எங்கேயும் எப்போதும் எம் எஸ் வி – பகுதி 5
(எங்கேயும் எப்போதும் எம்.எஸ்.வி. பகுதி 4)
ஃபிப்ரவரி மாதத்துக்கென பல சிறப்புகள் இருந்தாலும், தற்காலத்தில் இம்மாதத்துக்காகவே பலர் காத்திருப்பது வாலண்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினத்துக்காகத்தான். அன்பு, எதிர்பார்ப்பு, ஏக்கம் மகிழ்ச்சி, பரவசம் எனப் பல பரிமாணங்களைக் கொண்டு ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒளிந்திருக்கும், எளிதில் விவரிக்க முடியாத மெல்லிய உணர்வே காதல். ‘ஐ ஆம் கமிடட்..’ என ஒப்பந்தமிடும் உறவுகளைப் போலல்லாமல் இதயப்பூர்வமாக உணரப்படும் மிக மிக மெல்லிய உணர்வு காதல். தங்கள் மெல்லிசையால் இசையுலகைக் கட்டிப்போட்ட மெல்லிசை மன்னர் தனது சகாவுடன் சேர்ந்தும், தனியாகவும் ஆயிரக்கணக்கான சாகாவரம் பெற்ற காதல் பாடல்களைப் படைத்துள்ளார். அவற்றில் சிலவற்றை அலசலாம் என்றால் எதை எடுப்பது எதை விடுவது என்ற கேள்வியே மேலோங்கி நிற்கிறது.
யார் அந்த நிலவு?
விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணியில் உருவான பல காவியப் பாடல்களில் அமரத்துவம் வாய்ந்த பாடல் இது. சிக்கலான குடும்ப உறவுகளை வைத்து மிகச் சிறந்த படங்களை உருவாக்கிய பீம்சிங் இயக்கத்தில் உருவான ‘சாந்தி’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலிது. கண்பார்வையற்ற தனது நண்பனின் மனைவியிடம், அவளது கணவனாக நடிக்க வேண்டிய நிர்பந்தம். அதே நேரம் தனது காதலியின் நினைவுகள் துரத்த நாயகன். காதல், விரகம், சோகம், வேதனை, விரக்தி, குற்றஉணர்வு எனப் பல உணர்ச்சிகளை இப்பாடல் மூலம் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் எந்த ஒரு தனியுணர்வும் மேலோங்கி நிற்கக் கூடாது. அதிக ஏற்ற இறக்கங்கள் இல்லாமல், சீரான வேகத்துடன் போக வேண்டும். இதற்கு மெல்லிசை மன்னர்கள் தேர்ந்தெடுத்த இசை வடிவம் லாட்டின் ஜாஸ் (Latin jazz)
மிக மென்மையான பியானோ இசையுடன் தொடங்கும் பாடல், மேற்கத்திய பாணி இசைக்கு வழிகோலச் சட்டென்று சாரங்கி இப்பாடலை அவ்வளவு எளிதாகப் பகுத்து விட முடியாது என்று கூற, இந்தக் குழப்பத்தினிடையே சந்தூர், வயலின், கிட்டார் அணிவகுக்கும். இவை எல்லாவற்றுக்கும் தாளம் மெலிதான ட்ரம்ஸ். சாரங்கியுடன் ட்ரம்ஸ் வினோதமான சேர்க்கை.
நூறு (செள) வர்ணங்கள் (ரங்) ஒன்று சேர்ந்து அளிக்கக் கூடிய பரவசத்தை அளிப்பதால் செளரங்கி என வழங்கப்பட்டதே பின்னர் சாரங்கியாகிப்போனது. சாஸ்திரிய இந்துஸ்தானி நரம்பிசைக் கருவி.தமிழ்த் திரைப்படங்களில் எம்.எஸ்.வி.யால் பரவலாக, பிரமாதமாகப் பயன்படுத்தப்பட்டு, பின்னர் வந்த மின்னிசைக் கருவிகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்ட அற்புதமான கருவி. கர்ணன் திரைப்படம், வடஇந்தியாவில் இடம்பெறும் கதை என்பதால் சாரங்கியைப் பிரதானமாகப் பயன்படுத்தியிருப்பார் எம்.எஸ்.வி.
மிக அமர்க்களமாகத் தொடங்கும் முன்னிசை முடிய ‘யாஆஆர் .. அந்த நிலவுவுவு’ எனப் பாடல் தொடங்கும்.கணீரென்ற குரலில், கர்நாடக சங்கீத அடிப்படையில் பாடும் டி.எம்.எஸ்ஸுக்கு இந்தப் பாட்டுச் சரி வராது என்று பல பெயர்கள் பரிசீலிக்கப்பட, எம்.எஸ்.வி மட்டும் டி.எம்.எஸ்சை பாட வைப்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். ‘வந்த நாள் முதல்’ பாடலைப் போல இதுவும் வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்க, டி.எம்.எஸ் பாட ஏற்பாடானதாம்.
யார் அந்த நிலவு ஏனிந்த இந்தக் கனவு ..
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு,
காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு
‘யா … ர்’ என்ற முதல் சொல்லில் தான் எவ்வளவு இனிமை. இந்த வரிகளில் தான் என்ன ஜாலம், கமகங்கள் ‘நா…ன்’ என்பதில் தான் எத்தனை சுகம். இந்தப் பாடலுக்கு கிட்டார் வாசித்தவர் விரல்களுக்கு மோதிரம் போடவேண்டும். வரிகளை முந்தாமல் பின்சென்று (accompany), வரிகளின் இடைவெளிகளில் முன்னெடுத்து (combing) ஆவர்த்தனம் நடத்தியிருப்பார். ட்ரம்ஸின் சிம்பல்ஸ் மறுபக்கம் பாடலின் ஓட்டத்துக்கு ஈடு கொடுத்து உடன் நடக்க இந்த மூன்று வரிகளிலேயே பாடல் எவரையும் ஈர்த்துவிடும்.
இடையிசை மற்றுமொரு அற்புதம். நா..ன் வந்த வரவு என்று முடிகையில் எங்கிருந்தோ எதிர்பாராத சந்தூர் கிட்டார் ஒலியுடன் இனம் புரியாத நிலைக்கு இறங்கி வர, மனதைத் தென்றலாய் வருடும் வயலின் தொடங்கும். சில நொடிகளில் கிட்டார் இணைய மீண்டும் சாரங்கி பொறுப்பேற்றுக் கொள்ளும். பொதுவாக வயலினும், சாரங்கியும் இணைந்து இசைக்கப்படுவதில்லை. ஆனால் 35 வினாடிகள் வரும் இடையிசையில் இரண்டையும் சரிசமமாகப் பயன்படுத்தியிருப்பதில் தான் மெல்லிசை மன்னர்களின் மேதாவிலாசம் வெளிப்படும். இது இரவில் இடம்பெறும் பாடல் என்பதை கிட்டாரும், சோகம் சூழ்ந்திருப்பதைட் சாரங்கியும் கட்டியங்கூறுவது இந்த இடையிசையின் மற்றொரு சிறப்பம்சம்.
‘மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை
மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை
தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ
உன் கோயில் தீபம் மாறியதை நீ அறிவாயோ?
ஹோ… ஹோ.. கோயில் தீபம் மாறியதை
நீ அறிவாயோ?’
மாலையும் என மிக நேர்த்தியாகத் தொடங்கும் சரணத்தின் முதல் வரி ‘சோதனை’ என்று நீண்டு ”வேதனை” என்று முடிவதில் மேற்கத்திய இசையின் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். நான்காவது வரியில் ‘உன் கோயில் தீபம் மாறியதை நீ அறிவாயோ’ என்று வருவதை அழுத்தத்துடன் கூட அந்த வரியை மறுபடியும் பாட வேண்டும். கூடுவே மேற்கத்திய பாணியின் வருடல் இருக்க வேண்டும் என்று ‘ஹோ.. ஹோ..’ என்ற குரலிசையைச் சேர்த்து நாயகனின் தவிப்பைக் காட்டி, ‘கோயில் தீபம் மாறியதை’, ‘நீ அறியாயோ’ என்று கீழ்ஸ்தாயில் முடித்திருப்பது அசாத்திய கற்பனை.
பொதுவாக எம்.எஸ்.வி. பாடலின் சூழ்நிலையையும், வரிகளையும் மட்டுமே கருத்தில் கொண்டு கம்போஸிங் செய்ததாகக் குறிப்பிடுவார். ஆனால் சில சமயங்களில் சிவாஜி என்ற அந்த மாபெரும் நடிகனுக்காகவே சில சங்கதிகளைச் சேர்த்திருப்பதாகத் தோன்றும். ‘யா..ர்’, ‘ஏ..ன்’, ‘தெய்வமே..’, ‘நீ…. அறிவாயோ…’ என்ற சங்கதிகள் நடிகர் திலகத்துக்காகவே அமைக்கப்பட்டவை எனத் தோன்றுகிறது. இந்த நான்கு வரிகளில் படக்கதையைச் சொன்ன கண்ணதாசன், மேற்கத்திய சங்கதிகளுக்குத் தன் குரலை மாற்றிப் பாடிய டி.எம்.எஸ்., மெட்டமைத்து இசைஜாலம் சேர்த்த மன்னர்கள் இப்பாடலைப் புதியதோர் உயரத்துக்குக் கொண்டு சென்று விட்டனர். பாடலைக் கேட்டு அசந்து போன நடிகர் திலகம், ‘கவிஞர் அற்புதமாகப் பாட்டை எழுதிட்டாரு. மன்னர்கள் புதுமையா இசையமைச்சிருக்காங்க; டி.எம்.எஸ். ரொம்ப உணர்வுபூர்வமா பாடியிருக்காரு – இவங்க எல்லாரையும் நான் ‘பீட்’ பண்ணனும்.. எப்படி பண்றதுன்னு யோசிக்கணும்’ என்று சொல்லி, தனது நடிப்புச் சரித்திரத்தில் சில வாரங்கள் அவகாசம் கேட்ட பாடல் இது. அவர் சொன்னது போல் நடத்தியும் காட்டிவிட, இன்று வரை பாடலின் மற்ற சிறப்பம்சங்கள் பலருக்குப் பிடிபடாமல், ‘சிவாஜியின் சுருட்டும் நடித்த பாடல்’ என்றே அறியப்படுகிறது.பாடலை உருவாக்கிய கவிஞர், பாடகர், இசைக் கலைஞர்கள், ஒளிப்பதிவு செய்த விட்டல்ராவ் எல்லாவற்றையும் சிவாஜி என்ற பிரம்மாண்டம் மறைத்து விட்டது. ‘சினிமாவை மிகவும் நேசித்தவர்கள் காலமது’ என்பார் எம்.எஸ்.வி. ஒவ்வொருத்தருக்கும் போட்டி இருக்குமே தவிர பொறாமை இருக்காது என்பார். உண்மை தான்.
https://picosong.com/9qxJ/ (இரண்டு சரணங்கள் மட்டுமே உள்ள பிரதி – தொடக்கத்தில் டி.எம்.எஸ். பேசுவதைக் கேளுங்கள்)
https://picosong.com/9qt3/ (பதிவு செய்யப்பட்ட, மூன்று சரணங்கள் கொண்ட பிரதி)
பழைய 78 RPM இசைத்தட்டில் ஒரே பக்கத்தில் பாடல் அடங்காததால் திருப்பிப் போட வேண்டும். இதனாலேயே வானொலிகளில் இரண்டு சரணங்கள் கொண்ட பாடல் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வந்தது. பழைய பாடல்கள் பல இவ்வாறு சரணங்களை வெட்டியோ, இடையிசையை வெட்டியோ சிதைக்கப்பட்டுள்ளன)
சாந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் மிகச் சிறப்பான பாடல்கள்.
- செந்தூர் முருகன் கோவிலிலே
- ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
- வாழ்ந்து பார்க்க வேண்டும் அதிலும் மனிதனாக வேண்டும்
- நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
ஒவ்வொரு பாடலும் முத்தானவை. இருப்பினும் நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடல் தனித்துவம் வாய்ந்தது. ‘யார் அந்த நிலவில்’ சாரங்கி, ‘ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்’ பாட்டில் ஷெனாய் எனப் புதுமைகள் புகுத்தியவர், நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடலுக்கு சீட்டி ஒலியை இசையாகச் சேர்த்திருப்பார். தங்கள் படைப்புகளில் மெல்லிசை மன்னர்கள் கொண்டிருந்த தன்னம்பிக்கையினால் அவர்கள் பல சோதனை முயற்சிகளில் இறங்கி வெற்றியும் பெற்று வந்தனர்.
ஆனாலும் சிவாஜி கணேசன் கதாநாயகனாய்க் கொடிகட்டிப் பறந்த காலத்தில், ஒரு காதல் பாடலில் அவருக்கு
வரிகள் இல்லாமல், சீழ்க்கை ஒலியை இடையிசைகளில் பிரதானமாகப் பயன்படுத்த தனித் துணிச்சல் வேண்டும். இயக்குனர் பீம்சிங் அவர்களையும் இந்தச் சந்தர்ப்பத்தில் பாராட்டியே ஆகவேண்டும். அவர் மெல்லிசை மன்னர்களைச் சுதந்திரமாகச் செயல்பட விட்டிருக்கிறார். பல சமயங்களில் பாடல்கள் விஷயத்தில் அவர் தலையிட்டதே கிடையாதாம். இந்தப் பாடலில் இடம்பெறும் சீழ்க்கை ஒலி மெல்லிசை மன்னர் குழுவில் மாண்டலின் வாசித்த எம்.கே. ராஜூவுடையது. பல கருவிகள் இசைப்பதில் தேர்ச்சிபெற்றிருந்தவரின் சீட்டி ஒலி தான் எவ்வளவு துல்லியம்.
யார் அந்த நிலவு டி.எம்.எஸ்.ஸுக்குச் சவாலாக அமைந்ததென்றால், நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பி.சுசீலாவிற்குச் சவாலாக அமைந்தது. பாடலில் தான் எவ்வளவு ஏற்ற இறக்கங்கள்,
‘ஏலப் பூங்குழல் இன்னிசை பாட
எண்ணம் யாவும் எங்கோ ஓட
காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்
கண்கள் இரண்டில் நிம்மதி ஏது
நிம்மதி ஏது. நிம்மதி ஏது?
தேனாகக் குழைந்து மயங்கும் குரலை ‘ப்யூயூய்’ எனும் சீட்டி ஒலி எழுப்பிவிடும். இரண்டாவது இடையிசையில் சீட்டி ஒலியும், யூகலேலியும் சுசிலாவின் ‘ல லா’ குரலிசையோடு தனியாக ஜாலம் புரிந்திருக்கும். இதைப் போன்ற மெலடிப் பாடல்கள் இனிமேல் வராதா என்று ஏங்க வைக்கும் பாடல் இது.
