்குங்க ..” இடது சுட்டுவிரலை உதட்டின் மீது வைத்து மிரட்டினாள்.

அன்று மாலை எனது மோட்டார் சைக்கிளில் அவள் வீட்டருகேயிருந்த மலைக்கோயிலுக்குச் சென்றிருந்தோம். எப்படியும் என் மனதில் தோன்றுவதைச் சொல்லிவிட வேண்டுமெனத் துடித்தேன். வழி நெடுக அதை எப்படிச் சொல்லுவது என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தி நேர வெயிலென்றாலும் காட்டமாகவேயிருந்தது. அடர்த்தியான மர நிழலில் இருந்த ஒரு கல்லில் நான் உட்கார இடமளித்து அமர்ந்தாள். இலைகளினூடே தப்பித்து வந்த சூரியக் கதிர்கள் அவளது ஒரு பக்க முகத்தைச் செம்மஞ்சளாய்க் காட்டியது. இதமான காற்றில் அலைந்து கொண்டு முகத்தில் விழுந்த மெலிய முடிக் கற்றையை இடது கையால் காதுக்குப் பின்னே ஒதுக்கினாள். அடுத்த நொடியே காற்றின் பலம் தாங்காது அந்தக் கற்றை பறந்து வந்து மீண்டும் அவளது கன்னங்களைத் தழுவியது..மீண்டும் அதை ஒதுக்கிக் கொண்டே

“சொல்லுங்க .. பர்த்டே பாய்க்கு என்ன சொல்லணும்?”

“இந்த நொடியே செத்துடணும்னு தோணுது”

சிரித்தாள்..”ஏன்?”

“தெரியல.. தேவதையை நேர்ல பாக்கற மாதிரி இருக்கு..”

“அதுக்காகச் செத்துடணும்னு யாரு சொன்னது..எனக்குத் தெரிஞ்சு ஆர்டிஸ்ட்ஸ், மியுசியன்ஸ் லாம் தான் ரொம்ப உணர்ச்சி வசப்படுவாங்கன்னு  கேள்விப்பட்டிருக்கேன்.. ஆடிட்டருக்கெல்லாம்கூட அது இருக்கா?  மொதல்ல இங்க உக்காருங்க” கல்லில் மீதமிருந்த இடத்தைத் தட்டிக் காட்டினாள்

“இல்லை சாரு.. உங்கள நேரா பாத்துகிட்டே இருக்கணும் .. உங்களப் பத்தி நிறைய சொல்லணும்னு நினைப்பேன்.. ஆனா என்ன சொல்றது எப்படிச் சொல்றதுன்னு தெரில..பொதுவா சின்ன வயசிலிருந்தே நான் தனிமையை விரும்புவேன்.. ஆனா இப்பல்லாம் ஒரு செகண்ட் கூட தனியா இருக்கப் பிடிக்கல .. எப்பவும் உங்க கூடவே இருக்கணும் போலயிருக்கு  ”

உதிர்ந்த்திருந்த மரக்கிளைக்  குச்சியை வைத்துத் தரையில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து என் கண்களை நேராக நோக்கினாள்.. குட்டிக் குடையாய் விரிந்த இமைகள் வழியே பரவசம் தெரிந்தது

“எனக்குப் புரியுது விக்கி.. உண்மையைச் சொல்லணும்னா என்னையும் அந்த மாதிரி எண்ணங்கள் துரத்துது.. பல சமயங்கள்லே நீங்க எப்பவுமே கூட இருக்க மாதிரியே தோணும்.. நான் படிக்கும் போது என் பின்னாடியிருந்து எட்டிப் பாக்கிற மாதிரி.. முன்னாடி வந்து சிரிக்கிற மாதிரி.. எழுதும் போது நிறைய தடவை உங்கப் பேரை எழுதிப் பாத்து சிரிச்சிருக்கேன்.. உங்களுக்கு ஞாபகமிருக்கான்னு தெரியல.. அன்னைக்கு ட்ராக்ல நடந்துப் போகும் போது யதேச்சையா நீங்க இருக்கும் போது விழ மாட்டேன்னு சொன்னேன்.. எதுக்காக அப்படிச் சொன்னேன்னு நினைப்பேன்”

வானத்திலிருந்த மேகங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து என்னைத் தூக்கிச் செல்வது போல மனம் அத்தனை லேசாகிப் போய், மகிழ்ச்சி பொங்கியது – உடல் சிலிர்த்தது எனக்கு. “நிஜமாச் சொல்றேன் சாரு.. எனக்கு நீங்க அன்னைக்குச் சொன்னதை நெனச்சு தூக்கமேயில்லை..ரண்டு பேரும் ஒரே மாதிரி நெனச்சிருக்கோம்”

“எத்தனை பேரும்?” என்றவள் சிரித்தாள்.

