மெழுகுவர்த்தி
அப்பா இப்பொழுதல்லாம் அடிக்கடி கனவில வருகிறார். கூடவே அம்மாவும். இயல்பாய் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். பழைய காலத்தைப் பற்றிக்கூடப் பேசிக் கொண்டிருக்கிறோம். அவருடன் பணி புரிந்தவர்களைப் பற்றி, வேலை செய்யும் போது நிகழ்ந்த ஏதேனும் நிகழ்வுகள் பற்றி எனச் சாவதானமாக என்னுடன் உரையாடுகின்றனர். ஒரு சில நேரங்களில் ஏதோ சொல்ல வருகிறார் அது மட்டும் சரியாகக் கேட்க மாட்டேனென்கிறது.
திடீரென விழிப்பு வரும்போது யாருமில்லாமல் மனசு கனத்துப் போகிறது. திரைப்படத்தில் மூன்று மணி நேரம் முடிந்த பின்னாலும் திரைப் பிம்பம் ஆடுவது போல மனசுக்குப் படுமே அது போல விழித்த பின்பும் மனசு இருவரையும் சலனப்படமாகக் காட்டி நன்கு விழித்தவுடன் நினைவில் இருந்து மறந்து போகிறது.
கனவில் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் அளவுக்கு உயிருடன் இருக்கும்போது பேசிக் கொண்டிருந்தோமா என யோசித்துப் பார்க்கிறேன். பனிரெண்டு அல்லது பதிமூன்று வயது வரை அவர்களுடன் நன்கு பேசிக் கொண்டிருந்த ஞாபகம் இருக்கிறது. அதன் பின்னால் நான் பெரியவனாகி விட்டேன் என்ற எண்ணம் வந்து மனதில் குடி வந்த பின்னால் தள்ளி நின்றே இருவரிடமும் பேசியது ஞாபகம் வருகிறது. அப்படியானால் அந்தச் சிறு வயதுத் தோற்றம்தான் இப்பொழுது கனவாக இந்த எழுபதில் வருகிறதா? அப்படியும் இருக்கலாம் ஏனென்றால் அவர்கள் இருவரும் தெளிவாகத் தெரியும் அளவுக்கு நான் என் கனவில் தெளிவாகத் தெரிவதில்லை.
நாற்பது வயது வரை கனவு வந்தால் அம்மாவிடமே கேட்பேன். அவர்கள் ஏதேனும் சொல்வார்கள். மனதுக்கு இதமாய் இருக்கும். இப்பொழுது யாரிடம் கேட்பது? அம்மாவிடம் பேசும் அளவுக்கு அப்பாவிடம் பேசியிருப்போமா? அவருக்கு என்னைப் போல நான்கு உருப்படிகளைப் படிக்க வைக்க, உண்ண, ஆடை தைக்க, இப்படி வரிசை வரிசையாக வந்து குரல் வளையை நெறித்துக் கொண்டிருக்கும். ஒவ்வொன்றாய் விலக்கி அப்பாடி என்று கழுத்தை நீவும்போது அடுத்த செலவு கழுத்தை பிடித்துக் கொள்ளும்.
அவர் கடன் கொடுத்தவர்களிடம் பேசி பேசியே, தவணை சொல்லிவிடுவார். அதனால் அசல் என்றும் குறையாமல் வட்டி மட்டுமே கட்டி வந்தார். ஒரு கட்டத்தில் கடன்காரர் அசலை தரும்படி நெருக்கும்போது வீட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு நகை அதற்கு ஈடாக போகும்.
அக்கா பெரியவளான பின்னால் வீட்டுப் பொறுப்பை அம்மாவிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பெற்றுக் கொண்டாள். முக்கி முனகி அம்மா அவளிடம் பொறுப்பை ஒப்படைத்ததற்குக் காரணம் எப்படியும் கல்யாணமாகிப் போகிறவள்தானே, அதற்குப் பிறகு பொறுப்பு தன் கைக்கு வரும் என்று நம்பிக்கை வைத்துத்தான்.