https://www.youtube.com/watch?v=sQpeP2lLBFg
காலத்தால் அழியாத மற்றொரு காதல் பாடல் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் இடம்பெற்ற நெஞ்சம் மறப்பதில்லை பாடல். இந்தப் பாடலை உருவாக்க கண்ணதாசனும், எம்.எஸ்.வி.யும் மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டனராம். மேலோட்டமாகப் பார்க்கையில் காதலி காதலனை எண்ணிப் பாடும் பாடலாகத் தெரியும் இதில் பொதிந்துள்ள உணர்வுகள் தான் எத்தனை. காதல், ஏக்கம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை வரிகள் குறிப்பிட்டாலும், மெல்லிசை மன்னர் பாடலின் துவக்க ஆலாபனையில் அமானுஷ்யத்தைக் குழைத்துக் கொடுத்து, படத்தின் எதிர்பார்ப்புகளை எகிறச் செய்திருப்பார். நாற்பது வினாடிகள் வரும் ஆலாபனையை, அதன் சங்கதிகளை ஐம்பது வருடங்களுக்கு மேலாகியும் சுசிலாவின் பிசிறில்லாத ஸ்வரத்தோடு எவரும் பாடக் கேட்டதில்லை. உச்சஸ்தாயில், கூர்மையான குரலில் சுசிலா ஏற்படுத்திய அதிர்வலைகள் மனமெங்கும் ஒரு அச்சவுணர்வை அளிக்கும். (shrieky chills). இடையே வரும் புல்லாங்குழலும் இந்த உணர்வை அதிகரிக்கும். ஆலாபனை முடிந்து வரும் குயிலோசையும், பறவைகளின் ஒலியும் நம்மை இயல்புக்கு அழைத்து வர, மாண்டலின், வயலின், சிதார், தபேலா போன்றவை இணைய பல்லவி தொடங்கும்.
எம்.எஸ்.வியின் இம்ப்ரோவைசேஷன் பாடல் முழுதும் வியாபித்திருக்கும். ‘நான் கா..ஆ..த்திருந்தேன் .. உன்னைப் பா..ஆஆ..ர்த்திருந்தேன்..’, ‘நெஞ்சம் மறப்பதில்லை..ஐ…ஐ’ என்று வார்த்தைக்கு வார்த்தை கதாபாத்திரத்தின் காதலை, விரகத்தை, பாவத்துடன் பாடவைத்திருப்பார்.
இடையிசையை சித்தார், வயலின், புல்லாங்குழலும் நிரப்ப ‘காலங்கள்தோறும்’ என்று சரணம் தொடங்கும். இந்தச் சரணங்களில் சிறப்பு தபலாவின் நடை. ஹிந்துஸ்தானி இசைப் பிரிவின் தாளநடையில் பாடலுடன் சேர்ந்து பயணித்துப் பாடலைத் தூக்கிக் கொடுப்பது சுகமோ சுகம். இதே பாடலை மற்றொரு சூழ்நிலையில் சோகம் ததும்ப சுசிலாவும், பி.பி.எஸ்.ஸும் பாடுவதாக வரும். இரண்டு பாடலையும் கேட்டுப் பாருங்கள். பாவங்கள் எவ்வளவு மாறுபட்டிருக்கின்றன என்பது புரியும். சோக வடிவில், துள்ளியோடும் தப்லாவுக்கு பதில் மிருதங்கத்தைச் சீரான நடையில் பயன்படுத்தியிருப்பார். சிதார், வயலின், குழல் போன்ற கருவிகளே வந்தாலும், வயலினின் பயன்பாட்டை அதிகரித்துச் சோகம் இழையோடச் செய்திருப்பார். அப்போதைய பல படங்களில் ஒரே பாடல் இரு வேறு சூழ்நிலைகளில் பாடப்படுவதுண்டு. அவற்றில் எல்லாம் சூழ்நிலைக்கேற்றவாறு மாறுதல்களைப் புரிவதில் எம்.எஸ்.வி. வல்லவர். ராமன் எத்தனை ராமனடி படத்தில் வரும் ‘அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு பாடல்’ இத்தகைய பாடலுக்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு.
எம்.எஸ்.வி. காலத்துப் பாடல்கள் பல காதுகளுக்கு மட்டும் விருந்தாக அமையாமல் மனதிற்குள் புகுந்து வருடிக் கொடுக்கும் மெல்லிசைப் பாடல்கள்.
https://www.youtube.com/watch?v=NdnCxcEderU
https://www.youtube.com/watch?v=ONIVoAZymoM
மன்னரது காதல் பாடல்களை ஒரு கட்டுரையில் அடக்கிவிடவியலாது. அடுத்த இதழில் தொடர்வோம்.
– ரவிக்குமார்.