“இதே மாதிரி வேற யாராவது கேட்டிருந்தா எனக்கு கோபம் வந்திருக்கும்..”

“தெரியும் தெரியும்.. உங்க ஃபேமிலியிலேயே நீங்க தான் கோபக்காரராமே.. எல்லாத்துலேயும் பிடிவாதம் .. உங்களுக்குப் பொங்கல் பிடிக்காதுன்றதால வீட்லே பொங்கலே செய்யக் கூடாதுன்னு ஆர்டர் பண்ணுவீங்களாமே…எதுலயாவது தோத்துப் போயிட்டா அழுவீங்களாமே.. ”

என்னென்னமோ பேசினாள்.  என்னைப் பற்றி நானறியாத கோணங்களிலெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாள். சூரியன் ஏறக்குறைய மறைய, வானம் சிவப்பும் ஊதாவும் கலந்து வண்ணம் பூசிக்கொண்டது. பறவைகள் கூட்டமாகப் பறந்து செல்ல, ஒரு சில குட்டிப் பறவைகள் நாங்கள் அமர்ந்திருந்த மரத்தருகே தஞ்சம் புகுந்து கீச்சிட்டன. தூரத்து மாதா கோயிலின் மணியோசையைச் சுமந்து வந்த காற்று உடலில் பரவிச் சென்றது.

“ஜான் கீட்ஸ் படிச்சிருக்கீங்களா சாரு?”

“ஏன்?”

“நீங்க பேசறது அவ்வளவு சுகமாயிருக்கு”

“நீங்க பெரிய ரசிகன் விக்கி.. எல்லாத்தையும் உணர்வுப் பூர்வமா ரசிக்கிறீங்க.. உங்க ரசனை எனக்கு ரொம்பப் பிடிக்குது.. நாளாக நாளாக எனக்கு பயமாயிருக்கு .. இது ஃப்ரெண்ட்ஷிப்பா இல்ல வேற எதாவதான்னு தெரில ..எனக்குப் பிடிச்சிருக்கு.  ஆனா எப்பவும் இப்படியே இருப்பமா? தெரில.. பயமாயிருக்கு” நிதானமாகவே பேசினாள்.

“என்ன சொல்றீங்க?”

“சில விஷயங்கள் நம்மை மீறினவை விக்கி.. நாம நெனச்சாலும் மாத்த முடியாதவை … அந்த மாதிரி ஒண்ணு நம்மளப் பிரிச்சுடுமோன்னு பயமாயிருக்கு.”

“கேஸ்ட் பத்தி சொல்றீங்களா..”

“அதுவும் கூடத்தான்..”

“குழப்பாதீங்க.. என்னன்னு தெளிவாச் சொல்லுங்க.”

“இப்போ வேணாம் விக்கி.. அந்த வேளை வரும்போது பாத்துக்கலாம்..

அதுவரையில் இந்த அழகான உறவை நாம இழக்க வேணாம்.. அதே சமயம் ஆகாசக் கனவுகள் வேணாம்னு தோணுது.. நீங்க எத்தனையோ விஷயங்களைக் கடந்து வந்திருப்பீங்க.. ஒருவேளை நாம நினைக்கிறது நடக்கலைன்னா இந்த உறவு.. காதல்னு சொல்லலாமான்னு தெரில .. அதையும் கடந்து போகணும்.” முகத்தைப் பார்க்காமல் வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டாள்.

அவளருகே மண்டியிட்டு அமர்ந்து அவளது கைகளைப் பற்றி.. “ப்ளீஸ் .. என்னன்னு சொல்லுங்க.. என்னை விட்டுப் போயிடாதீங்க சாரு”

“போக மாட்டேன் விக்கி” கைகளை இறுகப் பற்றினாள் “நம்மள எது பிரிச்சாலும் நான் உங்கள மறக்கமாட்டேன்” அவளது கண்கள் கலங்கியிருந்தன. அழகான அவளது உதடுகள் துடித்தன.  

“என்னைப் பயமுறுத்தறீங்க..”

“தெரியும்.. இன்னைக்கு இதைப் பத்தி பேசக் கூடாதுன்னு தான் நினைச்சேன்.. ரெண்டு மாசமா எனக்குள்ள புழுங்கிக்கிட்டிருந்தது.. என்னையறியாமல் வெளிய வந்துடுச்சி. நீங்க பெரிசா ஏமாறக்கூடாது. அதான்.. என் விக்கி எப்பவுமே சந்தோஷமாயிருக்கணும்.” என் முகத்தருகே குனிந்து கன்னத்தில் மிருதுவாக முத்தமிட்டாள். அழுகையை மறைத்து, சிரிக்க முயன்று ..

“ஹாப்பி பர்த்டே விக்கி .. பர்த்டே பாய்க்கு இதுதான் என்னோட ஃகிப்ட்” நெகிழ்ச்சியுடன் என்னைப் பார்த்தாள். “சரி போகலாம் .. இப்பவே இருட்டிப் போச்சு.”

என் வாழ்க்கையின் மிக உயர்ந்த பரிசான அந்த முத்தம் என்னை மகிழ்விக்கவில்லை..

“சாரு ..ப்ளீஸ்..என்ன சொல்ல வந்தீங்க.. இப்படியே விட்டுட்டுப் போனீங்கன்னா மண்ட வெடிச்சுப் போயிடும் எனக்கு.”

“நாம அதைப் பத்தி அப்புறமா, பொறுமையாப் பேசலாம் .. எங்கயும் போயிட மாட்டேன்.. சரியா .. இப்போ வீட்டுக்குப் போலாம்.. ரெண்டு பேர் வீட்லயுமே தேடுவாங்க..”

எவ்வளவு கேட்டும் சொல்ல மறுத்துவிட்டாள்.

“நீங்க இப்ப வரலன்னா நானே மோட்டார் சைக்கிளை எடுத்துக்கிட்டு கீழே போயிடுவேன்” செல்லமாக மிரட்டினாள்.

வழிநெடுக என் மனம் துடித்தது. என்னவாக இருக்கும்.. பல முறை கேட்டும் பலனில்லை.

“ரோட்டைப் பாத்து ஓட்டுங்க.. ஏற்கனவே பள்ளம் பள்ளமா இருக்கு.”

மண்டைக்குள் ரத்தம் கொதித்தது..

“நீங்க இப்போ சொல்லலைன்னா அப்படித் தான் ஓட்டுவேன்..” ரோட்டின் குறுக்கும் நெடுக்கும் வளைத்து வளைத்து ஓட்ட, சாலையோரம் சரிந்திருந்த மணல் பரப்பில் பாலன்ஸ் இழந்து வண்டி சறுக்கியது. நான் சுதாரிப்பதற்குள் சுத்தமாகக் கட்டுப்பாடிழந்து டமாரென பெரிய சத்தத்துடன் வண்டி விழ பக்கவாட்டில் அமர்ந்திருந்த  சாரு சாலையின் ஓரமாக விழுந்து உருண்டாள். சரிவான மலைப்பாதை என்பதால் கீழே விழுந்த பின்னரும் வண்டியோடு சறுக்கிச் சென்ற நான் இருபதடி தள்ளி சாலையின் மறுபக்கத்தில் இருந்த பாறையில் மோதி உருண்டேன்..

பார்வை இருட்டியது.. தலையில் வலித்தது.

“அப்பவே நினைச்சேன்.. தேவாலயத்தில இந்த மாதிரி வருதுங்களேன்னு”

“பின்னாடி பொண்ணு உக்காந்தா கண்ணு மண்ணு தெரிறதில்ல”

“ஆம்புலன்ஸ் எதுனா கூப்பிடுங்கப்பா ..”

“தூக்காத தூக்காத .. எக்குத்தப்பாப் பெசகிடப் போகுது”

“தம்பி.. நான் பேசுறது கேக்குதா?”