அக்கா மளிகைப் பொறுப்பை ஏற்ற பின்னால் குடும்பம் ஓரளவு நிமிர்ந்தது. காரணம் கொஞ்சம் சர்வதிகாரியாய், அதிக பட்சச் செலவு என அவள் நினைத்தவைகளைக் குறைத்தாள். அப்பா அப்படியே ஏற்றுக் கொண்டார். நானும், தம்பி, தங்கை மூவரும் சத்தமில்லாமல் அக்காவின் ஆட்சியை ஏற்றுக் கொண்டோம். அம்மா தான் முக்கியம் என்று நினைத்தவைகளை அக்கா தள்ளுபடி செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் புலம்பித் தீர்த்தாள். ஆனால் அவளுக்கு ஆதரவு கிடைக்காததால் ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்று.
இப்பொழுது கடன்கள் குறைந்தது போலிருந்தது. அக்கா படிப்பை பிளஸ் டூவுடன் நிறுத்தி இருந்தாள். எங்களுக்குக் கூட அவள் இன்னும் கொஞ்சம் படித்திருக்கலாம் என்று தோன்றியது. அம்மாவின் பொறுப்பை ஏற்ற பின்னால் அவளும் சும்மா இருக்கவில்லை. வீட்டிலேயே தையல், துண்டுகளுக்கு ஓரம் அடித்துக் கொடுத்தல், போன்ற வேலைகளைச் செய்து வாரம் ஒரு தொகை சம்பாதித்தாள். ஆனால் அதில் சிறிதளவே எடுத்து எங்களுக்குத் தின்பண்டங்கள் மட்டும் வாங்கித் தருவாள். மற்ற தொகைகளைக் கண்ணில் காட்ட மாட்டாள். அப்பாவும் எதுவும் கேட்க மாட்டார். அவரைப் பொருத்தவரை சம்பளத்தை வாங்கி வந்து அக்காவிடம் கொடுத்து, அம்மாவிடம் இருந்து வரும் ஏச்சு பேச்சுக்களைக் கேட்டுக் கொள்ளும் வேலைகளை மட்டும் செய்தார். மனைவியிடம் பொறுப்பு இருந்தவரை கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அது இப்பொழுது இல்லாததே அவருக்கு நிம்மதியாய் இருந்தது.
நான்கு வருடங்கள் ஓடியிருந்தன. நானும் அப்படி இப்படியென்று கல்லூரிப் படிப்பு வரை வந்து விட்டேன். இந்த வருடத்துடன் முடிக்கப் போகிறேன். அப்பாவிடம் வயதின் தளர்ச்சி தெரிகிறது. ஆனால் அம்மா முன்னை விட திடகாத்திரமாய் இருப்பதாய்த் தெரிகிறது. அக்காவின் திறமை பற்றிச் சொந்தத்தில் தெரிய வர, அவளுக்கு வரன் கூடி வந்தது. பையன் சாதாரண வேலை என்றாலும் அக்கா தன் திறமை மீது நம்பிக்கை வைத்துச் சரி என்று சொல்லி விட்டாள். எங்களுக்குத்தான் கவலை வந்துவிட்டது. அக்கா போய் விட்டால், மீண்டும் அம்மாவின் ஆட்சி. எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்ற கவலைதான்.
கல்யாணம் முடிந்த்து. குடும்ப ஆட்சித் தலைமை அம்மாவின் கைக்குப் போய் ஒரு வருடம் முடிந்தவுடன் அப்பாவின் ஓய்வு, அவளுக்குப் பெருத்த பின்னடைவாய்ப் போய் விட்டது. நான் சம்பாத்தியத்துக்கு வந்திருந்தேன். அடுத்து தம்பியும் வருமானத்துக்கு வந்து விட்டான். எங்களுக்கும் வீட்டில் பொருளாதாரம் ஓரளவு வளர்ந்து விட்டது.
அடுத்த மூன்று வருடங்களில் தம்பி கல்யாணத்திற்கு முந்திக் கொண்டு விட்டான்.
காதல் திருமணம். செலவுகளை ஏற்றுக் கொண்டேன். கல்யாணம் நல்லபடியாய் நடந்தது. தொடர்ந்து அக்காவின் பிரசவச் செலவுகள் வந்தன. அப்பொழுது சம்பாத்தியத்தில் இருந்த என்னால், கடன் வாங்கிச் செலவுகள் செய்ய முடிந்தது. அப்பா கவலையுடன் என்னைப் பார்த்தார். அம்மா வழக்கம்போல என் சம்பளத்தை வாங்கி அதிகாரத்தை வைத்துக் கொண்டாள். நான் அப்பாவைப் போல கடன் காரர்களுக்குப் பதில் சொல்லப் பழகிக் கொண்டேன்.
என் திருமணப் பேச்சை அப்பாதான் எடுத்தார். அம்மா ஒரே பேச்சில் மறுத்து விட்டார். தங்கச்சிக்கு முடிச்சுட்டு அவன் தாராளமாய்ச் செஞ்சுக்கட்டும். தங்கை என்னைக் கவலையுடன் பார்த்தாள். அப்பொழுதுதான் கல்லூரி வாசலுக்கே நுழைந்திருந்தாள். படிக்க வேண்டும் என்ற கனவே அவளிடம் இருந்தது. எங்கே இவனுக்குக் கல்யாணம் செய்யவேண்டி அவசரத்தில் தனக்குக் கல்யாணம் பேசிவிடுவானோ எனப் பயந்தாள். நான் அவளுக்குத் தைரியம் சொன்னேன்.
நீ உன் விருப்பம் போல் படி. என் கல்யாணத்துக்கு நான் அவசரப்படவில்லை.
ஆரோக்கியமாய்த் தெரிந்த அம்மாவிற்குத் திடீரென உடல் நிலை சரியில்லாமல் போக மருத்துவ மனையில் சேர்த்து, செலவான தொகை மேலும் என்னைக் கடன் என்னும் புதை குழியில் தள்ளியது. தங்கை கல்லூரிப் படிப்புடன், கூடவே குடும்பப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டாள். நான் என் சம்பளத்தை அவளின் கையில் கொண்டு வந்து கொடுக்கும் இயந்திரமாய் ஆனேன்.
இப்பொழுது நாற்பதைத் தொட்டு விட்டேன். இரு முறை “ஹார்ட் அட்டாக்” வந்து பிழைத்த அப்பா மூன்றாவது முறை போய்ச் சேர்ந்துவிட்டார். அம்மாவும் அதற்குப் பின்னால் நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்கவில்லை.
தங்கை ஒரு வழியாய் கல்யாணத்துக்குச் சம்மதிக்கும் போது நான் நாற்பத்தைந்தைத் தாண்டி விட்டேன். அவளின் விருப்பப்படியே உடன் பணி புரிந்த ஒருவருக்கு மணம் செய்து வைத்தேன். அதற்குள் அக்காவின் குழந்தைகளும், தம்பியின் குழந்தைகளும் கல்லூரி செல்லும் பருவம் வந்து விட்டனர். அக்கா அவளின் பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை இருந்தால் பார்க்கச் சொல்லி என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
இப்பொழுது நானே சமைக்கப் பழகிக் கொண்டு விட்டேன். காலையில் வீடு கூட்டிப் பாத்திரம் கழுவி வைக்க மட்டும் ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து கொண்டேன். அவ்வப்பொழுது அக்காவின் குழந்தைகள் வீட்டிற்கு வந்து இருந்து செல்வர்.
பணியில் இருந்து ஓய்வும் கொடுத்து விட்டனர். அக்காவின் குழந்தைகளும் நல்லபடியாக அவரவர்கள் குடும்பமாக அமைத்துக் கொண்டனர். எனக்கு இப்பொழுது வெளியில் அதிக வேலை இல்லாததால் வீட்டுக்குள்ளேயே இருக்கப் பழகிக் கொண்டேன்.
இப்பொழுதெல்லாம் அடிக்கடி கனவில் அப்பா வருகிறார். கூடவே அம்மாவும் வருகிறாள். அப்பா எதோ சொல்லிக் கொண்டிருக்கிறார் என்ன பேசுகிறார் என ஒரு முறை உற்றுக் கேட்ட பொழுது உன் வாழ்க்கையை தொலைத்து விட்டேனே!. என்று சொல்வது காதில் கேட்கிறது.
- தாமோதரன்
மெழுகுவர்த்தி சிறுகதை அருமை. ஆனால் கதாசிரியர் கதை எழுதிய விதம் ,எழுத்து நடையானது கட்டுரைபோல் உள்ளது.
பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை