அவன் அவளில்லை
“எல்லாம் சரி… ஆனா நான் எப்டி….?”
“ஏன் உங்களுக்கு என்ன குறைச்சல்….?”
“ஹெலோ…. எல்லாமே குறைச்சல்தான்…. ஏதோ ஒரு நாளுக்குதான் நான் ஓகே… வாழ்நாள் எல்லாம் எப்படி…?” என்ற சாய்பல்லவி… தன்னையே ஒரு முறை குனிந்து ஒரு தாழ்வு மனப்பான்மையோடு பார்த்துக் கொண்டாள்…….
“எல்லாம் சரியா வரும்… உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கா… அதுதான் முக்கியம் பல்லவி….” என்றான்.. கண்களைப் பார்த்த… கெளதம்…
“அது இல்ல கெளதம்… காதல், கல்யாணம்…. குழந்தை, குடும்பம் இப்படி வெறும் ஆசைகள் மட்டுமே இருக்கற ஜீவனாப் போய்ட்டேனே…. உங்க கூட எப்படி காலம் முழுக்க மனைவியா வாழ முடியும்? உங்களுக்குக் குழந்தைக்கான வாய்ப்பே என்னாலே தர முடியாதே… அதுமில்லாம இந்தக் காதல, கல்யாணத்தை அசிங்கமாப் பாக்கற, பேசற சமூகத்துக்கு என்ன பதில் சொல்லுவீங்க?. என் கூட நட்பா இருக்கும் போதே உங்களுக்கு எவ்ளோ அவமானங்கள்… இதுல கல்யாணம் பண்ணிகிட்டா …..”- பல்லவி பேச முடியாமல் தன் கர கரக் குரலால் தழு தழுத்தாள்…….
நெருங்கி நின்ற கெளதம்.. அணைத்தும் கொண்டான்…மார்புச் சூட்டின் வழியே ஏதோ பாரங்கள் குறைந்தது போல இருந்தது கௌதமுக்கு… நெற்றியில் ஆசையாக முத்தமிட்டான்…. அவளும் ஆதரவாகப் பற்றிக் கொண்டாள்…
நண்பர்கள் புடை சூழ திருமணம் நடந்து வீட்டுக்கும் போனார்கள்…. கௌதமின் அம்மா ஆரத்தி எடுத்து… மருமகளை மனதார வரவேற்றாள்… உள்ளே அவர்களின் அறையில் தொங்கிக் கொண்டிருந்த புகைப் படங்களைப் பார்த்துக் கொண்டே வந்த பல்லவி…. கொஞ்சம் உற்று நோக்கியபடி…” ஹே.. கெளதம்… இதென்ன உன்ன மாதிரியே……. உன் சிஸ்டர்தானே…. “என்று கேட்டுக் கொண்டே, ஒரு புகைப் படத்தைக் காட்டியபடி கௌதமை முதுகோடு அணைத்துக் கொண்டாள்…
“அதான் சொல்லி இருக்கேனே…. நானும் என் தங்கையும் ட்வின்ஸ்னு” என்றபடியே அந்தப் புகைப்படத்தை உற்று நோக்கினான் கௌதம்…
கண்களில் ஒரு கதை கடந்த காலத்தை மெல்லிய கோடாக்கி இழுத்து விட்டது வெற்றிடத்தில்….
பள்ளிக் காலத்திலேயே, கௌதமியான அவனுக்குப் பல்லவனின் மீது தீராக் காதல்…. காதல் காமம் சார்ந்துதான் எழும்… ஆனால் காமம் சார்ந்து முடிவதில்லை.. அது உணர்வு சார்ந்துதான் மரணிக்கிறது…. அந்த மரணமே வாழ்வின் பூரணத்துவம்….அந்த மரணம் வேண்டிய காதலில் உயிர்ப்போடு காமம் மட்டுமே இழுத்துச் செல்கிறது என்பதை அப்போதே உணர்ந்து கொண்ட கௌதமி…. பல்லவனுக்குத் தெரியாமலேயே காதலிக்கத் தொடங்கினாள்… அப்போதுதான் அந்த இயற்கை மாற்றம் பௌதீக மாற்றத்தோடு கை கோர்த்துக் கொண்டு புரட்டிப் போட்டது…
“டேய் இவன் பல்லவன் இல்லடா… பல்லவி“- என்று……
அதன் பிறகு காணாமலே போனான் பல்லவன்…
அழுது புரண்ட கௌதமி, தேடினாள்… தேடினாள்….. வாழ்க்கை முழுக்க அல்லாமல் பாதியிலேயே கண்டும் பிடித்தாள்… பல்லவன் முழுதாக, சாய் பல்லவி ஆகி இருந்தாள்..
எப்படி…. காலத்தை வெல்ல…?…. யோசித்தாள்…
கெளதமியை கெளதம் ஆக்கிக் கொண்டான்…
எப்படி என்றால்….. காதல் எல்லாம் செய்யும்…. எல்லாம் செய்தது….எல்லாம் செய்தது….எல்லாம் செய்தது….எல்லாம் செய்தது….
- கவிஜி