“சாரு .. “

“சாரு மோரெல்லாம் இருக்கட்டும்.. மொதல்ல நீ எங்கருந்து வரேன்னு சொல்லு..”

………

……….

பேதடிக்.. ரியலி சாரி .. வெரி ஸ்வீட் கர்ல்.. அப்புறம் என்னாச்சு..” என்றாள் அபி.

“ரெண்டு பேரையும் ஒரே வண்டியில் போட்டுத் தூக்கிப் போனார்கள். என் பக்கத்திலேயே சாருவைப் படுக்க வைத்தார்கள்.. அவளின் இடப்புற முகம், கரம், கால் எனத் தரையில் சிராய்த்து, தோல் பிய்ந்து ரத்தம் வடிந்தது. அழகான அவளது கன்னங்களில் ரத்தத்தின் பிசுபிசுப்பில் மணல் துகள்கள் ஒட்டிக் காய்ந்திருந்தன.. சற்று நேரமுன் காற்றில் அலை பாய்ந்திருந்த அவளது ஒற்றைக் கத்தை முடி முகத்துக்குக் குறுக்கே விழுந்திருந்தது. அவ்வப்போது திறந்த விழிகளில் வலி தெரிந்தது. என்னை மன்னித்து விடு சாரு..  ஓவென அழத் தோன்றியது எனக்கு.. எதுவும் முடியவில்லை..  ஒரே ஹாஸ்பிட்டலில் தான் சேர்த்தார்கள்.  நான் கண் விழிக்கவே இரண்டு நாட்களானது.

சாருவைப் பற்றிக் கேட்டால் திட்டினார்கள். வேறு ஹாஸ்பிடலுக்குப் போய் விட்டதாக அங்கிருந்த நர்ஸ் தெரிவித்தார்.  மூன்று வாரங்களுக்குப் பின்னர், தலையில் தையலுடன், பாதம் பிசகிப் போய் பெரிய கட்டுகளுடன் வீட்டுக்கு வந்தேன். சாருவைப் பற்றிய தகவலெதுவும் என்னை வந்தடையாமல் பார்த்துக் கொண்டார்கள். ஒண்ணரை மாதமாகியும் தரையில் பாதம் சரியாகப் பதியாமல் தான் நடக்க முடிந்தது. கேரள ஆயுர்வேத சிகிச்சை குணப்படுத்தும் எனச் சொல்லி என்னைக் கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். சில மாதங்களில் அப்பாவும் மாற்றல் வாங்கிக் கொண்டு அங்கு வந்து சேர, ஜாகையே மாறிப் போனது. எவர் உதவியும் இல்லாமல் நடக்க ஒரு வருடத்துக்கும் மேலானது”.

“அதுக்கப்புறம் மெட்ராஸ் போனீங்களா? அவங்களைப் பாத்தீங்களா?”

“போனேன்.. சாரு குணமடைந்த பின், அவர்கள் இருந்த வீட்டை விற்று விட்டு வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த அவரது அப்பாவுடனே சென்று விட்டதாகச் சொன்னார்கள்..  இப்போதிருப்பதைப் போல் ஈமெயில், டிவிட்டர், செல்போன் எதுவும் கிடையாது அந்த நாட்களில். அவளுடன் தொடர்பேயில்லாமல் போனது.” கிளாஸில் இருந்த ரம் ஒரே மூச்சில் தீர்ந்து போனது.

“ஓ .. அப்ப உங்க பிறந்த நாள் அன்னைக்குப் பாத்ததுதான் கடைசியா? அதுக்கப்புறம் அவங்களைப் பாக்கவேயில்லையா?” க்ளாஸில் ரம்மை நிரப்பிக் கொண்டே கேட்டாள்.

“இல்லை அபி.. அடிபட்டு ரத்தம் தோய்ந்த நிலையில் மிக அருகில் அவளைப் பார்த்தது தான் கடைசி.. மிக அழகான இயல்பான அவளது முகம் கூட எனக்கு மறந்து விட்டது.. ஆனால் நான் கடைசியாகப் பார்த்த அவளது முகம் .. அது மட்டும் எனக்கு மறக்கவில்லை.. இன்று வரை .. இந்த நிமிஷம் வரை .. என்னை அந்தக் குற்ற உணர்ச்சி கொல்கிறது.”

“எனக்குப் புரிகிறது..” அபி அவளது வலது கையை விக்கியின் தோள் மீது வைத்து அழுத்தினாள்.

“ஆனால் என்னைக்காவது எங்காவது அவளைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கையிருக்கு.. அன்னைக்கு அவள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கவேண்டும்.. கேட்பேன்..”

“கண்டிப்பாக நடக்கும் .. ஒரு விஷயம், அவங்க உங்க உறவுக்கு அல்லது திருமணத்துக்குத் தடையாக இருக்கும்னு எதைச் சொன்னாங்கன்னு தெரியுமா? கண்டு பிடிச்சீங்களா?”

“தெரியல.. இந்தியக் கலாச்சாரம் விசித்திரமானது அபி.. ஜாதி, மதம், ஜாதகம், அந்தஸ்து, கௌரவம், படிப்பு, பணம், தொழில்னு ஆயிரத்தெட்டு பாகுபாடுகள்.. ரெண்டு பேருக்கு ஏற்படற தூய்மையான உறவைப் பாதுகாத்து நிலை நாட்ட இத்தனை தடைகளைத் தாண்டி வரணும்.. இதெல்லாம் சேர்ந்து தான் ரெண்டு பேரின் வாழ்வைத் தீர்மானிக்கும். இப்போதெல்லாம் கொஞ்சம் பரவாயில்லை.. அந்தக் காலத்தில் இந்தத் தடைகளைத் தாண்டி வருவது எளிதில்லை.. ஆனால் அவள் அதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தால் நான் எதையும் தாண்டி வந்திருப்பேன்.. ஆனால் இப்போ அத்தனையும் இழந்து விட்டேன்”

“இல்லை.. நீங்க சொன்னதைப் பார்த்தா அவங்களும் உங்களைப் போல அதே உறுதியுடன் காத்திட்டிருப்பாங்கன்னு தோணுது.. எனக்கென்னவோ இதையெல்லாம் தாண்டிப் பெரிசா அவங்களை எதோ பாதிச்சிருக்கும்னு நினைக்கிறேன்.. நீங்க சொன்னபடி பாத்தா, குறிப்பா ரெண்டு மாதங்களுக்கு முன்னாடி உங்களப் பத்தின எதோ ஒரு விஷயம் தெரிய வந்திருக்கு அவங்களுக்கு .. அது தான் அவங்களைப் பாதிச்சிருக்கு.. உங்க பிறந்த தேதியை வைத்து தான் ஹாரோஸ்கோப் எல்லாம் பண்ணுவாங்க இல்ல? அது மாதிரி உங்க பிறந்த தேதிலே தான் என்னமோ இருந்திருக்கும்னு எனக்குத் தோணுது”

சடாரென்று மண்டையில் மணியடித்ததைப் போலிருந்தது விக்கிக்கு அவசர அவசரமாக ஓடிச் சென்று தனது ஆஃபீஸ் ரூம் க்ளாசெட்டில் பாதுகாப்பாய் வைத்திருந்த பழுப்பு நிற லெதர் பெட்டியை எடுத்துத் திறந்தார். பழுப்பேறிய பல கோப்புகளில் அவரது சான்றிதழ்கள் நிரம்பியிருந்தன. அவற்றிடையே பேனா மையில் ஓரங்களில் பூக்கள் கிறுக்கப்பட்ட நீல நிற ஃபைலை எடுத்தார். ‘ஜே.எச். ஷா அக்கடமி’ என்று அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் சி.ஏ. தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்களின் நகல்கள் இருந்தன.  வேகமாக அலசியதில் சாருலதா வெங்கட்ராமன் என்ற விண்ணப்பம் இருந்தது. சாருவின் பால் முகக் கருப்பு வெள்ளைப் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்த விண்ணப்பம்.  ‘டேட் ஆஃப் பர்த்’ என்பதற்கு நேரே குண்டு குண்டான எழுத்தில் நிரப்பியிருந்தாள். விக்கியின் பிறந்தநாளை விட ஒன்பது மாதங்களுக்கு முந்தைய தேதி!!

மர்மயோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad