திருவிவிலிய கதைகள்: நீதிமானுக்கு சோதனையா?
திருவிவிலியத்தின் (பைபிள்) ஞான இலக்கியங்களுள் ஒன்று பழைய ஏற்பாட்டில் உள்ள யோபு என்னும் நூல். இது இலக்கிய நடையில் அமைந்த நூல். அதுல சொல்லியிருக்கும் ஒரு நிகழ்வை இப்பப் பார்க்கபோறோம். நம்முடைய தின வாழ்க்கையில….
அந்த நல்ல மனுஷனுக்கு இவ்வளவு சோதனையா…
கடவுளே எனக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை….
நான் என பாவம் செய்தேன்….. எனக்குப் போய் இப்படி நடக்குதே….
இப்படிப் பலரும் சொல்லக் கேட்டிருக்கோம். அவையெல்லாம் சோதனையா?……. தண்டனையா?…..
ஒரு காலத்தில யோபுன்னு நீதிமான் ஒருத்தர் இருந்தார். அரையணாக் காசு இருந்தா அளவுக்கு அதிகமா ஆட்டம் போடும் மனிதர்கள் உள்ள இந்த உலகத்தில, ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்க் காளைகளும், ஐந்நூறு பெண் கழுதைகளும், பல வேலையாட்களும் என்று பெரிய செல்வச் செழிப்போடு இருந்தாலும், யோபு கடவுளுக்கு ஏற்ற நீதிமானாக வாழ்ந்து வந்தார். மாசற்ற நேர்மையானவர். சுருக்கமாச் சொன்னா அவர் ஒரு சொக்க தங்கங்க. யோபுக்கு ஏழு மகன்கள் மூன்று மகள்கள் பிறந்தனர். பிள்ளைகளும் தங்கமான பிள்ளைகள்.
அவருடைய மகன்கள் ஒவ்வொருவரும் தம் வீட்டில் முக்கிய நாளில் விருந்து தயாரித்து, தம் மூன்று சகோதரரிகளை அழைப்பது வழக்கம். ஆமாங்க நம்ப ஊருல இன்னும் நடப்பதுதான. பொறந்தவங்க வீட்டு விருந்துன்னா சும்மாவா. அவ்வளவு சந்தோசமான குடும்பம். அடுத்து…….. உங்களுக்கே தெரியும்……. நல்லவனுக்குச் சோதனை கட்டாயம் வருமுன்னு. ஒருநாள் ஆண்டவர் முன்னிலையில் சாத்தான் வந்து நின்றான்.
ஆண்டவர் சாத்தானிடம், “என்னுடைய அன்புக்குரியவன் யோபு அவனைப் போல மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சித் தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் யாரும் இல்லை” என்று உறுதிபடச் சொன்னார்.
சும்மா இருக்குமா சாத்தான்….. வேலையைக் காட்டிருச்சு. கடவுளைப் பார்த்து சாத்தான் சொல்லுச்சு “சோதனை மேல சோதனை கொடுத்தா உங்களையே திட்டுவார்கள் மனிதர்கள்” என்று. ஆண்டவர் சாத்தானிடம், “இதோ! யோபுக்குரிய பொருட்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய், அவன் மீது மட்டும் கை வைக்காதே” என்றார். சாத்தான் அங்கிருந்து புறப்பட்டான்.
பிறகு ஒருநாள் வேலையாள் யோபுவிடம் வந்து, “எதிரிகள் நம் வேலையாட்களிடம் கத்தியைக்காட்டி உங்களுடைய எருதுகளையும், கழுதைகளையும், ஒட்டகங்களையும் கைப்பற்றினர்.” என்றான்.
இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து, ஆடுகளையும், வேலையாட்களையும் சுட்டெரித்துவிட்டது.” என்றான். இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “உம் மகன்களும் மகள்களும் மூத்த சகோதரன் வீட்டில் இருந்த போது புயல் வீசி வீடு இடிந்து விழ, எல்லாரும் செத்துட்டாங்க” என்றான்
யோபு எழுந்தார், தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார், தம் தலையை மழித்துக்கொண்டார். பின்பு தரையில் விழுந்து வணங்கி, “என் தாயின் கருப்பையினின்று வெறுமையாய், பிறந்த மேனியனாய் வந்தேன், வெறுமையாய்ச் செல்வேன், ஆண்டவர் அளித்தார், ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக!” என்றார். உலகம் நிலையல்ல என்றுணர்த்தினார் யோபு. சாத்தானுடைய சோதனையும் தொடர்ந்தது..
