கணிதன் இயக்குனர் T.N. சந்தோஷ் – நேர்முகம்
கேள்வி: உங்கள் முதல் படம் கணிதன், எந்த வகையைச் சேர்ந்தது. ? படத்தைப் பத்தி கொஞ்சம் சொல்லமுடியுமா?
பதில்: ஒரு ஹீரோ ஒரு வில்லன். இரண்டு பேரும் பெரிய புத்திசாலிகள். அவர்களுக்குள் நடக்கும் போராட்டம் தான் கணிதன். இதுல அதர்வா ரிபோர்ட்டரா நடிச்சிருக்கார். ஒரு ரிபோர்ட்டர் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதுதான் கதை. எந்த வகைன்னு சொலனும்னா, இது சோசியல் ஆக்ஷன் த்ரில்லர் படம்.
கேள்வி: இந்தப் படத்துல நீங்க திரைக்கதையும் எழுதியிருக்கீங்க, டைரக்டும் செய்திருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருந்தது?
பதில்: என்னைப் பொறுத்த வரைக்கும் டைரக்டரே திரைக்கதை எழுதுவது தான் நல்லது. வேற ஒருத்தர் எழுதி அதைப் பின்பற்றி படம் செய்வதற்கு பதில் நமக்கு என்ன தேவையோ அதை ஷாட்டுக்கு ஷாட் பிரிச்சி எழுதலாம். அப்படிப் பிரிக்கும்பொழுது கதையோட்டம் முழுதும் புரிந்துவிடும். படம் எடுக்கும் பொழுது குழப்பங்கள் இருக்காது.
கேள்வி: திரைக்கதைக்குப் பெயர் பெற்றவர் பாக்யராஜ். அவர் இந்தப் படத்துல நடிசிருக்காரு. அவரோட படம் பண்ண அனுபவத்தைப் பத்தி சொல்ல முடியுமா?
பதில்: பாக்யராஜ் சார் திரைக்கதைக்கு ஃபாதர்ன்னு சொல்லலாம். அவர் முதல் நாள் செட்டுக்கு நடிக்க வந்தப்ப ஒரு டென்ஷன் இருந்தது. ஆனா அவரு எதுலயும் தலையிடல.வசனங்களைப் படிச்சிட்டு நல்லா எழுதிருக்கேன்னு சொன்னாரு. அவருகிட்ட பாராட்டு வாங்கியது எனக்குப் பெருமையான விஷயம்.
அதுவும் இல்லாம அவர் இந்தப் படத்துல ஒரு நடிகராக மட்டுமே இருந்தார். இயக்குனர்க்குரிய விஷயங்களில் அவர் தலையிடவில்லை. அவர் தன்னுடைய ரோல் என்ன, என்ன பேசணும் அதுல மட்டும் ரொம்பக் கவனமா இருந்தார்.
கேள்வி: உங்களைப் பத்தி எங்களது வாசகர்களுக்குச் சொல்ல முடியுமா? உங்க பின்னணி என்ன? இந்தத் துறைக்கு எப்படி வந்தீங்க?
பதில்: எனக்கு இந்தத் துறைல ஒரு பின்னணி இருந்தது.ஆனா அதை உபயோகப்படுத்த முடியல. எங்க அப்பா ஆர்ட் டைரக்டரா நூத்தி அம்பதுக்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் பணியாற்றியுள்ளார். ஆனா அப்ப நான் பொறக்கவே இல்ல. அவர் ஒரு படம் டைரக்ட் பண்ணலாம்னு ஆரம்பிச்சு அவருடன் இருந்தவர்கள் அவரை ஏமாற்றிவிட்டார்கள். அந்த விரக்தியிலே படம் பண்ணுவதை நிறுத்திட்டாரு. அப்ப எனக்கு நாலு வயசு.
அதனால எனக்குச் சினிமாவில ரொம்ப அனுபவம் கிடைக்கல. அப்படி இருந்தும் நான் மோதல் மொதல்ல துணை இயக்குனரா வந்தப்ப புது வேலை மாதிரியே தெரியல. ரொம்பப் பரிட்சித்த இடமா இருந்தது. அது எனக்கு ரொம்ப அதிசயமா இருந்தது. இப்ப அப்பா என்கூட இல்ல. அவருடைய ஆசி தான் இருக்கும்.
கேள்வி: சினிமா துறைக்குப் போகணும்னு எப்போ நினைச்சீங்க?
பதில்: எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்தே சினிமாவுக்கு வரணும்னு தான் ஆசை. இந்தத் துறைக்கு வந்தப்பறம் கூடப் புது இடத்துக்கு வந்த மாதிரி நினைக்கல. நான் முன்னமே பார்த்த இடம்னுதான் தோணுச்சு.
கேள்வி: இப்ப மெகா பட்ஜெட் படங்களும் வருது. காக்க முட்டை மாதிரி சின்னப் பட்ஜெட் படங்களும் வருது. உங்களுக்கு எந்த மாதிரி படம் எடுக்க விருப்பம்.
பதில்: எனக்கு மெகா பட்ஜெட், சின்னப் பட்ஜெட் என்பதைவிட கதை என்ன தீர்மானிக்குதோ அதைச் செய்யத்தான் விருப்பம். கதைக்கு என்ன தேவையோ அது தான் எனக்குப் பட்ஜெட். எனக்குப் பிடிச்ச கதையா இருக்கனும். கதைக்கு என்ன தேவையோ அதைத் தாண்டி போகக்கூடாது. ஒருத்தர் எவ்வளவு சாப்பிட முடியுமோ அவ்வளவு தான் சாப்பிடனும். கம்மியா சாப்பிட்டாலும் பிரச்சனை, அதிகமா சாப்பிட்டாலும் பிரச்சனை.
கேள்வி: கலைப்புலி தாணு பல படங்கள் எடுத்திருக்காரு. அவரை இந்தப் படம் எடுக்க எப்படி அணுக முடிந்தது ?
பதில்: துப்பாக்கி படத்துல இணை இயக்குனரா வேலை செய்யும்பொழுது அவரிடம்பழக்கம் ஏற்பட்டது. அப்போ துப்பாக்கி சம்பந்தப்பட்ட எல்லா வேலையும் நான் தான் பண்ணுவேன். என்ன வேணும், என்ன வேணாம்னு பட்டியல் நான் தான் கொடுப்பேன். ஒரு நாள், நீ என்ன பண்ணப்போறேன்னு கேட்டாரு. படம் பண்ணப்போறேன்னு சொன்னேன். ஒரு கதை கிடைச்சா சொல்லுனு சொல்லியிருந்தாரு. பெரிய நடிகர்கள் வச்சி படம் பண்றவரு என் படத்துக்குச் சம்மதிப்பாரானு தயக்கம் இருந்தது. கதை சொன்னவுடனே சம்மதிச்சிட்டாரு. உடனே அட்வான்ஸ் கொடுத்தார். பட வேலைகளும் உடனே தொடங்கியது . அதுவும் இல்லாம அவர் எனக்கு நல்ல ஃப்ரீடம் கொடுத்திருக்காரு. ஷூட்டிங் பாக்ககூட வந்ததில்ல.
கேள்வி: நீங்க ஹாலிவுட் படம் எல்லாம் பார்ப்பதுண்டா? . உங்களுக்குப் பிடிச்ச இயக்குனர் யாரு?
பதில்: ஏகப்பட்ட படம் பார்த்திருக்கேன். சமீபத்துல டாரன்டினோ படம் பார்த்தேன். ஸ்பீல்பெர்க் , கமேரோன் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தப் படங்கள் எல்லாம் நமக்கு எப்பவுமே ஓர் இன்ஸ்பிரேஷனா இருக்கும். எனக்குக் கிரீஸ்டோபர் நோலன் ரொம்பப் பிடிக்கும். அவர் BGM கூட ரொம்ப அருமையா செய்வார். இப்ப சென்னைல எல்லா ஆங்கிலப் படமும் வருது. இப்ப கூட Deadpool படம் பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது.
கேள்வி: ஒரு வழக்கமான கேள்வி. நீங்க சினிமா துறைக்கு வராம இருந்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க
பதில்: நான் ஆரம்பத்திலேருந்தே சினிமாத் துறைக்கு வரணும்னு நினைச்சதால வேற எதுவும் தோணலை. சினிமாத் துறைல என்ன பண்ணப் போறோம்னு அப்ப தெரியலை. நான் ஒரு IT கம்பனிலே போய் வேலை பார்க்கிற மாதிரி கற்பனை கூடப் பண்ணிப் பார்க்க முடியல. வேற என்ன வேலை எனக்குப் பிடிக்கும்னு யோசிச்சிப் பார்த்திருக்கேன். அப்படிப் பார்த்ததுல எனக்குப் பத்திரிக்கை நிருபர் ஆகனும்னு ஆசை.
கேள்வி: உங்க அடுத்தப் படம் பத்தி எதாவது சொல்ல முடியுமா?
பதில்: இன்னும் பேசிகிட்டு இருக்கேன். இப்ப எதையும் சொல்ல முடியாது. ஒரு பெரிய கதையா இருக்கு. அதனால ஒரு நல்ல ஹீரோக்காகக் காத்துகிட்டிருக்கேன் இருக்கேன். கொஞ்சம் டைம் ஆகும்.
கேள்வி: பனிப்பூக்கள் வாசகர்கள்ளுக்கு இந்தப் படம் பத்தி என்ன சொல்ல விரும்பறீங்க?
பதில்: நீங்க எல்லோரும் கண்டிப்பா குடும்பத்தோட போய்ப் பாக்கணும். இந்தப் படம் ஏன் பாக்கணும்னு சொல்லிடறேன். இந்தப் படம் பொய்ச் சான்றிதழ் பற்றிய கதை. அதனால ஒருத்தனுக்கு எவ்வளவு பிரச்சனை ஏற்படுது. அதை எப்படி வெளியே கொண்டுவருகிறார்கள் என்பது தான் கதை. இரண்டு மணி நேரம் ஒரு நல்ல commercial படமா எடுத்திருக்கோம். எல்லாரும் ரசிக்கக் கூடிய காமெடி, காதல் எல்லாம் உண்டு. எல்லாரும் அமெரிக்காவுக்குத், தன் குடும்பத்தைப் பிரிஞ்சி போய் வேலை பார்க்கறாங்க. இதற்கு தேவை திறமை தான். அதுக்குச் சான்றிதழ் தேவை. இத தான் நாம் மூலாதரமா வச்சி வேலை செய்றோம். அதை ஒருத்தன் திருடினா என்ன ஆகும்? ஒரு பத்து லட்சம் ருபாய் தொலைந்தால் கூடத் திரும்பச் சம்பாதிக்க முடியும். ஆனா நம்ம திறமையைப் பறித்து விட்டால் எவ்வளவு வலி இருக்கும். நம்ம கஷ்டப்பட்டு வேலை செய்திருப்போம். வேற ஒருத்தன் பேரு வாங்கிட்டு போயிருப்பான். அதுக்கான தீர்வு இந்தப் படத்தில் இருக்கும் . காசு கொடுத்து தியேட்டர் போய்ப் பார்க்கும் எல்லாருக்கும் அந்தக் காசுக்கான வொர்த் கிடைக்கும். முழுக்க முழுக்கச் சோஷியல் என்டர்டெய்னர் படமாவே இருக்கும்.
-பிரபு
கணிதன்
Tags: adharva, bhagyaraj, kanidhan, santhosh, tamil movie, கணிதன், சந்தோஷ்