TCTA தமிழர் திருவிழா 2016 கொண்டாட்டம்
பிப்ரவரி 06 , 2016
ஃபிப்ரவரி 6 அன்று TCTA பொங்கல் விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. பனிப்பூக்கள் வாசகர்களுக்கு அன்றைய நிகழ்வுகளை விளக்க, எங்களின் வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்ட கட்டுரை:
– ஆசிரியர்.
காலையில் இருந்தே மனம் இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்திருந்தது. இன்று டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் மற்றும் பாடசாலையின் பொங்கல் மற்றும் தமிழர் திருவிழா! அனைத்து நண்பர்களையும் குழந்தைகளையும் ஒன்றாகப் பார்க்கும் பெருவிழா!. முகநூலில் வெளியான விழா முன்னோட்டம் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்திருந்தது. பற்றாததுக்கு நேற்றே அசோசியேசன் அடையாள அட்டை மின்னஞ்சலில் வந்திருந்தது. காலத்திற்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொள்ளும் நம் டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடி! நம் இரட்டை மாநகர தமிழ் மக்களின் நாடித் துடிப்பு!
தமிழ்நாட்டுக் கலை, கலாச்சாரம் மற்றும் சமூக சேவையை மேம்படுத்தும் வண்ணம் மினசோட்டாவில் உருவாக்கப்பட்ட அமைப்பு டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேசன். உன்னதத் தமிழை அருமைக் குழந்தைகள் பேசி, படித்துப் பழக தமிழ்ப் பாடசாலை!. மினசோட்டாவுக்குப் புதிதாகக் குடிபெயரும் தமிழ்க் குடும்பங்களுக்கு அனைத்து வித வழிகாட்டுதலும் நல்குவதோடு, தமிழ்ச் சமூகத்தோடு வழக்குத் தமிழையும், தமிழ்நாட்டுப் பாரம்பரிய, கலாச்சாரத்தையும் பறைசாற்றும் அவர்கள் தலையாய முயற்சி மிகவும் பாராட்டுதற்குரியது.
12 மணிக்கெல்லாம் ரிச்ஃபீல்ட் உயர்நிலைப் பள்ளியை குடும்பத்தோடு அடைந்தேன். வரவேற்புக் குழுவினர் விழாவுக்கு வந்தவர்களை உபசரிக்க, இனிய வணக்கங்களைப் பரிமாறி விட்டு என்னுடைய அசோசியேசன் அடையாள அட்டையைக் காண்பித்து நுழைவுப் பட்டியைப் பெற்றுக் கையில் கட்டிக் கொண்டேன். இதுவும் புதுமை!
அரங்கினுள் அலங்கரிப்புக் குழுவினர் பம்பரமாகச் சுழன்று மேடை அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். “பொங்கல்” பானையில் பொங்கி வழிந்து விடுவேனாவென்று பொய்யாய்ப் பயம் காட்டியது. மாடுபிடிப் புகைப்படமும் கரும்பும் யானைப் பதாகைகளும் அமர்க்களம்.
உணவறையில் நீண்ட வரிசை. ஆனால் விரைவாக நகர்ந்தது. புத்தாடையணிந்து மக்கள் சாப்பிட்டுக் கொண்டே ஒருவருக்கொருவர் கலகலவென்று அளவளாவிக் கொண்டிருந்தது மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. கல்யாணக் கும்பல்! அருமையான சர்க்கரைப் பொங்கல், நெய் மணக்கும் மிளகுப் பொங்கல், சுடச்சுட வடை, சாம்பார், வெஜ் பிரியாணி மற்றும் நான் (Nan) என அறுசுவை விருந்து. உணவு உள்ளே போன இடம் தெரியவில்லை. ஒரு சொல்லில் தெய்வீகம். (பே லீஃப் உணவகம் – ஈடன் ப்ரைரி). வடை இன்னொன்று வேண்டும் போல் இருந்தது. மூளை எடையைக் காரணம் காட்டி வேண்டாம் என்றதும் பிரிய மனமில்லாமல் உணவறை விட்டுக் கலை அரங்கினுள் நுழைய, இருவர் நுழைவுப் பட்டியைச் சரி பார்த்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். புதுமை நம்பர் மூன்று!
டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் மற்றும் பாடசாலை சார்பில் 3-ஆம் ஆண்டு தமிழர் திருவிழா ரிச்ஃபீல்ட் உயர்நிலைப் பள்ளியில் மதியம் 2 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது.
கடந்த வருடத்தை விட இந்த வருட நிகழ்ச்சிகளில் பல முன்னேற்றங்களைக் காண முடிந்தது. விழாவிலிருந்து சில துளிகள்.
- முதல் நிகழ்ச்சியாக ஸ்வர ராகம் குழுவினரின் அருமையான வாத்திய இசை.
- பாரதியார், பாரதிதாசன் படங்களை வைத்து ”செம்மொழியாம் நம் தமிழ் மொழி” என்ற பாடலுக்குத் தமிழ்ப் பாடசாலையின் நர்சரி வகுப்புக் குழந்தைகள் தங்கள் மழலைக் கால்களால் நடனம் ஆடியது கண்களுக்குக் குளிர்ச்சி.
- Darlings குழுவில் இளநிலை 1-ஆம் வகுப்புக் குழந்தைகள் ஆடிய நடனத்தை…என்னவென்று சொல்வது – what a karavaad!
- வீரமும் பாசமும் என்ற தலைப்பில் 30-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடசாலையின் குழந்தைகள் அளித்த பாகுபலி நடனம் பிரம்மாண்டம்! வாழ்த்துக்கள்!!
- மினியன்ஸ் குழுவினரின் இசை நாடகம் “இயற்கை ஒரு அதிசயம் அதைக் காப்பது அவசியம்” மிகப் பிரமாதம்.
- குழந்தைகளும் பெரியவர்களும் இணைந்து அசத்திய “வை ராஜா வை” சூப்பர் ஹிட்!
- மல்லாரி பரதநாட்டியம், ஸ்ரீ மீனாக்ஷி நாட்யாலையா மற்றும் நிருத்திராலயா நடனப் பள்ளிக் குழுவினரின் பரத நாட்டியம் மக்களின் பாராட்டைப் பெற்றது..
- தமிழ்ப் பாடசாலையின் நிலை 1 மாணவனான சேன்ஹாஸன் (Chanhassen) சுட்டி, “பாகுபலி” ஓரங்க நாடகம் மூலம் பாகுபலியைக் கண்முன்னே நிறுத்தினான்.
- அப்ஸராஸ் குழுவின் நடனம், திருமணத்தை கருப்பொருளாகக் கொண்டு அருமையான பாடல்களுடன் அமைந்திருந்தது. அவர்களின் ஒருங்கிணைப்பு அனைவரையும் கவர்ந்திழுத்தது. அட்டகாசம் அப்ஸராஸ்!
- பிகிலு காமடி அதிரடி சரவெடி!
- இந்தி நடிகை மாதுரி தீட்சித்தை டி.வி.யில் பார்த்திருப்பீர்கள்! சினிமாவில் பார்த்திருப்பீர்கள்! நேரில் கண்டதுண்டா? அக்குறையைப் போக்குவதற்கு ஒன்றல்ல இரண்டல்ல ஆறு பேர் Graceful Petals சார்பாக ஆடி அசத்தினர். Graceful!
- ஜனனி வெங்கட், ஆதித்தன், ரோஷமித்ரா ஆகியோர் அருமையாகப் பாடி எல்லோர் மனங்களையும் வென்றார்கள்.
- ஆர்வத்துடன் பலர் கலந்து கொண்டனர். மற்றுமின்றி சில பங்கேற்பாளர்களின் கடின உழைப்பு அசர வைத்தது.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
- ஒவ்வொரு நிகழ்ச்சி குறித்தும் தனித்தனியே எழுத ஆசைதான். 45 நிகழ்ச்சிகள்! நீளம் கருதி இங்கே குறைவாகத்தான் பகிர்ந்துள்ளேன். மற்றவர்கள் மன்னிப்பார்களாக!
அசோசியேசன் இயக்குனர்கள் 2016-ஆம் ஆண்டிற்கான செயற்குழுவை அறிமுகப்படுத்தினார்கள். பின்னர் தமிழ் அசோசியேசன் தலைவர் கடந்த வருடம் நிகழ்த்திய சாதனைகளை விளக்கினார். தமிழர் திருவிழா, அறிவியல் போட்டி, மாணவர்களுக்கான திறன் போட்டி, தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம், கோடை விழா, எழுத்தாளர் வ.மணிகண்டனுடன் கலந்துரையாடல் (2016 ஆம் ஆண்டுக்கான டாப் 10 நம்பிக்கை மனிதர்களில் ஒருவராக ஆனந்த விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மிஸ் பண்ணிட்டேனே!), தீபாவளி வாழையிலை விருந்து, விஜய் டி.வி. ஸ்டார்ஸ் நைட், விடுமுறை கொண்டாட்டம், சமூகத்திற்குக் கொடுங்கள் நிகழ்ச்சி என்று பிரித்து மேய்ந்திருக்கிறார்கள்! ஒவ்வொரு மாசம் ஒவ்வொரு புரோக்ராம் செய்து இருக்கிறார்கள். எப்படித்தான் வீட்டில அடி விழாம செய்கின்றார்களோ! மேலும், அறிவிப்பாளர் இந்த வருடம் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அசோசியேசன் உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர் என்றும் இன்றைய விழாவிற்கு 750-க்கும் மேற்பட்ட எண்ணிகையிலான பெரியவர்களும் குழந்தைகளும் திரண்டனர் என்று கூறி மக்களை கரகோஷம் செய்ய வைத்தார்.
தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் துணை தலைமை ஆசிரியர் இணைந்து திருவிளையாடல் சிவாஜி, தருமி கணக்காக தமிழ்ப் பாடசாலையின் கிளைகள், பயிற்சி முறை மற்றும் அங்கீகாரம் தொடர்பான விபரங்களை அளித்தனர்.
மேலும் சில சுவாரஸ்ய துளிகள் இங்கே!
- இன்னிக்கு கவரேஜ் ஒழுங்கா செய்யாட்டி பூரிக்கட்டை பறக்கும் என்று முணுமுணுத்தபடியே தங்கள் பிள்ளைகள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளைப் பின்னாலிருந்து பதிவு செய்து கொண்டிருந்தார்கள் தந்தைக் குலங்கள்.
- புதுப்புடவைகள் சரசரக்க “எப்படித்தான் நீங்க புடவைய ரிப்பீட் பண்ணாம கட்ரீங்களோ!” என்றும் “இந்தத் தோடு சூப்பர் மேச்சிங்க!” என்றும் தாய்க்குலங்களிடமிருந்து பலவாறு கமெண்டுகளை கேட்க நேர்ந்தது.
- நிகழ்ச்சி அரங்கிற்குள் உணவு மற்றும் பானங்களை எடுத்து வர வேண்டாம் என்று மைக் பிடித்து அரை மணிக்கு ஒரு தரம் காலில் விழாத குறையாக வேண்டிக் கொண்டிருந்தார் விழா அமைப்பாளர்களில் ஒருவர். சரிதானே!
தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என்று மூன்று கலைகள் ஒன்றோடு ஒன்று இணைந்தும் தழுவியும் வருபவையாகக் கூறப்படுகின்றன. அதுபோல நிகழ்ச்சியும் வாத்திய இசை, ஓரங்க நாடகம், பரதம், கவிதை, மெல்லிசைப் பாடல்கள், சினிமாப் பாடல் நடனங்கள், நகைச்சுவை என மக்கள் விரும்பும் ஒரு தேர்ந்த ஃபார்மேட்டில் கலைக் குழுவினர் தொகுத்திருந்தனர். கூட்டம் ஆறு மணி நேரம் கலையாமல் எப்படி ஒரு நல்ல படம் முடிந்த பின்னர் டைட்டில் கார்டு போட்ட பின்னரும் காத்திருப்பார்களே, அப்படியே காத்து நின்றது நிகழ்ச்சியின் வெற்றி!
TCTA நிர்வாகக் குழுவினர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். இத்தனை சிறப்பாக விழா நடக்கக் காரணம் எண்ணற்ற தன்னார்வலர்களின் களப்பணியும், அர்ப்பணிப்பும், ஒத்துழைப்பும் தான். அரங்கத்தைத் தூய்மையாக வைத்திருந்ததோடு மட்டுமல்லாமல் நிகழ்ச்சி முடிந்தவுடன் தரையில் இருந்த சிறுகுப்பைகளையும் சுத்தம் செய்ய ஒத்துழைத்த மக்களுக்கு ஒரு ஓ!. என்னம்மா இப்பிடிப் பண்றீங்களேம்மா!
மிக அருமையானதொரு நிகழ்வு. ஒரு குடும்ப விழாவில் கலந்து கொண்ட திருப்தி கிடைத்தது. கலைநிகழ்ச்சிகள் தந்த உற்சாகம் அடுத்த நாள் முழுவதும் இருந்தது முற்றிலும் உண்மை! பொங்கலோ பொங்கல்!
-மதன் குமார் இராஜேந்திரன்
படத்தொகுப்பு: ஆனந்த் தியாகராஜன், நடராஜன் கோடீஸ்வரன்
Wow !!! nicely written Mr Madhan! Melum niraya Eludha vazhthukkal… Ramesh