சாத்தான் ஆண்டவரிடம், “எவரும் தம் உயிருக்காகத் தமக்கு உள்ளதெல்லாம் கொடுப்பர். அவனுடைய எலும்பு, சதைமீது கைவையும். அப்போது அவன் உம்மைப் பழிப்பது உறுதி” என்றான். ஆண்டவர் சாத்தானைப் பார்த்து ” சரி… இதோ! அவன் உன் கையிலே! அவன் உயிரை மட்டும் விட்டு வை” என்றார். சாத்தான், யோபை உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை எரியும் புண்களால் வாட்டி வதைத்தான். ஓடொன்றை எடுத்துத் தம்மைச் சொறிந்து கொண்டு, யோபு சாம்பலில் உட்கார்ந்தார். அப்போது அவரின் மனைவி அவரிடம், “இப்படிச் சோதனை கொடுக்கிற கடவுளைத் திட்டுங்கள்” என்றாள். ஆனால் அவர் அவளிடம், “நீ அறிவில்லாமல் பேசுகிறாய்! நல்லதைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் மற்றதையும் பெறக்கூடாது?” என்றார்.
அந்த நேரத்தில் யோபின் நண்பர் மூவர், அவருக்கு நேர்ந்த கொடுமையை கேள்விப்பட்டு, அவரிடம் துக்கம் விசாரிக்கவும், அவருக்கு ஆறுதல் கூறவும் வந்தனர். நண்பர்கள் வாய் விட்டு அழுதார்கள். நண்பர்கள் அவரோடு ஏழு பகலும், ஏழு இரவும் கூட இருந்தபோதும் அவருடைய துயரத்தைப் பார்த்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
துக்கம் தொண்டையை அடைக்காதா? அப்புறமா நபர்கள் என்ன சொல்லி இருப்பார்கள் என்று உங்களுக்கே தெரியும்… “உங்களுக்குப் போய் இத்தனை சோதனையா? நீங்க எல்லாருக்கும் உதவி செய்வீங்க, ஆறுதல் சொல்லுவீங்க… எவ்வளவு பக்தியா இருப்பீங்க….ஆனா உங்களுக்குப் போய் இப்படி சோதனை வந்துருச்சே” என்று.
ரொம்பவே சோர்ந்து போனாலும், யோபு நண்பர்களைப் பார்த்துச் சொன்னார்.
“புழுவாலும் புழுதிப் படலத்தாலும் போர்த்தப்பட்டது என் உடல்… வெடித்தது என் தோல்,…. வடிந்தது சீழ்.”
“என் உடன் பிறந்தவர், உற்றார் உறவினர் அனைவரும் என்னிடமிருந்து விலகிப் போனார்கள்”
“என் நண்பர்கள் என்னை மறந்தனர். என் வீட்டு விருந்தினரும் என் பணிப்பெண்களும் என்னை விநோதமாகப் பார்க்கின்றனர்”.
“என் மனைவிக்கு என் மூச்சு நாற்றம் அடித்தது” .
“ மற்ற குழந்தைகளும் என்னைக் கேலி செய்கின்றனர்”.
“என் உயிர் நண்பர் எல்லாரும் என்னை வெறுத்தனர், என் அன்புக்குரியவராய் இருந்தோரும் எனக்கெதிராக மாறினர். என்னை அவர்கள் அருவருக்கின்றனர்; என்னை விட்டு விலகிப் போகின்றனர்; என்னைப் பார்த்துக் காறித் துப்பவும் அவர்கள் தயங்கவில்லை”.
“எல்லாம் வல்லவர் எனக்கு வாழ்வைக் கசப்பாக்கினார். இருந்தாலும் கடவுள் வையகத்தின் எல்லை வரை காண்கின்றார், வானத்தின் கீழ் உள்ளவற்றைப் பார்க்கின்றார்.”
“நான் நேர்மையாக இருந்தாலும், என் வாயிலிருந்து வரும் வார்த்தைகளே என்னைக் குற்றவாளியாக்கிவிடும்”.
” என்னோட வேதனைகள் எல்லாம் தீர்ந்தா நால்லாயிருக்கும். அதே நேரம் சோதனை வந்தாலும், அதைத் தாங்கும் சக்தியை கடவுள் எனக்குத் தருவார். ஒருபோதும் தவறு செய்யவோ பழிக்கவோ மாட்டேன்” என்றார் யோபு.
மண்ணில் வாழ்வது எல்லா மனிதருக்கும் ஒரு போராட்டம்தானே?
நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும் நம்முடைய வாழ்க்கை.
கடவுள் காற்றுக்கு எடையைக் கணித்து, நீரின் அளவை அளந்து, மழைக்கு அவர் கட்டளை இட்டு, இடி மின்னலுக்கு வழி வகுத்துள்ளார். இறைவன் முதலில் ஒருவகையில் இயம்புகின்றார். இரண்டாவது வேறுவகையில் விளம்புகின்றார்; அதை யாரும் உணர்வதில்லை. கனவில், ஆழ் துயில் மனிதரை ஆட்கொள்கையில்; அவர் மனிதரின் காதைத் திறக்கின்றார். எச்சரிக்கை மூலம் அச்சுறுத்துகின்றார்.
இவ்வாறு மாந்தரிடமிருந்து தீயனவற்றை நீக்குகின்றார்; மனிதரிடமிருந்து ஆணவத்தை அகற்றுகின்றார். அவர்களின் ஆன்மாவைக் குழியிலிருந்தும், உயிரை வாளின் அழிவிலிருந்தும் காக்கின்றார். யார் ஒருவரும் கடவுளிடம் மன்றாடினால், அவர் அவர்களை ஏற்றுக் கொள்வார்; அவர்தம் முகத்தை மகிழ்ச்சியோடு அவர்கள் காணச் செய்வார்; அவர்களுக்குத் தம் மீட்பை மீண்டும் அளிப்பார்.
ஒருவரின் செயலுக்கேற்ப கடவுள் கைம்மாறு செய்கின்றார். உண்மையாகவே, சோதனைகள் வந்தாலும் கொடுமையை இறைவன் செய்ய மாட்டார், நீதியை எல்லாம் வல்லவர் புரட்ட மாட்டார். இறைவன் இவற்றையெல்லாம் மனிதர்க்கு மீண்டும் மீண்டும் செய்கிறார். நேர்மை எதுவோ அதை நமக்கு நாமே தேர்ந்தெடுத்துக் கொள்வோம்; நல்லது எதுவோ அதை நமக்குள்ளேயே முடிவு செய்வோம். நம்மைப் படைத்த கடவுளுக்கு எல்லாம் தெரியும்,நாம் நீதிமானாக இருந்தாலும் நாம் அவரோட வழக்காடக் கூடாது. இறுதியாக யோபு “என் உடலில் உயிர் இருக்கும்வரை, என் மூக்கில் கடவுளின் மூச்சு இருக்கும்வரை,
என் உதடுகள் கடவுளை வஞ்சகம் சொல்லாது, என் நாவும் பொய் சொல்லாது.
“சாகும்வரையில் என் நேர்மையைக் கைவிடவும் மாட்டேன்” என்றார்.
ஆண்டவர் யோபுவினுடைய ஆழ்ந்த விசுவாதத்தைக் கண்டார். செல்வங்களையெல்லாம் மீண்டும் இரண்டு மடங்காகக் கொடுத்தார். பின்னர் அவருடைய எல்லாச் சகோதரர்களும், சகோதரிகளும், அவரை முன்பு தெரிந்திருந்த அனைவரும் அவரிடம் வந்தனர்; அவரது வீட்டில் அவரோடு விருந்துண்டனர்; ஆண்டவர் அவருக்கு நடந்த எல்லாச் சோதனைகளுக்கும் ஆறுதல் கூறி அவரைத் தேற்றினார்
.
யோபின் மகள்களைப் போல் அழகுவாய்ந்த பெண்கள் நாடெங்கும் இருந்ததில்லை.
தந்தையான யோபு, தன் மகன்களுக்கும் மகள்களுக்கும் சரிசமமாகச் சொத்தில் பங்கு கொடுத்தார். அதன்பின் யோபு நூற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தார்; தம் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான்காம் தலைமுறைவரை கண்டு களித்தார். கடவுள் மேல் நமக்கு உள்ள விசுவாசத்தின் ஆழத்தை, உறுதியைச் சோதிப்பதுதான் இந்தச் சோதனை. நடந்தது சோதனை….. தண்டனையல்ல……
ம. பெஞ்சமின் ஹனிபால்