\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 4

Filed in இலக்கியம், கட்டுரை by on January 31, 2016 0 Comments

எங்கேயும் எப்போதும் MSV-4_620x842

(பகுதி 3)

எம்.எஸ்.வி. என்ற மாமேதை படைத்த இசைச் சாம்ராஜ்யத்தில் இறைந்து கிடக்கும் நவரத்தினங்கள் தான் எத்தனை? மேலாகப் பார்க்கும் போதும் கேட்கும் போதும் புலப்படாத பல நுணுக்கங்கள் கவனத்துடன் அணுகினால் ஆச்சரியமேற்படுத்துகின்றன. தோண்டத் தோண்ட பொங்கி வரும் இசை ஊற்றில் தான் எத்தனை பாவங்கள், ராகங்கள். உணர்வுப்பூர்வமாக காதல், சோகம், தத்துவம், மகிழ்ச்சி, வீரம், ஆற்றாமை என்று மட்டுமே மேலோட்டமாக அவற்றைப் பிரித்துவிட இயலாது. ஒரு சில கடடுரைகளில் அவரது இசைச் சிறப்புகளை விவரித்துவிடலாம் என்று இத்தொடரை தொடங்கும்போது எண்ணியது எவ்வளவு அபத்தம் என்று புரிகிறது. சில பாடல்களைக் கேட்கும் போது அதில் ஒளிந்திருக்கும் பல விஷயங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு பாடலைப் பற்றியும் சாமான்யனான நான் அறிந்து கொண்டதை மட்டுமே பத்துத் தொடர்களாய் எழுதலாம்.    

1950களில் இந்தித் திரையிசை உச்சத்தில் இருந்தது. எங்கும் வியாபித்திருந்த குந்தன்லால் சைகாலின் குரலும், குலாம் மொகமது, c. ராம்சந்தர் போன்றோரது இசை ஆளுமையும் குறைந்து விட, நவ்ஷாத், எஸ்.டி. பரமன், சலீல் சௌத்ரி, ரோஷன் போன்ற ஆளுமைகள் பரவத் தொடங்கியிருந்தன. ஆல் இந்தியா ரேடியோவின் ஆகாஷவாணி தொடங்கப்பட்டு எங்கும், எப்போதும் ரஃபி, கிஷோர், மன்னாடே, முகேஷ், ஆஷா, லதா ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். இந்திப் பாடல்களை அப்படியே தமிழாக்கிக் கொடுத்துக் கொண்டிருந்த இசையமைப்பாளர்கள் ஒரு புறம், சுத்தமான கர்நாடக ராகத்தை ஒட்டி இசையமைத்துக் கொண்டிருந்தவர்கள் மறுபுறம். இந்தச் சமயத்தில் கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்து, நகலெடுக்கும் பணியைத் தவிர்த்து புதிய அலையாக நுழைந்தனர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர். இசை மரபுகளை முற்றிலுமாக நசுக்கி விடாமல், மிகச் சரியான விகிதத்தில் புதுமை கலந்து இவர்கள் அளித்த பாடல்கள் ஒவ்வொன்றும் வைரங்கள்.

இவர்கள் நுழைந்த காலத்தில் சுப்பையா நாயுடு, ஜி. ராமநாதன், எஸ். வெங்கட்ராமன், கே.வி. மகாதேவன் ஆகியோர் கோலோச்சி வந்தனர். சுத்தமான கர்நாடக அடிப்படையில் அமைந்த ராகங்களையே இவர்கள் பெரும்பான்மையாகப் பயன்படுத்தினர். இசைக்கச்சேரி போல வயலின் பாடகருக்குப் பக்க  வாத்தியமாகவே குழைந்து ஒலித்து வந்தது. தாள இசை துவக்கத்திலிருந்து முடிவு வரை ஒரே சீரான நடையில் இணைந்திருந்தது.

இந்தப் பாணிகளிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டிட பெரும் சிரத்தை எடுத்த மெல்லிசை மன்னர்கள் ஒவ்வொரு படத்திலும் பல வித்தியாசங்களைப் புகுத்தினர். பல புதிய கருவிகளை அறிமுகப்படுத்திப் பாடல்களில் புதிய இசையொலிகளைச் சேர்த்தனர். தேவையான இடங்களில் வயலின், பிக்கலோ, புல்லாங்குழல், வீணை, சரோட் போன்ற கருவிகளோடு சாரங்கி, செனாய், சிதார், ஜலதரங்கம் போன்ற வடநாட்டுக் கருவிகளையும், இசையையும் பயன்படுத்தத் தொடங்கினர். ஒரே சீராய் ஒலித்து வந்த தாள இசையைப் பாட்டின் நடைக்குத் தகுந்தவாறு மாற்றிப் பாடலுக்கு ஏற்ற இறக்கங்களோடு புத்துணர்ச்சி அளித்தனர். சொற்களுக்கும் பாடல் வரிகளுக்கும் தக்கவாறு இசையை வளைத்த வித்தகர்கள் இவர்கள்.

ஆரம்ப காலத்தில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த, இவர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது 1954ல் வந்த ‘புதையல்’ திரைப்படம்.

https://m.mp3mad.lol/13939/Pudhayal-mp3-songs.html

  1.    “விண்ணோடும் முகிலோடும்” என்ற பாடலைக் கேளுங்கள். முதல் முறை விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே என்று சுசிலா முடித்ததும் வயலின் சாப்பிங் (chopping), தமிழுக்கு புதிது. பாடலில் ஒரே ஒரு முறை மட்டுமே ஒலிக்கும் இந்த இரண்டு நொடிகளுக்காகவே இந்தப் பாடலைப் பல முறை கேட்கலாம்.
  2.    “சின்னச் சின்ன இழை பின்னி வருகுது… சித்திரைக் கைத்தறி மின்னி வருகுது” எனும் பட்டுக்கோட்டையாரின் வரிகள் இசைக்காக “சின்னச் சின்ன இழை பின்னி பின்னி வர” என்ற சிறிய மாற்றங்களுடன் மாண்டலின், யுகலேலி எனப் புது இசைக்கருவிகளின் அணிவகுப்புடன் வெளிவந்தது.
  3.    “தங்க மோகனத் தாமரையே” பாடலில் அது வரை தமிழ்த்திரைக்கு அதிகம் பழக்கமில்லாத சைலஃபோன் கொஞ்சியது.
  4.   இதே படத்தின் “ஹலோ மை டியர் ராமி” பாடலைச் சென்ற இதழில் ராக் அண்ட் ரோல் பிரிவில் பார்த்தோம்.
  5.    “கதிர்வேலுக்கு எதிர் வேலும் இல்லையென்று சொல்லும் கதிர்காமக் கடவுளே” என்ற பாரம்பரியத் தெருக்கூத்துப் பாடல் ஒன்றும் இப்படத்தில் இடம் பெற்றது. ஆர்மோனியம், டோலக், சிங்கி (ஜால்ரா) போன்ற கருவிகளோடு தெருக்கூத்துக்கான இலக்கணம் அத்தனையும் பின்பற்றபட்டிருக்கும்.
  6.   “உனக்காக எல்லாம் உனக்காக” தமிழ்த் திரைப்படப் பாடல்களில் புதிய பரிமாணத்தை உருவாக்கியது என்று சொல்லலாம். துவக்கத்தில் வயலினும், அக்கார்டியனும், கிட்டாரும் ரயில் வண்டியின் வேகத்தைப் போல ஒரு பிரமிப்பை ஏற்படுத்த ப்ராஸ், யுகலேலி என்று இணைந்து ஒரு மேற்கத்திய நடையில் பாடலை எதிர்பார்க்கையில், ‘ஹே’ என ஒரு குரலுடன் பாடலின் நடையே மாறிப்போகும். ஆனால் அந்தத் துவக்க இசை தந்த துள்ளல் பாடல் முழுதும் ஒலித்திடும். இடையிசைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்ததிலும் இந்தப் பாடலை உதாரணமாகச் சொல்லலாம். மூன்றாவது இடையிசை முந்தைய இடையிசையைப் போலில்லாமல் முற்றிலும் மாறுபட்டு பிராஸ் ஒலித்திட சரணத்தில் பழைய டோலக், தபலா இணைந்திடும். இந்த மாற்றங்கள் எவையும் முகத்தில் அறையாமல் ஒன்றோடொன்று இழைந்து மாறுவது எவ்வளவு சுகம். டி.கே. ராமமூர்த்தியின் மேற்பார்வையில் ஒலித்த வயலின் குழுவில் தான் எவ்வளவு துல்லியம்.  

ஒரே படத்தில் ராக் & ரோல், செவ்வியல், ஜனரஞ்சகப் பாடல், மெல்லிசைப் பாடல், தெருக்கூத்துப் பாடல் எனப் பல்வேறு பிரிவுகளையும் காட்டித் தாங்கள் அனைத்தையும் கையாளக்கூடிய திறன் படைத்தவர்கள் என்று விஸ்வரூபம் எடுத்தனர் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர். உலக இசையைத் தமிழுக்கும் கொண்டு வரவேண்டும் என்ற மெனக்கெடல் இந்தப் பாடல்களில் வெளிப்படும்.

வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் உலக இசையைப் பயன்படுத்த எம்.எஸ்.வி. தவறியதில்லை. ஆனால் எங்குமே அவற்றை வலியப் புகுத்தியதோ அல்லது அப்படியே பயன்படுத்தியதோ இல்லை. அவை எல்லாம் அகத் தூண்டுதல்களாகவே பயன்பட்டன.

அப்படி உருவானது தான் குடியிருந்த கோயில் படத்தின் “துள்ளுவதோ இளமை” பாடல். ஸ்பெயின் நாட்டில் பிரசித்திப் பெற்ற புல் ஃபைட் இசையான “பேசோ டாப்லே” (Peso Doble)  வகையைச் சார்ந்தது இந்தப் பாடல். ஒரு இசை வகையை எடுத்துக் கையாளும்போது, மூலத்தின் சிறப்பைச் சிதைக்காமல், அதே சமயம் தமிழுக்கு ஏற்றார்போல் மாற்றுவது எம்.எஸ்.விக்கு மட்டுமே கைவந்த கலை.

பேசோ டாப்லே என்பது இரட்டை அடிகள் (binary steps) எனும் பொருள்படும் ஸ்பானியச் சொல். ஸ்பெயின் நாட்டில் பிரபலமாக நடைபெற்று வந்த காளைகளை அடக்கும் போட்டிகளில் காளைகளை அடக்கும் போட்டியாளர் (Matador) போட்டி மேடைக்கு வருகையில் வாசிக்கப்படும் இசை. மெதுவே இவ்வகை இசை பிரான்ஸ் நாட்டினரால் சுவீகரிக்கப்பட்டு உலகம் முழுதும் பரவியது. பிரான்ஸில் இந்த இசை பால் ரூம் நடன வடிவம் பெற்று பேசோ டாப்லே என்ற பெயரில் தொடங்கி சிற்சில மாற்றங்களுடன் ப்ளமேங்கோ போன்ற பல்வேறு வடிவங்களைப் பெற்றது. பேசோ டாப்லே இசைக்கு கிட்டார், ட்ரம்ஸ், பாங்கோ, அக்கார்டியன், காஸ்டனாட் (castanet) போன்ற இசையொலிகள் தான் அடிப்படை.

இப்படிப் பல அம்சங்களைக் கொண்ட இசையை எம்.எஸ்.வி. தனது பாணியில் அனாயாசமாக ஆட்கொண்டு பயன்படுத்தியுள்ளார் என்பதைக் காண்கையில் ஆச்சரியமாகவுள்ளது.

பேசோ டாப்லே இசையின் அடிப்படை இலக்கணம் இரண்டு தாளங்கள் (two beats). இப்போது துள்ளுவதோ இளமை பாடலைக் கவனியுங்கள்

பட்டு முகத்து சுட்டிப் பெண்ணை

கட்டியணைக்கும் இந்தக் கைகள்

வட்டமடிக்கும் வண்டுக் கண்கள்

திட்டமனைத்தும் இன்பக் கதைகள்

துள்ளுவதோ இளமை

தேடுவதோ தனிமை

அள்ளுவதே திறமை

அத்தனையும் புதுமை

என, பாடல் முழுதும் இரு சீர் வரிகள்.

பாடலின் துவக்கத்தில் அதிவேகப்ளமேங்கோ கிட்டாரும், ட்ரம்ஸின் பிரஷ்ஷிங் (brushing of drums) தாளமும் இது ப்ளமேங்கோப் பாடல் எனக் கட்டியங்கூறும். அதிரடியாக வரும் வயலின் அக்கார்டியன் துண்டுகள் பேசோ டாப்லேவின் நாடகத்தன்மையை அதிகரிக்க உதவும் சூட்சுமங்கள். ஒரு நொடி அமைதிக்குப் பின்னர் ‘பட்டுமுகத்து சுட்டிப் பெண்ணை’ என்று ஆண்கள் கோரஸ் வரும் பொழுது, அதிலொரு இடையிசை புகுத்தி காஸ்டனட், கிட்டார், ட்ரம்ஸ் மூன்றையும் இசைக்கவிட்டு இது காளைச் சண்டைப் பாடல் என்பதை உறுதிப்படுத்தி விடுகிறார். வழக்கம் போல இப்பாடலுக்கும் பெண் குரலுக்கு அவர் நாடியது எல்.ஆர். ஈஸ்வரியை. ‘துள்ளுவதோ இளமை’ என்று குறைவான சுருதியில் தொடங்கும் பாடல் ‘அள்ளுவதே திறமை’ என்று உயரே போய், அத்தனையும் புதுமை என்று கீழே இறங்கிடும். இவ்வரிகளின் இடையிடையே வயலின், ட்ரம்ஸ், அக்கார்டியன் துள்ளி விளையாடிட இடையிசையில் அக்கார்டியனும், காஸ்டனட்டும் கை கோர்த்திடும்.

முதல் சரணத்தில் வரிகளிலும் இரண்டு சீர்கள் மட்டுமே …

மேலாடை நீந்தும்

பாலாடை மேனி

நீராட ஓடி வா

வேலாடும் பார்வை

தாளாத போது

நோகாமல் ஆடவா

இதில் ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை வருமாறு அமைத்திருப்பார். அதிலும் ஒவ்வொரு வரியும் அடுத்தடுத்து வரும்பொழுது சொற்களில் கமகங்களைக் கவனியுங்கள். ‘நீ..ராட ஓடிவா …நீரா…ட ஓடிவா’. எம்.எஸ்.வி. நினைத்ததை எல்.ஆர். ஈஸ்வரி முற்றிலும் உணர்ந்து பாடுவதில் தான் எவ்வளவு சுகம். இம்ப்ரோவைசேஷன் முறையில் எம்.எஸ்.வி.யை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. இந்த நகாசு பிரமிப்புகளை எத்தனை பேர் ரசித்திருப்பார்கள்? (இதே போன்ற உத்திகளை எம்.எஸ்.வி. ‘அமைதியான நதியினிலே ஓடம்’ பாடலிலும் பயன்படுத்தியிருப்பார். ‘தென்னை இளங் கீற்றினிலே ஏ…ஏ.. தென்னையிளங் கீற்றினிலே’ என்பதில் மனம் சொக்கிப் போகும்).

இரண்டாம் இடையிசை மிகச் சிறப்பானது. அக்கார்டியன் ட்ரம்ஸ், வயலின், காஸ்டனட் ப்ளமேங்கோ நடையில் சேர்ந்து இசைத்து முடித்திட, திடீரென மேட்டடோரின் வருகைக்காகப் பாடல் சுத்தமான பேசோ டாப்லே பாணிக்குத் தாவிடும். பின்னர் பாங்கோஸின் தாள நடை துவங்கி பிரஷ் டிரம்ஸ் துணையுடன் இந்தச் சரணம் முழுதும் சீரான தாள நடையில் போகும். டி.எம்.எஸ்ஸின் கணீர்க் குரலுக்கு ஈஸ்வரியின் குரலிலிருந்த குழைவைக் கொண்டு வருவது கடினம். இருந்தாலும் ‘நாளெல்லாம் சொல்லவா’ என்ற வரியில் மிகச் சிறப்பாகவே பாடியிருப்பார்.

அடுத்த இடையிசையில் வில்லன் குழுவினர் நுழைவதைப் பதைபதைப்புடன் காட்டிட வழக்கமான வயலின் இசைக்குத் தாவி சில நொடிகளில் மீண்டும் காஸ்டனட், பாங்கோஸ், மெக்ஸிகன் கிட்டார் இணைந்திட     

பேசோ டாப்லேவுக்கு வந்துவிடும். இந்த முறை டி.எம்.எஸ்., ஈஸ்வரி இணைந்திட, ‘வாய்பேசத் தோன்றுமா’ என்ற வரியில் மீண்டுமொரு முறை அசத்துவார் ஈஸ்வரி.

இறுதியில் பெரும் அதிர்வுகளோடு, பேசோ டாப்லே அடையாளங்களோடு பாடல் முடிவடையும். அந்நாளில் இருந்த ஒலிப்பதிவு வசதிகள், இசைக் கருவிகள், கலைஞர்கள் ஆகியவற்றை வைத்துக் கொண்டு, இன்றைய இளந்தலைமுறையினரையும் வசீகரிக்கும் வகையில் பாடலைப் படைத்து நமக்கெல்லாம் அளித்தது அத்தனையும் புதுமை.

https://www.youtube.com/watch?v=N5g-6po9i0A

ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad